“மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) ஓராண்டுக்கு ஒத்திவைத்து அவசர சட்டம் பிறப்பிக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக நேற்று செய்திகள் வெளியாயின. ஆனால், அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா கூறியிருக்கிறார். பொது நுழைவுத் தேர்வு குறித்த மாணவர்களின் கவலையை போக்குவதற்கு பதிலாக அவர்களை மத்திய அரசு மேலும் மேலும் குழப்பத்தில் ஆழ்த்துவது சரியல்ல” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதென்பது கொள்கை அளவில் சரியானது போல தோன்றினாலும் அதற்கேற்ற காலம் இன்னும் கனியவில்லை என்பது தான் உண்மை. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு முறையான கல்வித்திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளிக்கும் கல்வித் தரம் மாறுபடுகிறது. மாநிலத் தலைநகரங்களில் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளில் வேறு எந்த சுமையும் இல்லாமல் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வரும் நிலையில், கிராமப்புறங்களில் எந்தவித அடிப்படைக் கட்டமைப்பும் இல்லாத அரசு பள்ளிகளில், வறுமை காரணமாக குடும்பப் பணிகளை செய்து கொண்டே லட்சக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் பலர் 12-ஆம் வகுப்புப் பாடங்களில், மருத்துவப் படிப்பில் சேரும் அளவுக்கு மதிப்பெண் பெறும் போதிலும், மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் வசதி படைத்த நகர்ப்புற மாணவர்களுடன் போட்டி போட்டு வெல்வது மிகவும் கடினமாகும். நகர்ப்புறங்களில் இருப்பது போன்ற நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் கிராமப்புறங்களில் இல்லை என்பதும், அப்படியே இருந்தாலும் அதில் பணம் செலுத்தி படிக்கும் அளவுக்கு ஊரக மாணவர்களின் பொருளாதாரம் இடம் கொடுக்காது என்பதும் தான் இதற்கு காரணங்கள் ஆகும்.
இந்தியா முழுவதும் தரமான, சமச்சீரான கல்வி வழங்கப்படுவது உறுதி செய்யப்படும் வரை பொது நுழைவுத் தேர்வு என்ற தத்துவம் நடைமுறைக்கு சாத்தியமாகாது. பணக்காரர்களுக்கு தரமான கல்வி, ஏழைகளுக்கு தரமற்ற கல்வி வழங்கப்படும் சூழல் தொடரும் நிலையில் அனைவரும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்பது மிகப்பெரிய சமூக அநீதியாகும். இது ஊரக மாணவர்களின் மருத்துவப் படிப்பு வாய்ப்புகளை முற்றிலுமாக பறித்து விடும். இதற்கு ஏராளமான உதாரணங்களைக் கூற முடியும். தமிழ்நாட்டில் 1984ஆம் ஆண்டு தொடங்கி 2006 ஆம் ஆண்டு வரை மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. இந்தக் காலக்கட்டத்தில், கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களால் 10 முதல் 15 விழுக்காடு இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்றத்திலும், நீதிமன்றத்திலும் நடத்திய போராட்டங்களின் பயனாக, 2006 ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டப் பிறகு மருத்துவப் படிப்புகளில் சேரும் கிராமப்புற, ஏழை மாணவர்களின் அளவு 65 முதல் 70 விழுக்காடாக உயர்ந்தது. இந்த நிலை தொடர வேண்டுமானால் மருத்துவப்படிப்புக்கு பொது நுழைவுத் தேர்வு தேவையற்றது என்பதை மத்திய அரசு உணர வேண்டும்.
அதுமட்டுமின்றி, மருத்துவக் கல்வி என்பது பொதுப்பட்டியலில் உள்ள துறையாகும். இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் உரிமை மத்திய அரசு, மாநில அரசு ஆகிய இரண்டுக்கும் உண்டு. ஒரு மாநிலத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் அந்த மாநில அரசின் நிதியில் அமைக்கப்படுகின்றன. அவ்வாறு இருக்கும் போது அக்கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை முறையை மத்திய அரசு தான் தீர்மானிக்கும் என்பது மாநில அரசின் உரிமைகளில் தலையிடும் செயலாகவே இருக்கும். இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தால் வரையறுக்கப்பட்டிருக்கும் மத்திய & மாநில அரசுகளின் அதிகார வரம்பை மீறுவதாக அமையும். எனவே, மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள், தனியார் மருத்துவக் கல்லூரிகளிலுள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவற்றின் மாணவர் சேர்க்கை முறையை மாநில அரசுகளே தீர்மானிப்பது உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில் நாடு முழுவதுமுள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு நடத்தும் திட்டத்தை இந்தாண்டுக்கு மட்டுமின்றி நிரந்தரமாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.
அதேநேரத்தில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கீடு செய்யப்படும் 15% இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள், தனியார் மருத்துவ நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலுள்ள இடங்கள் ஆகியவற்றுக்கு தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தலாம். இதன் மூலம் மருத்துவக் கல்வி கல்வி வணிகமாக்கப்படுவதை தடுக்கலாம். இதற்கேற்ற சட்டங்களை மத்திய அரசு இயற்ற வேண்டும். இதற்கான அறிவிப்பை உடனடியாக வெளியிட்டும், இடைக்கால ஏற்பாடாக மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கான அவசர சட்டத்தை பிறப்பித்தும் மாணவர்களின் குழப்பத்தை அரசு தீர்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.