அரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 சுற்றுச்சூழல் தமிழகம்

கடந்த ஐந்து ஆண்டுகளில் மக்களைப் பாதிக்கும் எந்தப் போராட்டத்தில் திமுக பங்கெடுத்தது?

 முகிலன்

தி.மு.க.வினர் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கூடங்குளம் அணு உலையை எதிர்த்த போராளிகள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை திரும்பப் பெறுவோம் என அறிவித்து உள்ளனர்.

கூடங்குளம் அணு உலை பிரச்சினையில் கடந்த 1987 முதல் தொடர்ந்து நடந்து வரும் போராட்டமும், கடந்த 2011 ஆகஸ்டு முதல் கடந்த ஐந்தாண்டுகளாக தொடர்ந்து நாங்கள் போராடிக் கொண்டிருப்பதும், பாசிச ஜெயலலிதா அரசு எங்கள் மீது போட்டுள்ள நூற்றுக்கணக்காண பொய் வழக்குகளை திரும்பப் பெற வைப்பதற்காக மட்டும் அல்ல.

2014 ஆம் ஆண்டின் இறுதியில் கூடன்குளம் அணு உலை பிரச்சணை தொடர்பாக வழக்கறிஞர் தோழர்.. கே. எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் உதவியுடன் எங்களது ஒருங்கிணைப்பாளார் தோழர்.சுப உதயகுமார், நான்(முகிலன்), பூவுலகு அமைப்பை சார்ந்த சுந்தர்ராஜன், ஆகிய மூவரும் தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அவர்களை அவரது கோபாலபுரம் வீட்டிலும், தி.மு.க பொருளாளர்.ஸ்டாலின் அவர்களை. தி.மு.க தலைமையகத்திலும், நேரில் சந்தித்து பேசினோம்.

தரமற்று கட்டப்பட்டுள்ள கூடன்குளம் அணு உலையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை பற்றியும், கூடன்குளம் அணு உலையில் அதுவரை நடந்துள்ள விபத்துகள் பற்றியும், கூடுதல் அணு உலைகள் கூடன்குளத்தில் கட்டாமல் இருப்பதற்காகவும், புதிய அணு உலைகள் அமைக்க எதிர்த்து தெரிவித்து மேற்கு வங்காளம், மராட்டியம், கேரள அரசுகள் கையாண்டு தடுத்து வரும் அணுகுமுறை பற்றியும், கோலார் தங்கவயலில் 48,000 வருடம் வைத்து பாதுகாக்க வேண்டிய கதிர்வீச்சை தொடர்ந்து வெளியிடும் அணுக்கழிவு பிரச்சினையில் கர்நாடக அரசும், கர்நாடக பா.ஜ.க – கர்நாடக காங்கிரசு கட்சியும் இந்திய அரசுக்கு எதிராக மேற்கொண்ட அணுகுமுறை பற்றியும் கூறி தமிழகத்தில் உள்ள உங்களின் கட்சி இதன் மீது கவனம் செலுத்த வேண்டும் என தி.மு.க தலைவரிடம் பல்வேறு செய்திகளை பேசி வந்தோம்.

அனைத்தையும் பொறுமையாகவும், சொல்வதில் தேவையானவற்றில் விளக்கம் கேட்டும் அறிந்து கொண்ட தி.மு.க தலைவர் அவர்கள், திருமதி. கனிமொழி எம்.பி. அவர்கள் தலைமையில் தி.மு.க கட்சி எம்.பி.க்களை தில்லிக்கு அனுப்பி பிரதமரிடம் நாங்கள் கூறியது பற்றி நேரில் முறையிடுவதாகச் சொன்னார். திருமதி. கனிமொழி எம்.பி. அவர்களையும் போராட்டக் குழுவை சேர்ந்த நாங்களும், போராட்டக்குழு பெண்களும் டெல்லியில் நேரில் சந்தித்து பிரச்சினைகளை பல்வேறு தரவுகளோடு சொல்லி வந்தோம்.

நாங்கள் சந்தித்து இப்போது ஒன்னரை ஆண்டுகள் கழிந்து போன பின்பும், இன்று வரை இது தொடர்பாக ஒரு சிறு துரும்பையும் கூட எடுத்துப் போடாத தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அவர்கள் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் இக்காலத்தில், தி.மு.க தேர்தல் அறிக்கையில் மட்டும் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கூடங்குளம் அணு உலையை எதிர்த்த போராளிகள் மீது போடப்பட்டிருக்கும் வழக்குகளை திரும்பப் பெறுவோம் என அறிவித்து உள்ளனர்.

கூடன்குளம் அணு உலை பிரச்சனை தொடர்பாக தி.மு.க உட்பட ஆண்ட, ஆளும் கட்சிகள் எதுவும் பேசாமல் கள்ளமவுனம் சாதிப்பதை சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் காலத்தில் அரசியல்ரீதியாக அம்பலப்படுத்தி உடைப்பதற்க்கான அணுகுமுறையாகவே, கடந்த 2015-டிசம்பரில் நான்…

  1. அணு உலை அமைப்பதில் இந்திய அரசு புதிய கொள்கை முடிவை எடுத்துள்ளது. இடப்பற்றாக்குறை, பணியாளர் குடியிருப்பு, பாதுகாப்பு உள்ளிட்ட காரணிகளை கருத்தில் கொண்டு, ஏற்கெனவே அணு உலை செயல்படும் இடங்களிலேயே மேலும் அணு உலைகளை அமைப்பது என இந்திய அரசு தீர்மானித்துள்ளது. அதன்படி கூடன்குளத்தில் 3,4,5,6 எனத் தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட அணு உலைகளை அமைத்து அணு உலைப் பூங்கா அமைக்க இந்திய அரசு திட்டமிட்டு உள்ளதை கைவிடக் கோரி தமிழக அரசு அழுத்தம் கொடுத்து தடுக்க வேண்டும்.

2.கூடன்குளம் அணு உலையிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட 48,000 வருடம் பாதுகாக்க வேண்டிய கதிர்வீச்சுதன்மையுடைய அனுக்கழிவை தமிழகத்தில் கூடங்குளம் உட்பட எங்கேயும் வைக்க தமிழக அரசு அனுமதிக்க கூடாது.

3.கூடன்குளம் அணுஉலையை ஒட்டிய கடற்கரை பகுதியில் 20 ஆண்டுகள் தாதுமணல் அள்ள வைகுண்டராசனின் வி.வி.மினரல் நிறுவனத்திற்கு சட்டத்திற்க்கு புறம்பாக 2011-இல் கொடுக்கப்பட்ட சுமார் 750 ஏக்கர் (300ஹெக்டேர்) அனுமதியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

  1. இன்னும் நிலுவையில் உள்ள கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்ட வழக்குகளான 132 வழக்குகளில் ஒரு லட்சம்(1,00,000) மக்கள் மீது உள்ள வழக்கை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
    என்ற கோரிக்கையுடன் என் மீது உள்ள வழக்குகளுக்காக 23-12-2015 இல் நீதிமன்றத்தில் நேர் நின்று(சரணடடைந்து) திருச்சி, பாளையம்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டேன். பாளையம்கோட்டை சிறைக்குள்ளும் தொடர்ந்து உண்ணாநிலை இருந்து போராடி வந்தேன். இப்பிரச்சினைகள் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பெருகி வருவதை தடுக்க, 44 நாட்கள் கழித்து (04-02-2016) தமிழக அரசு என் மீதான வழக்குகளில் உள்ள தேசவிரோதம், அரசுக்கு எதிரான போர் தொடுத்தல் போன்ற கடுமையான பிரிவுகளை வழக்கில் இருந்து நீக்கி விட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. நான் பிணை எதுவும் கேட்காத நிலையிலேயே தமிழக அரசின் அழுத்ததினால் வள்ளியூர் குற்றவியல் நீதிபதி தனது சொந்த பிணையில் என்னை விடுதலை செய்தார்.

இப்படி கூடன்குளம் அணு உலையில் தமிழகத்தையே அழிக்க கூடிய பல பிரச்சினைகள் நிகழ்காலத்தில் இருக்க, இதன் மீது அனைத்து கட்சிகளும் சரியான நிலைபாட்டை எடுக்க வைத்து தமிழகத்தை காப்பாற்ற மக்கள் பல்வேறு அர்பணிப்புகளுடன் தொடர்ந்து போராடி வரும் நிலையில், தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் வழக்கைப் பற்றி மட்டும் அறிவித்து விட்டு, மக்களை ஏமாளிகளாக கருதி வழக்கம் போல் தமிழக மக்களை தொடர்ந்து முட்டாள்களாக்க முயல்கிறார்கள்..
தி.மு.க தலைவர் மு.கருணாநிதி அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் அணு உலையில் நிலவும் பிரச்சிணைகள் பற்றி எதுவும் புரியவில்லையா, அல்லது புரியாதது மாதிரி நடிக்கிறார்களா எனில் உண்மையில் நடிக்கிறார்கள் என்பதுதான் உள்ளங்கை நெல்லிக்கனியாக தெரிகிறது. அணு உலையின் அடிப்படையான பிரச்சினைகளை பற்றி தனது நிலைபாட்டை தெரிவிப்பதை கைவிட்டுவிட்டு, அதையும் இதையும் பேசி மக்களை ஏமாற்றும் வேலையை மேற்கொள்வதை தி.மு.க இனியாவது கைவிட வேண்டும்.

1989-ஜனவரி சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கூடங்குளம் அணு உலை கட்டப்படுவதை எதிர்ப்போம் எனத் தெரிவித்து விட்டு; ஆட்சிக்கு வந்தவுடன், 1989-மே 1 ஆம் நாள் கன்னியாகுமரியில் நடந்த கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு பேரணியில் துப்பாக்கி சூட்டை நடத்தி போராட்டத்தை முடக்கப் பார்த்தது.

இப்படி ஆட்சியில் இல்லாமல் இருந்தால் ஒன்று, ஆட்சிக்கு வந்து விட்டால் வேறொன்று என கபடத்தனத்தை கையாளும் தி.மு.க இப்போது சட்டமன்ற தேர்தல் காலத்தில் வழக்கம்போலவே கபட நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.

கட்ந்த ஐந்து ஆண்டுகாலமாக தேச துரோகம்- அரசுக்கு எதிரான யுத்தம்- குண்டர் சட்டம் என எண்ணற்ற வழக்கில் கூடன்குளம் பகுதி மக்கள் சிறைபடுத்தப்பட்ட போது, பொய் வழக்கிற்க்காக ஒரு துரும்பையும் கூட எடுத்துப் போடாத திமுக வினர், இப்போது போராட்டக்கார்கள் மீதான வழக்கை திரும்பப் பெறுவோம் என தி.மு.க தேர்தல் அறிக்கையில் கூறுவது என்பதும், கூடங்குளம் பகுதியில் வேலைவாய்ப்பை உருவாக்குவோம் என்பதும் கூட ஒரு கபட நாடகமாகவே நாம் கருத வேண்டி உள்ளது.

தி.மு.க., தலைமை தன் தலை மீது தொங்கும் கத்தியாக எப்போதும் உள்ள ஊழல் வழக்குகளுக்காவும், தனது கும்பலின் கொள்ளைகள் வெளிவராமல் தடுக்கும் விதமாகவும், எவ்வித தொந்தரவின்றி கொள்ளைகள் தொடரும் விதமாகவும், தொடர்ந்து டெல்லியில் ஆளும் இந்திய அரசின் தவறான கொள்கைகளை எதிர்ப்பது என்பது இல்லை. தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும்-பாதிக்கும் பிரச்சினை, ஈழப்பிரச்சினை, காவிரி ஒப்பந்தம் முதல் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு அனுமதி வரை பலவற்றில் கள்ளமெளனம் சாதித்தும், டெல்லியில் எந்தக் கட்சி ஆண்டாளும் ஆளும் இந்திய அரசை ஆதரித்து நிற்பது என்பதுமே கடந்த 40 ஆண்டுகளாக தி.மு.க., மேற்கொண்டு வரும் தமிழர்விரோத அணுகுமுறையாகும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் (2011-2016), தமிழகத்தில் நடந்த அணு உலை எதிர்ப்பு, நியூட்ரினோ எதிர்ப்பு, மீத்தேன் எதிர்ப்பு, கவுந்தி வேடியப்பன்மலை வெட்ட எதிர்ப்பு, பெருந்துரை கொக்கோ-கோலா ஆலைக்கு எதிர்ப்பு, திருச்சி சூரியூர் பெப்சி ஆலைக்கு எதிர்ப்பு, நெல்லை-கங்கை கொண்டான் பெப்சி ஆலைக்கு எதிர்ப்பு போராட்டங்கள்; முல்லைப் பெரியாறு, காவிரியின் குறுக்கே மேகதாது-ராசிமணல் ஆகிய இடங்களில் அணை கட்டும் பிரச்சிணை, தாதுமணல் கொள்ளை, மதுரை கிரானைட் கொள்ளை, திருவைகுண்டத்தில் தூர்வாருகிறோம் என்ற பெயரில் ஆற்றுமணல் கொள்ளை, கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பிரச்சினை என ஏதாவது ஒரு பிரச்சினையில் எங்காவது தி.மு.க கட்சியே தனியாக ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளதா? மக்கள் தொடர்ந்து போராடினால் வேறுவழியின்றி சிலவற்றை ஆதரித்து அறிக்கை கொடுப்பது, ஆளும் அஇஅதிமுக வை எதிர்ப்பதற்காக மக்களிடம் தனிமைப் பட்டுவிடக் கூடாது என்பதற்காக சில போராட்டங்களில் உள்ளூர்கட்சிகாரர்கள் பங்கேற்பது என்பதுதான் உள்ளதே தவிர வேறில்லை என்பதுதான் உண்மை நிலை.

தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும், பாதிக்கும் பிரச்சினைகளில் தொலைநோக்கு வகையில் எவ்விதமான புரிதலும், அக்கறையும் இல்லாத தி.மு.க. கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூடங்குளம் அணு உலை பற்றிய நாடகம் வழக்கம் போலவே பழைய வசனத்தின் புதிய வீர ஆவேசத்துடன் வந்துள்ளது..

இப்போதாவது, தி.மு.க. தனது தனது தேர்தல் அறிக்கையில் கூடங்குளம் அணு உலையில் நிலவும் அனைத்து பிரச்சினைகளிலும் நேர்மையான அணுகுமுறையை கையாள வேண்டும் என நாம் விரும்புகிறோம்.

ஆனால் “நாய் வாலை நிமிர்த்த முடியுமா? திமுக வை மாற்ற முடியுமா?”

முகிலன் , கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு சுற்றுசூழல் பாதுகாப்பு இயக்கம் , சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு இயக்கம்.

முகப்புப் படம்: K. S. Harikrishnan

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.