சரவணன் சந்திரன்
சரவணன் சந்திரன்
சரவணன் சந்திரன்

 டிஸ்கவரி சேனலில் ‘சியாச்சின்’ எல்லைப் பகுதியில் உள்ள இராணுவ வீரர்கள் குறித்த ஆவணப்படம் ஒளிபரப்பானது. அது பழைய நியாபகங்களையும் பல விஷயங்களையும் கிளறியது. ஒருமுறை இரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது, விடுமுறை முடிந்து முகாமிற்குத் திரும்பிக் கொண்டிருந்த வாடிப்பட்டியைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. ஆரம்பத்தில் இறுக்கமாக உடன் வந்தவர் பின்னர் மெல்லப் பேச ஆரம்பித்தார். அவர் சியாச்சின் குறித்து சில அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். சுற்றிலும் பனிமூடிய சிகரங்களில் பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் இருக்கும் நிலையில் பலருக்கும் பேசுவதே மறந்து போய்விடும் என்றார். இயல்பாகவே யாரிடமும் பேசவே தோன்றாதாம்.

விடுமுறையில் ஊருக்கு வந்த சில நாட்கள் யாரிடமும் பேசாமல் இறுக்கமாகவே இருப்பார்களாம். மெல்ல மெல்ல அந்த இறுக்கம் தளர்ந்து சகஜ நிலைக்கு வரும் சமயத்தில் விடுமுறை முடிந்திருக்கும் என்றார். “ஊரில் ஆயிரம் வேலைகள் இருக்கின்றன. எதற்காக இராணுவத்தில் சேர்ந்து கஷ்டப்படுகிறீர்கள்” என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தேன். அந்தக் கேள்விக்கான பதில் யாருக்குத் தெரிகிறதோ இல்லையோ? எனக்கு நன்றாகத் தெரியும் என்றாலும், கேட்டேன். அவர் பதில் எதையும் சொல்லாமல் விரக்தியாகச் சிரித்தார். அந்தச் சிரிப்பின் அர்த்தத்தை நான் புரிந்து கொண்டதிற்குக் காரணங்களும் இருக்கின்றன.

எங்களுடைய ஊரான கோவில்பட்டி ஹாக்கி விளையாட்டிற்குப் பெயர் பெற்ற ஊர். குட்டி ஜப்பான் என சிவகாசியைச் சொல்வதைப் போல, கோவில்பட்டியை தமிழகத்தின் ஜலந்தர் என்று சொல்வார்கள். 90களில் வேலையின்மை தலைவிரித்தாடிய போது எங்களூரில் ஹாக்கி விளையாடும் இளைஞர்களின் ஒரே கனவு இராணுவத்தில் சேர்வதுதான். மூன்று நேரமும் சோறு போட்டு சில ஆயிரங்களில் சம்பளமும் தருவார்கள். வேலைக்காகப் பெரிய படிப்பெல்லாம் படிக்கவும் தேவையில்லை என்பதுதான் பிரதான காரணம்.
எங்களுக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்த அண்ணன்கள் பலர் இராணுவத்தில் இருந்தார்கள். ஊருக்கு விடுமூறையில் வரும் அண்ணன்கள் இராணுவம் பற்றிக் கதைகதையாச் சொல்லி எல்லோரையும் வரச் சொல்லி அழைப்பார்கள். நடுஇரவில் அந்த குண்டு பாட்டில் ஓல்டு மங்க் ரம்மைக் குடித்துவிட்டு ஆரம்பத்தில் கலகலப்பாகத் துவங்கும் உரையாடல் இறுதியில் கஷ்டப்படலத்திற்கு வந்து அழுகையில் முடியும். ஆனாலும் இந்தக் கருவேல முட்காடுகள் சூழ்ந்த கந்தக பூமியில் இருந்து தப்பித்து அங்கே போய் செட்டிலாகி விடவேண்டும் என்பதை வலியுறுத்துவார்கள். முதல் ஆறுமாதத்திற்கு கஷ்டத்தைப் பொறுத்துவிட்டால், இங்கே ஊரில் அடுப்பெரிவதற்கு உத்தரவாதம் தந்துவிடலாம் என நம்பிக்கை தருவார்கள்.

அதை நம்பி ஒருமுறை நண்பர்களுடன் சேர்ந்து இராணுவத்தில் சேரக் கிளம்பிப் போனோம். விளையாட்டு வீரர் கோட்டோவில் போனால், பயிற்சிகள் இலகுவாக இருக்குமென நம்பிக்கை தந்தார்கள். அந்த நேரத்தில் அந்த வேலையில் சேர்வதற்குப் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார்கள். கொடுக்க முடியாத காரணத்தால் அந்த இராணுவ வேலை தேர்வுப் பயிற்சியுடன் முடிந்து போனது.

இன்னொரு முறை ஒரு போட்டிக்காக ஊட்டி எம்.ஆர்.சி வெலிங்டன் இராணுவ முகாமில் தங்கியிருந்த போது கண்ட காட்சிகள் ‘அப்பாடா தப்பித்தோம்’ என்ற உணர்வைத் தந்தன. அதிகாலை நாலரை மணிக்கு அந்தக் குளிரில் எழுந்திருக்க வேண்டும். நாள் முழுவதும் ஓய்வில்லாத பயிற்சிகள், இயல்பாகவே யாரும் செய்யத் தயங்கும் வேலைகள். மாலை மறுபடியும் பயிற்சிகள் முடித்து முகாமிற்குத் திரும்பிய பிறகு, தூங்காமல் சீனியர்களுக்கு கால் அழுத்திவிட வேண்டும். அதற்கடுத்து இரவுக் காவலுக்குப் போகவேண்டும். இரவு பனிரெண்டு மணிக்குத் தூங்கப் போனால், மறுபடி காலை நாலரை மணிக்கு எழுந்திருக்க வேண்டும். பல நேரங்களில் பகல் முழுவதும் மைதானத்தில் உள்ள புற்களைப் பிடுங்க வேண்டும். சிறு கற்களைப் பொறுக்க வேண்டும். சில விஷயங்களை வெளிப்படையாகச் சொல்ல முடியாது என்பதால், சுய தணிக்கை செய்திருக்கிறேன்.

முதல்நாள் எல்லாம் சுபமாக முடியும். அந்த முதல் இரவில் கொடுக்கப்படும் பெரிய பெரிய பூரிகள் குதூகலத்தைத் தரும். அடுத்தடுத்த நாட்களில் அந்தக் குளிரும் கடுமையான பயிற்சிகளும் சில்லறை வேலைகளும் தந்த சோர்வில் உணவிற்காக வரிசையில் நிற்கும் போது அந்தப் பூரிகளே பூதங்களாகத் தெரியும். என்னைத் தூங்கவிடுங்கள் தெய்வங்களே என கதறத் தோன்றும். அந்தப் பயிற்சியின் முடிவில் இராணுவம் மீதிருந்த காதல் சுத்தமாக வடிந்து போனது. இனி ஒரு நிமிடம்கூடத் தாக்குப் பிடிக்க முடியாது என்கிற இக்கட்டான நிலையில் தப்பித்து ஓடி வந்தோம். அதற்குப் பிறகு இராணுவம் என்கிற வார்த்தையைக்கூட வாழ்நாளில் உச்சரிக்கவே இல்லை.
விளையாட்டு வீரர்களுக்கே இந்த நிலையென்றால், பொதுப் பிரிவில் வருகிறவர்களின் நிலைபற்றிக் கேட்கவே வேண்டியதில்லை. கடுமையான உடற்பயிற்சிகள், கொடுமையான புறச் சூழல் இவற்றையெல்லாம் தாண்டி எங்களது நண்பர்கள் பலர் இராணுவத்திலேயே நீடித்தார்கள். எங்களது நண்பர்கள் தங்களது தாங்கவியலாத வறுமையை வெல்வதற்காகத்தான் அங்கே போனார்கள். தங்கைகளின் அக்காக்களின் அவர்களின் திருமணத்திற்காக வந்து போனார்கள். விடுமுறையில் வரும் போது இரவில் குடித்துவிட்டு மடியில் படுத்து சிலர் அழுவார்கள். திரும்பிப் போக மாட்டேன் என சபதம் போடும் அவர்கள் ஊர் திரும்பும் நாள் வந்ததும் கனத்த இதயத்துடன் கிளம்பிப் போவார்கள் அழுதபடியே.

டிஸ்கவரி சேனல் ஆவணப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, என்னுடைய அந்தப் பால்ய நண்பர்கள் நினைவிற்கு வந்து போனார்கள். சியாச்சினில் இராணுவ வீரர்கள் படும் துயரங்களையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த போது, என்னையறியாமல், என்னோடு படித்துக் கொண்டிருந்த போது, குடும்ப வறுமைக்காக படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு இராணுவத்திற்குப் போன என்னுடைய நண்பன் முருகேசனை என்னுடைய கண்கள் தேடிக் கொண்டிருந்தன. ஒருவேளை அந்தக் காணொளியில் முருகேசன் தட்டுப்பட்டிருந்தால்? ‘நான் தப்பித்துவிட்டேன். நீ மாட்டிக் கொண்டாயே முருகேசா’ என வாய்விட்டு அரற்றி கதறி அழுதிருப்பேன். உங்களுக்குத்தான் அது ‘தேசபக்தி’. எங்களுக்கெல்லாம் அது வெறும் ‘வயிற்றுப்பாடு’.

சரவணன் சந்திரன், ஊடகவியலாளர்.