வழக்குரைஞர் மில்ட்டன்
சட்டீஸ்கரில் முக்தி மோர்ச்சா கட்சியை துவங்கி, வழிநடத்திய சங்கர் குஹார் நியோகியால் சாகித் மருத்துவமனை துவங்கப்பட்டது. சுரங்க தொழிலாளர்கள் அளிக்கும் நிதியால் தான் இம்மருத்துவமனை இயங்கி வருகிறது. அனைவருக்கும் இலவசமாக மருத்துவ சேவை அளித்து கொண்டிருக்கிறது. தொழிலாளிகளின் மருத்துவ சேவையில் 30 ஆண்டுகளாக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் மருத்துவர் சாய்பால் ஜனா.
1992-ல் பிலாய் தொழிலக பகுதியில் தொழிலாளர் போராட்டத்தின் பொழுது போலீசு துப்பாக்கிச்சூடு நடத்தியது. 18 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். அதில் காயம்பட்ட தொழிலாளர்களுக்காக மருத்துவ சிகிச்சை தந்ததற்காக இவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில் தலைமறைவாகிவிட்டதாக இப்போது சட்டீஸ்கர் அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
‘இந்த கைதுக்கான காரணம் கேலிக்கிடமாக இருக்கிறது. இருபது வருடமாக டல்லியில் தான் இருக்கிறார் அரிதாகத்தான் வெளியே சென்றுள்ளார். நோயாளியை விட்டு அகல மறுப்பார், 24 மணி நேரமும் மருத்துவமனையில் தான் இருப்பார். அரசாங்கம் நடத்திய பல்வேறு சுகாதாரம் தொடர்பான கமிட்டிகளில் பங்கெடுத்துள்ளார். அவர் தலைமறைவாகிவிட்டார் என்று இப்போது தான் நாங்கள் கேள்விப்படுகிறோம் ’ என இந்து நாளிதழுக்கு சாய்பாலின் மனைவி அல்பனா ஜனா பேட்டியளித்துள்ளார்.
மாவோயிஸ்ட் என பொய்க்குற்றம் சாட்டப்பட்டு சிறையில் வதைக்கப்பட்ட பிரபல குழந்தை மருத்துவர் பினாயக்சென் இந்த மருத்துவமனையில் பணிபுரிந்தவர் தான். 1980 களில் மருத்துவர்கள் சாய்பால் ஜனா, பினாயக்சென் மற்றும் ஆசிஷ் குண்டு அகியோர் இணைந்து இந்த மருத்துவமனையை வளர்த்து எடுத்தனர். சாய்பால் இந்த குழுவிற்கு தலைமையேற்றார். இன்று சாகித் மருத்துவமனை சட்டீஸ்கர் ஏழை மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கிறது என்றால் மருத்துவர் சாய்பாலின் பங்களிப்பு முக்கியமானது.
சாய்பாலின் கைதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக பினாயக்சென் குறிப்பிட்டுள்ளார்.
‘அவர் பன்முக தன்மை வாய்ந்த மருத்துவர் . மகப்பேறு மருத்துவம், சிக்கலான எலும்பு முறிவுகளுக்கு அறுவை சிகிச்சை , பொது மருத்துவம் மற்றும் குழந்தை மருத்துவம் என தன்னுடைய வாழ்வில் திறமையான மருத்துவராக வளர்ந்துள்ளார்’ என பினாயக் சென் அவருடைய சிறப்பை பற்றி கூறியுள்ளார்.
மத்தியில் பாஜக அரசும், சட்டீஸ்கர் மாநில பாஜக அரசும் கனிம வளக்கொள்ளைக்காக அதானிகளுக்காகவும், கார்ப்பரேட்டுகளுக்காவும் தனது அத்தனை படை பரிவாரங்களையும் இறக்கி, தங்களுடைய உரிமைகளுக்காக நிராயுதபாணியாக போராடும் பழங்குடி மக்களை கடுமையாக ஒடுக்கி வருகிறது. அதுக்கு ஏதுவாக பழங்குடி மக்களின் வன உரிமை சட்டத்தை கடந்த மாதத்தில் ரத்து செய்தது.
போலீசின், சிறப்பு படைகளின் போலி மோதல்களையும், பாலியல் வன்கொடுமைகளையும், ஒடுக்குமுறையையும் அம்பலப்படுத்தும் பத்திரிக்கையாளர்களையும், ஜனநாயகவாதிகளையும் கூட விட்டுவைப்பதில்லை. பழங்குடி செயற்பாட்டாளர் சோனி சோரி மீது ஆசிட் தாக்குதல் நடத்தியது. பத்திரிக்கையாளர்கள் சந்தோஷ், சோமுரு நாக்கை சிறையில் அடைத்து சித்திரவதை செய்தது. பத்திரிக்கையாளர் மாலினி சுப்பிரமணியம் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி, தொடர்ச்சியாக மிரட்டல்கள் கொடுத்து சட்டீஸ்கரை விட்டு வெளியேற்றியது! இப்பொழுது தலைமை மருத்துவரை கைது செய்துள்ளது!
ஹைதாரபாத்திலும், தில்லியிலும் அத்தனை ஊடகங்களும், ஜனநாயகசக்திகளும் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே, பாஜக பரிவாரங்களும், அரசு படைகளும் தொடர்ச்சியாக தாக்குதல் தொடுக்கிறார்கள். சட்டீஸ்கரில் தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் வெளியேற்றிவிட்டு, பழங்குடி மக்கள் மீது கொடுமையான ஒடுக்குமுறையை ஏவி வருகிறது!
வழக்குரைஞர் மில்ட்டன், செயலர், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், தொடர்புக்கு 90946 66320
மருத்துவர் சாய்பாலை கைது செய்த போலீஸ், அவரை சங்கிலி இணைக்கப்பட்ட கைவிலங்கை இட்டு இழுத்துச் செல்லும் படம் வெளியாகியுள்ளது. கொடூர குற்றவாளிகளையே கைவிலங்கிட்டு அழைத்துச் செல்வது மனித உரிமை மீறலாக பார்க்கப்படும் சூழலில் மனித உரிமைக்காகப் பாடுபட்ட ஒருவரை கைவிலங்கிட்டு இழுத்துச் செல்வது கண்டனங்களை எழுப்பியுள்ளது.