சினிமா பொழுதுபோக்கு

தரமணி என்னமாதிரியான படம்? இயக்குநர் ராம்

ராமின் மரமேசையிலிருந்து…

ram

தரமணி. என்னுடைய மூன்றாவது படம்.
முழுக்க, முழுக்க காதலால் நிறைந்த என்னுடைய முதல் படம். காதலுக்கே உரிய கவிதை உண்டு. வயதைப் பொருட்படுத்தாத மாபெரும் இளமை உண்டு. அடிக்கடலில் நீச்சலிடும் சாகசம் உண்டு. மலையில் இருந்து குதிக்கும் பைத்தியக்காரத்தனமும் உண்டு. அரவணைப்பும் உண்டு, அரக்கத்தனமான சண்டையும் உண்டு. அறம் தாண்டும் இச்சையும் உண்டு, பெரும் வன்மமும் உண்டு. புத்துயிர்த்தலும் உண்டு, ஆண் –பெண் உறவின் அனைத்து சிக்கலும் உண்டு. கடலினும் பெரிய காதலை இப்படி எல்லா வகையிலும் இந்த ஒரு கதைக்குள் முடிந்த வரை நிஜமாக வைத்திருக்கிறேன். அந்த நிஜம் உங்களுக்கு கொண்டாட்டத்தைக் கொடுக்கும். அந்த நிஜம் உங்களைக் காதல் வயப்படுத்தும். அந்த நிஜம் உங்களை பயமுறுத்தும்.

ஒரு வரியில் சொல்வதாக இருந்தால், அந்த நிஜம் உங்களை நீங்கள் காதல் கொண்டவரிடம் மன்னிப்புக் கேட்கச் சொல்லும், மன்றாடச் சொல்லும், முத்தம் கொடுக்கச் சொல்லும், கட்டிப்பிடித்துக் காமத்தைக் கடந்து போகச் சொல்லும். இதுவே தரமணி.

ஆண்ட்ரியா ஜெர்மியா என்பவர் ஓர் அபாரமான நடிகை. தமிழை, தமிழாகவே பேசத் தெரிந்த வெகு சொற்பக் கதாநாயகிகளில் ஒருவர் என்பதை எனக்குத் தரமணி அடையாளம் காட்டியது. கற்றது தமிழ் ஆனந்தி, அபூர்வ செளம்யாவாக தரமணி படத்தளத்தில் மீண்டும் ஒருமுறை எங்களைப் பரவசப்படுத்தினார். பெரும் தாடியோடும், நல்ல உயரத்தோடும் அடர்ந்த குரலோடும் அறிமுகமாகிறார் வசந்த் ரவி.

அடங்க மறுக்கிற ஓர் நேர்மையான அரேபியக் குதிரையாய் ஆண்ட்ரியாவும், அந்தக் குதிரையில் பயணம் செய்யத் தவிக்கிற சராசரிகள் நிறைந்த ஒரு நோஞ்சான் வீரனாய் வசந்த் ரவியும், உங்களை சிரிக்க வைப்பார்கள், ஆட வைப்பார்கள், அதிர வைப்பார்கள், பெரும் பிரியம் கொள்ளவைப்பார்கள்.

அழகர்சாமியின் குதிரைக்கு ஒளிப்பதிவு செய்த தேனி ஈஸ்வர் ஆண்ட்ரியாவின் கவர்ச்சியையும், தரமணியின் நவீனத்தையும் அலெக்ஸாவில் வேறொரு பாணியில் படம்பிடித்து இருக்கிறார். தரமணி, இந்தியாவின் மிக முக்கியமான ஒளிப்பதிவாளராக அவரை மாற்றும் என நான் மிக உறுதியாக நம்புகிறேன். கேட்கும் போதெல்லாம் கடனும், பாடலும் கொடுக்கிற நண்பன் நா.முத்துக்குமார் இந்த முறையும் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் எல்லாம் ரூம் போடாமல், விருகம்பாக்கம் ரோட்டு டீக்கடையில் அமர்ந்தே பாடல்களை எழுதிக் கொடுத்தார்.

புது மகளுக்கு அப்பாவான யுவன் சங்கர் ராஜா, முன்பைவிட அதீத அன்போடு தரமணிக்கு இசை அமைக்கிறார். குமார் கங்கப்பன் என்கிற என்னுடைய நண்பர், தங்கமீன்களில் கலை உதவி இயக்குநராக பணியாற்றியவர், தரமணியில் கலை இயக்குனராக படத்தை மெருகேற்றினார். என்னை எப்போதும் ஒரு திரைப்பட மாணவனாகவே வைத்திருக்கும் ஸ்ரீகர் பிரசாத் சார் இந்த படத்தையும் தொகுத்திருக்கிறார். தங்கமீன்களின் எழுத்துருவை வடிவமைத்த, வருங்கால இயக்குநரான நந்தன் ஜீவா தரமணியின் விளம்பர வடிவமைப்பையும், வண்ணத்தையும் உருவாக்குகிறார். தங்கமீன்களின் வெற்றிக்கு மிக முக்கியமான மனிதராக இருந்த ஜெ சதீஷ்குமார், தன்னுடைய JSK FILM CORPORATION மூலமாக தரமணியைத் தயாரிக்கிறார்.

எல்லா நாட்களும், எந்த விடுமுறையும் இன்றி என்னுடனேயே இருக்கும் என் உதவி இயக்குநர்கள் இன்றி தரமணியின் எந்த ஒரு ஷாட்டும் வாய்த்திருக்காது.

நீண்ட இடைவெளிகளுக்குள் என் திரைப்படங்கள் மாட்டிக்கொண்டாலும் எனக்கு உற்சாகத்தைத் தருகிற ஊடகவியலாளர்களும், ஊடகங்களும் இல்லாமல் என்னால் இயங்க முடியாது. அவர்களுக்கு என்னுடைய நன்றிகள்.

இவை எல்லாவற்றிற்க்கும் மேலாக கலையின் ரசிகர்களாக நீங்கள் தரும் தெம்பிற்கு நான் பெரிதும் கடமைப்பட்டவன்.

பிரியங்களுடன்,
ராம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: