மும்பையில், கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர்26-ஆம் தேதி பயங்கரவாதிகள் 10 பேர் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலியாகினர். 309 பேர் படு காயம் அடைந்தனர். இந்தத்தாக்குதலில் லஸ்கர்-இ – தொய்பா பயங்கரவாதி டேவிட் ஹெட்லிக்கும் தொடர்பு இருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.

டேவிட் ஹெட்லி பாகிஸ்தானிய தந்தைக்கும் அமெரிக்க தாய்க்கும் பிறந்தவர். 2002 முதல் 2005 வரை பாகிஸ்தானுக்கு தீவிரவாத பயிற்சிகளுக்குச் சென்று வந்தார் ஹெட்லி. அமெரிக்காவின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் உளவாளியாக இருந்த ஹெட்லி, பாகிஸ்தானுக்கும் உளவாளியாக இருந்தார். 2006 ஆம் ஆண்டு தன்னுடைய தாவூத் கிலானி என்ற பெயரை டேவிட் ஹெட்லி என மாற்றிக் கொண்டார். 2006-2008 வரை ஐந்து முறை மும்பை தாக்குதலை திட்டமிடும் பொருட்டு இந்தியாவுக்கு உளவு பார்க்க வந்திருக்கிறார் டேவிட் ஹெட்லி. லஷ்கர் இ தொய்பாவுக்காக 2009 ஆம் ஆண்டு இறைத்தூதர் முகமது குறித்த அவதூறு கார்டூனுக்காக டச்சு பத்திரிகை மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டார். அந்தத் திட்டத்தை செயல்படுத்தும் முன் அக்டோபர் 2009 ஆம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பும் வழியில் கைது செய்யப்பட்டார்.

அந்த வழக்கில் அவருக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் அமெரிக்கச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மும்பை குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது என்று கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க போலீசாருக்கு மும்பை போலீசார் கடிதம் எழுதியிருந்தனர்.

மும்பை தாக்குதல் வழக்கை விசாரித்துவரும் சிறப்பு நீதிமன்றத்தில் சமீபத்தில் இவர் “நான் அப்ரூவராக மாற விரும்புகிறேன், என்னை மன்னியுங்கள்” என்று தன் வழக்கறிஞர் மூலம் கேட்டிருந்தார்.  அமெரிக்க சிறையில் இருந்தபடியே விடியோ கான்ப்ரன்சிங் மூலம், நீதிமன்றத்தில் பேசிய ஹெட்லி, தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்பதாகத் தெரிவித்தார். மும்பை தாக்குதல் தொடர்பாக  11 குற்றச்சாட்டுகள் ஹெட்லி மீது பதிவாகியுள்ளன.

அதைத்தொடர்ந்து, கடந்த  இரண்டு நாட்களாக ஹெட்லி, அமெரிக்க சிறையில் இருந்தபடியே வாக்கு மூலம் அளித்து வந்தார். மும்பை குண்டுவெடிப்பில் தனக்கு உள்ள தொடர்பை ஒப்புக் கொண்ட அவர், தாக்குதலுக்கு முன்னர் உளவு பார்ப்பதற்காக ஏழு முறை பல்வேறு பெயர்களில் இந்தியா வந்து சென்றதாகவும், இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்கு தல்களுக்கு லஷ்கர்-இ -தொய்பா அமைப்புதான் முழு காரணம்; அனைத்து உத்தரவுகளுமே அதன் தலைவர் ஸகியுர் ரஹ் மான் லக்வியிடம் இருந்ததுதான் வந்தன என்று தெரி வித்தார். மேலும், லஷ்கர்- இ- தொய்பா அமைப்பு, பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐஎஸ்ஐயின் கட்டுப்பாட்டில் உள்ள தாகவும் கூறினார்.

ஹெட்லியின் மூலம் மும்பை தாக்குதலில் விடைதெரியாத பல கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என நம்புகிறது இந்தியா. பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ அதிகாரிகள் நேரடியாக இந்தத் தாக்குதல் திட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள் என்று இந்திய புலனாய்வுத் துறை ஏற்கனவே கண்டறிந்திருக்கிறது. இந்நிலையில் மும்பை தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவத்தின் பங்கு என்ன என்கிற முடிச்சை ஹெட்லியின் வாக்குமூலம் அவிழ்க்கும் என் நம்புகிறது அரசு.

அதுபோல, ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பின் பங்கு என்ன என்பதையும் ஹெட்லி சொல்வார் என எதிர்ப்பார்க்கிறது இந்திய அரசு. மும்பை மீது தாக்குதல் நடத்திய 10 பேருக்கு யார் பயிற்சி அளித்தார், குறிப்பாக லாகூரிலிருந்து கராச்சிக்கு பயணம் மேற்கொள்ள உதவியவர்கள் யார் போன்ற கேள்விகளுக்கு ஹெட்லியின் சாட்சியம் பதில் அளிக்கும் என நம்பப்படுகிறது.
மும்பை தாக்குதல் குறித்து புலனாய்வு செய்த பாகிஸ்தான் அரசு அதில் இந்தியாவால் குற்றம் சுமத்தப்பட்ட பலர் மீது எந்தக் குற்றச்சாட்டையும் வைக்கவில்லை. குறிப்பாக லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி, சஜித் மஜித், அப்துர் ரஹ்மான், மேஜர் இக்பால், ஐஎஸ்ஐ அமைப்பைச் சேர்ந்த மேஜர் சமீர் ஆகியோர் பங்கை முற்றாக மறைத்தது பாகிஸ்தான்.