கல்வி சமூகம் செய்திகள் தமிழகம்

‘கர்மயோகா’ என கழிவறையை கழுவ வைத்தனர்; சித்தாள், கொத்தனார் வேலை பார்க்க வைத்து கல்லூரி கட்டிடம் கட்டினர்’ SVS கல்லூரியின் மருத்துவப் படிப்பு இதுதான்!

தீக்கதிர் வி.சாமிநாதன்

“2010 இல் நான் இக்கல்லூரியில் சேர்ந்தேன் அப்போது ஒரு மாடி மட்டும் உள்ள கட்டிடம் இருந்தது. பின் பல ஆண்டுகளாக மாணவ, மாணவியரை கர்மயோகா என்று கூறி செங்கல் தூக்க வைத்து, சிமெண்ட் மூட்டை எண்ண வைத்து, புல் செதுக்க வைத்தனர். ஒரு சிறிய அறையில் 10 கட்டில் போடப்பட்டு நாங்கள் 36 பேர் தங்க வைக்கப்பட்டோம். ஒரு கட்டிலில் 3, 4 பேர் தூங்குவோம். காலையில் எழுந்து இருந்த 1 குளியலறையில் 2,3 பேர் சேர்ந்து குளிக்க நிர்பந்திக்கப்பட்டோம்.

நான் இதுவரை ரூ. 5 லட்சம் கட்டியுள்ளேன். பிற மாணவ, மாணவியரும் பல லட்சங்கள் கட்டியுள்ளனர். இவ்வளவு பணத்தை பிடுங்கிக் கொண்டு எங்களை தொடர்ந்து கழிவறையை கழுவ வைத்தனர். சித்தாள், கொத்தனார் வேலை பார்க்க வைத்து (பிரியங்கா, மோனிஷா, சரண்யா இறந்த) கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து தற்போது கல்லூரி கட்டிடம் 3 மாடி பில்டிங் ஆக மாறியுள்ளது” என கண்ணீர் மல்க தெரிவித்தார். 3 மாணவிகளை பலி வாங்கியுள்ள விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் கிராமத்தில் இயங்கிவந்த எஸ்.வி.எஸ் இயற்கை மற்றும் யோகா மருத்துவக்கல்லூரியின் சீனியர் மாணவி மீனாட்சி.சிறுகட்டிடத்தில் 2008 ஆம் ஆண்டு துவங்கிய கல்லூரி இன்று கட்டிடமாக காட்சியளிக்கிறது என்றால் அதில் உள்ள செங்கல், சுண்ணாம்பு, சிமெண்ட், சேர், டேபிள் என அனைத்துப்பொருட்களும் அரசு கலந்தாய்வு மூலமாக சேர்க்கப்பட்ட மாணவ, மாணவியரிடம் பிடுங்கப்பட்ட பணத்தால் உருவானவை.

கல்லூரி நிர்வாகி வாசுகி பெண் என்றாலும் ‘ரவுடி’ என்ற அந்தஸ்திற்கு குறையாதவர். தங்கும் விடுதி மற்றும் கல்லூரியை வெங்கடேசன் என்ற ரவுடியோடுதான் இவர் நிர்வகித்து வந்துள்ளார். குறைகளை சொல்லும் மாணவ, மாணவியரை மிரட்டியே பணிய வைத்துள்ளார். கல்லூரி துவங்கியது முதல் கடந்த 7 ஆண்டுகளில் ஒருவருக்குகூட இன்னும் பட்டம் ஏதும் தரப்படவில்லை என மாணவ, மாணவியர் கூறுகின்றனர்.

‘துணிச்சலான அக்காக்கள்’

தற்போது இங்கு பி.என்.ஒய்.எஸ் முதலாம் ஆண்டு படித்துவரும் எழில்பாரதி என்ற மாணவி “எங்களை நிர்வாகம் மனரீதியாக சித்ரவதை செய்யாத நாளே கிடையாது. அரசுஒதுக்கீட்டில் சேர்ந்துள்ளோம் என்றநம்பிக்கையில் இவற்றை தாங்கிக்கொண்டோம். இறந்துபோன அக்காக்கள்தான் எங்களுக்கு தைரியம் கூறுவார்கள். அவர்கள் நிர்வாகத்தின் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை கூறியும் ஏதும்நடவடிக்கை இல்லை. இதனால் இந்த அக்காக்களின் மீது நிர்வாகத்தினர் ஆத்திரத்துடன் இருந்தனர். நிர்வாகத்தை எதிர்த்து பேசினால் உடனே எங்கள் நடத்தையை கேவலமாக கூறுவார்கள்” என மருத்துவமனையில் அழுதுகொண்டே கூறினார்.

அதிகார வர்க்கத்தின் அலட்சியம்இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் கடந்த 15.10.14 அன்று விழுப்புரம் ஆட்சியரிடம் கல்லூரியின் சீர்கேடுகளை வெளிப்படுத்தி மனு அளிக்கப்பட்டது. (இது தொடர்பாக தீக்கதிரில் 16.10.2014 அன்று செய்திக் கட்டுரை வெளியாகியுள்ளது). ஆனால் நடவடிக்கை இல்லை 5 க்கும் மேற்பட்ட மாணவர்கள் செப்.15 அன்று தீக்குளிக்க முயன்றது, எலிமருந்து சாப்பிட்டது என ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தியும் பலன் இல்லை. இதேபோல் பலமுறை இந்த டுபாக்கூர் கல்லூரியின் அடாவடித்தனத்தை எதிர்த்து மாணவ, மாணவியர் போராட்டம் நடத்தியுள்ளனர். முதல்வர் வரை மனு சென்றும் 3 இளம் தளிர்களின் உயிர் பலியானதுதான் மிச்சமாகியுள்ளது.“தற்கொலை கடிதத்தில் உள்ளது என்மகள் கையெழுத்தே இல்லை என்று கூறிய இறந்த மாணவி ஒருவரின் பெற்றோர் பின்னந்தலையில் அடிபட்டுள்ளது. உடல்களை தூக்கும்போதுகூட நீளவாக்கில் படுத்தநிலையில்தான் தூக்கியுள்ளனர். கடுமையாகதாக்கிய பின்னர் பலர் சேர்ந்து கிணற்றில் தூக்கிப் போட்டுள்ளனர். எனவே எங்கள் மகள் களை சென்னையில் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்வரை உறுதியாக இருந்தோம்.

ஆனால் ஆட்சியரோ, காவல்கண்காணிப்பாளரோ இதற்கு உடன்படாமல் விழுப்புரத்தில் நடத்துவதிலேயே பிடிவாதம் செய்து எங்கள் சம்மதம் இல்லாமலேயே எனது மகள் மோனிஷா உடலையும் பிரேதப் பரிசோதனை செய்துவிட்டனர். மாவட்ட ஆட்சியரின் இந்தப் பிடிவாதப் போக்கே சந்தேகத்தை உருவாக்கு கிறது” என நீதி கேட்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள மாணவி மோனிஷாவின் தந்தை தமிழரசன் கூறினார்.எட்டு ஆண்டுகளாக முறைகேடாக இயங்கிவரும் இந்தக்கல்லூரிக்கு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவக் பல்கலைக்கழகம் இந்த ஆண்டுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளதாக அதன் இயக்குநர் கீதாலட்சுமி ஜன – 25ந் தேதி தெரிவிக்கிறார். ஆனால் இந்த 2015-16 ஆம் ஆண்டிற்கு சென்னையில் கலந்தாய்வு நடைபெற்று இந்த கல்லூரியில் 50 மாணவ, மாணவியர் இளநிலை இயற்கை மற்றும் யோகா அறிவியல் பாடப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். எம்.ஜி.ஆர்.பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் 2015-16 ஆம் ஆண்டிற்கு அங்கீகாரம் அளித்த பட்டியலில் மாநிலத்தில் உள்ள 4 தனியார் கல்லூரிகளில் இந்த எஸ்.வி.எஸ் கல்லூரியும் இடம் பெற்றுள்ளது. கவுன்சிலிங் பட்டியலில் 327 ஆம் இடத்திலும் கல்லூரியின் பெயர் வெளியிடப்பட்டு 50 மாணவ, மாணவியர் சேர்க்கப்பட்டு உள்ளனர். தகவல் வெளியானவுடன் இந்த வெப்சைட் 25ந் தேதி மாலை முதல் நிர்வாகத்தால் முடக்கப்பட்டது. “தற்போதும் நிர்வாகி வாசுகியின் முதல்மகன் சுஜிவர்மாவும் மற்றும் மகளும் தில்லியில் எம்பிபிஎஸ் பயின்று வருகின்றனர். இவர்களும் மாணவிகளைஅடிக்கடி மிரட்டும் ரவுடிவெங்கடேசனும் இன்னும் கைது செய்யப்படவில்லை.சுஜிவர்மாவும், வெங்கடேசனும் பெரிய அளவில் மாணவ, மாணவியரை துன்புறுத்தி மிரட்டி வந்துள்ளனர். “ஏழில்பாரதி போல நானும் இந்த ஆண்டு கவுன்சிலிங் மூலம் சேர்ந்தேன். இதுவரை ரூ.3 லட்சத்திற்கு மேல் என்னிடம் வசூலித்துள்ளனர்” என கூறினார் உளுந்தூர்பேட்டை சேர்ந்த மாணவர் ராகுல்.

கடந்த கால திமுக ஆட்சியின்போதே இந்தகல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னரும் கல்லூரியின் முறைகேடுகள்,அதிகமாக கல்விக்கட்டணம் வசூல் தொடர்பாக மாணவர்களும் பெற்றோரும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழக துணைவேந்தராக கடந்த காலத்தில் இருந்த கே.மீர்முஸ்தபா ஹசேன்,(2009வரை) மயில்வாகனன், நடராஜன் (2009 முதல் 2012வரை) , சாந்தாராம் (2012 முதல் 2015வரை) ஆகியோரும் கண்டுகொள்ளவில்லை. உயரதிகாரிகள் யாருடைய நிர்ப்பந்தத்திற்காக இப்படி செயல்படுகின்றனர்.

அல்லது யாரைப் பாதுகாக்க முயற்சிக்கிறார்கள் என்பதே மாணவிகளை இழந்த பெற்றோர் மற்றும் பொதுமக்களின் கேள்வியாக இருக்கிறது. இதற்கு மாநில அரசுதான் பதில் சொல்லவேண்டும். 2014ல் தொடர்போராட்டம், உயர்நீதிமன்றத்தில் வழக்கு, 2015ல் பல போராட்டங்கள், எலிமருந்து சாப்பிட்டு தற்கொலைக்குமுயற்சி, தீக்குளிக்க முயற்சி என மாணவர்களின் கடந்த கால போராட்டங்களின் போதுஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல் இருந்ததன் விளைவு இன்று உயிர்களை தியாகம் செய்து கவனத்தை ஈர்க்கவேண்டிய கட்டாயத்திற்கு மாணவர் சமுதாயம் தள்ளப்பட்டது வேதனையின் உச்சம்.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: