இடதுசாரிகள் இந்திய பொருளாதாரம் இந்தியா மோடி அரசு

“உலக பொருளாதார மந்தநிலையில் மேக் இன் இந்தியா அறிவிப்பு  திவாலாகிப் போவதற்கான அடையாளம்” பேரா. பிரபாத் பட்நாயக்

பேராசிரியர் பிரபாத் பட்நாயக்

prabhat patnaik
பேரா. பிரபாத் பட்நாயக்

உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் முதலீடு செய்யவே மறுத்துக் கொண்டிருக்கும் சூழலில், அவர்கள் தயாராக இல்லாத சூழலில்- மோடிஅரசாங்கம் “மேக் இன் இந்தியா” என்று உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது என்பது கவனிக்கப்படாத ஒன்றாகவே உள்ளது.

நமது நாட்டில் தாராளமயமாக்கலுக்குப் பிறகு விவசாயபொருட்களின் உற்பத்தி வீழ்ச்சியடைந்தது. குறிப்பாக உணவுப் பொருள் உற்பத்தியிலும் வீழ்ச்சியை சந்தித்தது. பொருள் உற்பத்தி குறைந்தது. அதேநேரம் தாராளமயம் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியடைந்து வருகிறது என்று பெருமையுடன் ஆட்சி யாளர்கள் கூறி வருகின்றனர். தொழில் துறை உற்பத்தி சுருங்குகிறது…..உணவு உற்பத்தி குறைகிறது……விவசாயத் துறை வீழ்ச்சியை சந்திக்கிறது…..ஆனால், மொத்த உள்நாட்டு உற்பத்தி மட்டும் அதிகரிக்கிறது என்றால் அதற்கு என்ன அர்த்தம்? சேவைத்துறையை உள்ளடக்கி மொத்த உள்நாட்டு உற்பத்தியை கணக்கிடுவது தான் அதற்குக் காரணம்.

சேவைத் துறையை உள்ளடக்கி மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)கணக்கிடப்படுவது சரியா தவறா என்ற விவாதம் ஒரு புறம் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஏனெனில், சேவைத்துறையில் அதனுடைய “அவுட்புட்”டாக கணக்கிடப்படுவது – அதாவது சேவைத் துறையின் உற்பத்தி வெளியீடு அல்லது ஆக்க அளவு என்பது உண்மையில் என்ன? என்பது குறித்தும், அதை கணக்கிட நாம்எடுத்துக் கொள்ளும் புள்ளி விவரங்கள் உண்மையில் அவற்றின் நியாயமான உண்மை மதிப்புடன் கூடிய வெளியீட் டினை தருகின்றனவா என்பது குறித்தும் கருத்தளவில் ஒரு தர்க்கம் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இந்த விவா தத்தை நடத்தவும் வேண்டியிருக்கிறது. உதாரணமாக, நமது நாட்டில் மொத்தத்தில் 100 அலகு தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாகக் கொள்வோம். உற்பத்தி செய்யப்பட்ட பொருள் என்ற முறையில் இந்த 100 அலகு என்பது ஜிடிபி கணக்கீட்டிற்கு வரும். அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்டதில் இருந்து உடைமையாளர்கள் 50 அலகு தானியங்களை தங்களது நுகர்விற்காக எடுத்துக் கொள்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.

ஆனால் இந்த 50 அலகு தானியங்களையும் அவர்கள் விவசாயிகளை அச்சுறுத்துவதற்காக தாங்கள் நியமித்துள்ள 50 குண்டர்களை பராமரிக்கப் பயன்படுத்துகிறார்கள் எனக் கொள்வோம். இப்போது இந்த 50 அலகு தானியங்களும் குண்டர்களின் சம்பளம் என்ற வகையில் ஜிடிபி கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும். அதாவது மொத்தத்தில் 150 அலகாக(தானியம் 100 + சம்பளம் 50 = 150) ஜிடிபி கணக்கீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்படும். ஒரு வேளை, 70 அலகு தானியம் நிலக் கிழார்களால் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்டால், 50 குண்டர்களுக்கு 1 அலகு சம்பளம் என்பதற்கு பதில் 1.4 அலகு சம்பளம் என்ற வகையில் தரப்படுகிறது என்று கொள்ளப்பட்டு, 170 அலகுகள் ஜிடிபி கணக்கீட்டிற்கு எடுத்துக்கொள்ளப் படும். இந்த உதாரணத்தைப் பார்த்தோ மானால், உண்மையில் விவசாயிகளை சுரண்டுவதற்காக நில உடைமையாளர்கள் செய்யும் செலவும் சேர்ந்து மொத்த ஜிடிபி மதிப்பை உயர்த்திக் காட்டுகிறது.

முட்டாள்தனமான இந்த கணக்கீட்டு முறையின் காரணமாகத்தான் சோவியத் யூனியனும் சரி, பிற சோசலிச நாடுகளும்சரி, தங்களுடைய தேசிய வருமான அளவீட்டில் சேவைத் துறையின் ஆக்க அளவுகளை அல்லது வெளியீடுகளை கணக்கில் எடுத்துக் கொண்டதில்லை. அப்படி நாமும் சேவைத் துறையை விடுத்து ஜிடிபியை கணக்கீடு செய்வோமேயானால், தாராளமயமாக் கலுக்குப் பிறகு இந்தியா வின் ஜிடிபி என்பது அரசு கட்டுப்பாட்டில் இருந்த காலக்கட்டத்தை விட நிச்சயம் குறை வாகத்தான் இருக்கும்.

உற்பத்தி மந்தம்

தற்போது நாம் இந்தியாவின் தொழில்துறையின் உற்பத்தி மந்த நிலை குறித்து பார்ப்போம். கடந்த 4 நிதி ஆண்டுகளுக்கான தொழில் துறை உற்பத்தி குறித்த விபரம் வருமாறு:

2012-13: 1.1ரூ

2013-14: -0.1 ரூ

2014-15: 2.8ரூ

2015-16: 2.4ரூ

2015-16ஐ அதற்கு முந்தைய நிதியாண்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தொழில்துறை வளர்ச்சி சுருங்கியுள்ளது என்பது தெரியும். அதேபோல இந்த 4 ஆண்டுகளின் அளவீடுகளையும் ஒப்பு நோக்கும்போது இன்னொன்றும் தெரிய வருகிறது. பொதுவாகவே தொழில்துறை உற்பத்தியில் ஒரு மந்த நிலை இருந்து வருகிறது என்பது தெரிய வருகிறது. ஆனால், தாராளமயமாக்கலுக்கு முன்பு, அதாவது 1980-81 மற்றும் 1990-91க்குஇடைப்பட்ட காலக்கட்டத்தில் தொழில்துறை உற்பத்தி 7.83ரூ-ஆக இருந்தது. தொழில்துறை உற்பத்தியில் மந்த நிலை துவங்குவதற்கு முன்பே, அதே நேரம் தாராளமயமாக்கலுக்குப் பிறகு உடனடி காலக்கட்டமாகிய 1990-91 மற்றும் 2011-12க்கு இடைப்பட்ட காலத்தில் இது 6.28ரூ-ஆகக் குறைந்துவிட்டது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், தாராளமயமாக்கலுக்கு முந்தைய ஒட்டுமொத்த காலக்கட்டத்தையும், தாராளமயமாக்கலுக்கு பிந்தைய ஒட்டு மொத்த காலக் கட்டத்தையும் ஒப்பிட்டு நோக்கினால், சமூகம் மற்றும் பொருளாதாரம் சார்ந்த அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த காலக்கட்டத்தை விட தாராளமயகாலக்கட்டத்தில் தொழில் துறை உற்பத்தி குறைவாகவே இருக்கிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது ஆண்டிற்கு 6.32ரூ-ஆக இருந்தது 6.28ரூ-ஆகக் குறைந்து போயுள்ளது.

விவசாயத்தோடு நெருங்கியதே தொழில்துறை

இந்தியாவைப் பொறுத்தவரையில் தொழில் துறை மந்த நிலை என்பது புதிதல்ல. ஆனால் தற்போதைய தொழில் மந்த நிலைக்கும், அரசு கட்டுப்பாட்டில் பொருளாதார சமூகக் காரணிகள் இருந்த போது இருந்த தொழில் மந்த நிலைக்கும் வேறுபாடு உள்ளது. உதாரணமாக, அறுபதுகளின் மத்தியில் தொழில் மந்தம்நிலவியது. அப்போது 1965-66க்கும் 1966-67க்கும் இடையில் (பீகாரில் பஞ்சம்போன்ற நிலை உட்பட) ஒட்டுமொத்த நாட்டிலும் உணவு தானிய உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டது. அது தான் இந்த தொழில் மந்த நிலைக்குக் காரணமாக அமைந்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், அரசுக் கட்டுப்பாடு என்பது இருக்கும் வரையில், தொழில் உற்பத்தியின் ஏற்ற இறக்கம் என்பது விவசாய உற்பத்தியின் ஏற்ற இறக்கத்தோடு நெருங்கிய தொடர்புடையதாக இருந்தது. மோசமான பயிர் விளைச்சல் என்றால் உற்பத்தியாளர்களுக்கு குறைந்த வருமானம், நுகர்வோர்க்கு அதிக விலையில் உணவு தானியம் என்ற நிலையாகத்தான் இருந்தது. (ஆனால், அரசு கொள்முதல் என்பதும் பொது விநியோகம் என்பதும் அறுபதுகளின் மத்திக்குப் பிறகு அமலுக்கு வந்த பிறகு இந்த நிலை சமாளிக்கப்பட்டது.) இதனால் நுகர்வோர் மற்றும் உற்பத்தியாளர்கள் என்று இருவர் கைகளிலுமே வாங்கும் சக்தி குறைவாக இருந்தது. குறிப்பாக தொழிலாளர்கள் மற்றும் சம்பளம் வாங்குவோர்கள் தொழில் உற்பத்தி பொருட்களை வாங்குவது கடினமாக இருந்தது.

மேலும், மோசமான பயிர் விளைச்சல் காலத்தில் அரசாங்கம் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக அதனுடைய செலவினங்களை சுருக்க ஆரம்பித்தது. இதனாலும், தொழில்துறை கிராக்கியில் ஒரு சுருக்க நிலை ஏற்பட்டது. இதிலிருந்து, அந்த காலக்கட்டத்தில் தொழில் துறையின் கிராக்கி மற்றும் உற்பத்தி என்பது விவசாயத் துறையின் சூழலோடு நெருங்கிய தொடர்புடையதாக இருந்தது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். தற்போதைய சூழல் அதுவல்ல.தற்போது விவசாய உற்பத்தி (உணவு தானிய உற்பத்தி உட்பட) எந்த வீழ்ச்சியையும் சந்திக்கவில்லை. 2011-12 மற்றும் 2013-14 ஆண்டுகளில் நல்ல விவசாய உற்பத்தி இருந்தது. 2013-14ல் இது சிறிது குறைந்தது என்றாலும், அறுபதுகளின் மத்திக் காலத்தினை போல் வீழ்ச்சியடைந்துவிடவில்லை. அப்படியென்றால், 2012-13 மற்றும் 2014-15ல் தொழில் துறை உற்பத்தி அதிக வளர்ச்சி விகிதத்தை கண்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி வளர்ச்சியை காணவில்லை. மாறாக, தொழில் துறையில் மந்த நிலையே நிலவுகிறது. அப்படியென்றால், அறுபதுகளின் மத்தியைப் போல உள்நாட்டு கிராக்கியை நம்பி இன்றைய தொழில் துறையின் ஏற்ற இறக்கம் இல்லை என்பதுதான் உண்மை. அதாவது, தற்போதையதொழில் மந்தத்திற்கு உள்நாட்டு நுகர்வோரின் வாங்கும் சக்தி காரணமாகவில்லை. மாறாக, ”உயர் சந்தை” மற்றும் ஏற்றுமதி சந்தை ஆகியவைதான் தற்போதைய தொழில் துறையின் ஏற்றஇறக்கங்களுக்கான ஊக்குவிக்கியாக உள்ளன. உலகப் பொருளாதாரம் ஒருநெருக்கடியில் சிக்குண்டுள்ளதன் காரண மாக இந்த “உயர் சந்தை”யும், ஏற்றுமதி சந்தையும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

மந்தத்திற்குக் காரணம் உலக பொருளாதார நெருக்கடியே!

அரசு கட்டுப்பாடு இருந்த காலக் கட்டம் போல் அல்லாமல் தற்போது இந்தியபொருளாதாரமானது உலக முதலாளித் துவ பொருளாதாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது. எனவே, தொழில் துறையின் தற்போதைய மந்தநிலைக்கான காரணத்தை உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் நிலைமையைப் பொறுத்து நாம் ஆராய்ந்து அறிய வேண்டியுள்ளது. 2016 மார்ச் மாதத்தை மட்டும் எடுத்துக்கொள்வோம். கடந்த 2015 மார்ச் மாதத் துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் வளர்ச்சி விகிதம் என்பது இல்லவே இல்லை எனச் சொல்லலாம். (0.05 சதவீதம் மட்டுமே). ஆனால், அதற்கு சில நாட்களுக்கு முன்பு எட்டு முக்கிய துறைகள் எனப்படும் முதன்மைப் பிரிவுகளின் வளர்ச்சி விகிதம் மட்டும் மார்ச் மாதம் 6.4 சதவீதம் ஆகும் என்றும், இதுவே இந்தியாவில் தொழில் துறை மீண்டும் மீட்சியடைந்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது என்றும் இந்திய ஊடகங்கள் எழுதியிருந்தன.அப்படியொரு மீட்சி ஏற்படவில்லை என்பதோடு, எட்டு கேந்திரமான துறைகளின் வளர்ச்சிக்குப் பிறகும் மந்த நிலை நீடிக்கிறது என்றால், அதற்குக் காரணம் கேந்திரமல்லாத பிற துறைகளில் கடுமையானதொரு பொருளாதார சுருக்க நிலைஇருந்து வருகிறது என்று தெரிய வருகிறது.கேந்திரமான துறைகளில் அரசாங்கம் க்கிய அங்கம் வகிக்கிறது. எனில், கேந்திரமல்லாத துறைகள் என்பது தனியார் தொழில் துறை பகுதியையும், அங்குள்ள பொருளாதார சுருக்க நிலையையும் குறிக்கிறது. அதாவது தனியார் முதலீடுகள் குறைக்கப்படுகின்றன என்பதும், அதனால்முதலீட்டுப் பொருட்களின் ஆக்க வெளியீடு குறைகிறது என்பதும், இது மேலும் இந்திய தொழில் துறையை மிக மோச மாகப் பாதிப்படையச் செய்யும் என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது. ஏற்கனவே முதலீட்டுத் துறையில் ஒரு கடுமையான சுருக்க நிலையை நாம் சந்தித்து வருகிறோம். மார்ச் 2016ல் முதலீட்டுத் துறையின் தொழில் உற்பத்தி புள்ளியானது அதற்கு முந்தைய ர்ச் மாதத்தை விட 9.5 சதவீதம் சுருங்கி யுள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக உற்பத்தித் துறை மார்ச் 2016ல் 1.2 சதவீதம் சுருங்கியுள்ளது. ஏப்ரலில் முத லீட்டுத் துறை 15.4 சதவீதம் சுருங்கிப் போயுள்ளது.

அனைத்தும் பூஜ்யமாக இருக்கும்

இதுதான் தற்போதைய முதலாளித்துவ உலகம் முழுவதும் எங்கெங்கும் நிகழும் நிகழ்வாகும். இதுவே முதலாளித்துவ அமைப்பின் தனித்தன்மையாகும். முதலாளித்துவ நிபந்தனைகளின் கீழ், தொழில் துறை மந்த நிலையடையும் போது, முதலீட்டுப் பொருட்களின் ஆக்கஉற்பத்தி வெளியீடானது நுகர்பொருட்களின் உற்பத்தியை விட குறைவாக இருக்கும் என்பது தான் இதன் பொருள். உதாரணத்திற்கு, நுகர் பொருள் உற்பத்தித்துறையின் வளர்ச்சி விகிதம் பூஜ்யம் என்று கற்பனை செய்து கொள்வோம். அப்படியிருக்கையில் முதலாளிகள் இந்தத்துறையில் கூடுதலாக முதலீடு செய்யமாட்டார்கள். அதாவது ஏற்கனவே இருக்கும் பழைய முதலீட்டுக் கருவிக்கு பதிலாக புதிய ஒன்றினை வைக்கவோ அல்லது புதிய முதலீட்டினை செய்யவோமாட்டார்கள். எனவே, பொருளாதாரத்தில் முதலீடு என்பதோ அதைத் தொடர்ந்து இருக்கும் ஆக்க உற்பத்தி வெளியீடு என்பதோ இருக் காது. அனைத்தும் பூஜ்யமாக இருக்கும். ஒரு பொருளாதார நெருக்கடியின் போது நுகர் பொருள் உற்பத்தியை விடவும் முதலீட்டுப் பொருட்களின் உற்பத்தி அல்லது முதலீடு என்பது சுருக்கமாக – குறைவாக இருக்கும்.

எனவே, உண்மையான பொருளாதார மீட்சியின் அடையாளம் என்பது மூலதன – முதலீட்டுப் பொருட்களின் முதலீடு அதிகரிக்கத் தொடங்கும் போது தான் தெரியத் துவங்கும். அதாவது முதலாளிகள் முதலீடுசெய்யத் துவங்கி விட்டனர் என்று இதற்கு பொருள். இது தற்போது தொடர்ந்து இருந்து கொண்டிருக்கும் உலகப் பொருளாதார நெருக்கடி சூழலில், அமெரிக்கா உட்பட உலகில் எங்குமே நடக்கவில்லை. அதாவது, உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்கள் முதலீடு செய்யவே மறுத்துக் கொண்டிருக்கும் சூழலில், அவர்கள் தயாராக இல்லாத சூழலில்- மோடிஅரசாங்கம் “மேக் இன் இந்தியா” என்று உலக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்திருப்பது என்பது கவனிக்கப்படாத ஒன்றாகவே உள்ளது. அவர்கள் இதனை லட்சியம் செய்யவே இல்லை. இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான மைல் கல்லாக இந்த மேக் இன் இந்தியா உபாயத்தை மோடி அரசாங்கம் கையாள்கிறது என்பதே அது திவாலாகிப் போவதற்கான அடையாளம் தான். மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ஏராளமான சலுகைகளை முதலாளிகளுக்கு வாரி வழங்கிய பிறகும், இந்திய பொருளாதாரம் – இந்திய தொழில் துறை மந்த நிலையில் ஆழ்ந்துள்ளது என்பதில் இருந்தே இந்த திட்டம் எத்தனை வெறுமையானது – எத்தனை சூன்யமானது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

தமிழில் : ஆர்.எஸ்.செண்பகம்

நன்றி: தீக்கதிர்.

பேராசிரியர் பிரபாத் பட்நாயக், மார்க்சிய பொருளாதார நிபுணர். உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் குறித்து இவர் எழுதிய கட்டுரைகள், சிறு நூல்களாக பாரதி புத்தகாலயம் தமிழில் வெளியிட்டுள்ளது.

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: