செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் விசுவநாதன் கொலையின் பின்னணி: உண்மை அறியும் குழு அறிக்கை

உண்மை அறியும் குழு அறிக்கை
தருமபுரி, ஜூன் 06, 2016
உறுப்பினர்கள்
பேரா. அ.மார்க்ஸ், தலைவர், தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு (Chair Person, National Confederation of Human Rights Organisations- NCHRO), சென்னைஅரங்க குணசேகரன், தலைவர், தமிழக மக்கள் முன்னணி, ஓட்டங்காடு, வழக்குரைஞர் அரிபாபு, குடியுரிமைப் பாதுகாப்பு நடுவம் (CPCLC), சேலம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி லக்‌ஷ்மண் ராஜ் (மறைவு) – தனம்மாள் தம்பதிக்கு நான்கு ஆண் மகன்கள், இரண்டு பெண்கள் என ஆறு பிள்ளைகள். ஆண்மக்கள் இருவர் சுமார் மூன்றாண்டு இடைவெளிகளில் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். முன்னதாக மார்ச் 18, 2013 அன்று கொல்லப்பட்ட பாஸ்கரன் சி.பி ஐ (எம் எல்) கட்சியில் பொறுப்பில் இருந்தவர். சென்ற மே 18 அன்று கொல்லப்பட்ட விசுவநாதன் (58) ஒரு சி.பி.ஐ (எம்.எல்) கட்சி அநுதாபி. அக் கட்சியின் தொழிற்சங்க அமைப்பிலும் மாவட்டப் பொறுப்பில் இருந்தவர். இந்தக் கொலைகளைச் செய்ததாகச் சிலர் ஒத்துக் கொண்டு கைது செய்யப்பட்டுள்ள போதும் உண்மையில் இவற்றிற்குப் பின்னணியாக இருக்கும் சக்திகள் குறித்த ஐயமும், இங்குள்ள கனிமக் கொள்ளை மாஃபியாவுக்கும் இந்த இரு கொலைகள் மற்றும் இதர சிலக் கொலைகளுடன் தொடர்பிருக்கலாம் என்கிற ஐயமும் இங்கு சமூக உணர்வுள்ள சிலரால் முன்வைக்கப்பட்டு வருவதை அறிந்த மேற்குறிப்பிட்ட இக் குழு உறுப்பினர்களாகிய நாங்கள் இது குறித்த உண்மைகளை அறியும் முகமாகக் கடந்த ஜூன் 4,5,6 தேதிகளில் தர்மபுரி நகரம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம், ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை முதலான பகுதிகளுக்குச் சென்று விசுவநாதனின் அன்னை தனம்மாள், அக்கா உஷாராணி, அக்கா மகன் ஆனந்தகுமார், விசுவநாதன் கொலை குறித்த புகாரை கெலமங்கலம் காவல் நிலையத்தில் தந்துள்ள இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவரும், விசுவநாதனின் நண்பருமான மோகன் ஆகியோரைச் சந்தித்து விரிவாகப் பேசி விவரங்களைத் தொகுத்துக் கொண்டோம்.
இப்பகுதியில் நடைபெறும் கனிமவளக் கொள்ளை குறித்துத் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருபவரும், இந்தக் கொலைக்கும் அதற்கும் உள்ள தொடர்பு குறித்துப் புகார் அளித்துள்ளவருமான சமூக ஆர்வலர் அரூர் வேடியப்பன் ஒரு நாள் முழுவதும் எங்களுடன் இருந்து பல தகவல்களைச் சொன்னார். கூலிப் படையினரால் தாக்கப்பட்டுப் படு காயங்களுடன் தப்பி வாழ்ந்து வருபவர்களும் முன்னாள் சி.பி.ஐ கட்சி உறுப்பினர்களுமான தாசரப்பள்ளி நாகராஜ ரெட்டி, திம்மாரெட்டி ஆகியோரையும் வேடியப்பன் தந்த தகவல்களின் அடிப்படையில் சந்தித்தோம். கெலமங்கலம் காவல் நிலையத்தில் நிலைய அதிகாரியாக உள்ள ஆனந்தனைச் சந்தித்து வழக்கு விவரங்களை அறிந்தோம்.
தேன்கனிக்கோட்டை காவல் உதவிக் கண்காணிப்பாளர் சௌந்தர்ராஜனுடன் தொலை பேசி தகவல்களைப் பெற்றுக் கொண்டோம். விசுவநாதன் கொலை குறித்த விசாரனை அதிகாரியான ஷண்முகசுந்தரம் விடுப்பில் உள்ளார். பலமுறை முயன்றும் அவர் தொலைபேசியை எடுக்கவில்லை. மாலையில் இப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கும் பொறுப்பில் உள்ள தருமபுரி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் திரு. பண்டி கங்காதர் அவர்களுடன் மிக விரிவாகப் பேசினோம். இப்பிரச்சினையுடன் நெருக்கமாகத் தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் முன்னாள் சி.பி.ஐ கட்சி சட்டமன்ற உறுப்பினர் தளி இராமச்சந்திரனைச் சந்திக்க முயன்றும் இயலவில்லை. பலமுறை தொலை பேசியில் தொடர்பு கொண்டும் அவர் தொடர்பு கொள்ள மறுத்துவிட்டார். சி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநிலச் செயலர் திரு.முத்தரசன் அவர்களுடன் தொலைபேசியில் பேசினோம்.
கொலைச் சம்பவங்கள்
தற்போது கொல்லப்பட்டுள்ள விசுவநாதனின் தம்பி பாஸ்கரன் என்கிற குணசீலன் 2013 மார்ச் 18 முதல் காணாமற்போனார். இது குறித்து அவரது மனைவி ராஜம்மா கொடுத்த புகாரின் அடிப்படையில் (தனிக் காவல் நிலையக் குற்ற எண் 40/2013) அமைக்கப்பட்ட சிறப்புக் காவல்படை அடுத்த ஒரு வாரத்தில் கோலார் மாவட்டம் மாலூர் என்னுமிடத்தில் கொன்று எரிக்கப்பட்ட அவரது உடலைக்கண்டுபிடித்தது. இது தொடர்பாக கொத்தபள்ளி ராமச்சந்திரன் என்பவர் உள்ளீட்ட சிலர் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்துகொண்டு உள்ளது.
பாஸ்கரின் அண்ணன் விசுவநாதன் திருமணம் செய்து கொள்ளவில்லை. 58 வயதை எட்டிய அவர் இப்போது கிரானைட் வேலைக்கும் போவதில்லை. கெலமங்கலம் கடைத் தெருவில், காவல் நிலையத்திற்கு நேரெதிராக உள்ள ‘சின்னசாமி டீகடை காம்ப்ளெக்சில்’ உள்ள அறையில் தங்கிக் கொண்டு அருகில் உள்ள அக்கா உஷாராணியின் வீட்டில் சாப்பிட்டு வந்தார். அம்மா தனம்மாளுக்கு வரும் சுதந்திரப் போராட்ட தியாகிகள் பென்ஷன் அவரது இதர செலவுகளுக்கு உதவியது. சென்ற மே 18 அன்று காலையில் சாப்பிட்டுவிட்டுச் சென்ற விசுவநாதனை மதியம் 21/2 மணி வாக்கில் கடைத் தெருவில் பார்த்துள்ளார் அக்கா உஷாராணி. இரவும் அவர் சாப்பிட வரவில்லை. காலையில் கடைத்தெருவுக்குச் சென்றபோது விசுவநாதன் கழுத்தறுபட்டுச் செத்துக் கிடப்பதாகக் கேள்விப்பட்டு அவரது அறைக்குச் சென்று பார்த்தபோது அது உண்மை என அறிந்தார்.
இதற்கிடையில் விசுவநாதன் இறந்து கிடப்பது குறித்த புகாரை அவரது நண்பரும் அவரது கட்சியைச் சேர்ந்தவருமான கெலமங்கலம் மோகன் காவல்நிலையத்தில் தந்துள்ளார். அவருக்கு எப்படித் தகவல் கிடைத்தது என நாங்கள் கேட்டபோது, இரவு எட்டு மணி வாக்கில் அவ்வூரைச் சேர்ந்த ஜாகிர் என்பவர் மோகனுக்கு போன் செய்து தான் விசுவநாதனைக் கொன்றுவிட்டதாகச் சொன்னாராம். அதனால் காலையில் காவல் நிலையம் சென்று புகார் அளித்தாராம். ஏன் இரவே புகார் அளிக்கவில்லை எனக் கேட்டபோது தன்னையும் கொல்லப்போவதாக ஜாகிர் சொன்னதால் பயந்து கொண்டு அவர் வெளியே செல்லவில்லை என்றார். எனினும் அவர் போன் மூலம் காவல்துறைக்கும், விசுவநாதனின் குடும்பத்துக்கும் தகவல் சொல்லியிருக்கலாம். ஏன் சொல்லவில்லை என்பது தெரியவில்லை. “உங்கள் போனில் ஜாகிர் உங்களை அழைத்துப் பேசியது பதிவாகி இருக்குமே, காவல் நிலையத்தில் சொன்னீர்களா?” எனக் கேட்டபோது, “சொன்னேன். என் போனை வாங்கிச் சோதனை செய்துப் பின் திருப்பித் தந்துவிட்டனர்” என்றார்.
காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தனும் இதை ஏற்றுக் கொண்டார். கொல்லப்பட்ட விசுவநாதனின் செல்போன் ஒன்றையும் ஜாகிர் எடுத்துச் சென்று ஒரு பழக்கடை பாயிடம் விற்றதாகவும் அதையும் வழக்குச் சொத்தாகக் கைப்பற்றி வைத்துள்ளதாகவும் ஆனந்தன் சொன்னார். ஜாகிர், பிரகாஷ், முனிராஜ் எனும் மூவர் இப்போது தாங்கள்தான் விசுவநாதனைக் கொன்றதாக ஒத்துக்கொண்டு கைதாகியுள்ளனர். இவர்கள் மீது இ.த.ச 302, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது (கெலமங்கலம் காவல் நிலையம் மு.த.எ.எண் 177 / 2016).
ஐயங்கள்
கொல்லப்பட்ட இந்தச் சகோதரர்களில் முன்னதாகக் கொல்லப்பட்ட பாஸ்கரன் மீது, அவர் கொல்லப்படும்போது இரண்டு வழக்குகள் இருந்தன. ஒன்று முன்னாள் தளி ஒன்றியத் தலைவர் வெங்கடேஷ் என்பவரைக் கொன்ற (2012) வழக்கு. இந்த வெங்கடேஷ் அப்போதைய சட்டமன்ற உறுப்பினரான தளி ராமச்சந்திரனுக்கு மிகவும் நெருக்கமானவர். மற்றது தளி ராமச்சந்திரனின் மாமனார் லகுமையா என்பவரைத் தாக்கிய (1997) வழக்கு. பாஸ்கரனின் கொலை தொடர்பாகக் கைது செய்யப்பட்ட கொத்தபள்ளி ராமச்சந்திரன் உள்ளிட்டவர்கள் அளித்த ஒப்புதல் வாக்குமூலங்களின் அடிப்படையில் அந்தக் கொலை எம்.எல்.ஏ தளி ராமச்சந்திரன் அனுப்பிய கூலிப் படையால் செய்யப்பட்டது தெரிய வந்தது.
தனது கிரானைட் கொள்ளைக்கு எதிராகச் செயல்பட்டு வந்த பெரியார் திராவிடர் கழகத் தலைவர் பழனி என்கிற பழனிச்சாமியின் கொலைக் குற்றம் தொடர்பாகக் குண்டர் சட்டத்தில் தளி இராமச்சந்திரன் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். எனினும் உள்ளிருந்தபடியே தளி இராமச்சந்திரன் தன் கூலிபடையின் மூலம் இதைச் செய்தார். எனவே இராமச்சந்திரனையும் வழக்கில் குற்றவாளியாகச் சேர்க்க வேண்டும் என பாஸ்கரனின் சகோதரர் விசுவநாதன், 22.06.2015 அன்று அதிகாரிகளைச் சந்தித்து அழுத்தம் கொடுத்தார்.. அவ்வாறே பின்னர் தளி இராமச்சந்திரன், அவரது மாமனார் லகுமையா ஆகியோர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டனர் (PRC. No. 9 / 15).
இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் (2016) சி.பி.ஐ கட்சி இது தொடர்பான எதிர்ப்புகளை எல்லாம் பொருட்படுத்தாது அவருக்கு மீண்டும் இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது.
இதைக் கண்டித்து சென்னையில் சமூக ஆர்வலர்கள் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலும் விசுவநாதன் முன்னின்றார். எனினும் சிபி.ஐ கட்சி இந்த எதிர்ப்புகளை எல்லாம் பொருட்படுத்தாது அவரையே இத் தொகுதி வேட்பாளராக நிறுத்தியது. இராமச்சந்திரனும் பெரிய அளவில் பணம் செலவழித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார். ஓட்டுக்கு 1000 முதல் 1500 வரை இவர் பணம் செலவிட்டதாக எங்களிடம் ஒருவர் கூறினார். விசுவநாதன் சும்மா இருக்கவில்லை. சென்ற ஏப்ரல் 15, 2016 அன்று அரசுக்கும் உயர் காவல் அதிகாரிகளுக்கும் மனு ஒன்றை அனுப்பினார். இந்தக் குற்றங்களுக்காகவும், மற்றொரு ஆள் மாறாட்ட வழக்கிலும் ராமச்சந்திரனைக் கைது செய்ய வெண்டும் என இம்மனுவில் அவர் கோரி இருந்தார்.
இந்தவகைகளில் மிகவும் பெயர் கெட்டிருந்த தளி இராமச்சந்திரன் தேர்தலில் தோல்வி அடைவது உறுதியாயிற்று. வாக்குப் பதிவு நடந்த தன்மையைக் கண்டபோது தான் மே19 அன்று நடைபெறும் வாக்கு எண்ண்ணிக்கையில் வெற்றிபெற வாய்ப்பில்லை என்பதை அவர் உணர்ந்தார். அவர் ஆத்திரமெல்லாம் விசுவநாதன் பக்கம் திரும்பியது. இந்தப் பின்னணியிலேயே தேர்தல் நடந்து முடிந்த அடுத்த இரண்டாம் நாள் (மே18) விசுவநாதனின் கொலை நிகழ்ந்துள்ளது என்பதை விசுவநாதனின் அம்மா, அக்கா இருவரும் வலியுறுத்திக் கூறினர். தனது வயதான காலத்தில் இரண்டு பிள்ளைகளை அடுத்தடுத்து இழந்து தவிக்கும் தனம்மாளைப் பார்க்கும்போது மனம் நெகிழ்ந்தது.
பாஸ்கரைப் போலவே விசுவநாதனும் தளி.இராமச்சந்திரனின் தூண்டுதலால் அவரது கூலிப்படை மூலம் கொல்லப்பட்டதாகவே அந்தக் குடும்பம் நம்புகிறது. அதற்குச் சான்றாக அவர்கள் இன்னொன்றையும் கூறினர். தாங்கள்தான் கொன்றதாகச் சொல்லி இன்று கைதாகியுள்ள ஜாகிர், பிரகாஷ், முனிராஜ் ஆகிய மூவருக்கும் விசுவநாதனுடன் எந்தப் பகையும் இல்லை. கொல்வதற்கான நோக்கம் எதுவும் அடிப்படையில் அவர்களிடம் கிடையாது. தவிரவும் ஜாகிர் என்பவன் கெலமங்கலம் ஒன்றியத் தலைவரின் கணவரும் தளி இராமச்சந்திரனுக்கு நெருக்கமானவருமான கலீலின் உறவினரும் கூட..
சரி, இந்த ஐயங்களை முன்வைத்து நீங்கள் ஏதும் காவல் நிலையத்தில் புகார் அளித்தீர்களா என நாங்கள் கேட்டபோது, “ஆம். தளி ராமச்சந்திரன்தான் கொலையின் பின்னணியில் உள்ளார் எனத் தெளிவாக எழுதிப் புகார் அளித்துள்ளோம்” என தனம்மாள் கூறினார். ஆனால் இது குறித்து நாங்கள் கெலமங்கலம் காவல் நிலையத்தில் கேட்டபோது அப்படி ஏதும் புகார் விசுவநாதன் குடும்பத் தரப்பிலிருந்து தங்களிடம் கொடுக்கப்படவில்லை என காவல் உதவி ஆய்வாளர் ஆனந்தன் உறுதிபட மறுத்தார்.
தளி இராமச்சந்திரனின் பின்னணி
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், வரகானப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த திம்மே கவுடுவின் மகன் தளி இராமச்சந்திரனின் குடும்பம் ஒரு சிறிய வெற்றிலை பாக்குக் கடை வைத்திருந்த ஒன்று. இன்று இராமச்சந்திரன் இந்தப் பகுதியில் ஒரு மிகப் பெரிய செல்வந்தர். சி.பி.அய் கட்சிப் பிரமுகர். இருமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். ஒரு இருபதாண்டுகளில் அவர் இந்த அளவு சொத்துக்களுக்கு அதிபதியானதன் பின்னணியில் அவரது இரு தொழில்கள் உள்ளன. ஒன்று தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்களில் அவர் செய்கிற ‘ரியல் எஸ்டேட்’ தொழில். மற்றது அவரது கிரானைட் கனிம விற்பனைத் தொழில்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முறையாக அனுமதி பெற்று நடந்து வருகிற கிரேனைட் கற்கள் வெட்டி விற்பனை செய்யும் நிறுவனங்கள் சுமார் 75 வரை உள்ளன என்றால் கிட்டத்தட்ட அதில் மூன்றில் ஒரு பங்கு அவருடையது. ‘டி.இராமச்சந்திரன் கிரானைட் அன்ட் கன்ஸ்ட்ரக்‌ஷன் கம்பெனி’ எனும் சொந்தப் பெயரிலும் பினாமி பெயர்களிலும் கெலமங்கலம், சாப்பரானபள்ளி, நாகமங்கலம் முதலான பகுதிகளில் இந்தத் தொழிலைச் செய்யும் அவர், அனுமதி அளித்துள்ள பரப்பளவைக் காட்டிலும் பல மடங்கு பரப்பில் கரும் சலவைக் கற்களை வெட்டி விற்றுத்தான் இப்படி வரலாறு காணாத வகையில் தன் சொத்துக்களைப் பெருக்கியுள்ளார் என்கின்றனர் இப்பகுதியில் கனிம வளக் கொள்ளைக்கு எதிராக இயக்கம் நடத்துகிற சமூக ஆர்வலர்கள். இது குறித்த புகார்களின் அடிப்படையில் ஆகஸ்டு 8, 2012ல் ‘’புவியியல் மற்றும் சுரங்கத் துறை” மாவட்ட நிர்வாகம் அவரிடமும் அவரது பினாமிகளிடமும் ஏன் உங்களுக்கு அபராதம் விதிக்கக் கூடாட்து என விளக்கம் கேட்டு அனுப்பிய மடல்களை (Show Cause Notice) இக்குழுவினர் பரிசீலித்தனர். அவரது நிறுவனம் தவிர அவரது பினாமிகள் என கனிமக் கொள்ளையை எதிர்த்துப் போராடும் சமூக ஆர்வலர்களால் குற்றம்சாட்டப்படும் அப்துல் கரீம், சந்தோஷ், யுனைடெட் குவாரீஸ், ஜெயேந்திர குமார் பவன் பாய் படேல் ஆகியோருக்கு இவ்வாறு விதிக்கப்பட்ட அபராத மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
இராமச்சந்திரனின் ரியல் எஸ்டேட் தொழில் என்பது அப்பாவி ஏழை விவசாயிகளை மிரட்டி அடிமாட்டு விலைக்கு நிலத்தை வாங்கி பெரும் தொழில் நிறுவனங்களுக்கு விற்பது என்கிற அடிப்படையில் அமைகிறது. தங்கள் நிலத்தைப் பறி கொடுத்து வாழ்விழந்த மக்கள் இன்று அருகில் உள்ள பெங்களூரு போன்ற நகரங்களில் கூலிவேலை செய்து வாழ்கின்றனர். எடுத்துகாட்டாக 2007 முதல் ஓசூர் பகுதியில் தொழிற்சாலைகளை அமைக்கவும் ரியல் எஸ்டேட் தொழில் செய்யவும் வந்த GMR குழுமத்திற்கு மட்டும் 350 ஏக்கர் நிலங்கள் தளி இராமச்சந்திரன் வழியாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கென இராமச்சந்திரனும் அவரது சகோதரர் வரதராஜனும் தேன்கனிக் கோட்டை, ஓசூர், உத்தனபள்ளி, கெலமங்கலம், இராயக்கோட்டை முதலான பகுதிகளில் ஏழை எளிய விவசாயிகளை மிரட்டி 3500 ஏக்கர் வரை நிலங்களை வாங்கிக் குவித்துள்ளதாக 01-03- 2016 அன்று லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் பழனி எனும் பழனிச்சாமி கொலை (ஜூலை 5, 2012) நிமித்தம் இராமச்சந்திரன் கைது செய்யப்பட்டுக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை ஒட்டி இப்படிக் கைப்பற்றப் பட்டதில் எஞ்சியுள்ள நிலம் மாற்றீடு செய்யப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அப்புகாரில் கூறப்பட்டுள்ளது.
இப்படியான சட்ட விரோதத் தொழிலை எதிர்ப்பவர்களை அவர் ஒழித்துக் கட்டத் தயங்குவதில்லை. இது தொடர்பாகவும் அவர் மீது ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக 20.04.2016 அன்று உள்துறைச் செயலகத்தும் தலைமை மற்றும் மாவட்டக் காவல்துறை அதிகாரிகளுக்கும் கொல்லப்பட்ட பழனிசாமியின் மகன் பாலேபுரம் வாஞ்சிநாதன் அளித்துள்ள புகாரைச் சொல்லலாம். இதை எல்லாம் சமாலிக்க பக்க பலமாக இராமச்சந்திரனுக்கு அரசியல் செல்வாக்கு தேவைப்படுகிறது. அதை இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (CPI) நிறைவேற்றித் தருகிறது. எந்தத் தயக்கமும் இல்லாமல், மக்களின் இந்தப் புகார்களைப் பற்றி எல்லாம் எந்தக் கவலையும் படாமல் இதை அது செய்கிறது. 2006 வரை ராமச்சந்திரனும் அவரது மாமனார் லகுமையாவும் சி.பி.எம் கட்சியில் இருந்தனர். 2006 சட்டமன்றத் தேர்தலில் தளி தொகுதியில் நிற்க சி.பி.எம் கட்சியில் இராமச்சந்திரன் இடம் கேட்டார். ஆனால் அத்தொகுதி கூட்டணிக் கட்சியான சி.பி.ஐக்கு ஒதுக்கப்பட்டது. சி.பி.ஐ கட்சியின் மாவட்டச் செயலாளரான தாசரப்பள்ளி பி.நாகராஜ ரெட்டி என்பவருக்கு அத் தொகுதி ஒதுக்கப்பட்டது. கட்சிக் கட்டுப்பாட்டை மீறி சுயேச்சையாகப் போட்டியிட்ட இராமச்சந்திரன் தன் பண பலத்தால் வெற்றியும் பெற்றார். அடுத்த சில மாதங்களில் அவர் சி.பி.ஐ கட்சியில் இணைந்தார். தனது வேட்பாளரைத் தோற்கடித்தவர் என்பது பற்றியெல்லாம் கவலைப்படாமல் அக்கட்சி அவரை வரவேற்று ஏற்றுக் கொண்டது. இதைக் கண்டித்து நாகராஜ ரெட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன் ஆதரவாளர்களுடன் கட்சியை விட்டு விலகினார். இதனால் ஆத்திரமடைந்த இராமச்சந்திரன் தன்னை இருமுறை கொல்லும் முயற்சியில் கூலிப் படை கொண்டு தாக்கினார் எனவும் அதனால் தன் உடலில் ஒரு பகுதி செயலிழந்துள்ளது என்றும் நாகராஜ ரெட்டி எங்கள் குழுவிடம் கூறினார். நாகராஜின் ஆதரவாளர்களும் தாக்கப்பட்டுள்ளனர். சிபிஐ கட்சியின் முன்னாள் பகுதித் தலைவர் திம்மா ரெட்டி என்பவர் தனது ஒரு கால் இந்தத் தாக்குதலால் அகற்றப்பட்டுள்ளதென எங்களிடம் காட்டினார்.
இராமச்சந்திரன் மீண்டும் 2011 சட்டமன்றத் தேர்தலில் சிபிஐ கட்சி வேட்பாளராக நின்று வெற்றிபெற்றார். தனக்கு எதிராகச் செயல்பட்டவரும் தனது கிரானைட் கொள்ளை முதலியவற்றை அம்பலப்படுத்தியவருமான த.பெ.தி.க தலைவர் பழனியை, அவரது மகன் வாஞ்சிநாதன் முன் அவர் கொடூரமாகத் தலையை வெட்டிக் கொலை செய்த வழக்கில் குண்டர் சட்டத்திலடைக்கப்பட்டதைச் சற்று முன் குறிப்பிட்டேன். இந்தக் கொலை தமிழக அளவில் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியது. சமூக ஆர்வலர் தியாகு அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்ட உண்மை அறியும் குழு இக்கொலைக்கு இராமச்சந்திரனே காரணம் எனக் குற்றம் சாட்டியது. சிறையில் இருந்தபோதே விசுவநாதனின் தம்பி பாஸ்கர் கொல்லப்பட்டதையும் முன்பே பதிவு செய்துள்ளோம். சட்ட மன்ற உறுப்பினராக இருந்தபோதே ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்ற பெருமையும் (History Sheeter உத்தனபள்ளி காவல் நிலையம், 16/2014) அவருக்கு உண்டு.
இத்தனைக்குப் பின்னும் எந்தச் சஞ்சலமும் இல்லாமல் சி.பி.ஐ கட்சி இராமச்சந்திரனுக்கு 2016 சட்டமன்றத் தேர்தலிலும் அத் தொகுதியை ஒதுக்கியது. எனினும் மக்கள் இந்தத் தடவை இராமச்சந்திரனுக்கு மட்டுமல்லாது சி.பி.ஐ கட்சிக்கும் நல்ல பாடம் புகட்டினர். இந்தப் பின்னணியில்தான் சென்ற மே 18 அன்று விசுவநாதனின் கொலை நடந்துள்ளது. தனது சகோதரன் பாஸ்கர் கொல்லப்பட்டதை ஒட்டி தொடர்ந்து இப்பகுதியில் விசுவநாதன் இராமச்சந்திரனின் குற்றங்களை அம்பலப்படுத்திக் கொண்டிருந்தது இந்தத் தோல்வியில் ஒரு பங்கு வகித்துள்ளது. இந்த வகையில் எங்கள் குழு விசுவநாதனின் கொலையில் இராமச்சந்திரனுக்குப் பங்குள்ளது என விசுவநாதனின் தாயும் சகோதரியும் குற்றஞ்சாட்டுவதில் முழு நியாயங்களும் உள்ளதாகக் கருதுகிறது.
இராமச்சந்திரனின் குற்ற வரலாறு கிட்டத்தட்ட 25 ஆண்டு காலத் தொடர்ச்சி உடையது. 1992 ல் நாகமங்கலந்தை என்.சி.இராமன் என்பவர் கொலை வழக்கில் சாட்சியாக இருந்த அவரது தம்பி சந்திரசேகர் மிரட்டல்களை மீறி சாட்சி சொன்னதற்காக ஆக 15, 1995ல் கொல்லப்பட்டார் (ஓசூர் கா.நி, 614/95). இதில் தளி இராமச்சந்திரனும் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் தளி இராமச்சந்திரனுக்குப் பதிலாக வரானப்பள்ளியைச் சேர்ந்த அதே பெயருடைய மாரப்பா மகன் இராமச்சந்திரன் என்பவரை சரணடைய வைத்து அவர் தப்பித்துக் கொண்டார். இந்த ஆள் மாறாட்டம் பின்னர் அம்பலப்படுத்தப்பட்டபின் தளி இராமச்சந்திரனும் அவருக்கு இவ்வகையில் உதவிய காவல்துறை அதிகாரியும் எதிரிகளாகச் சேர்க்கப்பட்டு குற்றப்பத்திரிகை திருத்தப்பட்டு இப்போது வழக்கு நடந்துகொண்டுள்ளது.
இப்படி அவர் மீது கொலை, ஆள் மாறாட்டம், தாக்குதல் முதலாக ஏராளமான வழக்குகள் இன்று உள்ளன. அவர் மீதுள்ள வழக்கு விவரங்கள் தொடர்பாக சென்ற மார்ச் 11 அன்று தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறையிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் (C.No.5 / DCRB / RTI / KGI / 2016, Dt. 11.03.2016.) இந்த அறிக்கையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஓசூர், பேரிகை, தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், உத்தனபள்ளி முதலான காவல் நிலையங்களில் உள்ள குற்றங்கள் மட்டும் இவை. இராயக்கோட்டை காவல் நிலையத்தில் உள்ள குற்றங்களைச் சொல்ல காவல்துறை மறுத்துள்ளது. தளி இராமச்சந்திரன் மீதுள்ள சில முக்கிய குற்றங்கள் மட்டும்: ஓசூர் 246/2012, பேரிகை 18/2012, தேன்கனிக்கோட்டை 261/2012, தளி 84/2012, கெலமங்கலம் 201/2012, உத்தனப்பள்ளி 34/2012, 143/2012/, 165/2012, 166/2012,
கோரிக்கைகள்
1. கெலமங்கலம் விசுவநாதன் கொலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தளி இராமச்சந்திரனுக்கு முக்கிய பங்குண்டு என விசுவநாதனின் குடும்பத்தார் வைக்கும் குற்றச்சாட்டில் முழு நியாயங்களும் உண்டு என இக்குழு நம்புகிறது. எனவே இது தொடர்பான விசாரணை இந்தக் கோணத்தில் நடத்தப்பட வேண்டும் என எங்கள் குழு மாவட்டக் காவல்துறையை வற்புறுத்துகிறது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூவரும் கொல்லப்பட்ட விசுவநாதனுடன் எந்தத் தனிப்பட்ட பகையும், அவரைக் கொல்வதற்கான நோக்கமும் இல்லாதவர்கள். புகார் கொடுத்துள்ள மோகனின் செல்பேசிக்கு வந்ததாகச் சொல்லப்படும் செல்போன் உரையாடல்கள், விசுவநாதனின் செல்போன் உரையாடல்கள், இந்த கைது செய்யப்பட்டுள்ள மூவரின் செல்போன் உரையாடல்கள் முதலியன செல் போன் service providers களிடமிருந்து பெறப்பட்டு புலனாய்வு செய்யப்படுதல் வேண்டும். தளி இராமச்சந்திரன் மீது உள்ள குற்றச்சாட்டுகளில் உள்ள பிற குற்றச் செயல்களின் தன்மைக்கும் இந்தக் குற்றச் செயலுக்கும் உள்ள ஒப்புமைகளும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
2. தளி இராமச்சந்திரன் மீதுள்ள குற்றச் சாட்டுகள் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு விரைவு தனி நீதிமன்றம் அமைத்து விசாரிக்கப்பட வெண்டும் என அரசை இக்குழு கோருகிறது.
3. இப்பகுதியில் நடைபெறும் கனிமக் கொள்ளை, அதனால் விளையும் சுற்றுச் சூழல் தீங்குகள் முதலியன குறித்து மதுரை மாவட்டத்தில் செய்தது போன்று, ஒரு நேர்மையான அதிகாரியின் கீழ் விசாரணை ஒன்றை உடனடியாக நியமிக்க வேண்டும் இந்த விசாரணை தளி இராமச்சந்திரனின் பினாமி அமைப்புகள், அனுமதிக்கப்பட்ட பரப்பைக் காட்டிலும் அதிகமாகக் கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டாது ஆகியவற்றை சிறப்பு கவனம் எடுத்து விசாரிக்க வேண்டும்.
4. இப்பகுதியில் கடந்த பத்தாண்டுகளில் விவசாயிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட நிலங்கள் குறித்து ஒரு சிறப்பு விசாரணை அதிகாரியை நியமித்து உடனடியாக விசாரிக்க வேண்டும். முறை கேடாக மிரட்டிப் பெறப்பட்ட நிலங்கள் இப்போது யார் கைவசம் இருந்தாலும் அது உரியவர்களுக்குத் திருப்பித் தரப்பட வேண்டும்.
5. ஒருபக்கம் கனிமக் கொள்ளையையும் நிலப்பறிப்பையும் எதிர்த்து அரசியல் செய்து கொண்டு இன்னொரு பக்கம் இதே குற்றங்களுக்காகத் தமிழக அளவில் உள்ள முற்போக்கு அறிவுஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளவரும், கொலைகள் உட்படப் பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ளவருமான தளி இராமச்சந்திரனைப் பதவிகள் கொடுத்து ஆதரித்து வரும் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலக் குழுவை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது தொடர்பாக நேற்று நாங்கள் இக்கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் அவர்களிடம் கருத்துக் கேட்டபோது ஒன்றும் சொல்வதற்கில்லை எனவும் எங்கள் அறிக்கையை அனுப்புமாறும் கேட்டுக் கொண்டார். எங்கள் அறிக்கையின் அடிப்படையில் உரிய ஆய்வுகளைச் செய்து தளி இராமச்சந்திரனைக் கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்பதோடு இதுகாறும் அவரைப் பாதுகாத்து வந்ததற்காக சி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநிலக் குழு மக்களிடம் மன்னிப்புக் கோரவும் வேண்டும். இடதுசாரிக் கட்சிகளின் நலிவைக் கண்டு கவலை கொண்டவர்கள் என்கிற வகையில் நாங்கள் மிக மதிக்கும் இக் கட்சித் தலைமையிடம் இந்த வேண்டுகோளை முன்வைக்கிறோம்.
6. நேற்று மாலை நாங்கள் தருமபுரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. பண்டி கங்காதர் அவர்களைச் சந்தித்துப் பேசினோம்.விசுவநாதன் கொலை தொடர்பாக மோகன் என்பவர் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையிலேயே கெலமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கொலையின் முகாந்திரம் குறித்த எந்தத் தகவலும் இல்லை. ஆனால் விசுவநாதனின் தாயார் தான் இந்தப் பின்னணியை எல்லாம் விளக்கி ஒரு புகார் கொடுத்ததாகச் சொல்கிறார். காவல் நிலையத்தில் விசாரித்தபோது அப்படி ஏதும் கொடுக்கப்படவில்லை என்கிறார்கள். இது எங்களுக்கு ஐயத்தைத் தருகிறது. இது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் எனக் கோரினோம். அவர் உடனடியாக எங்கள் கண் முன் வாக்கி டாக்கி மற்றும் தொலை பேசியில் நாங்களும்கேட்கும் வண்ணமாக உரிய அதிகாரிகளிடம் பேசி, உடனடியாக கொல்லப்பட்டவரின் வீட்டுக்குச் சென்று அந்த அம்மாவிடம் மீண்டும் ஒரு புகாரை பெற்று வந்து பதியுமாறு உத்தரவிட்டார். அந்த வழக்கு விசாரணை செய்யப்பட வேண்டிய கோணம் குறித்தும் சிலவற்றைச் சொன்னோம். “எல்லாவற்றையும் ஒரு மனுவாக எழுதிக் கொடுங்கள். உரிய அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அவர்களை மாற்றி புதிய அதிகாரிகளிடம் விசாரணையை ஒப்புவிக்கிறேன். நீங்கள் சொல்லும் கோணத்த்தில் நியாயம் இருக்கிறதுஎனில் அதையும் விசாரிப்போம். நானே பொறுப்பேற்று அந்த விசாரணையை என் நேரடிக் கண்காணிப்பில் செய்கிறேன். நீங்கள் எழுத்து மூலம் கொடுத்தால், ஒரு வேளை எங்கள் விசாரணையில் உங்களுக்குத் திருப்தி இல்லை என்றால் நீங்கள் நீதிமன்றத்தை நாடவும் உதவியாக இருக்கும்” என்றார். அந்த இளம் அதிகாரியை எங்கள் குழு மனதாரப் பாராட்டுகிறது.
தொடர்பு: அ.மார்க்ஸ், 54/2, அபரஞ்சி அவென்யூ, வண்ணாந்துறை,சென்னை- 20, எண்: 094441 20582
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.