தமிழகத்தில் 13லிருந்து 21 ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்து இந்திய சிறுபான்மையினர் பாதுகாப்பு இயக்கம் சார்பாக பீட்டர் துரைராஜ் இணையதள கையெழுத்து இயக்கம் ஒன்றைத் தொடங்கியிருக்கிறார்.

“2008-ஆம் ஆண்டு தமிழக அரசு 1400 சிறைவாசிகளை விடுதலை செய்தது. அவர்களில் பெரும்பாலானோர் 7 வருடங்களுக்கு மேல் தண்டனையை அனுபவித்தவர்கள். ஆனால் இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்வது குறித்து பரிந்துரை ஆணையம் எவ்வித முடிவையும் எடுக்கவில்லை.

1991-1999ஆம் ஆண்டு வரை கைதான இஸ்லாமிய சிறைவாசிகள் இன்னமும் சிறைக்குள்ளே அடைந்து கிடக்கிறார்கள். 60 வயதுக்கு மேலானவர்களையும் தீவிர நோய்தாக்குதலுக்கு உள்ளானவர்களையுமாவது இந்த அரசு விடுவிக்கலாம். இவர்களுக்கும் சட்ட உரிமையான பரோலும்கூட மறுக்கப்படுகிறது.

இஸ்லாமிய கைதிகள் என்பதால் வெகுஜென ஊடகங்களும் இவர்களைப் பற்றி கவலைப்படுவதில்லை. குற்றமே செய்யாமல் 10லிருந்து 15 ஆண்டுகள் வரை சிறையிலே கழித்த 60 இஸ்லாமியர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. குற்றவாளிக்கு தண்டனையே தரக்கூடாது என்பதை நாங்கள் சொல்லவில்லை. தண்டனை கொடுக்கப்பட்டு, முழு தண்டனை காலமும் கழிந்துவிட்டப் பிறகும் அவர்கள் சிறையிலேயே இருப்பது, அவர்களின் சட்ட உரிமையைப் பறிப்பதாகும். அரசாங்கம் நினைத்தால் சட்டப்பிரிவு 161 பிரிவைப் பயன்படுத்தி இவர்களை விடுதலை செய்ய வேண்டும்.

எனவே, ஜனநாயக சக்திகள் நீதித்துறையையும் சட்ட விதிகளையும் கேள்விக்கேட்கும்படி கோருகிறோம். 49 இஸ்லாமிய கைதிகளை விடுவிக்கக் கோரி இந்த இணையதள கையெழுத்தியக்கத்தில் இணையும் படியும் கேட்கிறோம்” என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.