வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வந்த நிவாரணப் பொருட்களில் அதிமுகவினர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் படம் போட்ட ‘அம்மா ஸ்டிக்க’ரை ஒட்டியதுபோல், கடும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிர மாநிலத்தின் லத்தூர் பகுதிக்கு சிறப்பு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.  இந்த ரயிலில் பாஜகவின் முதலமைச்சர் ஃபட்னாவிஸ் படம் போட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. இது கடும் கண்டனங்களை எழுப்பியுள்ளது. மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், தனது முகநூல் பதிவில்,
“ஆறு மாதங்களுக்கு முன் சென்னையை வெள்ளம் சூறையாடியபோது, நாடெங்கிலும் இருந்து நிவாரணப் பொருட்கள் குவிந்தன. இந்த நிவாரணப் பொருட்களில் ஜெயலலிதா ஸ்டிக்கர்களை, தொண்டர்படையினர் ஒட்டினர், சில சமயம் கட்டாயப்படுத்தி ஒட்டினர்.
நமது அரசியலாளர்கள், பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவது குறித்து பெரிதாக கவலைப்படுவதில்லை. உணர்வில்லாத நமது அரசியலாளர்களின் செயல்பாடு, மனிதத்தின் மீதான அவமானம்.

இதேபோன்ற உணர்வற்ற தன்மையைத்தான் ஃபட்னாவிஸ் தொண்டர்படை செய்திருக்கிறது. தங்களுடைய படத்தை ஒட்டும் சந்தர்ப்பத்துக்காக அவர்கள் காத்திருந்தது போல இருக்கிறது. தாங்கள் சாந்திருக்கும் பாஜகவுக்கும் சேர்த்து தேசத்துக்கு சொந்தமான ரயிலை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களை தங்களுடைய அரசியலுக்காக பயன்படுத்தும் மோசடியாளர்கள் இவர்கள்.
வெள்ளத்துக்கும் வறட்சிக்கும்  கொள்கைகளை மாற்றுவதுதான் நிரந்தர தீர்வு. திட்டமிடாத நகரமயமாக்கல் பற்றியும் வேளாண்  கொள்கைகளையும் நாம் நிச்சயம் மாற்றி யோசித்தாக வேண்டும்”.