விழுப்புரத்தில் பாமக வின் மண்டல மாநாடு. மருத்துவர் ராமதாஸ், பாமக ஒரு சாதிக்கட்சி இல்லை என்பதை ஒரு சில உதாரணங்களோடு விளக்கிக்கொண்டிருந்தார். பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அரசியல் செய்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தல் வரை அது, தான் ஒரு சாதிக்கட்சி இல்லை என்பதை நிறுவுவதற்கு பிரயத்தனப்பட்டதே இல்லை.
2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு சாதிக்கட்சி என்கிற அந்தஸ்தை அது விரும்பவில்லை. டிவி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகிற பாலு உள்ளிட்ட பாமக பிரமுகர்கள் அனைவருமே தாங்கள் சாதிக்கட்சி இல்லை என்பதை சந்தர்ப்பம் வரும்போதெல்லாம் சொன்னார்கள். சாதி மறுப்பு திருமணம் குறித்தோ, நாடக காதல் என்ற வார்த்தையையோ கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பாமக தரப்பிலிருந்து யாருமே பயன்படுத்தவில்லை.
பாமக வில் ஏன் இந்த திடீர் மாற்றம்? (நிச்சயமாக இது வரவேற்கப்படவேண்டியது தான் – உண்மையாக இருந்தால்) பாமக தற்போது தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்க விரும்புகிறது. சாதிக்கட்சி என்ற அடையாளத்துடன் தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியுமே ஆட்சியை பிடிக்க முடியாது. திராவிடம் இங்கு என்ன செய்தது என்று வக்கனையாக கேட்பவர்களுக்கு இதுதான் பதில்.
எப்படி தமிழ்நாட்டில், மற்ற மாநிலங்களைப்போல வெளிப்படையாக சாதிப்பெயரை போட்டுக்கொள்ள முடியாதோ அதே போல சாதிக்கட்சி ஒன்றும் ஆட்சிக்கு வர முடியாது. அதற்காக தமிழ்நாட்டில் சாதிக்கொடுமைகளே இல்லை என்று நான் சொல்ல மாட்டேன். ஐம்பது ஆண்டு கால திராவிட ஆட்சியில் இன்னமும் இங்கு சாதி அரசியலை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியவில்லையே என்கிற ஆதங்கம் எனக்கும் இருக்கிறது. (இதற்கான காரணங்களை ஆழமாக பார்க்கவேண்டும். சுருக்கமாக சொன்னால் எம்ஜிஆர் பிரிவுக்கு பிறகு திமுக விற்கு அதிமுக போல நடந்துகொள்ள வேண்டிய ஒரு நிர்ப்பந்தம் ஏற்பட்டது)
ஆனால் தமிழகத்தில் சாதி அரசியலை கட்டுப்படுத்தியது பெரியாரும் திராவிடமும் தான். மதச்சார்பற்ற நாடான இந்தியாவில் மதவாத கட்சியான பாஜகவால் வளர்ச்சி என்று சொல்லி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்க முடிந்தது. ஆனால் தமிழ்நாட்டில் எந்த ஒரு சாதி கட்சியாலும் ஆட்சியை பிடிக்க முடியாது. அதுதான் திராவிடம் இந்த மண்ணுக்கு செய்த பெரும்பணி. திராவிடத்தை வீழ்த்துவதற்காக வெவ்வேறு பெயர்களை சூட்டிக்கொண்டு வருபவர்களின் அடிநாதமாக சாதியம் இருப்பதே, திராவிடம் இந்த மண்ணுக்கு எவ்வளவு தேவை என்பதை உணர்த்துகிறது.
சிவசங்கரன் சரவணன், அரசியல் விமர்சகர்