இந்திய பொருளாதாரம் இந்துத்துவம் செய்திகள் தனியார்மயம் வணிகம் வாழ்வியல்

வரி ஏய்ப்பாளர்களை அன்பாக அழைப்பது எப்படி? அருண் ஜெட்லி வழிகாட்டுகிறார்!

பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா

athyeya
வெங்கடேஷ் ஆத்ரேயா

பட்ஜெட் உரைகளில் ஆரவாரமான சொற்களும் கரவொலிக்கான அறிவிப்புகளுமாக இருக்கும். அதை வைத்து உண்மை பட்ஜெட்டை மதிப்பிட முடியாது. இந்த பட்ஜெட்டிலும் அப்படிப்பட்ட பகட்டுகள் நிறைய இருக்கின்றன.ஆனால், உண்மையான பட்ஜெட் அறிவிப்புகளோ மோசமான முன்னுதாரணமாக இருக்கின்றன.

வரி ஏய்ப்பாளர்களுக்கு தாராள சலுகை

அப்பட்டமாக தேசத்துரோகச் செயலில் ஈடுபடுகிறவர்களான வரி ஏய்ப்பாளர்களுக்கு அன்பான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் தாங்கள் இதுவரை செலுத்தாத வரியில் 30 சதவீதத்தைச் செலுத்தினால் போதும், அதன் மீது ஒரு ஏழரை சதவீதம் வட்டி, மேலும் ஒரு ஏழரை சதவீதம் அபராத வட்டி மட்டுமே விதிக்கப்படும்; மொத்தம் 45 சதவீதத்தில் ‘முடித்துக்கொள்ளலாம்’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கஜானாவிற்கு வந்து சேர வேண்டிய 55 சதவீத வரி விட்டுத்தரப்படுகிறது. அப்படி 30 சதவீதத்தைச் செலுத்த முன்வந்தால், என்ன ஏது நதிமூலமோ ரிஷிமூலமோ விசாரிக்கப்பட மாட்டாது என்றும் நிதியமைச்சர் உறுதியளித்திருக்கிறார்.

வரி ஏய்ப்புச் சட்டத்தின் கீழ் பல ஆண்டு காலம் சிறைக்குச் செல்ல வேண்டியவர்களுக்கு எதற்காக இப்படியொரு சலுகை? இந்த 45 சதவீதத்தை செலுத்தத் தவறினால் ‘கடுமையான நடவடிக்கை’ எடுக்கப்படும் என்று வேறு எச்சரிக்கப்பட்டிருக்கிறது! கடந்த காலங்களிலும் இதுபோன்ற ‘கடுமையான எச்சரிக்கைகள்’ விடுக்கப்பட்டதுண்டு. அந்த எச்சரிக்கைகளின் கதி என்ன ஆனது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆக, இப்படிப்பட்ட சலுகைகளாலும் எச்சரிக்கைகளாலும் கூட, கடந்த காலம் போலவே இப்போதும், பதுக்கப்பட்ட வரிப்பணம் வந்துவிடாது. இப்படி அவர்களுக்கு சலுகையளிப்பது பொருளாதாரத்திற்கு ஆரோக்கியமானதும் அல்ல.

வரி செலுத்துபவர்கள் மீது மேலும் வரிச்சுமை

இந்த பட்ஜெட்டின் மற்றொரு மோசமான அம்சம், மறைமுக வரிச் சுமை அதிகரிக்கப்பட்டிருப்பதுதான். தேநீர்க்கடையில் பருகுகிற தேநீர் முதல், அன்றாடம் பயன்படுத்துகிற உணவுப் பொருள்கள், மனச்சோர்வு நீங்கச் செல்கிற திரைப்படத்திற்கு வசூலிக்கப்படும் வரி… என்று எளிய உழைப்பாளி மக்களிடமிருந்து வசூலிக்கப்படுவதுதான் மறைமுக வரி. ஏற்கெனவே மறைமுக வரி, வரி வசூலில் 65 சதவீதம் வரையில் செலுத்துவது ஏழைகளும் எளிய உழைப்பாளிகளும்தான். அம்பானிக்கும் ஒரு தொழிலாளிக்கும் ஒரே விதமான மறைமுக வரிதான் என்று சமாதானம் சொல்வார்கள்.

ஆனால், அம்பானிகள் தேநீருக்குச் செலுத்துகிற வரி, அவர்களுடைய வருமானத்தோடு ஒப்பிட்டால் கொசுவுக்குச் சமம். தொழிலாளிக்கோ அது பெரும் சுமை. அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கல்வி, மருத்துவம் ஆகியவை சலுகைகள் அல்ல அவர்களது உரிமைகள் என்பதை அரசு உணருமா? செல்வந்தர்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்குமான நேர்முக வரிகளில் அளிக்கப்படும் சலுகைகளால் அரசுக்கு 1,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்று பட்ஜெட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆண்டுதோறும் இப்படி நேர்முக வரிகளில் சலுகை தர வேண்டிய தேவை என்ன வந்தது? உண்மை நடப்பில், வரி செலுத்துவதில் முதலிடத்தில் இருப்பவர்கள் சாதாரண உழைப்பாளிகள்தான். ஆனால், வரி செலுத்தும் சமூகம் என்று கோட் சூட் அணிந்தவர்களின் பிம்பம்தான் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

சென்ற ஆண்டு இந்த பிம்பத்திற்கு உரியவர்களின் சொத்து வரி விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த ஆண்டு இப்படி வரி ஏய்ப்புக்குத் தண்டனை இல்லை என்று அழைப்பு விடுக்கப்படுகிறது. ஏழைகள் இதே குற்றத்தைச் செய்தால் சிறைத்தண்டனை, செல்வந்தர்களுக்கு மேலும் மேலும் சலுகை.

கார்ப்பரேட் வரி… நேர்மையற்ற விகிதம்

கார்ப்பரேட் வரியில் 30 சதவீதம் என்ற உச்சவரம்பு அறிவிக்கப்பட்டிருப்பது நேர்மையற்றது. குறிப்பிட்ட அளவு வரையில் வருவாய் உள்ளவர்களுக்கு 30 சதவீதம், அதற்கு மேல் குறிப்பிட்ட வரம்பு வரையில் 40 சதவீதம், அதற்கு மேல் 50 சதவீதம் என்று உயர்த்தப்பட்டால்தான் முற்போக்கான, பலனளிக்கிற நடவடிக்கையாக இருக்கும்.கிராமப்புற வேலைத்திட்டத்தை ஒழிப்பதற்கான முயற்சி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் கீழ் இந்த பட்ஜெட்டில் 32,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

திட்டம் தொடங்கப்பட்டபோது 40,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இன்றைய விலைவாசி நிலவரங்களோடு ஒப்பிடுகையில், ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கு மாறாகச் சுருக்குவது என்பது மறைமுகமான வெட்டு நடவடிக்கைதான். திட்டத்தைப் படிப்படியாக ஒழித்துக்கட்டுகிற வேலைதான். மொத்தத்தில் முறையாக வரி செலுத்துகிற உழைப்பாளி மக்களையும் ஏழைகளையும் கைவிட்டு, கார்ப்பரேட் அதிபர்களுக்கு கைகட்டிச் சேவகம் செய்கிற பட்ஜெட்தான் இது.

பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா, பொருளாதார வல்லுநர். 

சந்திப்பு: அ.குமரேசன்

நன்றி: தீக்கதிர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.