“என் இனிய தமிழ் சான்றோர்களே ! நம் மன்றத்தில் எத்துனையோ தமிழறிஞர்கள் உள்ளனர் . எனவே என் ஐயத்தை நீக்க வேண்டுகிறேன் . நான் இளங்களை தமிழ் முதலாமாண்டு பயிலும் சராசரியான, இலக்கியத்தில் சற்று ஈடுபாடுள்ள மாணவன் . என் எதிர்காலத்தில் என் தேவைகளை பூர்த்திக்க இத்துறை எனக்குதவும். எனக்கு என்னென்ன வாய்ப்புகள் இருக்கிறது . அதற்கு நான் இன்றிலிருந்து செய்யவேண்டியதென்ன ? இலக்கிய உலகில் நான் என்ன எவ்வாறு மேம்படுத்திக்கொள்வது ? கூறுங்கள்”

தமிழ்பட்ட வகுப்பு இளங்கலை மாணவர் கேட்ட இந்த கேள்வியை முன்வைத்து நண்பர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு கீழ்க்காணும் விடையை அளித்தேன்.

“தமிழ் பி.ஏ, எம்.ஏ போன்றவற்றில் இலக்கியம், இலக்கணம் போன்றவையே கற்பிக்கபடுகின்றன. இவற்றை படித்தால் ஆசிரியர் பணிக்கு மட்டுமே செல்ல இயலும். இவற்றில் சேரும் பலரும் “தமிழ் எம்.ஏ படித்தால் அரசு வேலை கிடைக்கும்” என்ற எதிர்பார்ப்பில் சேர்ந்து அப்படி கிடைக்கவில்லை என்றவுடன் “தமிழ் படித்ததால் வேலை கிடைக்கவில்லை” என குறைகூறுகிறார்கள். தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியருக்கான சம்பளம் மிக குறைவு. ஆக 100 பேர் பி.ஏ தமிழ், எம்.ஏ தமிழ் ஆகியவற்றை எடுத்து படித்தால் அதில் ஓரிருவருக்கு அரசு வேலை கிடைக்கும். 10,, 15 பேருக்கு தனியார் பள்ளியில் ஆசிரியர் வேலை கிடைக்கும். மீதமுள்ளோர் படிப்புக்கு தொடர்பற்ற வேலைகளை செய்யும் நிலை உருவாகும். அந்த சூழலில் அவர்களது வேலைக்கு அவர்கள் கற்ற தமிழ் படிப்பு உதவபோவது கிடையாது.

இந்த பின்புலத்தில் தான் “தமிழ் படித்தேன். வேலை கிடைக்கவில்லை” என்பது போன்ற குற்றச்சாட்டுக்களை புரிந்து கொள்வது அவசியம்.

இதில் பள்ளி ஆசிரியர் படிப்புக்கு பி.ஏ தமிழே போதுமானது. கல்லூரி ஆசிரியர் படிப்புக்கு எம்.ஏ தமிழ் படித்து ஸ்லெட் அல்லது நெட் எழுதினால் போதும். அரசு கல்லூரியில் புரபசர் ஆக கூட எம்.பில் அல்லது பி.எச்.டி படிப்பதில் எந்த பலனும் கிடையாது. ஆக பலரும் பி.எச்.டி வரை படித்தும் அரசு வேலை கிடைக்காமல், அதே சமயம் வெறும் இளங்கலை பட்டம் மட்டுமே பெற்று அரசுவேலை பெறும் கனெக்சன் உள்ள மாணவர்களை கண்டு வெறுப்படைகிறார்கள்.

தமிழில் முனைவர் பட்டம் பெற்றால் அரசு கல்லூரியில் இருநூறு அல்லது முன்னூறு ரூபாய் அளவே சம்பளம் உயரும். எம்.பில்லுக்கு அதுகூட கிடையாது. ஆக படித்த டிகிரியை வைத்து வேலையை எப்படி தேடுவது என்பதைத்தான் பார்க்கவேண்டுமே தவிர பி.ஏ, எம்.ஏ. எம்பில், பிஎச்டி என தொடர்ந்து படித்து ஆண்டுகளை வீணாக்கிவிட்டு விரக்தி அடையக்கூடாது.

தமிழ் படிப்பது என்றால் இலக்கியங்களுடன் நின்றுவிடாமல்

1) கணிணியில் தமிழ்
2) செல்போனில் தமிழ் ஆப்
3) தமிழில் விளம்பரம் டிசைன் செய்தல்
4) புத்தகம், பதிப்பித்தல் துறையில் எடிட்டிங், ப்ரூப் ரீடிங்,

இப்படி அப்ளிகேஷன் ஓரியண்டட் துறைகளில் கவனம் செலுத்தினால் வேலைவாய்ப்பு அதிகம். உதாரணமாக என் நண்பர் தமிழ் முனைவர் அண்ணாகண்ணன் டிஜிட்டல் தமிழ் துறையில் சாப்ட்வேரில் தமிழை கொண்டுவரும் பொறுப்பில் உள்ளார்.

அரசும் “அப்ளைட் தமிழ் (Applied Tamil)” என்பது போன்ற படிப்பை தமிழக அரசு உருவாக்கி “கணிணி+ தமிழ், வணிகம்+ தமிழ்” என்பது போன்ற எலக்டிவ் பாட திட்டங்களை உருவாக்கவேண்டும். வணிக மொழி ஆங்கிலம் எனினும் மக்களுக்கு விளம்பரம் செய்வது, தகவல் தொடர்பு எல்லாம் தமிழில் தான் செய்யவேண்டும். அதை எப்படி சுவாரசியமாக செய்வது என்பதை கற்றுத்தரலாம். கல்லூரியின் வணிகதுறையும், தமிழ்துறையும் இணைந்து இதற்கான பாடத்திட்டங்களை உருவாக்கலாம்.

ஆனால் தமிழ் துறையை பிற துறைகளுடன் ஒட்டாத தனிமையில் வைத்து இலக்கியம், இலக்கணம் என்பதுடனேயே அதை தேங்க வைத்து நிறுத்திவிடுகிறார்கள். அதை படிக்கும் மாணவர்களும் என் எதிர்காலம் என்ன என குழம்பி நிற்கிறார்கள். தமிழை தனிமைபடுத்தாதீர்கள். தமிழ் இலக்கிய மொழி மட்டும் அல்ல. அது அறிவியல் மொழி, வணிக மொழி. அதை அறிவியல் மற்றும் வணிகவியல் துறைகளுடன் சேரவிடுங்கள். தமிழ் மாணவர்களுக்கு மேஜர் துறை தமிழாகவும், மைனர் துறை அறிவியல் அல்லது வணிகமாகவும் இருக்கட்டும். அறிவியல் அல்லது வணிகவியலில் ஆங்கிலத்திலும் சில பாடங்களை படிக்கவேண்டும் என அவர்களை கட்டாயப்படுத்தவேண்டும். இல்லையெனில் ஆங்கிலத்தில் இருக்கும் ரிப்போர்ட்டுகள் அல்லது கட்டுரைகளை தமிழாக்கம் செய்ய அவனால் எப்படி இயலும்?

தற்போதைய பி.ஏ அல்லது எம்.ஏ தமிழ் பாட திட்டத்தை படிக்கும் ஒருவருக்கு வெளியுலகில் இணையம், சோஷியல் மீடியா புரட்சி நடந்துகொன்டிருப்பதே தெரியாது. சிலப்பதிகாரம், கம்பராமாயணம், பக்திப்பாடல்களை கற்பிப்பதிலும், முனைவர் பட்ட ஆய்வுகளில் “புதுமைப்பித்தன் கதைகளில் காணும் பெண்ணியம்” என்பது போன்ற தலைப்புகளிலும் மட்டுமே ஆய்வுகள் நடப்பதுடன் நிறுத்திவிடுகிறார்கள்.

இம்மாதிரி ஆய்வுகளையோ, பாடதிட்டங்களையோ நாம் குறைகூறவில்லை. ஆனால் தமிழ் என்பது வெறும் வரலாறு மற்றும் இலக்கியமாக மட்டும் இருக்க முடியாது. அதை மக்களுக்கு பயனுள்ள துறையாக மாற்றவேண்டும். அதை செய்ய தவறியதால் ஆங்கிலவழியில் மட்டுமே படித்த ஒரு மாணவர் கூட்டம் அறிவியல், வணிகம், விளம்பரம் என தமிங்கிலத்தை பயன்படுத்தி அனைத்து துறைகளிலும் ஆங்கிலத்தை புகுத்தி வருகிறது. வணிகம், அறிவியல், கணிணி போன்ற துறைகளில் தமிழ் சுத்தமாக இல்லாத நிலை நீடிப்பதே இதற்கு காரணம்.