கதிர்வேல்

கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்தத் தலைவர் V S அச்சுதானந்தனக்கு 92 வயது பூர்த்தியாகி விட்டது. தோழர் நல்ல மூடில் இருந்தபோது ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
“எப்படி தோழர் உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் ஆனது…?”
ஒரு நிமிடம் கண்களை மூடி மவுனமாகிறார். பின் கண்களை திறந்து நிலத்தை பார்த்தபடி பேசுகிறார்.
“அப்பா, அம்மா, சகோதரர்கள் அடங்கிய ஒரு அன்பான குடும்பம் என்னுடையது. என் அம்மாவுக்கு தொற்று நோயான வைசூரி வந்துவிட்டது. அப்பல்லாம் வைசூரி வந்தால் யாருமில்லாத இடத்தில் ஒரு ஓலை குடிசை கட்டி நோயாளியை அதில் அடைத்து விடுவார்கள். யாராவது சாப்பாடோ, தண்ணியோ, மருந்தோ கொண்டுபோய் கொடுத்தால்தான் உண்டு.
நோயாளி வலியினால் கதறி கூப்பாடு போட்டு அழுவது தொலைவில் கேட்கும். யாரும் போக முடியாது. துன்பத்தின் முடிவில் நோயாளி இறந்ததும், குடிசையோடு சேர்த்து எரித்து விடுவார்கள். (அந்த பயங்கரத்தை கற்பனை செய்து பாருங்கள்)
என் அம்மாவையும் தோட்டத்தில் ஒரு குடிசையில் அடைத்தார்கள். நான் அப்போது சிறுவன். அம்மாவை பார்க்க வேண்டும் என்று அடம்பிடித்து அழுதால் அப்பா தோட்டத்திற்கு கூட்டிப் போவார். தூரமாய் தெரியும் சிறு குடிசையை சுட்டிக் காட்டி அம்மா அதனுள் இருப்பதாய் சொல்வார்.
பார்த்தால் குடிசை மட்டுமே தெரியும். அம்மா ஒருவேளை குடிசையின் உள்ளிருந்து எங்களை பார்த்திருக்கலாம். (ஒரு நிமிடம் மவுனமானார். தொடர்ந்து)
“கொஞ்சநேரம் பார்த்து விட்டு எதுவும் புரியாமல் அப்பாவோடு திரும்பி விடுவேன். அம்மாவின் நோய் குணமடைய அழுது பிரார்த்திப்பதை தவிர வேறொன்றும் அன்று அறிந்திருக்கவில்லை. ஒரு நாள் அம்மா எங்களை விட்டு போய் விட்டாள் என்று அறிந்தேன். அப்பா மட்டுமே பின் ஒரே துணை, எல்லாமும். அம்மா இல்லாத குறை தெரியாதபடி அப்பா எங்களை பேணி வளர்த்தார்.
திடீரென அப்பாவும் உடல் நலம் குன்றி படுக்கையில் விழுந்தார். பயந்து நடுங்கி.. உறக்கம்வராமல்.. சுருண்டுகிடந்து இரவு முழுவதும், அப்பாவையாவது காப்பாற்றி விடு தெய்வமே என்று கேள்விப்பட்ட எல்லா தெய்வங்களையும் கூப்பிட்டு பிரார்த்திப்போம். ஆனால்… சிறுவர்களான எங்களை அனாதை ஆக்கிவிட்டு அப்பாவும் போய்விட்டார்.
அப்போதெல்லாம் எங்கள் குரலை கேட்காத தெய்வங்களை அதன் பிறகு கூப்பிட வேண்டும் என்று தோன்றவே இல்லை”. தானாகவே வழிந்தோடிய கண்ணீரை துடைத்தபடி அவரது கண்களை பார்த்தேன். கண்ணீர் எதுவும் வரவில்லை. இருப்பதுதானே வரும்!
கதிர்வேல், மூத்த பத்திரிகையாளர். தினகரன் நாளிதழின் ஆசிரியராக இருந்தவர்.