ரோஸ். நாகாலாந்தின் பழங்குடியின குழுக்களில் ஒன்றான டேங்கூ (Tangkhul ) இனத்தை சேர்ந்த இளம் பெண். ராணுவம் ஆக்கிரமித்திருக்கும் அத்தனை பகுதிகளிலும் பெண்கள் எதிர்கொள்ளும் வன்முறைக்கு,  ரோஸ்ம் ஆளாக நேர்ந்தது.  1974-ம் ஆண்டு மார்ச் மாதம் 4-ம் தேதி, நாகாலாந்தை பாதுகாத்த இந்திய ராணுவ எல்லை பாதுகாப்பு படையின் அதிகாரிகள், ரோஸ் என்கிற அந்த இளம் பெண்ணை மணிக்கணக்கில் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தினர்.  சொந்த நாட்டு ராணுவத்தாலேயே பலாத்காரம் செய்யப்பட்டார் ரோஸ்.

அதே மாதம் 6-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார் ரோஸ். அவருக்கு அழகான ஒரு காதல் இருந்தது என்பது மரணத்திற்கு தெரியுமா என்ன? பள்ளத்தாக்குகள்  முழுவதும் படர்ந்திருந்த தன்னுடைய காதலை , தற்கொலையின் மூலம் அநாதரவாக்கி செல்கிறோம் என்று ரோஸ்க்கு நன்றாக தெரிந்திருக்கிறது அந்த வலி தாங்காத ரோஸ், தன்னுடைய காதலனுக்கு ஒரு கடிதம் எழுதினார். ரோஸின் தற்கொலையை சொன்ன, ரோஸின் காதலை சொன்ன, ராணுவங்களின் பலாத்காரங்களினால் சிதையும் எளிய மனதை சொன்ன கடிதம் அது.

டேங்கூ (Tangkhul ) மொழியில் எழுதப்பட்ட அந்த தற்கொலை கடிதம் பின்னாட்களில், மணிப்பூரி மொழியில் மாற்றம் செய்யப்பட்டு , Pan Manipur Youth League-ன் பதிப்பாக 1993-ம் ஆண்டு வெளிவந்தது. அந்த கடிதத்தின் அழுத்தம் தாங்காது, அதை ஆங்கிலத்தில் “பலாத்காரத்திற்கு பலியான பெண்ணின் காலங்களை கடந்த காதல் கடிதம்” – என்ற தலைப்பில் மொழிப்பெயர்த்தார்  Smejita என்னும் பெண்.  அந்த கடிதத்தின் தமிழாக்கம் இங்கே:

(“A Timeless Love letter” written by a Tangkhul Rape victim. Source: AFSPA 1958, CPDM 2010)

உயிரினும் மேலான அன்பே!

காழ்ப்பு விதையூன்றிய இவ்வுலகில், ஒரே கொடியில் பூத்திருக்கும் அழகிய மலர்களைப் போல்  நம் காதல் ஒரு போதும் மலராது. ஆனால், என்றும் நிலைத்திருக்கும் காலத்தால் அழியாத  “தூயகாதல்” என்னுமிடத்தில் நாம் ஒளிர்ந்து மலர்வோம். நான் இவ்வுலகத்தை விட்டுப் போவது குறித்து நீ துயரத்தில் மூழ்கிவிடலாகாது.

பெரும்சோகத்தில் அலைக்கழிக்கப்பட்ட வாழ்வினாலும், எதிர்பார்த்து வராத சொற்களினாலும் என் ஆன்மாவுக்கு அவமானம் மேலிட‌,  இந்தத் தனிமையான பாதையைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர வேறு வழியில்லாமல் போய்விட்டது.

இனி வரும்நாளெல்லாம் நாம் ஒன்றாய் இருக்க, காலமெல்லாம் துணை வர உறுதி எடுத்துக் கொண்டதை நினைத்து கொள்கிறேன். ஆனால், அதுவரை என்னால் வர இயலாமல் போய்விட்டது! உன்னை ஏற்றுக் கொள்ள என் வாழ்வில் வழியே இல்லாமல் போய்விட்டது.

என்ன கொடுமை! என் நொறுக்கப்பட்ட ஆன்மா இறந்து போன உணர்வுகளின் எச்சங்களைச் சுமந்து ஒவ்வொரு கணமும் என்னைத் தோல்வியின் வாயிலில் கொண்டு தள்ளுகிறது. அருவி போல் பெருக்கெடுக்கும் என் கண்ணீர் கூட வற்றி விட்டது. என் கண்ணீரே என் பிம்பமாகிப் போனது. என்னைச் சூழும் இக் கொடிய நரகக் காரிருளின் நடுவே நான் நம் கதையை நினைவு கூர்ந்து கொண்டிருப்பேன். இவ்வுடல் மண்ணோடு மண்ணாய்ப் போகட்டும்.

எவ்வளவு ஏக்கமாக இருக்கிறது, ஒரே முறை என் பிம்பத்தை உன் கண்ணில், கடைசி முறையாகக் காண?! ஆனால் விதி இவ்விறுதிக் கணங்களில் என்னைக் கைவிடுகிறது.  அவமானகரமான இந்த என் மரணத்தை நானே தேர்வு செய்கிறேன்; யாருக்கும் என்றும் நான் வேண்டாதவளாகிப் போவேன்.

என் அன்பே! என் நினைவு வரும் போது, வெகு தொலைவில் இருள் கவிந்த தொடுவானத்தைப் பார். ஏனெனில் காலத்துக்கும் இருள் நிறைந்த அந்த அதலபாதாளத்தில் தான் நான் வசிப்பேன். அங்கு தனிமையில் பெருமூச்செறிந்து கொண்டு நான் இருளில் உலவித் திரிவதைக் காண்பாய்.

என் உயிரின் உயிரே! நீண்ட மனமார்ந்த நம் சிரிப்புகளும் இன்னும் ஏராளமாய் நாம் பகிர்ந்தவைகளும் என் நினைவை நிறைக்கின்றன. இந்த அமைதியான இரவில் அன்பே, ஆழ்ந்த துயில் உன்னை இனிமையான கனவுகளிடம் கொண்டு சேர்க்கட்டும். உன் முகத்தை இறுதியாக ஒரு முறை காண விரும்புவது என் நிராசையாகிறது, இம்மலைத் தொடர்களைத் தாண்டி நீ வெகு தொலைவில் இருப்பதால்.

என் இனிய நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் தனியாகப் பிரிவுக் கடிதம் எழுத இயலாமல் போனாலும் எல்லோரிடமும் நான் விடை பெற்றதாகச் சொல்லி விடு.

இவ்வதிகாலை நேரத்தில் உன் அழகான புங்பா பிரதேசத்தை நான் இங்கிருந்து காண்கிறேன். நினைவு கொள் அன்பே! என் அன்பையெல்லாம், உள்ளத்து உணர்வுகளை எல்லாம், அருவி போல் பொழிந்து கடல் போன்ற உன் அன்போடு இணைத்துக் கொள்ள எவ்வளவு துடிக்கிறேன் என்று.

நான் 6.2.73 அன்று எழுதிய கடிதம் கிடைத்ததா? ஏன் அதற்குப் பதிலே எழுதவில்லை? என்ன ஆயிற்று?நான் காத்துக் கொண்டே இருந்தேன்…இன்னும் காத்திருக்கிறேன். ஆனால் வாழ்க்கை கள்ளத்தனமாக நழுவுகிறது இப்பொழுதில். நாம் ஏன் பிரிய நேர்ந்தது என்பதை, நீ இவ்வுலகத்தை விட்டுச் சென்ற பிறகு தான் அறிந்து கொள்வாய். ஓ! நரகமே! ஓ இருளின் இருப்பிடமே! இருளின் பாதையில் செல்வதை நான் வெறுக்கிறேன். யார் யாரைக் கைவிடுவார் என்பதை யாரும் அறிகிலர். அந்த ரகசியம் அடக்கமாகிவிடும் ஒன்று.

ஓர் யுவதியின் வாழ்க்கை பூத்து மலர்வதற்குள்ளாகவே காய்ந்து கருகி வேண்டாத நிலத்தில் விழுந்து விட்டது. சூடவும், தொடவும், ஏற்கவும் நாதியின்றி. எனக்குள்ள ஒரே வருத்தம், உன்னிடம் எல்லாவற்றையும் சொல்ல இயலாமல் தொண்டை அடைப்பது தான்.  இன்னும் இந்தச் சோகக் கதையின் மிச்சத்தை நான் வேறொரு பிறப்பில், வேறொரு காலத்தில் உனக்குச் சொல்லுவேன். இத்துடன் கடிதத்தை முடிக்கிறேன் அன்பே.

“நமது துயரகரமான பிரிவும், ஒன்றாய் வாழவே இயலாமல் போன தோல்வியும் தான்” என் ஆழ் மனத்திலிருந்து வெளிப்படும் கடைசி விஷயம்.

உன்னுடைய

ரோஸ்

மொழிபெயர்த்தது: தீபலக்ஷ்மி