தமிழகத்தின் சரவணா ஸ்டோர்ஸ், போத்தீஸ் போன்ற விற்பனை நிறுவனங்களில் அடிப்படையான எவ்வித உரிமைகளும் கிடைக்கப் பெறாமல் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் வதைபடுகிறார்கள். சம்பளம், வேலை நேரம் உள்ளிட்ட விஷயங்களில் இதுபோன்ற நிறுவனங்கள் எவ்வித ஒழுங்கையும் பேணுவதில்லை. கொத்தடிமைகளைப் போலவே தங்களுடைய ஊழியர்களை வைத்திருக்கின்றன. தொழிலாளர்கள் ஒன்றுபட்டு போராடாடுவதன் மூலமே இத்தகைய ஒடுக்குமுறைகளை சுரண்டல்களை ஒழிக்க முடியும் என நிரூபித்த கேரள கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவன ஊழியர்கள் போராடி பெற்ற வெற்றியை உதாரணமாகக் கொள்ள வேண்டும்.

கேரளத்தில் முன்னணி வணிக நிறுவனமாக கல்யாண் குழுமம் கல்யாண் ஜுவல்லர்ஸ்,  கல்யாண் சாரீஸ் என்ற பெயரில் பல ஊர்களில் கடைகளை நடத்தி வருகிறது. இங்கே பணியாற்றும் பெண்களுக்கு சரியான கழிப்பிட வசதியைக் கூட இந்நிறுவனம் செய்து தரவில்லை. சிறுநீர் கழிக்கக் கூட தங்களுக்கு மேலுள்ள கண்காணிப்பாளரிடம் சொல்லிவிட்டு செல்ல வேண்டிய நிலை. அவர்களிடம் சொல்லும்போது பல சமயங்களில் “ட்யூப்பை புடவைக்குள்ள சொருகி வெச்சிக்கலாம் இல்ல” என்பது போன்ற கீழ்த்தரமான பேச்சுக்களையும் விற்பனை பிரதிநிதிகளாக பணியாற்றிய பெண்கள்  அனுபவித்துள்ளனர்.  கழிவறை வாசல்களில் கூட கேமராக்கள் பொருத்தி சதா கண்காணிப்பிலே ஊழியர்களை வைத்திருக்கின்றனர்.  12 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை வாங்கிக் கொண்டு ஊதியம் ரூ. 4 ஆயிரத்திலிருந்து ரூ. 5 ஆயிரம் வரை மட்டுமே வழங்கியிருக்கின்றனர். எல்லா நிறுவனங்களிலும் இந்த பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் கல்யாண் ஊழியர்கள் இவற்றை முடிவுக்கு கொண்டுவர நினைத்தனர்.  2015-ஆம் ஆண்டும் ஜனவரி 4-ம் நாள் ‘அமர்வு போராட்ட’த்தை சில பெண்கள் இணைந்து நடத்தினர்.

kalyan jewls

திரூச்சூர் மாவட்ட  Kovilakathumpadam என்ற ஊரில் இருக்கும் கல்யாண் சாரீஸ் நிறுவன ஊழியர்கள் எஸ்.கே. பத்மினி, பி. மாயாதேவி, தேவி ரவி, ரஞ்சனி தாசன், அல்போன்சா தாசன், பீனா சோஜன் ஆகியோர் முறைசாரா தொழிலாளர் சங்கம் என்ற அமைப்பின் கீழ் 100 நாட்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினர்.

ஆரம்பத்தில் கல்யாண் நிறுவனம், “எங்களுடைய ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் கழிவறைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதிகப்படியான வசதிகளைத் தருவதால்தான் இவர்கள் போராடுகிறார் போலும்” என பேசியது. இதே நிறுவனம்தான் மகாராணி போல அலங்கரிக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய்க்கு ஒரு அடிமைச் சிறுவன் சாமரம் வீசுவதுபோல விளம்பரத்தை வடிவமைத்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. தொழிலாளர்களை கீழ்மையாக நசுக்கும் அதை பெருமிதமாக நினைக்கும் மனநிலைதான் இத்தகைய விளம்பரத்தை எடுத்திருக்க முடியும்.

இந்நிலையில் பெண் தொழிலாளர்கள் இடைவிடாத போராட்டத்தின் விளைவாக 100 நாட்களுக்குப் பிறகு ஏப்ரல் 15-ஆம் நாள், தொழிலாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. போராட்ட காலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை இடமாற்றம் செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அது ரத்து செய்யப்பட்டது. 100 நாட்களுக்குமான ஊதியம் வழங்கப்பட்டது. விற்பனை பிரதிநிதிகள் அமர இருக்கைகள் வழங்கப்பட்டன. வேலை நேரம் நிர்ணயிக்கப்பட்டது. பி எஃப் பிடித்தம் செய்யப்பட்டது. ஊதிய கணக்கு சரியான வழங்கப்பட்டது.

இத்தனையையும் சாத்தியப்படுத்தியது, இந்தப் பெண்களின் தொடர் போராட்டமே! இத்தகைய போராட்டமும் முன்னெடுப்பும் தமிழகத்தில் ஏன் சாத்தியமாகவில்லை? போராட்டங்கள் கண்டு நாம் ஏன் அஞ்சுகிறோம்? மே தினத்தில் சிந்திப்போம்.