அரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 சமூக நீதி சமூகம் சாதி அரசியல்

மரக்காணம் தீர்ப்பு : யாருக்குக் கிடைத்தது நீதி?

அ. மார்க்ஸ்

அ.மார்க்ஸ்
அ.மார்க்ஸ்

1.ஏப்ரல் 25, 2013 அன்று மகாபலிபுரத்தில் நடந்த வன்னியர் சங்க மாநாட்டிற்கு அச்சசங்கத்தினர் சென்ற போது மரக்காணத்தில் நடை பெற்ற சாதிக்கலவரத்தில் கொல்லப்பட்ட பா.ம.க வைச் சேர்ந்த செல்வராஜ் கொலை வழக்கில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் கொலைக் குற்றத்தை உறுதி செய்து ஆறு தலித்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பா.ம.க நிறுவனர் தீர்ப்பை வரவேற்றுள்ளார். வி.சி.க தலைவர் திருமாவளவன் தீர்ப்பை ஏற்கவில்லை; தண்டிகப்பட்டவர்கள் அப்பாவிகள் எனக் கூறியுள்ளார்.

இது விசாரனை நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு. எல்லாம் முடிந்துவிடவில்லை. இன்னும் மேல்முறையீடுகள் உள்ளன. பொதுவாக விசாரணை நீதிமன்றங்கள் இப்படி உச்ச பட்சமாகத் தண்டனைகளை வழங்குவது வழக்கமாக இருக்கிறது.

இது ஒருபக்கம் இருக்க நான் சொல்ல வருவது வேறொன்று.

2.அதற்கு முன் ஒன்று : மரக்காணம் கலவரத்திற்கும் பாமகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என இந்தத் தீர்ப்பின் மூலம் உறுதியாகிவிட்டது எனத் தன் அறிக்கையில் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பான உண்மை அறியும் குழுவில் பங்குபெற்றவன் என்கிற வகையில் ஒன்றைக் கவனப்படுத்துகிறேன்.

இது செல்வராஜ் கொலை தொடர்பான தீர்ப்பு. கலவரம் நடந்ததா இல்லையா என்பது பற்றிய தீர்ப்பு அல்ல. அன்று மூவர் இறந்துள்ளனர். செல்வராஜையும் சேர்த்து இருவர் பா.மகவினர். இது தவிர கட்டையன் தெருவைச் சேர்ந்த ஒரு தலித்தும் இறந்துள்ளார்.

இவர்களில் செல்வராஜ் தலையில் வெட்டுக்காயம் இருந்தது. இதைக் கொலை வழக்காகப் பதிவு செய்து காவல்துறை விசாரித்தது. அதன் தீர்ப்பே இது.

குடித்துவிட்டு வந்த பா.மகவினர் வரும் வழியெல்லாம் வம்பு செய்து கொண்டு வந்ததை பலரும் அன்று உறுதி செய்துள்ளனர். குறிப்பாக அப்பகுதியில் உள்ள முஸ்லிம்களும் இதை உறுதி செய்தனர். மரக்காணத்தை ஒட்டிய கட்டையன் தெருவிற்குள் புகுந்து தலித் வீடுகள் சூறையாடப்பட்டன. இவை அனைத்தும் நடந்தவை. இதை ஒட்டி நிச்சயமாகி இருந்த தலித் பெண் ஒருவரின் திருமணம் நின்று போனதும் எங்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது முற்றிலும் உண்மை. இந்தத் தீர்ப்பு அவற்றை எல்லாம் பொய் என நிறுவிவிடவில்லை. டாக்டர் அவர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

  1. இந்த அறிக்கையை ஒட்டி எனக்கும் சுகுமாரனுக்கும் பெரிய அளவில் பா.ம.க தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வந்தன. எனக்கு மொட்டை டெலிபோன்கள் உட்பட ஏராளமான கண்டனக் கடிதங்கள். மின்னஞ்சல்கள் மூன்று நான்கு நாட்கள் வரை இந்தப் பிரச்சினைகள் தொடர்ந்தன. நண்பர்கள் மனுஷ்யபுத்திரன் போன்றோர் இதைக் கண்டிக்கவும் செய்தனர்.

நேற்று இந்தத் தீர்ப்பு வந்தபின் சில பா.மகவினர் பாருங்கள் நீங்கள் பொய் அறிக்கை எழுதினீர்களே, இப்போது என்ன ஆயிற்று எனத் துளைக்கின்றனர்.

  1. இப்போது எங்கள் அறிக்கை பற்றி. நாங்கள் ஒரு பிரச்சினையை விசாரிக்கச் செல்கிறோம் என்றால் அதிகபட்சம் இரன்டு அல்லது மூன்று நாட்கள் அங்கு இருக்கிறோம். எல்லா உண்மைகளையும் புலன் விசாரித்துக் கண்டு பிடித்துவிட இயலாது. அதிரடியாக ஆங்கள் எதையும் சொல்வதில்லை. கவனம் கொள்ள மறுக்கப்படும் விடயங்கள் மீது கவனத்தை ஈர்ப்பது எங்கள் நோக்கம்.

எங்கள் அறிக்கையை எனது amarx.org இனையப் பக்கத்தில் காணலாம். தருமபுரி சாதிக் கலவரம், குருவின் வன்முறையைத் தூண்டும் பேச்சு, சாதிக் கூட்டணிகளின் உருவாக்கம், இந்த மகாபலிபுரம் மாநாட்டில் பேசப்பட்ட வன்முறைப் பேச்சுக்கள், கட்டையன் தெரு தலித்கள் மீதான வன்முறைகள், இத்தகைய வன்முறைகளை எதிர்நோக்கி காவல்துறை உரிய பாதுகாப்பு வசதிகளைச் செய்யாமை இவை குறித்துத்தான் நாங்கள் எங்கள் அறிக்கையில் முக்கியத்துவம் தந்திருந்தோம்.

  1. இப்போது செல்வராஜ் கொலை பற்றி எங்கள் அறிக்கையில் சொல்லியுள்ளவற்றை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம்.:

அ) “இவை தவிர அரியலூர் பி.செல்வராஜ் மற்றும் தஞ்சை எஸ்.விவேக் ஆகியோரது மரணம் தொடர்பான இரு குற்றப்பத்திரிக்கைகள் (274 மற்றும் 275/2013). பிரேத பரிசோதனை அறிக்கையில் செல்வராஜ் தலையில் வெட்டுக்காயம் பட்டு இறந்துள்ளார் எனத் தெரிந்தபின் அவரது மரணம் கொலை என்பதாக இப்போது விசாரிக்கப்படுகிறது. இருவரும் வன்னியர் சங்க மாநாட்டில் கலந்து கொள்ள வந்தவர்கள். இத்துடன் தலித் ஒருவரும் இறந்துள்ளார். சென்ற 27 அன்று ஜிப்மர் மருத்துவ மனைக்குக் கொண்டு வரப்பட்டபோது இறந்திருந்ததாக அறிவிக்கப்பட்ட கட்டையன் தெருவைச் சேர்ந்த மு.சேட்டும் பா.ம.கவினரின் தாக்குதலின் விளைவாகவே இறந்துள்ளார் என அவரது உறவினர்களால் புகாரளிக்கப்பட்டுள்ளது”.

ஆ) “மரக்காணத்திற்கும் கூனி மேட்டிற்கும் இடையில் தஞ்சையைச் சேர்ந்த விவேக், அரியலூரைச் சேர்ந்த செல்வராஜ் என இரு வன்னியர் சங்கத்தினர் அன்று சந்தேகத்திற்குரிய வகையில் மரணமடைந்துள்ளனர். இதில் விவேக் சாலை விபத்தில் மரணமடைந்துள்ளார் எனக் கூறப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கையில் செல்வராஜ், தலையிலுள்ள வெட்டுக் காயத்தால் மரணமடைதுள்ளது உறுதியாகியுள்ளது. அந்த வகையில் இது கொலை என்கிற நோக்கில் இப்போது புலன் விசாரிக்கப்படுகிறது. தலித்களால் தாக்கப்பட்டு இவர் கொல்லப்பட்டார் என பா.ம.கவினர் கூறுகின்றனர். ஆனால் கொலை நடந்ததாகச் சொல்லப்படும் பகுதியில் பெரிய அளவில் தலித்கள் கிடையாது. அதோடு பெருந்திரளாக மாநாட்டுக்கு வந்தோரைச் சில தலித்கள் சென்று கொன்றிருக்க இயலுமா என்கிற கேள்வியை விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் எங்களிடம் எழுப்பினார். அப்படியானால் நாங்களே எங்கள் ஆட்களைக் கொன்று கொண்டோமா என்கிற கேள்வியைப் பா.ம.க வினர் கேட்கின்றனர். .

இ) “மாநாட்டுக்கு வந்தவர்கள் தரப்பில் அரியலூர் செல்வராஜ் என்பவர் தலையில் வெட்டுப்பட்டு இறந்துள்ளார். அதேபோல கட்டையன் தெருவைச் சேர்ந்த சேட்டுவின் மரணத்திலும் அய்யங்கள் உள்ளன. அவரது பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை. எனினும் அவர் 25ம் தேதியன்று மாநாட்டுக்கு வந்தவர்கள் தாக்கியதன் விளைவாகவே இறந்தார் என அவரது குடும்பத்தினர், குற்றம் சாட்டுகின்றனர். இரு வழக்குகளும் முறையாக விசாரிக்கப்பட்டுக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.”

இப்போது சொல்லுங்கள். எங்கள் அறிக்கையில் என்ன குறை கண்டீர்கள்?

எந்த இடத்தில் நாங்கள் பொய் சொல்லியுள்ளோம் அல்லது மிகைப்படுத்தியுள்ளோம் அல்லது தலித்களுக்குச் சார்பாக உண்மைகளைத் திரித்துள்ளோம்?

செல்வராஜ் கொலையில் நாங்கள் எந்தத்தீர்ப்பையும் அளிக்கவில்லை. இரு தரப்பினரின் கூற்றையும் இங்கே பதிவு செய்துள்ளோம். செல்வராஜ் கொலை பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கி விட்டது. ஆனால் சேட்டு என்கிற தலித்தும் இறந்துள்ளார். அதை தலித்கள் கொலை என்கின்றனர். நாங்கள் அதை உறுதி செய்யவில்லை. அதையும் விசாரியுங்க்ள் என்று மட்டுமே சொல்கிறோம்.

இதில் என்ன குறை கண்டீர்கள்?

சிதிக்க வேண்டியவர்கள் பா.ம.க வினர்தான் நாங்கள் அல்ல.

அ. மார்க்ஸ், எழுத்தாளர்; களப்பணியாளர்; ஓய்வுபெற்ற பேராசிரியர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: