தமிழகத்தில் துணைவேந்தர் பதவிகளுக்கான லஞ்சம் 14 கோடி எனும் செய்தியைக் கண்டு ஆத்திரமடைந்த மக்களின் சதவிகிதம் எத்தனையிருக்கலாம்? மூன்று மாணவிகளின் தற்கொலைச் செய்தி கண்டு ஆத்திரம் கொள்ளாதவர்கள் சதவிகிதம் எத்தனையிருக்கலாம்?

நாம் அனேகமாக எல்லா தற்கொலைகளின்போதும் கோபம் கொள்கிறோம். ஆனாலும் இந்த நிறுவனப்படுகொலைகள் தொடர்கின்றன. காரணம் இந்த படுகொலைகளுக்கு காரனமான ஊழல்மயமான நிர்வாக அமைப்பை நாம் கண்டுகொள்வதில்லை.

14 கோடி கொடுக்கும் ஒருவர் அதனைக்காட்டிலும் பன்மடங்கு அதிக லாபத்தை சம்பாதிக்க முனைவார். அதற்கான வழி தன் அமைப்பின் கீழுள்ள நிறுவனங்களில் ஊழலை அனுமதித்து அதிலிருந்து லாபம் பார்ப்பதுதான். இப்படித்தான் ஊழல் மேலிருந்து கீழாக நகர்கிறது. அடிப்படை வசதியற்ற நூற்றுக்கணக்கான கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் இருக்கின்றன.

அரசே அனுமதியற்ற பள்ளி கல்லூரிகள் ஏராளமாக இருப்பதாக அறிவிக்கிறது. ஆனால் அதனை தவிர்க்கவேண்டியது நம் பொறுப்பு என கைகழுவுகிறது. அதிக கட்டணம் குறித்த புகார்களுக்கு ஆதாரம் தரவேண்டியது புகார்தாரரின் பொறுப்பு என பல தருனங்களில் அரசு அதிகாரிகள் சொல்லியிருக்கிறார்கள். நாம் அப்போதெல்லாம் அலட்டிக்கொண்டதேயில்லை.

இப்படி அனுமதியின்றி யாரேனும் போலி ஒயின்ஷாப் வைத்தால் அரசு வெறும் அறிவிப்போடு நிறுத்திக்கொள்ளுமா? அங்கு மட்டும் எப்படி அதிகாரத்தின் கரங்கள் துரிதமாக செயல்படுகிறது? காரணம் அதன் பின்னிருக்கும் சாராய முதலாளிகளின் நெருக்கடி. அதே நெருக்கடி மக்களிடமிருந்தும் வராத வரை நம்மால் கல்வி நிலைய சுரண்டல்களையும் தற்கொலைகளையும் நிறுத்த முடியாது.

மூவர் தற்கொலைக்கான கோபம் தொடரட்டும், அதன் இலக்கு கல்வித்துறை ஊழலையும் தனியார்மயத்தையும் ஒழிப்பதாக இருக்கட்டும். இல்லாவிட்டால் நம் ஆத்திரத்தால் எந்த பலனும் கிடைக்காது. தெருநாயின் குரைப்புக்கு காரில் செல்பவர்கள் பயப்படுவதில்லை… இலக்கற்ற கோபமும் தெருநாயின் குரைப்பிற்கு இணையானதே.

வில்லவன் இராமதாஸ், சமூக-அரசியல் விமர்சகர்.