Essays
oi-C Jeyalakshmi
திருமங்கலம்: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கள் விளையாடுவது ஒரு தனி கலை, இன்றைய தலைமுறையினர் அதை மறந்து வருகின்றனர். நமது பாரம்பரிய விளையாட்டுக்களை இன்றைய தலைமுறையினருக்கு நினைவூட்டுவதற்காகவே மதுரை மாவட்டம் தி.குண்ணத்தூர் கிராம பெண்கள் பல்லாங்குழி, தட்டாங்கல், நொண்டி, கோகோ, குடத்தில் தண்ணீர் சுமத்தல் போட்டிகளை விளையாடி மகளிர் தினத்தை உற்சாகமாகக் கொண்டாடினர்.
டி. குண்ணத்தூர் ஊராட்சி மன்றத்தலைவர் ராணி ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டுப்போட்டியில் கொரோனா அச்சத்தையும் மீறி ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.
அறுபதுகளில் வாழ்ந்த பெண்களுக்கு வீட்டு வேலை முடிந்தது போக சின்னச் சின்ன விளையாட்டுக்கள் பொழுதுபோக்காக இருந்தது. பக்கத்தில் இருந்த கூழாங்கற்களை எடுத்து தட்டாங்கல் விளையாடுவார்கள். புளியங்கொட்டை அல்லது சோழிகளை சேகரித்து பல்லாங்குழி விளையாடுவார்கள். சினிமாவும், டிவி சீரியலும் பார்த்து வளர்ந்த இன்றைய தலைமுறையினருக்கு அந்த விளையாட்டுக்களை பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை. இது பெண்களின் விளையாட்டு என்று ஒதுக்கிவிட முடியாது அறிவுக்கூர்மையை அதிகரிக்கும் விளையாட்டுக்கள் இவை.
மகளிர் தினத்தை உலகத்தில் உள்ள பெண்கள் பலவிதமாக கொண்டாடியிருக்கலாம். கொரோனா வைரஸ் பீதியில் பலரும் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்க, மதுரை மாவட்டம் டி. குண்ணத்தூரில் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பாரம்பரிய விளையாட்டுக்களை விளையாடி மகளிர் தினத்தை உற்சாகமாக கொண்டாடினர். வயதான பெண்கள் ஒருபக்கம் பல்லாங்குழி ஆட, சிலரோ ஒருபக்கம் தட்டாங்கல் விளையாடினர். இது என்ன புதுவிதமாக இருக்கிறதே என்று இளம் பெண்கள் யோசிக்க, இதுதான் பாரம்பரிய விளையாட்டு என்று புரிய வைத்தனர் வயதான பாட்டிகள்.
தட்டாங்கல் விளையாடினால் பார்வை திறன் அதிகரிக்கும். கையும் கை நரம்புகளும் வலிமை அடையும், விரல் நரம்புகள், கை நரம்புகள் அனைத்தும் ஒரே நேரத்தில் செயல்படுவதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை மேம்படும். இன்றைக்கு கைகளில் செல்போனை பிடித்து ஒரே இடத்தில் அமர்ந்து செல்போனில் கேம் விளையாடும் இளைய தலைமுறையினருக்காகவே இந்த தட்டாங்கல் விளையாட்டினை குண்ணத்தூரைச் சேர்ந்த வயதான பெண்மணிகள் உற்சாகமாக விளையாடினர்.
உங்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று நாற்பது வயதில் இருந்து 60 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஓட்டமும் நடையுமாக வெறும் தலையில் நிறைகுடம் தண்ணீரை தூக்கி சுமந்தனர். இசை நாற்காலி, அதிர்ஷ்ட போட்டிகளில் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். சிறுமியர்கள் தங்கள் பங்குங்கு நொண்டி விளையாடினர், உற்சாகமாக ஒடி ஆடி கோகோ விளையாடினர்.
விளையாடி களைத்த பெண்களுக்கும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் அவர்களின் மகளும் அம்மா சேரிட்டபிள் ட்ரஸ்ட் செயலாளருமான பிரியதர்ஷினி உதயகுமார், சிறப்பு விருந்தினராக பங்கேற்று பரிசுகளை வழங்கினார். இதுபோன்ற விளையாட்டுப்போட்டிகளை பார்க்கும் போது ஆச்சரியமாக இருப்பதாகவும் தெரிவித்தார். ஓடி ஓடி விளையாடி உற்சாகமாக மகளிர்தினத்தை கொண்டாடிய பெண்களுக்கு வயிறார உணவு பரிமாறப்பட்டது. போட்டிகளை காண வந்த அனைவருக்கும்
அம்மா சேரிட்டபிள் ட்ரஸ்ட் சார்பாக டிக்ஸ்னரி வழங்கப்பட்டது.
விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
இன்றே பதிவு செய்யுங்கள் – பதிவு இலவசம்!
“அமைப்பாளர். தீவிர வலை வக்கீல். ஆய்வாளர். வாழ்நாள் முழுவதும் இணைய வெறி. அமெச்சூர் விளையாட்டாளர். ஹார்ட்கோர் உருவாக்கியவர்.”