இந்தியா இந்துத்துவம் கன்னய்யா குமார் கருத்துரிமை கல்வி போராட்டம் மத அரசியல் மோடி அரசு ரோஹித் வெமுலா

விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் ஆற்றிய முழு உரை! தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்

விடுதலைக்குப் பின் ஜேஎன்யூவில் கண்ணையா குமார் உரையாற்றினார். அதன் தமிழாக்கம் இங்கே…

ஆங்கில மூலம்: இந்துஸ்தான் டைம்ஸ்

தமிழில்: விஜயசங்கர் ராமச்சந்திரன்  

விஜயசங்கர் ராமச்சந்திரன்
விஜயசங்கர் ராமச்சந்திரன்

இங்கிருக்கும் ஊடகங்களின் வாயிலாக ஜேஎன்யூவிற்கு ஆதரவாக நின்ற உலக மக்கள் அனைவருக்கும் நான் நன்றிசொல்ல விரும்புகிறேன். ஊடகங்களுக்கும், சிவில் சமூகத்திற்கும், அரசியலுக்கும் அரசியலுக்கு அப்பாற்பட்டும் ஜேஎன்யூவைக் காப்பாற்றவும், ரோஹித் வேமுலாவுக்கு நீதி கேட்டும் போராடும் அனைவருக்கும் நான் செவ்வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

குறிப்பாக அவர்களின் போலீஸ், அவர்களின் ஊடகங்கள் வாயிலாக எது சரி, எது தவறு என்று தெரிந்துகொண்டதாகக் கூறிக்கொள்ளும் பாராளுமன்றக் ‘கனவான்களுக்கு’ என் நன்றி.
ஊடங்கள் அவர்களுடைய பிரைம் டைமில் ஜேஎன்யூவிற்கு இடம் கொடுத்தனர், ஜேஎன்யூவை அவதூறு செய்வதற்காக மட்டுமே.

எனக்கு யார் மீதும் வெறுப்பு இல்லை. குறிப்பாக ஏபிவிபி மீது வெறுப்பு இல்லை. ஏனெனில், ஜேஎன்யூவில் இருக்கும் ஏபிவிபி அமைப்பு பல்கலைக்கழகத்திற்கு வெளியிலிருக்கும் அதன் சொந்தங்களைவிட அதிக தேசிய உணர்வு கொண்டிருக்கிறது. அரசியல் வித்தகர்களாக தங்களை முன்னிறுத்திக்கொள்பவர்களுக்க் நான் சொல்ல விரும்புவதெல்லாம் ஒன்றுதான். ஜேஎன்யூ மாணவர் சங்கத் தேர்தலில் சென்ற முறை ஏபிவிபியின் ‘மிகபுத்திசாலித்தனமான’ வேட்பாளரை நான் விவாதத்தில் எப்படி எதிர்கொண்டேன் என்று பாருங்கள். அப்போது தெரியும், நாட்டின் பிற பகுதிகளிலிருக்கும் ஏபிவிபி அமைப்புகளுக்கு என்ன நடக்குமென்று.

ஏபிவிபி மீது எனக்கு குரோதமோ, காழ்ப்புணர்ச்சியோ இல்லை. ஏனெனில், நாங்கள் உண்மையான ஜனநாயகவாதிகள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை நம்புபவர்கள். அதனால்தான் நாங்கள் ஏபிவிபியை எதிரணியாகத்தான் பார்க்கிறோம். எதிரியாக அல்ல.

நண்பர்களே, உங்களை பழிவாங்கும் வேட்டையில் இறங்கமாட்டேன். அதற்கு உங்களுக்குத் தகுதியில்லை.

இந்தக்காலகட்டத்தில், ஜேஎன்யூ காட்டியிருக்கும் வழிக்காகவும், எது சரி, எது தவறு என்று எழுந்து நின்று சொன்னதற்காகவும், ஜேஎன்யூவிற்கு என் சல்யூட்! இது எல்லாமே தன்னெழுச்சியானது. நான் ஏன் இதைச்சொல்கிறேனென்றால், அவர்களுடைய செயல்கள் எல்லாமே திட்டமிடப்பட்டது. நம்முடைய செயல்கள் எல்லாம் தன்னெழுச்சியானது.
நான் இந்த நாட்டின் சட்டத்தை நம்புகிறேன். அதன் அரசியலமைப்புச் சட்டத்தை நம்புகிறேன். அதன் நீதி அமைப்பை நம்புகிறேன். மாற்றம் என்பது மட்டுமே உண்மை என்று நம்புகிறேன். அது வரும், வரவேண்டும் என்று நினைக்கிறோம். அதைக் கொண்டுவருவோம். நம் அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் கூறப்பட்டுள்ள சோஷலிஸத்திற்கு ஆதரவாக நிற்கிறோம். மதச்சார்பின்மைக்கு ஆதரவாக நிற்கிறோம். சமத்துவத்திற்காக நிற்கிறோம்.

எனக்கு சிறையில் நேர்ந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நான் ஏற்கெனெவே படித்து அறிந்ததையெல்லாம் நான் அங்கு அனுபவத்தில் உணர்ந்தேன்.

நான் ஏன் லால் சலாம் லால் சலாம் என்று திரும்பத்திரும்பச் சொல்கிறேன் என்று சிறையிலிருந்த காவலர்கள் கேட்டனர். விசாரணையின் ஒரு பகுதியாக அவர்கள் இதைக் கேட்கவில்லை என்பதை நான் தெளிவுபடுத்த வேண்டும் என்று நினைக்கிறேன்! எனக்கு உணவு கொடுப்பதற்காகவும், மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் செல்வதற்காகவும் காவலர்கள் வருவார்கள். ஜேஎன்யூ மாணவனாகிய நான், அதுவும் பிரம்மபுத்திரா ஹாஸ்டலைச் சேர்ந்த நான் எப்படிப் பேசாமல் இருக்கமுடியும். எனவே ஒரு காவலருடன் பேசத்தொடங்கினேன். அவரும் என்னைப் போன்றவர்தான் என்று புரிந்துகொண்டேன். யோசித்துப் பாருங்கள். சிறைக்குள் காவலர் வேலைக்கு வரும் ஒருவரின் தந்தை ஒரு விவசாயியாகவோ, தொழிலளியாவோதான் இருக்கவேண்டும். அல்லது பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவராக இருக்கவேண்டும். நானும் பின் தங்கிய மாநிலமான பீஹாரிலிருந்து வருகிறேன். நானும் ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். ஒரு விவாசயியின் குடும்பம். இத்தகைய ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான் காவல்துறைக்கு வருகிறார்கள். நான் கான்ஸ்டபிள், தலைமை கான்ஸ்டபிள், ஆய்வாளர் வேலைகளைச் சொல்லுகிறேன். எனக்கு ஐபிஎஸ் அதிகாரிகளுடன் பரிச்சயமில்லை.

அந்த காவலர்: இது என்ன லால் சலாம்?

நான்: லால் என்றால் ரெவல்யூஷன் (புரட்சி)

அவர்: சலாம்?

நான்: வாழ்க. புரட்சி வாழ்க என்று பொருள்

காவலருக்கு புரியவில்லை. இன்குலாப் ஜிந்தாபாத் என்ற முழக்கம் தெரியுமா என்றேன். தெரியும் என்றார். இன்குலாப் என்பது புரட்சியைக் குறிக்கும் உருது மொழிச்சொல் என்றேன். எபிவிபி உறுப்பினரகளும் இன்குலாப் ஜிந்தாபத் என்று கூறுகிறார்களே என்றார். இப்போது புரிகிறதா? அவர்கள் போலிப் புரட்சியாளர்கள். நாங்கள்தான் உண்மையான புரட்சியாளர்கள் என்றேன்.

காவலர் இன்னொரு கேள்வியைக் கேட்டார். ஜேஎன்யூவில் எல்லாப் பொருட்களும் மலிவு விலையில்தான் கிடைக்கிறது, இல்லையா? என்றார். காவலர்களாகிய உங்களுக்கும் அப்படித்தானே என்றேன். ஒரு நாளைக்கு 18 மணிநேரம் உழைக்கும் அவருக்கு ஒவர்டைம் சம்பளம் கிடைக்கிறதா என்று கேட்டேன். இல்லை என்றார். சமாளிக்கிறேன். நீங்கள் எல்லோரும் கூறும் ஊழல்தான் என்றார்.

அவருக்கு சீருடை அலவன்ஸாக 110 ரூபாய் கிடைக்கிறது. நீங்கள் அதைவைத்து உள்ளாடைகள் கூட வாங்கமுடியாது என்றேன். மேற்கூறிய விவரமெல்லாம் அவராகவே முன்வந்து கூறியவை. இதற்காகத்தான், இந்த வறுமையிலிருந்தும் ஊழலிலிருந்தும் விடுதலை வேண்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம் என்றேன்.

அந்த நேரத்தில்தான் ஹரியானாவில் [ஜாட் ஜாதியினரின் இட ஒதுக்கீடு] போராட்டம் தொடங்கியிருந்தது. டெல்லி காவல்துறையிலிருக்கும் பெரும்பாலானோர் ஹரியானவைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் கடுமையான உழைப்பாளிகள். அவர்களை நான் வணங்குகிறேன். இடஒதுக்கீட்டைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று காவலரிடம் கேட்டேன். ‘சாதியம்’ நல்லதே அல்ல என்றார். இந்த சாதியத்திலிருந்துதான் நாங்கள் விடுதலை கோருகிறோம் என்றேன். “நீங்கள் சொல்வது எதுவுமே தவறில்லை. அதில் தேசவிரோதம் என்பதே இல்லை” என்றார் அவர்.

நான் அவரிடம் இன்னொரு கேள்வியைக் கேட்டேன். “இந்த அமைப்பில் யாருக்கு அதிக அதிகாரம் இருக்கிறது?”

’இந்த லத்திக்குதான்” என்றார் அவர், தன் கையிலிருந்த குண்டாந்தடியைப் பார்த்துக்கொண்டே.

நீங்கள் உங்கள் லத்தியை உங்கள் விருப்பப்படி பிரயோகிக்க முடியுமா என்றேன்.

இல்லை என்று ஒப்புக்கொண்டார். யாருக்கு அதிக அதிகாரம் இருக்கிறது என்று மீண்டும் கேட்டேன்.

‘போலி ட்வீட்டுகளை பதிவுசெய்பவர்களிடம்” என்றார்.

போலி ட்வீட்டுகளை இடும் சங்கிகளிடமிருந்துதான் விடுதலை கோருகிறோம் என்றேன்.

”நீங்களும் நானும் ஒரே பக்கத்தில்தான் இருக்கிறோம் என்று தோன்றுகிறது,” என்றார்.

அதில் சிறிய பிரச்சினை இருக்கிறது என்றேன்.

நான் சொல்லப்போவது எல்லா பத்திரிக்கையாளர்களையும் பற்றி அல்ல. எல்லோருக்கும் ‘அங்கிருந்து’ சம்பளம் வருவதில்லை. சிலருக்கு வரலாம். ஆனால் சிலருக்கு ‘அங்கிருந்து’ மட்டுமே வருகிறது. சிலர் பாராளுமன்ற நிகழ்வுகளை செய்தியாக்குவதில் நீண்ட அனுபவம் பெற்ற பிறகு பாராளுமன்றத்திற்கே போக முயற்சிக்கிறார்கள். அவர்கள் என்ன மாதிரியான சூழலை உருவாக்கி இருக்கிறார்கள் என்று பாருங்கள்.

நானும் நீங்களும் இப்போது நேரடியாக பேசிக்கொண்டிருக்கிறோம். உடனே ‘இந்த பரபரப்பான செய்தியைப் பாருங்கள்’ என்று அவர்கள் கூச்சலிடுவார்கள்.

”நான் உங்களிடம் ரகசியமாக ஒன்று சொல்லலாமா” என்று காவலர் கேட்டார். “நான் நீங்கள் இங்கு வந்தபோது உங்களை அடித்து துவைக்கலாம் என்றிருந்தேன். உங்கள் பெயர் எஃப்.ஐ.ஆர் இல் (முதல் தகவல் அறிக்கையில்) இருக்கிறது. நான் உங்களிடம் பேசியபிறகு அவர்களை அடிக்கலாம் போலிருக்கிறது,” என்றார்.

அதற்குப் பிறகு அவர் ஒரு முக்கியமான விஷயத்தைச் சொன்னார். அதை இங்கிருக்கும் ஊடகங்களின் வாயிலாக நாடு முழுவதிற்கும் கவனப்படுத்த விரும்புகிறேன். என்னைபோலவே அந்தக் காவலரும் ஒரு சாதாரணக் குடும்பத்திலிருந்து வருபவர். என்னைப் போலவே, அவரும் படிக்க விரும்பியவர். என்னைப் போலவே இந்த அமைப்பிலிருக்கும் நோய்களைப் புரிந்துகொண்டு, அவற்றுக்கு எதிராகப் போராட நினைத்தவர். படிக்கத்தெரிவதற்கும் கற்பதற்கும் இடையிலான வேறுபாட்டை புரிந்துகொள்ள நினைத்தவர். ஆனாலும் அவர் ஒரு காவலராகப் பணிபுரிந்து கொண்டிருக்கிறார். இங்குதான் ஜேஎன்யூ வருகிறது. அதனால்தான் ஜேஎன்யூவின் குரலை நசுக்கப்பார்க்கிறார்கள். தனியார் நிறுவனத்தில் லட்சக்கணக்கான பணம் கொடுத்து ஆராய்ச்சி மாணவராக வழியில்லாத விளிம்புநிலையிலிருக்கும் ஒருவர் இங்கு பிஎச்டி படிக்கமுடியும் என்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவர நினைக்கிறார்கள்.
எல்லையில் நின்று போரிடுபவர்கள், விவசாய நிலங்களில் இறப்பவர்கள், ஜேஎன்யூ போராட்டத்தில் எழுச்சியுற்றவர்கள் – இவர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து எழுப்பும் குரலைத்தான் ஒடுக்க நினைக்கிறார்கள்.

இந்தக் குரல்களெல்லாம் ஒன்று சேரக்கூடாது என்று நினைக்கிறீர்கள். ”அரசியல் ஜனநாயகம் போதாது, சமூக ஜனநாயகத்தை உருவாக்குவோம்” என்ரு பாபசாஹேம் கூறியதைத்தான் உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அதனால்தான் நாம் திரும்பத்திரும்ப அரசியலைமைப்புச் சட்டத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறோம். ”சோஷலிஸத்திற்கு ஜனநாயகம் இன்றியமையாதது,” என்று லெனின் சொன்னார். நாங்கள் ஜனநாயகம், பேச்சுரிமை, சமத்துவம், சோஷலிசம் என்று பேசுவதெல்லாம் ஒரு பியூனின் மகனும் ஜனாதிபதியின் மகனும் ஒன்றாகப் படிக்கும் என்ற ஒரு நிலை வருவதற்காகத்தான்.

ஜேஎன்யூவில் இருப்பவர்கள் நிறைய ஆராய்ச்சி செய்பவர்கள். ஆராய்ச்சிக்குத் தேவையான ஆரம்ப விவரங்களை என் அனுபவம் தந்திருக்கிறது. நீதிமன்றத்தின் பார்வையில் இருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி இங்கு கருத்து கூற விரும்பவில்லை. ட்விட்டரில் சத்யமேவ ஜெயதே என்று பிரதமர் ட்வீட் செய்தார். பிரதமருடன் எனக்கு தத்துவார்த்த வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்) என்கிற வாசகம் அவர் உருவாக்கியதல்ல. அது நம் அரசியலமைப்புச் சட்டத்தில் இருக்கிறது. ஆகவே, வாய்மை வெல்லும் என்பதில் நான் அவருடன் உடன்படுகிறேன். வாய்மை வெல்லும்.

இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்திற்கும் எல்லோருக்கும் ஒன்று சொல்வேன். தேசத்துரோகம் என்ற குற்றச்சாட்டு மாணவர்களுக்கு எதிரான அரசியல் கருவியாகப் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது.

நான் ஒரு கிராமத்திலிருந்து வருகிறேன். அங்கிருக்கும் ரயில் நிலையத்தில் ஒரு மந்திரவாதி இருப்பார். மந்திர வித்தைகள் செய்வார். மோதிரங்களை விற்பார். அவற்றை அணிந்தால் உங்களுடைய எல்லா ஆசைகளும் நிறைவேறும் என்பார். அதேபோல் நம் நாட்டில் கொள்கை வகுப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கருப்புப்பணம் திரும்பவரும் என்று சொல்வார்கள். ஹர ஹர மோடி என்பார்கள். பணவீக்கம் குறையுமென்பார்கள். கூடி உழைத்தால் வளர்ச்சி வரும் என்பார்கள்.

மக்கள் இந்த கோஷங்களையெல்லாம் நினைவில் வைத்திருக்கிறார்கள். இந்தியர்களாகிய நாம் விரைவில் மறக்கும் குணம் கொண்டவர்கள். ஆனால் இந்த முறை நடத்தப்பட்ட நாடகம் மிகப்பெரியதாக இருந்ததால், நாம் இந்த கோஷங்களை மறக்க முடியவில்லை.

கொள்கைகளை உருவாக்குபவர்கள் நம்மை மறக்க வைக்க நினைக்கிறார்கள். ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை நிறுத்துவதன் மூலம் இதைச் செய்ய நினைக்கிறார்கள். மாணவர்கள் உதவித் தொகை தொடரவேண்டும் என்று கேட்பார்கள். நாங்கள் ரூ. 5000 ரூ. 10,000 மட்டும் தொடர்ந்து வழங்குவோம் என்று சொல்வார்கள். ஆனால் ஜேஎன்யூ உதவித்தொகையை உயர்த்தித் தருமாறு கேட்கும். அதற்காக உங்களைத் திட்டுவார்கள். கவலைப்பட வேண்டும். உதவித்தொகை என்பது நீங்கள் போராடிப்பெற்ற உரிமை.

இந்த நாட்டில் ஒரு மக்கள் விரோத அரசு இருக்கிறது. அதற்கு எதிராக நீங்கள் குரலெழுப்பினால் அதன் சைபர் செல்லிலிருந்து ஒரு திருகுவேலை செய்யப்பட்ட வீடியோவை அனுப்புவார்கள். உங்களை வசைபாடுவார்கள். உங்கள் குப்பைத் தொட்டியிலிருக்கும் ஆணுறைகளை எண்ணுவார்கள்.

இது ஒரு உன்னதமான காலம். ஜேஎன்யூ மீது நடத்தப்பட்டிருப்பது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், ’யூஜிசி அலுவலகத்தை ஆக்கிரமிப்போம்’ என்ற முழக்கத்துடன் நடந்த போராட்டத்தை நியாமற்றதாகக் காட்ட அவர்கள் நினைக்கிறார்கள்…..ரோஹித் வேமுலாவிற்கு நீதி கோரும் போராட்டத்தை நிறுத்தவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

ஜேஎன்யூ விவகாரத்தை தொலைக்காட்சியின் பிரதான நேரத்தில் ஒளிபரப்புகிறீர்கள். இது எதற்காக? முன்னாள் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களே, மக்களின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய்களைப் போடுவதாக மோடி அளித்த வாக்குறுதியை மக்கள் மறக்க வேண்டுமென்று நினைக்கிறீர்கள்.
.
உங்களுக்கு ஒன்றைச் சொல்லவிரும்புகிறேன். ஜேஎன்யூவில் இடம் கிடைப்பது எளிதானதல்ல. ஜேஎன்யூவில் இருப்பவர்களுக்கு அதை மறைப்பதும் எளிதானதல்ல. நீங்கள் மறந்தால் நாங்கள் மீண்டும் மீண்டும் நினைவூட்டிக்கொண்டே இருப்போம். அரசியல் அதிகாரத்திலிருக்கும் ஸ்தாபனம் வன்கொடுமைகள் செய்தபோதெல்லாம் ஜேஎன்யூ எழுந்து நின்று எதிர்த்திருக்கிறது. நாங்கள் இப்போது அதையேதான் செய்கிறோம். எல்லையில் உயிரிழக்கும் படைவீரர்களைப் பற்றி அவர்கள் பேசுகிறார்கள். நான் அந்த வீரர்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன். ஆனால் மக்களவையில் இதைப் பேசிய பிஜேபி உறுப்பினர்களுக்கு ஒரு கேள்வி: இறந்த ராணுவ வீரர்கள் உங்கள் பிள்ளைகளா? லட்சக்கணக்கில் தற்கொலை செய்துகொள்ளும் விவாசாயிகளைப் பற்றி என்ன சொல்வீர்கள்? அவர்களில் பலர் இறந்துபோன வீரர்களின் தந்தையர் அல்லவா? வயல்வெளியில் வேலை செய்யும் விவசாயி என் தந்தை. எல்லையில் போராடும் வீரர் என் சகோதரர். எனவே, ஒரு தவறான விவாதத்தை இந்த நாட்டில் துவக்கி வைக்காதீர்கள். அந்த வீரர்களின் மரணத்திற்கு யார் பொறுப்பு? இறந்தவர்கள் பொறுப்பாக முடியாது. எங்களைப் போரிட வைப்பவர்கள்தாம் பொறுப்பு.

தொலைக்காட்சிகளின் பிரதான நேரத்தில் விவாதம் செய்பவர்களைக் கேட்கிறேன். இந்த நாட்டின் பிரச்சினைகளிலிருந்து விடுதலை வேண்டும் என்பது தவறா?

யாரிடமிருந்து விடுதலை வேண்டும் என்று நம்மை கேட்கிறார்கள். நாங்கள் கேட்கிறோம். இந்தியாவில் யாராவது அடிமையா? இல்லை. அதனால் நாங்கள் இந்தியாவிலிருந்து விடுதலை கேட்கவில்லை என்பது கண்கூடு. ஆனால் நாங்கள் இந்தியாவிற்குள் விடுதலை வேண்டும் என்கிறோம். இரண்டிற்கும் வேறுபாடு இருக்கிறது.

நாங்கள் ஜனநாயத்தைப் பற்றிப் பேசுகிறோம். சமத்துவத்தைப் பற்றிப் பேசுகிறோம். ஏனெனில் அவை இந்த நாட்டில் இன்றியமையாதவை. நாங்கள் இந்த நாட்டில் என்ன விடுதலை வேண்டினாலும், அதனை இந்த நாட்டின் சட்டங்களுக்கும், நீதி அமைப்பிற்கும் உட்பட்டேதான் அடைவோம். இதுதான் பாபசாஹேபின் கனவு. இதுதான் என் தோழன் ரோஹித் வேமுலாவின் கனவு. நீங்களே பாருங்கள். இந்த இயக்கத்தை என்னதான் கடுமையாக அவர்கள் அடக்க முயற்சித்தாலும், அது பெரிதாக வளர்ந்து செழித்திருக்கிறது.

நான் வேறு ஒன்றையும் என் சிறை அனுபவத்திலிருந்து சொல்லவிரும்புகிறேன். இது சுயவிமர்சனம். மாணவர்களாகிய நீங்கள் விமர்சனத்தை எதிர்கொள்ளும்போது அதை சிரத்தையுடன் ஏற்றுக்கொள்ளுங்கள். ஜேஎன்யூ மாணவர்களாகிய நாம் பேசும் வார்த்தைகளை பொதுமக்கள் புரிந்துகொள்ள முடியாது என்பதே அந்த விமர்சனம். பொதுமக்கள் அப்பாவிகள். எளிமையானவர்கள். அவர்களுடன் நாம் இணைப்பை ஏற்படுத்த வேண்டும்.

வேறு ஒன்றும் இருக்கிறது. சிறையில் எனக்கு இரண்டு கிண்ணங்களைக் கொடுத்தார்கள். ஒன்றின் நிறம் நீலம். மற்றொன்று சிவப்பு. அந்தக் கிண்ணங்களைப் பார்த்தபோது, இந்த நாட்டில் நல்லது ஏதோ நடக்கப்போகிறது என்று எனக்குத் தோன்றியது. எனக்கு விதியின் மீது நம்பிக்கை இல்லை. ஆனால் அடுத்தடுத்து இருந்த கிண்ணங்களைத் தாங்கிய தட்டுதான் இந்தியா என்று என நான் உணர்ந்தேன். இந்த மாதிரி ஒரு ஒற்றுமை இந்தியாவில் ஏற்பட்டால், எல்லோருக்கும் சட்டம் பொதுவானது என்றானால். ஒவ்வொருவரின் உலகமும் மற்றவரின் நலனுக்கானது என்றானால்… அந்தக் கனவைத்தான் நாம் காணவேண்டும்.

மதிப்பிற்குரிய பிரதமர் (அவரை நான் அப்படித்தானே அழைக்க வேண்டும்?).. மதிப்பிற்குரிய பிரதமர் குருஷ்சேவைப் பற்றியும் ஸ்டாலினைப் பற்றியும் பாராளுமன்றத்தில் பேசினார். எனக்கு அப்போது தொலைக்காட்சித் திரைக்குள் புகுந்து அவரது உடையைச் சுண்டி இழுத்து மோடிஜி நீங்கள் ஹிட்லர் அல்லது முசோலினியைப் பற்றிப் பேசவேண்டும் என்று சொல்லவேண்டுமென்று தோன்றியது. குருஜி கோல்வால்கர் முசோலினியைப் போன்ற கருப்புத் தொப்பியைத்தானே அணிந்திருக்கிறார். நாம் சூரியனை நிலவு என்று ஆயிரம் முறை கூறினாலும் அது நிலவு ஆகாது. ஒரு பொய்யை பொய் என்றுதான் கூறமுடியும். ஒரு உண்மையை பொய்யாக்க முடியாது. அவர்களுக்கென்று ஒரு திட்டம் இருக்கிறது. அவர்களின் நலன்களுக்கேற்றவாறு அது மாறி வருகிறது.

நான் இப்போது ஒரு பெர்சனலான விஷயத்தைப் பற்றிப் பேசப்போகிறேன். நான் என் தாயுடன் மூன்று மாதங்களுக்குப்பிறகு பேசினேன். நான் ஜேஎன்யூவில் இருந்தபோது அவருடன் முறையாகத் தொடர்பிலிருக்கவில்லை. சிறைக்குச் சென்றபிறகுதான் எப்போதும் தொடர்பிலிருக்க வேண்டும் என்று தோன்றியது. நான் உங்களுக்கும் அதையேதான் அறிவுரையாகச் சொல்வேன். நீ மோடிஜியைப் பற்றி கிண்டலாகப் பேசினாயா என்று என் தாயிடம் கேட்டேன். ‘கிண்டலாகப் பேசவில்லை. பிறரை ஏளனம் செய்வது அவர்களுடைய உரிமை. மோடிஜியும் ஒரு தாய்க்கு மகன்தானே என்று கூறியது என் வலியிலிருந்து பிறந்த வார்த்தைகள். என்னுடைய மகன் மீது பொய்யான ராஜத்துரோக வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. எனவே மன் கி பாத் என்று (அகில இந்திய வானொலியில்) பேசும் அவர் மா கி பாத் (தாயின் வேதனை) என்று ஏன் பேசக்கூடாது’” என்றுதான் கேட்டேன்.

அவரை என்ன சொல்லி நான் ஆறுதல் படுத்த முடியும்? இந்த நாட்டில் நடப்பதெல்லாம் அபாயகரமான ஒரு நோயின் அறிகுறிகள். நான் ஒரு கட்சியையோ ஒரு தொலைக்காட்டை சானலையோ குறிப்பிடவில்லை. நோய் என்று கூறும்போது தேசம் முழுவதும் என் கண் முன்னே விரிகிறது. இந்த நாட்டு மக்களெல்லாம் போய்விட்ட பிறகு அதற்கு என்ன முகம் இருக்கும்? அதனால்தான் ஜேஎன்யூ போராட்டத்திற்கு ஆதரவாக இருந்த அனைவரையும் நான் வணங்குகிறேன். அவர்களுக்கு ஜேஎன்யூவின் முக்கியத்துவம் புரிந்திருக்கிறது. அங்கு படிப்பவர்களில் 60 சதவீதம் பெண்கள். ஜேஎன்யூ மீது என்ன குறை இருந்தாலும், அது இட ஒதுக்கீடு கொள்கையை அமுல்படுத்தும் ஒரு சில நிறுவனங்களுள் ஒன்றாக இருக்கிறது. அமுல்படுத்தாதபோது நாங்கள் போராடி அமுல்படுத்த வைக்கிறோம்.

ஜேஎன்யூவிற்கு யார் படிக்க வருகிறார்கள். நான் இதுவரை சொல்லாத ஒன்றை இப்போது சொல்கிறேன். என் குடும்பம் 3000 ரூபாய்களில் வாழ்க்கை நடத்துகிறது. இந்த நிலையில் நான் வேறு ஏதாவது பெரிய பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்திருக்க முடியுமா? எனவேதான் ஜேஎன்யூ மீது ஒரு பெரிய தாக்குதல் வரும்போது அதற்கு ஆதரவளிப்பவர்கள் அனைவரின் மீதும் ஒரே சாயம் பூசப்படுகிறது (நான் இங்கு எந்த ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கும் ஆதரவாகப் பேசவில்லை; ஏனெனில், எனக்கென்று ஒரு தத்துவார்த்த வழி இருக்கிறது. சீத்தாராம் யெச்சூரி மீது ராஜத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ராகுல் காந்தி, டி. ராஜா, கேஜ்ரிவால் ஆகியோர் மீதும். ஜேஎன்யூவிற்கு ஆதரவாக நிற்கும் ஊடகவியலாளர்களும் கூட வேட்டையாடப்படுகிறார்கள். மிரட்டப்ப்டுகிறார்கள். (உண்மையில், அவர்கள் ஜேஎன்யூவிற்கு ஆதரவாகப் பேசவில்லை; அவர்கள் உண்மையை உண்மையென்றும், பொய்யைப் பொய்யென்றும் மட்டுமே கூறுகிறார்கள்)

சிலர் சுய தம்பட்டம் அடிக்கும் தேசியம் எங்கிருந்து வருகிறது? நான் உண்மையாகவேல் அந்த முழக்கங்களை எழுப்பினேனா என்று சிறையில் சிலர் கேட்டனர். நான் ஆம் என்றேன். மீண்டும் எழுப்புவேன் என்றேன்.

அதிகாரத்தில் இருப்பவர்களிடம் ஒன்று கேட்கிறேன். உங்களுக்கு வேறுபடுத்திப் பார்க்க முடிகிறாதா அல்லது பகுத்தறிவை முழுவதும் இழந்துவிட்டீர்களா? 61 சதவீத மக்கள் உங்களின் மனநிலைக்கு எதிராக வாக்களித்தார்கள் என்பதற்காக இவ்வளவு விரைவில் பகுத்தறிவை இழந்துவிட்டீர்களா? உங்களின் கோஷங்களுக்கு தம்மை இழந்த சிலரையும் சேர்த்து 31 சத வீத மக்கள்தாம் உங்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள். உங்களுடைய ஹர் ஹர் கோஷத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் இன்று அர்ஹர் (பருப்பு) விலையை மட்டுமே யோசித்துக் கொண்டிருக்கின்றனர்.

எனவே, உங்களுடைய வெற்றி நிரந்தரமானது என்ற மாயையில் சிக்கிக் கொள்ளாதீர்கள். சூரியனைப் பார்த்து இது சந்திரன் என்று நூறு முறை சொன்னாலும், அது சந்திரன் ஆகமுடியுமா? நிச்சயமாக முடியாது. சூரியன் அதுவாகத்தான் இருக்க முடியும், நீங்கள் ஆயிரம் முறை பொய்யைத் திருப்பிச் சொன்னாலும்.

இதில் அழகான விஷயம் என்னவென்றால், பாராளுமன்றத்தில் ‘கவன ஈர்ப்புத் தீர்மானம்” கொண்டுவரும் இவர்கள் பாராளுமன்றத்திற்கு வெளியே, நாடுமுழுவதிலும் “கவனத் திருப்பில்’ தீர்மானமாக உள்ளனர். மக்களை பாதிக்கும் உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திருப்பி அவர்களின் திட்டத்திற்குள் சிக்கவைக்கும் வேலைதான் இது. இங்கு யூஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) அலுவலகத்தை ஆக்கிரமிக்கும் போராட்டம் நடந்தது. தோழர் ரோஹித் ‘கொலைசெய்யப்பட்டார்’. ரோஹித் வேமுலாவுக்காக நாங்கள் குரலெழுப்பியவுடனே “மிகப்பெரிய தேசத்தூரோகத்தைப் பாருங்கள்; ராஜத்துரோகத்தின் மையம் எங்கிருக்கிறது என்று பாருங்கள்’ என்று துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து வந்தன. ஆனால் இந்த திட்டமும் வீரியம் இழக்கும்.

அதற்காகத்தான் அடுத்த திட்டம் வருகிறது. வேறென்ன, ராமர் கோவில்தான். சிறையிலிருந்து வருவதற்கு சற்றுமுன் ஒரு காவலருடன் நடந்த உரையாடலை இங்கு தருகிறேன்:

அவர்: உனக்கு மதநம்பிக்கை இருக்கிறதா?

நான்: மதத்தைப் பற்றி தெரிந்தால்தான் மதநம்பிக்கையாளராக இருக்கமுடியும்.

அவர்: நீ ஏதாவது குடும்பத்தில்தானே பிறந்திருப்பாய்?

நான்: சந்தர்ப்பவசமாக, நான் ஒரு இந்து குடும்பத்தில்தான் பிறந்தேன்.

அவர்: ஆகவே, உன்னுடைய மதத்தைப் பற்றி ஏதாவது தெரியுமா?

நான்: எனக்குத் தெரிந்தவரை கடவுள்தான் இந்த பூமியை கடவுள் படைத்தார், அவர் ஒவ்வொரு துகளிலும் இருக்கிறார் என்றுதான் சொல்லமுடியும். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

அவர்: முற்றிலும் உண்மை.
.
நான்: சிலர் கடவுளுக்காக ஏதாவது ஒன்றை உருவாக்க விரும்புகிறார்கள். அதைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்.

அவர்: பித்தத்தின் உச்சம்.

ஒரு திட்டம் அதற்கான காலத்தைக் கடந்துவிடும்போது மக்களைத் தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது. உங்களுடைய ஏமாற்று விளையாட்டினால் 180 பாரளுமன்ற சீட்டுகளில் ஒருமுறை வென்றீர்கள். இனிமேல் நடக்காது. சக்கரத்தின் அச்சு விலகிவிட்டது. ஆனாலும் மக்களின் கவனத்தை திருப்பும் முயற்சியை அவர்கள் கைவிட மாட்டார்கள். மக்கள் உண்மையான பிரச்சினைகளைப் பேசுவதை அவர்கள் விரும்பமாட்டார்கள்.

இங்கு அமர்ந்திருக்கும் நீங்கள் அனைவரும் உங்கள் மீது தாக்குதல் நடந்தது போலவே உணர்கிறீர்கள். ஆனால் இது நடப்பது முதல்முறை அல்ல. ஆர் எஸ் எஸ் அமைப்பின் அதிகாரபூர்வ ஏடான ஆர்கனைசரில் (சுப்ரமணியன்) சுவாமிஜி ஜேஎன்யூ குறித்து எழுதிய கவர் ஸ்டோரியைப் பாருங்கள். எனக்கு ஜனநாயகத்தில் முழு நம்பிக்கை இருக்கிறது. என் ஏபிவிபி நண்பர்கள் என் உரையைக் கேட்டுக்கொண்டு இருப்பார்களேயானால் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்: சுவாமிஜியை அழைத்து வந்தீர்களென்றால் நாம் ஜேஎன்யூ குறித்து அவருடன் நேரடியாக விவாதிக்கலாம். தர்க்கபூர்வமாக வாதிட்டு ஜேஎன்யூவை நான்கு மாதங்களுக்கு ஏன் மூடவேண்டும் என்று அவர் நீருபித்தால், அவருடன் நான் முழு மனதுடன் உடன்படுவேன். அவரால் முடியவில்லையெனில், அவர் நாட்டை விட்டு வெளியேறி வேறெங்காவது வசிக்க வேண்டுமென்று அவரைக் கேட்டுக்கொள்வேன். ஏற்கெனவே பலமுறை வெளிநாட்டில் வசித்தவர்தான் அவர்.

நம் மீது நடந்த தாக்குதல்கள் முன்கூட்டியே நன்கு திட்டமிடப்ப்பட்டவை. முதல் நாளிலிருந்தே இந்த திட்டம் இருக்கிறது. பழைய சுவரொட்டிகளை மாற்ற வேண்டும் என்றுகூட அவர்கள் நினைக்கவில்லை. இந்து கிராந்தி சேனா பயன்படுத்திய சுவரொட்டிகளையே ஏபிவிபியினரும் முன்னாள் ராணுவ வீரர்களும் இப்போதும் பயன்படுத்துகின்றனர். இவையெல்லாம் நாக்பூரில் திட்டமிடப்பட்டவையென்றே நிரூபிக்கின்றன. அவர்களுடைய தாக்குதல் தன்னெழுச்சியானதல்ல தோழர்களே! எல்லாவற்றிற்கும் பின்னால் ஒரு பெரிய நோக்கம் இருக்கிறது: நாட்டில் எங்கெல்லாம் கலகக் குரல் எழுகிறதோ அதன் மூச்சையடக்கு; எப்போதெல்லாம் மக்கள் அடிப்படைப் பிரச்சினைகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று தோன்றுகிறதோ, அவர்களின் கவனத்தை சிதறடி ; எப்போதெல்லாம் ஜேஎன்யூ வளாகத்தில் கலகக் குரல் எழுகிறதோ – அனிர்பன் பட்டாசார்யா, உமர் காலித், ஆஷுதோஷ், அல்லது உங்களில் ஒருவரின் குரலாக இருந்தாலும் – அதற்கு தேசத்துரோக முத்திரை குத்தி ஜேஎன்யூவை மதிப்பிழக்கச் செய்!

ஆனால் நான் அவர்களுக்குச் சொல்லுகிறேன். இந்தப் போராட்டத்தை, ஆர்ப்பாட்டத்தை நீங்கள் அடக்க முடியாது. நீங்கள் எந்த அளவுக்கு அடக்க முயற்சிக்கிறீர்களோ, அந்த அளவு வேகமாக அது மீண்டும் துள்ளி வரும். சொந்தக்காலில் எங்கள் மண்ணில் எழுந்து நிற்கும்.

இது ஒரு நெடிய போராட்டம். நிறுத்தாமல், வளைந்துகொடுக்காமல், மூச்சுவிடும் இடைவெளிகூட இல்லாமல் இதனை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். நாட்டினை அழிவின் விளிம்பிற்குக் கொண்டு செல்ல முயலும் பிளவு சக்திகளான ஏபிவிபியை ஜேஎன்யூ வளாகத்திற்குள்ளும், வெளியே பிஜேபி-ஆர்எஸ்எஸ்ஐயும் எதிர்த்து நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும். ஜேஎன்யூ அவர்களை வரலாற்றினை சாட்சியாகக் கொண்டு எதிர்த்து நிற்கும். ரோஹித் வேமுலா நடத்திய, யூஜிசி ஆக்கிரமிப்பு இயக்கம் நடத்திய, நீங்களும் அமைதியை விரும்பும் முற்போக்கு சக்திளும் இன்று நடத்தும் போராட்டத்தில் நாம் வெல்வோம்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருக்கும் அனைவருக்கும் நன்றி சொல்லி, எங்களுடன் சேர்ந்து தொடர்ந்து நடக்க வேண்டும் என்று அவர்களுக்கு அழைப்பு விடுத்து என் உரையை முடிக்கிறேன்.

நன்றி!

இன்குலாப் ஜிந்தாபாத்!

தேச ஒற்றுமை நீடுழி வாழ்க!

சமூகநீதி நீடுழி வாழ்க!

விஜயசங்கர் ராமச்சந்திரன், ஃப்ரண்ட்லைன் இதழின் ஆசிரியர்.

பதிவு (5-3-2016) அன்று மேம்படுத்தப்பட்டது.

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.