அரசியல் சமூகம் செய்திகள் தமிழகம் நீதிமன்றம்

“உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பார்ப்பனியத்தைப் பாதுகாக்கும் இன்னொரு தந்திரம்!”: மருதையன்

“அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் 2006-ல் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக, மதுரை மீனாட்சி கோயிலின் பார்ப்பன அர்ச்சகர்கள் தொடுத்த வழக்கில், தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் பாதுகாக்கும் வகையில் மிகவும் தந்திரமான சொற்றொடர்களில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச்செயலாளர் மருதையன். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“2006-ல் தி.மு.க அரசு பிறப்பித்த அரசாணையைத் தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி அமைக்கப்பட்டு, அதில் பார்ப்பன சமூகத்தினர் முதல் பல்வேறு பார்ப்பனர் அல்லாத சாதியினர் தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்டு மொத்தம் 206 மாணவர்கள் பயிற்சி பெற்று முறையாக தீட்சையும் பெற்றனர். இந்த பயிற்சிப் பள்ளியே சட்ட விரோதமானது என்றும், இந்த மாணவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்வது, அரசியல் சட்டத்தின் பிரிவு 25, 26 க்கு விரோதமானது என்றும், இந்து மத நம்பிக்கைக்கும், மரபுகளுக்கும் எதிரானது என்றும் கூறி மேற்படி மாணவர்களின் நியமனத்துக்கு உச்ச நீதிமன்றத்தில் தடையாணை பெற்றார்கள் மதுரை அர்ச்சகர்கள்.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை ஒரு சங்கமாக திரட்டும் பணியை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமும், மக்கள் கலை இலக்கியக் கழகமும் செய்தோம். பிறகு அந்த மாணவர்கள் சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கில் தலையிட்டோம். இத்தனை ஆண்டுகள் அந்த வழக்கு இழுத்தடிக்கப்பட்டு இப்போது இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருகிறது.

இந்தத் தீர்ப்பு குறித்து, ஒரு வரியில் சொல்வதென்றால் : கோயிலில் நுழையக்கூடாது தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவர் என்று கூறி நந்தனாருக்கு அன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது.

அந்தத் தீர்ப்பு அன்று ஒரே நாளில் வழங்கப்பட்டு விட்டது. இந்த மாணவர்களோ, சுமார் எட்டாண்டு காலம் இழுத்தடிக்கப்பட்டு நீதி கிடைக்கும் என்று நடையாய் நடந்தனர். தகுதி வாய்ந்த இந்த மாணவர்களை, பிறப்பின் காரணமாக, அர்ச்சகராவதற்குத் தகுதியற்றவர்கள் என்று நீதிமன்றத்தின் மூலம் வெளியேற்றும் வாய்ப்பை பார்ப்பன அர்ச்சகர்களுக்கு இத்தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனை நேரடியாகச் சொல்லாமல், சுற்றி வளைத்தும், நேர்மையற்ற முறையிலும் சொல்லியிருக்கிறது இந்தத் தீர்ப்பு.

“திமுக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்” என்பதுதான் பார்ப்பன அர்சச்கர்கள் தொடுத்த வழக்கு. அந்த அரசாணையை ரத்து செய்வதாக இந்தத் தீர்ப்பு நேரடியாக குறிப்பிடவில்லை. இந்த 206 மாணவர்களை ஆகம விதிப்படி அமைந்த கோயில்களில் நியமிக்கக் கூடாது என்றும் கூறவில்லை. இவர்களை நியமிக்கலாம். ஆனால் அந்த நியமனம் ஆகம விதிக்கும், மரபுகள் சம்பிரதாயங்களுக்கும் உட்பட்டதாக இருக்கவேண்டுமென்றும் அதனை மீற முடியாதென்றும் கூறுகிறது. அதாவது “யானையைப் பானைக்குள் அடைக்கலாம். அதே நேரத்தில் பானை உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்பதுதான் இத்தீர்ப்பு கூறும் செய்தி.

மயிலை கபாலீசுவரர் கோயிலிலோ, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலிலோ, திருவரங்கத்திலோ, மதுரை மீனாட்சி கோயிலிலோ இந்த மாணவர்களில் சிலரை அர்ச்சகர்களாக நியமிக்கும் பட்சத்தில், இந்தக் கோயில்களில் பணி புரியும் பார்ப்பன அர்ச்சகர்கள், “அர்ச்சக மாணவர்களின் நியமனம் ஆகம விதிக்கு முரணானது என்று உரிமையியல் நீதிமன்றத்தில் நிரூபித்து அவர்களை வெளியேற்றலாம்” என்று கூறுகிறது இந்தத் தீர்ப்பு.

அதாவது ஒரு மாணவன் ஏதோ ஒரு கோயிலில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டால், நியமிக்கப்பட்ட மறுநாளே, அவரது நியமனத்துக்கு பார்ப்பன அர்ச்சகர்கள் நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெறுவார்கள். மாணவர்கள் தம் வாழ்நாள் முழுவதும் நீதிமன்றத்துக்கு நடந்தாலும் நீதியைப் பெற முடியாது என்பதே உண்மை. எனவேதான் இந்தத் தீர்ப்பு மிகவும் தந்திரமானது என்று கூறுகிறோம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் உடன்பாடு கொண்ட சிலர், திமுக அரசு பிறப்பித்த அரசாணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யவில்லை என்ற காரணத்தினால், இந்தத் தீர்ப்பை வரவேற்கின்றனர்.

“குறிப்பிட்ட கோயிலில், குறிப்பிட்ட பார்ப்பன உட்சாதியைச் சேர்ந்த நபர்களோ அல்லது குடும்பத்தினரோதான் வழிவழியாக அர்ச்சகராக வரவேண்டும்” என்று ஆகம நூல்கள் எதிலும் குறிப்பிடப்படவில்லையாதலால், இம்மாணவர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்படும் பட்சத்தில், “அந்த நியமனம் ஆகம விதிக்கு முரணானது என்று பார்ப்பன அர்ச்சகர்களால் நிரூபிக்க இயலாது” என்பதே இவர்கள் முன்வைக்கும் வாதம்.

“பார்ப்பனர்கள்தான் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும்” என்று ஆகம நூல்கள் எதிலும் கூறப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால் இது இன்று புதிதாகத் தெரியவந்த உண்மை அல்ல. 1971 சேஷம்மாள் தீர்ப்பின்போதே தெரிய வந்த உண்மைதான். ஆகம விதி என்று சொல்லும் இடங்களிலெல்லாம் மரபு – பழக்க வழக்கம் என்ற சொற்றொடர்களையும் சேர்த்துத்தான் பார்ப்பன அர்ச்சகர்கள் எப்போதும் பயன்படுத்துகின்றனர். எப்படி வேண்டுமானாலும் புரட்டிப் பேசுவதற்கான வாய்ப்பை வழங்குகின்ற இந்தச் சொற்றொடர்களின் துணை கொண்டுதான் தங்களது ‘உரிமை’யை நீதிமன்றங்களில் அவர்கள் நிலைநாட்டி வருகின்றனர். பார்ப்பனியத்துக்கும் தீண்டாமைக்கும் அரசியல் சட்ட அங்கீகாரத்தை காலங்காலமாக இப்படித்தான் இவர்கள் பெற்று வருகின்றனர்.

பார்ப்பனரல்லாத மாணவர்களை அர்ச்சகராக நியமிப்பதைத் தடுப்பதற்கு எந்த ஆகம நூலிலும் எதுவும் இல்லை என்பதைச் சொல்லி, மாணவர்களை ஆகமக் கோயில்களில் நியமிக்குமாறு கோரி இந்த அரசுக்கும், பார்ப்பன அர்ச்சகர்களுக்கும் எதிராக நாம் போராடலாம். அந்தப் போராட்டம் சாதியைப் பாதுகாக்கும் இந்த அரசியல் சட்டத்தையும், நீதிமன்றத்தையும், அரசையும் அம்பலப்படுத்தப் பயன்படுமேயன்றி, சமத்துவ உரிமையை நிலைநாட்டிக் கொள்ளப் பயன்படாது.

மத உரிமை அல்லது மத நிறுவனங்களின் உரிமை என்பது, ஒரு குடிமகனின் சமத்துவ உரிமையின் மீது ஆதிக்கம் செலுத்துவதாக ஒரு போதும் இருக்கக்கூடாது. ஆனால் அவ்வாறு ஆதிக்கம் செலுத்துவதை நமது அரசியல் சட்டம் அனுமதிக்கிறது. இதன் காரணமாகத்தான் சமூக ரீதியாக தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் தீண்டாமையை, மதரீதியில் பார்ப்பனியத்தின் மத உரிமையாக அரசியல் சட்டத்தின் பிரிவு 25 அங்கீகரிக்கிறது.

எனவே, ஆகமம், மரபு ஆகியவற்றின் துணை கொண்டும், அவற்றின் வரம்புக்கு உட்பட்டும் சமத்துவ உரிமையை நிலைநாட்டிக் கொள்ள முயற்சிப்பதும், பார்ப்பனியத்தையும் தீண்டாமையையும் முறியடிக்க முயற்சிப்பதும் மதத்தின் அதிகாரத்துக்கு பணிந்து போவதன் இன்னொரு வடிவமாகவே இருக்கும். “தீண்டாமை இந்து மத நன்னெறிகளுக்கு எதிரானது என்று நிறுவுவதன் வாயிலாக தீண்டாமையை ஒழித்து விடலாம்” என்று வாதிட்ட காந்தியை மறுத்து பெரியார் கூறியவற்றை இந்த இடத்தில் நினைவு படுத்திக் கொள்வது நல்லது.
சாதி தீண்டாமை ஒழிப்பு என்ற நோக்கத்துக்காக பெரியாரால் முன்வைக்கப்பட்டதே அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் கோரிக்கை. எவ்வாறேனும் அர்ச்சகர் பணி நியமனத்தைப் பெற்றுவிடுவது என்பதற்கான தந்திரமாக இதனைச் சுருக்கிவிடலாகாது.

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வேண்டும் என்பதை தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளின் அங்கமாகவே இளையபெருமாள் கமிட்டி பரிந்துரைத்தது என்பதும் இங்கே நினைவு கூறத்தக்கது. ‘நம்முடைய மரபு’ சாதி, தீண்டாமையைக் காப்பாற்றும் மரபு என்பதை யாரும் மறுக்க முடியாது.

“மரபு என்ற பெயரிலோ, பழக்க வழக்கம் என்ற பெயரிலோ பார்ப்பன ஆதிக்கத்தையோ, சாதியையோ, தீண்டாமையையோ ஒரு மத உரிமையாக அங்கீகரிக்க முடியுமா?” என்பதுதான் இந்த வழக்கு எழுப்பும் மையமான கேள்வி.

“அப்படி அங்கீகரிக்கலாம்” என்பதைத்தான் இந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு சொல்லியிருக்கிறது. “பார்ப்பனரல்லாதவர்கள் சிலையைத் தொட்டால் தீட்டாகிவிடும் என்று எந்த மரபு அல்லது பழக்கம் கூறினாலும் அது ஒரு தீண்டாமைக் குற்றம் என்று சட்டப்பிரிவு 17-ஐக் குறிப்பிட்டு நாங்கள் வாதிட்டோம்.

இது தீண்டாமை குற்றம் அல்ல என்பதற்கு உச்சநீதி மன்றம் ஒரு விசித்திரமான விளக்கத்தைத் தனது தீர்ப்பில் சொல்லியிருக்கிறது. “ஒரு குறிப்பிட்ட வகுப்பார் மட்டும்தான் பூசை செய்யவேண்டும் என்றும் அவ்வாறு இல்லையேல் சிலை தீட்டுப்பட்டு விடும் என்றும் கூறுவது தீண்டாமைக் குற்றமாகாது. குறிப்பிட்ட பிரிவினர் வரக்கூடாது என்று குறிப்பாகச் சொல்லாத வரைக்கும் அதனைத் தீண்டாமைக் குற்றமாக கருத இயலாது” என்று கூறுகிறது. இங்ஙனம் சாதி ஆதிக்கத்தையும், தீண்டாமையையும் மிக நாசூக்கான, தந்திரமான ஆங்கிலத்தில் இந்தத் தீர்ப்பு நிலைநிறுத்தியுள்ளது.

இந்த தீர்ப்பு திமுக அரசு கொண்டு வந்த அரசாணையை ரத்து செய்வதாகக் கூறவில்லை என்பது வெற்றி அல்ல. நடைமுறையில் அதனை ரத்து செய்து விட்டது என்பதே உண்மை. “ஆகம விதி, சம்பிரதாயம், மரபு ஆகியவற்றுக்கு இணங்கவே அர்ச்சகர் நியமனங்கள் அமைய வேண்டும். அதே நேரத்தில் அந்த சம்பிரதாயங்கள் அரசியல் சட்ட உரிமைகளுக்கு முரணானதாக இருக்கக் கூடாது. இது பற்றி ஒட்டு மொத்தமாக அனைவருக்கும் பொருந்தும்படியன ஒரு உத்தரவைப் பிறப்பிக்க இயலாது. ஒவ்வொரு அர்ச்சகர் நியமனத்தையும் தனித்தனியே பரிசீலித்துப் பார்த்துத்தான் முடிவு செய்ய இயலும்” என்கிறது இத்தீர்ப்பு.

“அர்ச்சகர் நியமனத்தில் வாரிசு உரிமை கோரவியலாது” என்று கூறி சிவாச்சாரியார்களின் மனுவைத் தள்ளுபடி செய்தது 1971-ல் வழங்கப்பட்ட சேஷம்மாள் தீர்ப்பு. அது வெற்றி என்று கொண்டாடப்பட்டபோது, “ஆபரேசன் வெற்றி நோயாளி மரணம்” என்று அதனை அம்பலப்படுத்தினார் பெரியார். பார்ப்பன அர்ச்சகர்கள் தோற்றது போலத் தெரிந்தாலும், வெற்றி பெற்றவர்கள் அவர்களே என்பதை அம்பலமாக்கினார்.

சேஷம்மாள் தீர்ப்புக்குப் பிறகு இன்று புற நிலைமையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம், 206 பயிற்சி பெற்ற மாணவர்கள் தற்போது தயாராக இருக்கிறார்கள் என்பதுதான். இப்போதும், தி.மு.க அரசின் அரசாணையை ரத்து செய்யாமல் விட்டதன் மூலம், பார்ப்பன அர்ச்சகர்கள் தோற்று விட்டதைப் போன்றதொரு தோற்றத்தை இத்தீர்ப்பு ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த தோற்றம் உண்மையல்ல. இது சேஷம்மாள் தீர்ப்பைக் காட்டிலும் ஒரு படி மேம்பட்ட, நுண்ணயமிக்க, தந்திரமான தீர்ப்பு என்பதே உண்மை. இதனை அம்பலப்படுத்துவதுதான் சாதி ஒழிப்பில் நம்பிக்கை கொண்ட அனைவரின் பணியாகவும் இருக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.