கல்வி சமூகம் சர்ச்சை

“யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான்”;“பனியனைக் கழட்டுடா” புதுச்சேரி அரசு 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு பரிந்துரைத்திருக்கும் புத்தகத்தில் உள்ள வரிகள் இவை!

புதுவை சீ.நா. கோபி

“யோசித்தப்படியே பத்மாவின் மீது படர்ந்திருந்தேன் நான். இருவரின் உடலுக்குள்ளும் காம கிளர்ந்தெழுந்து உஷ்ணமாய் இருந்த. . . . . . . ,”

“பனியனைக் கழட்டுடா. . . .  என்று ட்டுடாவிற்கு அவள் கொடுத்த அழுத்தத்திற்குக் பின்னால் ஒரு நாவல் எழுதுமளவிற்குக் காமம் மிகுந்து கிடந்தது. அவள் சிணுங்கிக் கொண்டே பனியனைப் பிடித்து இழுத்தாள்”

 

இந்த வரிகள் கொண்ட புத்தகத்தை உங்கள் வீட்டு 12 வயது வரையிலான ஐந்தாம் வகுப்பு படிக்க கூடிய குழந்தைகளுக்கு படிக்க கொடுக்க உங்களால் இயலுமா? என்னால் இயலாது. ஆனால், புதுச்சேரி அரசால் இயன்றிருக்கிறது. புதுச்சேரி அரசின் கல்வித்துறை இந்தப் புத்தகத்தை ரீடிங் கார்னர் என்ற பள்ளி நிகழ்விற்கு சுமார் 100 அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு இப்புத்தகத்தை பரிந்துரைத்திருக்கிறது.

கடந்த 22.09.2015 தேதியிட்ட SSAவின் சுற்றறிக்கை (நகல் இணைக்கப்பட்டுள்ளது) புதுச்சேரியில் பெண், தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை, urban deprived குழந்தைகளின் வாசிப்பு மற்றும் எழுத்து பயிற்சிகளை ஊக்கப்படுத்துவதற்காக மத்திய அரசின் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறித்தும் பள்ளிகள் தோறும் புத்தகங்கள், புத்தக அலமாரிகள் முதலானவை கொண்டு எவ்வாறு ரீடிங் கார்னர் அமைக்க வேண்டும் மற்றும் எப்படியெல்லாம் போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்தும் அதற்கான நிதியாக ரூ.1600 ஒதுக்கியிருப்பதாகவும் சொல்லியது. புதுச்சேரி அரசு தொடக்கப் பள்ளிகள் மகிழ்ச்சி கொண்டன. புதுச்சேரி அரசு பல ஆண்டுகளுக்காக பள்ளி நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்காத காலம் போய் இப்போது மாற்றம் வந்திருப்பது கண்டு உண்மையான மகிழ்ச்சி. பல தலைமையாசிரியர்களும் உடனடியாக குழந்தைகளுக்கான புத்தகங்கள் பதிப்பிக்கும்/விற்பனை செய்யும் பதிப்பாளர்களை/ விற்பனை நிலையங்களை தொடர்பு கொள்ளலாயினர்.

 

இச்சமயம் சுற்றறிக்கை பள்ளிகளுக்கு வந்த சின தினங்களுக்குள்ளாகவே கல்வித்துறையிலிருந்து நாங்களே புத்தகங்கள் (ரூ.400 மதிப்பிலான) தருகிறோம்; இதனையும் அத்துடன் இணைத்துக் கொள்ளுங்கள் என வாய்மொழி உத்தரவு வந்தது. Zone 1–3 ஊரக அரசு தொடக்கப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கல்வித்துறையில் ரூ. 400 செலுத்தி பெற்ற புத்தகங்கள் கீழ்க்காண்பவை :

  1. தொட்டில் சூரியன், தருண் பதிப்பகம் சீர்காழி (ஆசிரியர் : த.அமிர்தகணேசன்)
  2. ழகரக்காரனின் முகநாக்கு – சிவச்சந்திரா பதிப்பகம், புதுச்சேரி (ஆசிரியர் : த.அமிர்தகணேசன்)
  3. செங்காத்து வீசும் காடு – சபானந்தாச்சார்யா பதிப்பகம், புதுச்சேரி (தொகுப்பு : த.அமிர்தகணேசன்)
  4. மழையும், மழலையும் – விழிகள் பதிப்பகம், புதுச்சேரி (ஆசிரியர் கோவை விஜி)
  5. வகுப்பறைக்கு வெளியே – பாரதி புத்தகாலயம், சென்னை (ஆசிரியர் இரா.தட்சணாமூர்த்தி)
  6. ஆளுமை சிறுகதைகள் : ஆசிரியர் : பூபதி.

 

இதில் பூபதி என்பவரது ஆளுமை சிறுகதைகள் நீங்கலாக வேறெந்த புத்தகமும் தொடக்கப்பள்ளி அல்லது நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வாசிக்க லாயக்கற்றவை அல்லது வாசிக்க வயதில்லாத நிலையில் இருக்கிறது. திரு.அமிர்தகணேசன் அவர்களை ஆசிரியராக உள்ள தொட்டில் சூரியன் என்ற நூல் நூலாசிரியர் அவர்களுக்கும் அவரது பேரனுக்குமிடையே நிகழ்ந்த சொல்லாடல், கவிதை நயத்தோடு வந்திருக்கிறது. இந்நூல் குறித்து ஈரோடு தமிழன்பன் அவர்கள் “வாழ்வின் பொருண்மைகள் வியப்புத் தளங்களைக் கைப்பற்றி வெளிச்சம் பாய்ச்சுகின்றன. கொண்டாட்டமான கவிதை – தொட்டில் உற்சவம் நடத்துகிறது. ஒளிக்கள் அருந்திய மதர்ப்பு விசித்திர வண்ணக் கோலங்களைப் படைத்து தள்ளுகிறது” என்று சிலாகிக்கிறார். இருக்கலாம், அப்படியே இருக்கவும் கூடும். ஆயினும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு வாசிக்க ஏதுவானதா? என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறோம்.

 

அடுத்தது, ”ழகரக்காரனின் முகநாக்கு” என்கிற கவிதை நூல். இந்நூலின் ஆசிரியரும் அமிர்தகணேசனே. நூல் தலைப்பு ஒன்று போதும் இந்நூல் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கானதா என்பதற்கு. இவ்வாறாகவே மற்றொரு கவிதை நூலான ”மழையும், மழலையும்”. ஓய்வு பெற்ற ஆசிரியர் இரா.தட்சிணாமூர்த்தி எழுதிய  ”வகுப்பறைக்கு வெளியே” ஆசிரியர்களுக்கானது. அதுவும் குழந்தைகளுக்கானதல்ல. ”வகுப்பறைக்கு வெளியே” நூல் வெளியீடு பாரதி புத்தகாலயம் ஆகும். இந்நிறுவனம் குழந்தைகளுக்கென்றே பல நூல்களை வெளியிட்டுள்ளது. அவற்றில் சில தமிழக அரசி பள்ளி நூலகங்களுக்கு கொடுத்த புத்தக பூங்கொத்து தொகுப்பிலும் இடம் பெற்றிருப்பது சிறப்பு. அவ்வாறு இருக்க இந்நூல் தேர்ந்தெடுத்தது ஏன் என்பது புதுச்சேரி கல்வித்துறைக்கே வெளிச்சம்.

 

இதில் ஆக மோசமானது செங்காத்து வீசும் காடு என்னும் பலரது சிறுகதை தொகுப்பாகும். முதல் கதையே பாலியலை பேசும் (கணவன் மனைவி படுக்கறை நிகழ்வுகளை அப்பட்டமாக பேசும்) வரிகளை கொண்டவை. தொடர்நது வயது வந்தவர்களுக்கான கதைகள் கொண்ட தொகுப்பே அந்நூல். (அக்கதைகளின் நகல்கள் இணைக்கப்பட்டுள்ளது).  இந்நூலில் இடம்பெற்றுள்ள கதைகளின் சில வரிகளே இக்கட்டுரையின் ஆரம்ப வரிகள் தி.அமிர்தகணேசன் என்பவர் தொகுத்த “செங்காத்து வீசும் காடு/சிறுகதைகள்” தொகுப்பிலிருந்து துபாய் தேவா சுப்பையா என்பவர் எழுதிய “சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா” என்ற நூலில் இருக்கிறது. இங்கே குறிப்பிட வேண்டிய ஒன்று, திரு.அமிர்தகணேசன் என்பவர் புதுச்சேரி சாரம் அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர். சுனாமி ஊழல் குற்றச்சாட்டில் சிபிஐ குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருந்தும் இதுவரை பதவி இழக்காது இருக்கும் கல்வித்துறை செயலர் திரு.ராகேஷ் சந்திரா, இ.ஆ.ப அவர்களுக்கு மிக நெருக்கமானவர். திரு.ராகேஷ் சந்திரா புதுச்சேரி முதல்வர் திரு.ரங்கசாமி அவர்களுக்கு மிக நெருக்கமானவர். திரு.அமிர்தகணேசன் ஒரு தலித் பெண் ஆசிரியர் ஒருவருக்கு தொடர்ச்சியான தொல்லைகள் (பாலியல் சார்ந்தது அல்ல) கொடுத்ததான புகாரில் எஸ்.சி எஸ்.டியின் துறை சார்ந்த விசாரணையில் இடம்பெற்றிருக்கிறார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி இந்தப் புகாரில் திரு.அமிர்தகணேசன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இயக்கங்கள் கண்டன. புதுச்சேரி அரசின் கல்வித்துறையில் பலரது கோபத்திற்கு ஆளாகியிருக்கும் இவர் புதுச்சேரி அரசின் நெருக்கத்தின் காரணமாக எந்த வித நடவடிக்கைக்கும் ஆளாகாமல் இருக்கிறார்.

 

கடந்த 5 வருடங்களில் புதுச்சேரி நகரம் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றச்செயல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளது. நகரத்தின் மையப் பகுதியில் உள்ள “ஜி” கெஸ்ட் அவுஸில் பாலியல் வல்லுறவுக்கு ஆளான பெண் சிஐடியிலிருந்து பிடியிலிருந்து மாயமானது இன்றுவரை மர்ம்மாகவே இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக சிறுமிகள் பாலியல் வழக்கில் பல காவலர்களும் முக்கியஸ்தர்களும் சிக்கியுள்ளனர். புதுச்சேரி அரசின் கல்வித்துறையில் ஐந்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் ஆசிரியர்கள் பாலியல் புகார்களில் சிக்கியுள்ளனர். சமீபத்தில் புதுச்சேரி அரசின் கல்வித்துறையின் அனுமதியோடு இயங்கும் தனியார் பள்ளி ஒன்றின் தாளாளர் அப்பள்ளியில் படிக்கும் பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. இத்தகைய சூழலில் தான் இப்புத்தகங்கள் பெண், தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை, urban deprived குழந்தைகளுக்கான ரீடிங் கார்னர் இடம்பெற்றிருக்கிறது. எந்த வகையிலும் இப்புத்தகங்கள் எத்தகைய பள்ளிகளிலேயும் (தொடக்கப் பள்ளி /நடுநிலை / உயர்நிலை / மேல்நிலை) இடம்பெறுதல் என்பது தகாத செயலாகும். அந்தரங்க படுக்கையறை அனுபவங்களை, உரையாடல்களை பள்ளி மாணவர்களுக்கு படிக்கக் கொடுத்த புரட்சிகர அரசு ந.ரங்கசாமி தலைமையிலான புதுவை அரசேயாகும்.

 

அத்திப்பூத்தாற்போல் நடப்பதாக இருப்பது குழந்தைகளுக்கான புத்தகங்களை அரசு தருவது என்பது. அதிலும் இப்படியான மோசடி வித்தைகள் அரங்கேறியது எப்படி? புத்தகங்களை தேர்வு செய்தவர்கள் ஒன்று இந்த புத்தகங்களை பார்வையால் கூட காணாதவர்களாக இருப்பார்கள் அல்லது யாருடைய கட்டளைக்கோ அல்லது நெருக்கடிக்கோ ஆளாகி பரிந்துரைத்திருப்பார்கள். நமது கல்வித்துறையின் த.அமிர்தகணேசன் அவர்களின் மூன்று நூல்கள் zone 1 முதல் 3 வரை தரப்பட்டுள்ளன. அவர்கள் எழுத்து நடை குறித்து கருத்து ஏதுவும் கூறவில்லை. அவரது அத்தகைய புத்தகங்களுக்கு எந்த சிறு/குறு/பெரிய புத்தகங்கள், பத்திரிகைகள் எந்த ஒன்றிலும் விமர்சனம் கூட வந்தது இல்லை என்ற உண்மையை இங்கே பதிவிடுதில் தவறேதும் இருப்பதாக கருதவில்லை. கவிதை தொகுப்பும், சிறுகதை தொகுப்பும், தாத்தா-பேரன் உரையாடலும், குழந்தைகள் உளவியலும் எந்த விதத்தில் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான வாசித்தல், எழுதுதல் நடவடிக்கைகளை எவ்விதம் ஊக்குவிக்கும் என்பது கல்வித்துறை மட்டுமே அறிந்த ரகசியம். மேற்சொன்ன புத்தகங்கள் புதுச்சேரி அரசு தனது பொது நூலகங்களுக்கு பரிந்துரைத்திருக்கலாம். அதைவிட்டு அரசு தொடக்கப்பள்ளிகளுக்கு தருவது என்பது சரியான செய்கையா?

 

இந்த காலகட்டத்தில் பல தொடக்கப் பள்ளிகள் மீதி தொகைகொண்டு சிறப்பான முறையில் உண்மையிலான குழந்தைகளுக்கான புத்தகங்களை பல இடத்தும் பெற்று ரீடிங் கார்னர் நிகழ்வினை அரங்கேற்றியுள்ளனர். ஆனால் எந்த பள்ளியும் கல்வித்துறை வழங்கிய இந்தப் புத்தகங்களை ரீடிங் கார்னரில் வைத்திருக்க சாத்தியமில்லை. அரசுப் பள்ளிகள் தொடர்ந்து சமூக அக்கறையிலிருந்து நழுவிவரும் வேளையில் இது போன்ற செய்கைகள் அரசுப் பள்ளிகளின் மீதான தாக்குதல்களாகவே பார்க்க இயலும்.

 

எனவே, உடனடியாக கல்வித்துறை ரீடிங் கார்னருக்காக கொடுக்கப்பட்ட புத்தகங்களை (ஆளுமை சிறுகதைகள் நீங்கலாக) உடனடியாக எல்லாப் பள்ளிகளில் இருந்தும் திரும்ப பெற வேண்டும். இந்தப் புத்தகங்களை பரிந்துரைத்த குழு மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்பட  வேண்டும்.

Advertisements

One comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: