சரவணன் சந்திரன்
சரவணன் சந்திரன்
சரவணன் சந்திரன்

கடந்த அக்டோபர் மாதம் விடுமுறைக்காக தென்மாவட்டத்திலுள்ள சொந்த ஊருக்குச் சென்றிருந்த போது, நீண்ட வருடங்கள் கழித்து பள்ளியில் உடன் படித்த நண்பன் ஒருவனைச் சந்தித்தேன். நண்பனுக்கு வலதுகையில் முழங்கைக்கு கீழே துண்டிக்கப் பட்டிருக்கும். உள்ளூர் தீப்பெட்டி அலுவலகம் ஒன்றில் கடைநிலை ஊழியனாகப் பணிபுரியும் அவனை வறுமை வாட்டியெடுப்பதை அவனது தோற்றத்தைப் பார்த்த எல்லோரும் சொல்லி விடுவார்கள். அப்போது சாரை சாரையாக பல வாகனங்கள் நாங்கள் பேசிக் கொண்டிருந்த பகுதியைக் கடந்தன. அந்த வாகனத்தில் குறிப்பிட்ட சாதியொன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் படியான வண்ணத் துணியை நெற்றிப் பட்டையில் கட்டியபடி இளைஞர்கள் ஆராவரத்தோடு சென்றபடி இருந்தனர். அதில் பெருமாலானவர்கள் குடித்திருந்தார்கள் என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லை.

கடந்துபோன ‘இந்தப் படை போதுமா, இன்னுங் கொஞ்சம் வேண்டுமா’ என்கிற கோஷங்கள் அடங்கிய வாகன ஊர்வலத்தை ஒதுங்கி நின்ற மக்கள் அச்சத்துடன் வேடிக்கை பார்த்தார்கள். “இன்னும் நிலைமை மாறவில்லை. அப்படியே தான் இருக்கிறது” என சிரித்தபடி சொன்ன நண்பனின் கண்களில் விரக்தி தெரிந்தது. அவன் கண்களில் தெரிந்த விரக்தியில் இருந்து நான் என்னுடைய காட்சிகளை விரித்தேன்.

90களின் பிற்பகுதியில் நடந்த தென்மாவட்ட சாதிக் கலவரங்களின் அப்போதைய பிரதிநிதியாய் நாங்கள் இருந்தோம். இபோதைய மனசாட்சியாய் இருக்கிறோம். குறிப்பிட்ட இரண்டு சாதிகளுக்கு இடையில் துவங்கி, அதில் மற்ற சாதிகளும் சேர்ந்து கொள்ள, மும்முனைப் போராக அந்தக் கலவரம் நடந்தது. பலர் கொல்லப்பட்டனர். நூற்றுக் கணக்கான வீடுகள் கொளுத்தப்பட்டன. ஒவ்வொரு சாதியைச் சேர்ந்த ஆதரவாளர்களும் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு முறைவைத்து உணவு சமைத்துப் போட்டார்கள். ஊர்க்கூட்டங்கள் நடத்தப்பட்டு உண்டியல் வைத்து வசூல் செய்யப்பட்டது. சாதிப் பெருமை பேசும் கிராமியப் பாடல்களும் உணர்ச்சி மிக்க உரைகளும் எங்களிடையே நிகழ்த்தப்பட்டன.

அப்போது உயர்நிலைப் பள்ளி மாணவர்களாக இருந்த நாங்கள் இதற்காகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டோம். எங்களுக்கு சாதியுணர்வு ஊட்டப்பட்டது என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் இயல்பாகவே எங்களிடையே அது நாங்கள் பெருமளவு நேரத்தைக் கழிக்கும் பள்ளி வளாகத்தில் இருந்ததுதான்.

ஹாக்கி விளையாட்டிற்காக நண்பன் ஒருவனது வீட்டில் கூடுவோம். நண்பனின் அம்மா எல்லோருக்கும் சமைத்துப் போடுவார். தென்மாவட்டக் கலவரங்கள் உச்சத்தில் இருந்த போது, தாலிச் சரடைப் பறிக்க முயன்ற போது கடுமையாகத் தாக்கப்பட்ட ஒருபெண்மணியைப் பற்றிய செய்தி எல்லா செய்தித்தாள்களிலும் வந்தது. அந்தப் பெண்மணிதான் எங்களுக்குச் சமைத்துப் போட்ட நண்பனின் அம்மா. அந்தக் கலவரச் சூழலில் அவரது தாலிச் சரடைப் பறிக்க முயன்று அது முடியாத பட்சத்தில், அவர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது அவர் கையால் சாப்பிட்ட எங்களது பள்ளி நண்பன் தான். அந்த அம்மாவின் வீடு கொளுத்தப்பட்டது. காரணம் நண்பர்கள் இருவரும் கலவரத்தில் ஈடுபட்ட வெவ்வேறு சாதிகளைச் சேர்ந்தவர்கள்.

“திருப்பாச்சி அருவாளைத் தூக்கிக்கிட்டு வாடா வாடா. சிங்கம் பெத்த பிள்ளையென்று விளங்க வைப்போம் வாடா வாடா” என ஒரு சாதியைச் சேர்ந்த மாணவர்கள் சாதிவெறியுடன் பாடும் போது இன்னொரு தரப்பு கண்களில் வெறியைத் தாக்கி தனக்கான சமயத்திற்காகக் காத்திருக்கும். அந்தப் பாடல் நேரடியாகக் குறிப்பிடும் சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், தன்னை ஆதிக்க சாதியாகக் கருதிக் கொள்ளும் வேறுசாதி மாணவர் களும்கூட அந்தப் பாடலை காரணமேயில்லாமல் பாடுவதற்குக் காரணம் அப்பாடலில் அரிவாளும் வீரமும் வருவது தான். தேவர் மகன் படம் வெளிவந்த போது, இப்போது ரிங் டோன் வைத்திருப்பதைப் போல, அந்தப் படப் பாடலை எப்போதும் வெறியுணர்வோடு ஒரு குழு பாடும். பள்ளி ஆண்டு விழாவில் அந்தப் பாடலைப் போடச் சொல்லி ஒரு குழு ரகளை செய்யும். போடக்கூடாதென இன்னொரு குழு ரகளை செய்யும். பெரும்பாலும் உள்ள சாதிக் கலவரங்களை நோண்டிப் பாருங்கள் அதன் வேர் பள்ளியில் நடந்த ஒரு சாதிச் சண்டையிலிருந்தே துவங்கும். இப்போக்கை கண்டித்து பாவம் ஆசிரியர்களால் ஒன்றும் செய்ய முடியாது. வெளிப்படையான சாதிய அடையாளத்தோடு வளைய வரும் மாணவர்களைக் கண்டித்துச் சிக்கலில் மாட்டிக் கொள்ள அவர்களும் தயாராக இருக்க மாட்டார்கள்.

ஒவ்வொரு சாதியைச் சேர்ந்த மாணவர்களும் அவரவர் சாதியைச் சேர்ந்த சாதித் தலைவர்களின் புகைப்படங்களை வெள்ளைச் சட்டைப் பையில் தெரியும்படி வைத்துக் கொண்டு அலையும் போது ஆசிரியர்களால் என்னதான் செய்ய முடியும்? தேநீர் குடிக்கக்கூட தனித்தனிக் குழுக்களாக அலையும் மாணவர்களுக்கு என்னவகை நீதிபோதனைகளை அவர்களால் போதித்து விட முடியும்? இப்போதும் அப்படித்தானா? என உடன் படித்து இப்போது கிராம உயர்நிலைப் பள்ளியொன்றில், ஆசிரியராக இருக்கும் நண்பர் ஒருவரிடம் கேட்ட போது அவர் சொன்னது இதுதான்; “அப்படியேதான் இருக்கிறது. மாணவனைக் கொஞ்சம் கடுமையாகக் கண்டித்தால், உங்கள் சாதியைத் தவிர மற்ற சாதிப் பையன்களைக் கண்டிக்காதீர்கள் என தலைமையாசிரியர் அழைத்து அறிவுரை சொல்கிறார். பள்ளியில் பணி ஏற்பு செய்த முதல் நாளிலேயே வந்து ஊர்த்தலைவர் உங்கள் சாதி என்ன முகத்திற்கு நேராகவே கேட்டு விட்டார். பெரும்பாலான மாணவர்கள் அவரவரது சாதி அமைப்புகளை வெளிப்படையாக ஆதரிக் கிறார்கள்”. இந்த ஆசிரியரின் கூற்று உண்மையா? இல்லையா? என இந்தத் துறையில் நேர்மையோடு புழங்கும் கல்வியாளர்களைக் கேட்டாலே, தெரியும்.

பெரும்பான்மை சாதியைச் சேர்ந்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் சிறுபான்மைச் சாதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் பணிக்குப் போகத் தயங்குகிறார்கள். அப்படியே பணி ஒதுக்கப்பட்டாலும், பணம் கொடுத்தாவது பணி மாறுதல் வாங்கி நகர்ந்து விடுகிறார்களா? இல்லையா? என்பதையும் அதே கல்வியாளர்களைக் கேட்டாலும் சொல்லி விடுவார்கள்.

துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சிறுவர்கள் என்பதால், பெரும்பாலும் சாதி அமைப்புகளின் குறி இவ்வகை உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் கிராமப்புற கல்லூரி மாணவர்கள்தான். ஒருகாலத்தில் சமூகம் சார்ந்த மாணவர் போராட்டங்களுக்குப் பெயர் வாங்கிய தமிழ்நாட்டில், மாணவர் சக்தி சாதியுணர்விற்காக சமீபகாலமாக அதிகமாகத் திரட்டப்படுகிறது. நிதர்சனமான இந்த உண்மையை மறைத்து மறைத்து பூடகமாகச் சொல்லி எதைச் சாதிக்கப் போகிறோம்? எல்லா வகை சாதி குருபூஜை விழாக்களையும் நெருங்கிக் கவனித்துப் பாருங்கள். நெற்றியில் சாதிக் கொடியைப் பட்டையாகக் கட்டிக் கொண்டு அதிகமாக உலா வருவது முதியவர்களா என்ன? இப்போது சில மாதங்களுக்கு முன்புகூட மாணவர்களுக்கிடையிலான மோதலில் பள்ளியில் கொலை நடந்ததாக மூன்று வெவ்வேறு செய்திகளைப் பத்திரிகைகள் பதிவு செய்திருக்கின்றன. இந்த மூன்று வெவ்வேறு செய்திகளையும் நூல் பிடித்து நதிமூலம் தேடிப் போய்ப் பார்த்தால், அது மாணவர்களிடையிலான சாதி மனப்பான்மையில்தான் போய் முடியும். சாதிகள் இல்லையடி பாப்பா என்பதை நகர்ப்புற மாணவர்களிடம் எதிர்பார்க்க முடியும். கிராமப்புற மாணவர்களிடமும் அதை எதிர்பார்த்துத் தேடினால் ஏமாற்றம்தான் எஞ்சும். சாதி அமைப்புகள் வலுவாக இருக்கும் கிராமப்புற மாணவர்களிடம் சாதியுணர்வு இருப்பது இயல்பானதுதான் என இந்தச் செய்தியைக் கடந்து விடமுடியாது. அப்புறம் எதற்காக நீதி போதனை வகுப்புகளுக்கு வாரம் ஒருமுறை ஒரு மணிநேரம் ஒதுக்கினீர்கள்? அந்த ஒருமணி நேரத்தைக்கூட விளையாட்டு உபகரணங்களே இல்லாத நிலையில் விளையாட்டு பீரியடிற்காக ஒதுக்கி ஓய்வாக இருந்தவர்கள்தானே நாம்?

உண்மையிலேயே சமூகம் சார்ந்த அக்கறை இருக்கும் ஆசிரியர்களும் சமூக நலன் விரும்பும் அரசும் கிராமப்புற உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இருந்து விழிப்புணர்வைத் துவங்கவேண்டிய நேரம் இது. ‘ஆபரேஷன் 100’ என்கிற பெயரில் தென்மாவட்டங்களில் மீண்டும் ஒரு சாதிக் கலவரத்திற்கான சூழல் திரட்டப்படுவதாக அதிகாரபூர்வமில்லாத செய்திகள் கசிகின்றன. கலவரத்தில் ஈடுபடத் திட்டமிடும் சாதியைச் சேர்ந்தவர்களும் அதற்கு நேரெதிர் உள்ள சாதியைச் சேர்ந்தவர்களும் தனித்தனியே திரட்டப்பட்டு, மூளைச்சலைவை செய்யப்படுவதாகவும் செய்திகள் கசிகின்றன. இதில் பெருமளவில் சம்பந்தப்பட்டிருப்பது மாணவர்கள் என்பதால், அரசும் சமூக நலன் விரும்பிகளும் இந்த விஷயத்தில் உடனடியாக அவர்களின் கவனத்தைக் குவிக்க வேண்டிய உடனடித் தேவை இருக்கிறது.

என்னுடைய நண்பனின் வலதுகை எப்படி துண்டானது? தென்மாவட்ட சாதிக் கலவரங்கள் உச்சத்தில் இருந்த போது, அவனது சாதிக்காக துண்டானது! நாட்டு வெடிகுண்டு தயாரித்த போது தவறாகக் கையாண்டு அது வெடித்ததால் துண்டானது! துண்டானது அவனது வலதுகை மட்டுமல்ல. வாழ்க்கையும்தான்.

சரவணன் சந்திரன், ஊடகவியலாளர். சமீபத்தில் வெளியான இவருடைய நூல் ஐந்து முதலைகளின் கதை.