ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னய்யா குமார் கைது விவகாரம், சத்தீஸ்கரில் போராளிகள், பத்திரிகையாளர் மீது தாக்குதல், ஜாட் சமூகத்தினரின் போராட்டம் என ஊடகங்கள் பரப்பரக்காக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் ஒரு முக்கியமான செய்தியை ஊடகங்கள் ‘கண்டுகொள்ளாமல்’ இருக்கின்றன. கண்டுகொள்ளவில்லை என்பதைவிட, அது தம் எஜமானர் விஷயத்தில் தலையிடுவது போன்றதாகிவிடும் என்கிற பயமும் காரணமாக இருக்கலாம்.

இந்தியாவின் பெரிய ஊடக குழுமங்களில் ஒன்றான நெட்வொர்க் 18 குழுமத்தின் முதலீட்டாளர் முகேஷ் அம்பானி குறித்து செய்திகள் வெளியிடுவதில் கலக்கம் இருக்கத்தான் செய்யும். இந்த ஊடக குழுமத்தை தன் வசப்படுத்திய ஊடக சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்கிய அம்பானி, இப்போது புதிய அம்புடன் வந்திருக்கிறார். அம்பு என்று சொல்வதைவிட வலிமையான ஆயுதத்துடன் வந்திருக்கிறார். இராணுவம் என்னும் ஆயுதம்!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம், 16 ஆயிரம் முன்னாள் இராணுவத்தினரைக் கொண்டு ஒரு பாதுகாப்பு நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறது. ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் சொத்துக்களைப் பாதுகாக்க க்ளோபல் கார்ப்பரேட் செக்யூரிட்டி என பெயரிடப்பட்டு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் குழும நிறுவனங்களுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் அவற்றை எதிர்கொள்ளும் வகையில் இந்த இராணுவத்தை உருவாக்கி இருப்பதாக ரிலையன்ஸ் குழும நிர்வாகி ஒருவர் தி ஹிந்து(ஆ) இதழில் சொல்லியிருக்கிறார்.   இராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றில் பணியாற்றிய முன்னாள் வீரர்கள் இந்த தனியார் இராணுவத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மும்பைதாக்குதல், அகமாதாபாத் பயங்கரவாத தாக்குதல், கார்கில் போர் போன்றவற்றில் பங்கு பெற்றவர்கள் என்றும் சொல்கிறது ரிலையன்ஸ்.

இந்தியாவிலேயே அதிகம் பணம் படைத்தவரான அம்பானிக்கு மத்திய அரசு இஸட் பிரிவு பாதுகாப்பை வழங்குகிறது. இவருடைய ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு மத்திய தொழிற் பாதுகாப்புப் படை பாதுகாப்பை அளிக்கிறது. 200 வீரர்களை இந்திய அரசு பாதுகாப்புப் பணிக்கு அமர்த்தியுள்ளது. அவ்வளவு பெரிய நிறுவனத்துக்கு இதைவிட 10 மடங்கு அதிகமாக வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். ஆனால் அதை அரசு செய்யவில்லை. எனவே எங்களுடைய பாதுகாப்புக்கு இராணுவத்தை உருவாக்கியிருக்கிறோம் என்று சொல்கிறார்கள் ரிலையன்ஸ் நிர்வாகிகள்.

தொழில்முறை பாதுகாப்பு பணியாளர்களை உருவாக்கும் வகையில் பாதுகாப்பு மேலாண்மை பள்ளி ஒன்றை நடத்தி வருகிறது ரிலையன்ஸ். இந்தப் பள்ளியில் பயிற்சி பெற்ற அவ்தார் கன்மேன் என்பவர்தான் ரிலையன்ஸ் இராணுவத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த இராணுவம் ஐபிஎல் போட்டிகள், கால்பந்து போட்டி உள்ளிட்ட ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்புடைய நிகழ்ச்சிகள், ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகக் குழு சந்திப்புகள் உள்ளிட்டவைகளுக்கு பாதுகாப்புக் கொடுக்கும்.

அரசு இராணுவத்தில் தனியார் முதலீடுகளுக்கு கதவு திறந்துவிடப்பட்ட நாட்டில், பெரும் நிறுவனங்கள் இராணுவத்தை தொடங்குவதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. இப்போது சத்தீஸ்கரிலும் வடகிழக்கு மாநிலங்களும் அக்கிரமிப்புகளை நடத்தி மண்ணின் மைந்தர்கள் மீது வன்முறையை இந்திய இராணுவம் ஏவிக்கொண்டிருக்கிறது. நாளை அந்தந்த நிறுவனங்களே இராணுவத்தை வைத்துக்கொண்டு அவர்களை அடித்து விரட்டலாம்.

யோசித்துப்பாருங்கள்…சத்தீஸ்கரில் மக்களை வேட்டையாடும் இராணுவத்துக்கு பதிலாக அதானி, தனக்கென இராணுவத்தை வைத்துக்கொண்டால் என்ன நடக்கும்? காக்கை குருவிகள் போல எல்லோரும் வீழ்த்தப்படுவார்கள். இது மிகைப்படுத்தல் அல்ல, அதற்கான அறிகுறிகளைத்தான் அம்பானி ஆரம்பித்து வைத்திருக்கிறார்.

தேசப்பற்று என்ற முத்திரையுடன் நாட்டின் எல்லைகளைக் காத்த இராணுவத்தினர்தான், இன்று தனியார் முதலாளிகளையும் பாதுகாக்கிறார்கள். இரண்டுக்கும் இடையே பாலமாக இருக்கிறது அரசு. விலைபோய்விட்ட அரசு!

பியூஸ் பாண்டே எழுதிய தி ஹிந்து கட்டுரையில் வந்த தகவல்களைக் கொண்டு எழுதப்பட்டது.