இலக்கியம் வாழ்வியல்

புத்தகங்கள் என்ன செய்யும்?: எழுத்தாளர் நந்தன் ஸ்ரீதரன்

நந்தன் ஸ்ரீதரன்
நந்தன் ஸ்ரீதர்
நந்தன் ஸ்ரீதரன்

ஒரு மனிதனுக்கு இந்த புத்தகங்கள் என்ன செய்யும்.. ஆஃப்டர் ஆல் வெறும் காகிதங்களால் ஆன பக்கங்களில் காரீய எழுத்துகள் என்னதான் செய்து விட முடியும் என்பது நிறைய பேர் மனதில் உள்ள கேள்வி..

புத்தகங்கள் என் வாழ்வின் ஒரு பகுதியை ஆற்றுப் படுத்தியுள்ளன. புத்தகங்கள் எனக்கு எப்போதோ ஒரு நம்பிக்கையைக் கொடுத்துள்ளன..

ரொம்ப தனியான பையனாக வளர்ந்தேன். மனதில் நினைப்பதை வெளியில் சொன்னால் எப்போது அடி விழும் என்று தெரியாது. அதனாலேயே நினைப்பவற்றை மூடி மறைத்தே வாழ்ந்த வாழ்வு.. அப்போதெல்லாம் புத்தகங்கள்தான் ஆறுதல்..

அத்தை வீட்டில் திண்டுக்கல் ஆத்தூரில் இரண்டாம் வகுப்பு படிக்கப் போடப் பட்டேன். அப்போது எட்டாம் வகுப்பு படித்த என் அத்தான் (அத்தைமகன்) காமிக்ஸ் விரும்பிப் படிப்பார்.. அவரது நண்பர்களிடம் சென்று காமிக்ஸ் புத்தகங்கள் இரவல் வாங்கி வரச் சொல்லுவார்.. அத்தை வீட்டுக்கும் அந்த காமிக்ஸ் அருளும் புண்ணியவான் வீட்டுக்கும் குறைந்த தொலைவுதான். ஆனாலும் நான் அதைப் படித்தபடியே வீட்டுக்கு மெல்ல்ல்ல்ல நடந்து வருவேன்..

அப்படித்தான் அறிமுகம் ஆனார்கள் இரும்புக்கை மாயாவி., மந்திரவாதி மாண்ட்ரேக், ரிப் கெர்பி, வேதாளம் எல்லோரும்.. இதில் வேதாளத்தின் நாய் டெவில் எப்போதும் எனக்குப் பிரியமான ஒன்று..

அப்புறம் அத்தான் தமிழ்வாணன் கதைகளை லைப்ரரியில் இருந்து எடுத்து வந்து படிப்பார். பாடப் புத்தகம் கவிர மற்றவற்றைப் படிக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு. நான் அவற்றை தொட்டேனென்றால் அவ்வளவுதான்..

மிஷன் இம்பாசிபிளில் டாம் குரூஸ் செய்யும் சாகசங்களுக்கு இணையாக சாகசம்செய்து புத்தகங்கள் படிக்க வேண்டும்.. படித்தேன்..

அப்புறம் மூன்றாம் வகுப்புக்கு பட்டுக்கோட்டை அருகிலிருந்த நம்பிவயல்.. சித்தப்பா வீடு.. அவர் வாத்தியார். ஆதலால் வீட்டில் பாடப்புத்தகங்கள் தவிர வேறேதும் இருக்காது.. இப்படியாக நான்கு ஐந்து கடந்து ஆறாம் வகுப்புக்கு சின்னமனூரில் கொள்ளுப்பாட்டி வீட்டுக்குப் படிக்க வந்தேன்..

பாட்டிக்கு நான் படிக்கிறேனா இல்லையா.. என்ன படிக்கிறேன்.. என்பது பற்றிய எந்த கவலைகளும் இல்லை.. சரியான நேரத்துக்கு சாப்பிட்டேனா என்பது மட்டும் போதும்.. எப்போதாவது சினிமாவுக்குப் போகக் கூட காசு கொடுப்பாள்..

சின்னமனூரில் இரண்டு அதிசயங்கள் நிகழ்ந்தன..

ஒன்று நான் எவ்வளவு சுதந்திரமாக வேண்டுமானாலும் வீட்டை விட்டு வெளியில் சுற்றலாம். சாப்பாட்டு நேரத்துக்கு வீட்டில் இருந்துவிட்டால் எல்லாம் சுகமே.. இரண்டாவது அக்ரஹாரத்தில் நிறைய வீடுகளில் நிறைய வாரப் புத்தகங்கள் வாஙகினார்கள்.. பதினோரு வயதுப் பையன் என்பதால் எந்த வீட்டுக்குள்ளும் போய் எதை வேண்டுமானாலும் படிக்கலாம்..

அப்பாவோ சித்தப்பாவோ அத்தையோ கண்காணிக்க இல்லை என்பதால் எனக்கு அத்தனை குதூகலம்.. யார் வீட்டில் என்ன வாராந்தரி வாங்குவார்கள் என்பது தெரியும். அதனால் அந்தந்த வீடுகளில் அந்தந்த கிழமைகளில் பள்ளி விட்டதும் போய் நின்று விடுவேன்.. ஏய் ஶ்ரீதர் வந்திருக்கான். விகடனை எடுத்துக் குடு.. குமுதத்தை எடுத்துக் குடு.. இதயத்தை எடுத்துக் குடு என்று பெரிய மனதோடு பெரியவர்கள் சொல்லி விடுவார்கள். நான் அமைதியாக ஒரு ஓரத்தில் அமர்ந்து அந்த புத்தகங்களைப் படித்துவிட்டு புறப்பட்டு விடுவேன்..

அப்புறம் கோபால் மாமா வீடு. அவர் வாத்தியார். ஆனால் பத்திரிக்கைகளில் வந்த தொடர்களை தனியாக பைண்டிங் செய்து வைத்திருப்பார்.. ரொம்ப பழைய வாசனையோடு இருக்கும் புத்தகங்கள்.. அங்கே அந்த பைண்டிங் புத்தகங்களை எடுத்துப் படித்தபடிஇருப்பேன்.. அப்போதுதான் அகிலனின் நாவல்களும் கல்கியின்நாவல்களும் அறிமுகம்.. ஆறாம்வகுப்பில் பொன்னியின் செல்வன் அனைத்து பாகங்களையும் படித்து முடித்து விட்டேன்..

ஏழாம் வகுப்புக்கு வாழ்வில் முதல் முறையாக அப்பா அமமாவோடு இருக்கும் பாக்கியம்.. சுருளியாறு நீர் மின் நிலையத்தில் அப்பாவுக்கு வேலை. மின் பணியாளர்கள் குவார்ட்டர்சில் குடியிருப்பு.. பேருக்கு ஒரு புத்தகம் கூட கிடைக்காத ஊர்..

அங்கேதான் காடுகளின் அறிமுகம்.. அச்சமின்றி காடுகளில் சுற்றித் திரிந்த காலங்கள் அவைதான்..

அப்புறம் எட்டாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு என்று சின்னமனூருக்கு பெயர்ந்து விட்டேன்.. இப்போது எப்படி திருட்டுத்தனமாக புத்தகங்கள் படிப்பது என்பதும்தெரிந்து விட்டது. லைப்ரரிக்கு போவது எப்படி என்பதும் லைப்ரரி கார்டு வைத்திருக்கும் நண்பர்களின் அறிமுகமும் கிடைத்ததில் புத்தகங்களாக படித்துத் தள்ளினேன்..

பத்தாம் வகுப்பு வருவதற்கு முன் சுஜாதா பாலகுமாரன்கள் முழுதும் முடித்து விட்டு இலக்கியம் பக்கம் திரும்பி இருந்தேன். பாலகுமாரனில் துவங்கி அன்றைய சமகால இலக்கியவாதிகளின் அனைத்து படைப்புகளையும் படிக்க ஆரம்பித்திருந்தேன்.. ப்ளஸ்டூவுக்குள் லாசலா மௌனி எல்லாம் வாசித்துத் தெளிந்தாகிவிட்டது..

இந்த வரலாற்றை சொல்ல ஆரம்பித்தால் அது வளர்ந்து கொண்டேதான் போகும்..

மொத்தத்தில் புத்தகங்கள்தான் மிகத் தனியாக இருந்த என்னை ஆற்றுப் படுத்தின.. அம்மாவின் வாசனையும் புத்தகங்களின் வாசனையும் பிரித்தறிய முடியாதபடி எனக்குள் கலந்திருக்கின்றன..

குழந்தைகள் ஏன் புத்தகங்களைப் படிக்க வேண்டும் என்று எப்படி விளக்குவது என்று எனக்குப் புரியவில்லை.. ஆனாலும் ஒவ்வொருவரும் புத்தகங்களை வாசித்தே ஆக வேண்டும். அது நம் மானுட வாழ்வின் நிரப்பப்படாத பக்கங்களை நிரப்பும்.. நம் வாழ்வை நமக்குள் நொதிக்க வைத்து நம்மிலிருந்து புதிய கற்பனைகளை அவையே தோற்றுவிக்கும்..

நாற்பதைக் கடந்தவர்களுக்கு புத்தகம் படிப்பது ஒரு Himalayan task மாதிரி தோன்றும். அதிலும் இந்த இன்டர்நெட் யுகத்தில் காகிதப் பக்கங்களில் அச்சடிக்கப் பட்டவற்றை வாசிக்க பெரும சோம்பலாகத்தான் இருக்கிறது..

ஆயினும் புத்தகங்கள்தான் எனக்கு உயிர் கொடுத்தன. புத்தகங்கள்தான் என் வாழ்வின் அவநம்பிக்கைகளில் இருந்து என்னைக் காப்பாற்றின.. புத்தகங்கள்தான் எனக்கு நிறைய நல்ல நண்பர்களைக் கொடுத்தன..

புத்தகங்கள் வெறும் புத்தகங்கள் இல்லை. அவை நமக்கு வேறு வேறு உலகங்களை அருளும் தேவதைகள்..

வாங்கி வைத்து வாசிக்க முடியாமல் குவிந்திருக்கும் புத்தகங்கள் என் முகத்தின் மீது காறித் துப்பியபடி இருக்கின்றன. என் குற்றவுணர்வை அறியாமல் எனது உதவியாளன் மணி தினந்தோறும் புத்தகங்களை எடுத்தெடுத்து வாசித்துக் கொண்டே இருக்கிறான்.. அதைப் பார்க்கப் பார்க்க எனக்கு அப்படியே பொங்கிக் கொண்டு வருகிறது..

புத்தகங்களால் உயிர் பெற்ற ஒருவன் புத்தகங்களை வாசிக்கவே முடியாத மன நிலைக்குப் போனது உண்மையிலேயே வாழ்வின் நகை முரண்களில் ஒன்றுதான்..

இன்று உலக புத்தக தினம்..

வழமை போல தாமதமாக இடுகை இடுகிறேன்.. இருந்தாலும் நேசிக்கும் புத்தகங்களுக்காக குறைந்த பட்சம் நான் ஓர் இடுகையாவது இட்டுவிட்டேன் என்பது மனசுக்கு நிறைவாகவும் நிம்மதியாகவும்இருக்கிறது..

நண்பர்களுக்கு உலக புத்தக நாள் வாழ்த்துகள்..

நந்தன் ஸ்ரீதரனின் சமீபத்திய நூல், ஆயிரம் நீர்க் கால்கள் (கவிதைத் தொகுப்பு)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.