இலக்கியம் புத்தக அறிமுகம்

ஒரு கவிஞன் இப்படி அகாலமாக சாவதை என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை: ஜி. கார்ல் மார்க்ஸ்

ஜி. கார்ல் மார்க்ஸ்

கவிதாவின் வழியாகத்தான் எனக்கு குமரகுருபரன் என்கிற பெயர் அறிமுகம். அவரது கவிதைகளை முகநூலில் பார்ப்பதன் வழியாக உருவானதே அவர்மீதான பிம்பமும். சில முறை கமென்ட்டில் உரையாடியிருக்கிறோம். இன்பாக்ஸில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துக்கொண்ட சடங்குக்குப் பிறகு சிலமுறை அரசியல், இலக்கியம் என்று அந்த உரையாடல் நீண்டிருக்கிறது. அவ்வளவு தான்.

ஜெயமோகன் விருது மறுப்பு குறித்த எனது கட்டுரையைப் படித்துவிட்டு ஒருநாள் இரவு என்னைத் தொலைபேசியில் அழைத்தார். அந்தக் கட்டுரையால் அவர் மிகவும் காயமடைந்திருந்ததைப் போல தோன்றியது. அது மிகவும் நல்ல கட்டுரைதான், ஆனால் இப்படியான கட்டுரைகள் ஒரு படைப்பாளியை நோக்கி எழுதப்படவேண்டுமா, அது அவனது அந்தரங்கத்தில் நுழைவது ஆகாதா என்று கேட்டார். ஜெமோ மீதான அவரது அன்பை நான் மதித்தேன். எனது தரப்பை சிரித்துக்கொண்டே விளக்கினேன்.

அந்த உரையாடலின் போது அவர் குடித்திருந்தார். நான் குடிக்க தயாராகிக்கொண்டிருந்தேன். உரையாடலின் ஒரு இடத்தில், நான் உனது கட்டுரைகளை தொடர்ந்து படித்துக்கொண்டிருக்கிறேன், நன்றாக எழுத வருகிறது உனக்கு. ஆனால், இந்த ஜெமோ கட்டுரையில் ஒரு வன்மம் தொனிப்பதை என்னால் உணரமுடிகிறது, அதுதான் உன்னிடம் என்னை பேசவைக்கிறது என்று சொன்னார். நான் பதறிவிட்டேன்.

எனக்கு அவர் மீது என்ன வன்மம்? என்னுடையவை வெறும் விமர்சனம் மட்டும்தான். அதைத்தாண்டி அதில் ஒன்றுமே இல்லை என்று சொன்னேன். ஒரு கட்டத்தில், என்னையும் அறியாமல் எனது எழுத்தில் வன்மத்தின் சாயல் படர்ந்திருந்தால், அதற்காக என்னை மன்னித்துவிடுங்கள் என்றேன். சே.. சே.. அப்படியெல்லாம் சீரியஸா ஒண்ணுமில்லை என்று சிரித்தார். அதன் பிறகுதான் அவரது நூல் வெளியீட்டு விழாவுக்குப் போனதும் ஜெயமோகனிடம் புத்தகம் பெற்றுக்கொண்டதும்.

எல்லா இலக்கியவாதிகளைப்போல அவருக்கும் படைப்புகள் குறித்து திட்டவட்டமான கருத்துகள் இருந்தன. ஜீரோ டிகிரிக்குப் பிறகு சாரு எழுதுவதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதும் அதில் ஒன்று. நான் அதை மறுத்து பேசிக்கொண்டே இருப்பேன். எனது நூல்கள் குறித்து ராஜ சுந்தரராஜனுடன் அவர் நடத்திய உரையாடல் கூட அத்தகையது தான். இதெல்லாம் ஒரு விமர்சனமா… செத்துப்போ… என்ற தொனியில் எழுதியிருந்தார். இத்தகைய வார்த்தைப் பிரயோகத்தை, சில மூத்த கவிஞர்களை நோக்கியும் அவர் பிரயோகித்திருந்ததை நான் பார்த்திருக்கிறேன். இதற்கு சாருவும் தப்பவில்லை.

மசினக்குடி விவாதத்திற்குப் பிறகு சாரு அவரை இருநூறு கிலோ கறியென்று திட்டியிருந்தார். நீ ஒரு மகா பிச்சைக்காரன் சாரு என்று அதற்கு அவர் எதிர்வினை புரிந்திருந்தார். குமரகுருபரன் பயன்படுத்தியது உருட்டுக்கட்டை என்றால் சாரு பயன்படுத்தியது நெஞ்சில் பாயும் கூரான ஊசி. இலக்கியம் என்னும் வஸ்து எப்போதும் நமது கற்பனைகளைத் தாண்டிய வன்முறையைக் கொண்டது. இலக்கியவாதிகள் குறித்த அச்சம் சிறுவயதிலிருந்தே எனக்கு இருப்பதற்கு இதுவொரு காரணம். இத்தகைய சண்டைகளுக்குப் பிறகும் அவர்கள் கட்டிக்கொள்வதைப் பார்ப்பது இலக்கியம் மீதான எனது வசீகரம் மிச்சமிருப்பதற்குக் காரணம்.

இன்று அதிகாலை தொலைபேசியில் என்னை எழுப்பி இந்த செய்தி தெரிவிக்கப்பட்டபோது நான் கனவென்றுதான் நினைத்தேன். அது உடனே கலையவும் செய்தது. ஏனெனில் எனக்கு குமரகுருபரன் அறிமுகம் ஆன காலம்தொட்டு கவனித்துக்கொண்டுதான் வந்தேன். அவர் சாவோடு பகடையாடிக்கொண்டிருந்தார். அது அவரது வாழ்வின் மீதான பகடையாட்டமாகவும் இருந்தது. அவற்றைத்தான் அவர் கவிதையாக்கிக் கொண்டிருந்தார்.

அவர் இறந்துபோன செய்தியைச் சொல்வதற்காக எனது நண்பன் சரவனணை தொலைபேசியில் அழைத்தபோது, ‘எனக்கு இப்போது தான் மகேந்திரன் சொன்னான்’ நம்பமுடியாமல் நான் நெடுஞ்சாலையில் அழுதுகொண்டே நடந்துகொண்டிருக்கிறேன் என்று சொன்னான்.

அவனுக்கு குமரகுருபரனை தனிப்பட்ட முறையில் தெரியாது. கவிதை வழியாகத்தான் பழக்கம். ஒரு கவிஞன் இப்படி அகாலமாக சாவதை என்னால் சகித்துக்கொள்ளவே முடியவில்லை, இந்த கண்ணீரைத் தவிர நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை என்றான். அஞ்சலி என்பது இப்படித்தான் இருக்கமுடியும் என்று நினைத்தேன்.

குமரகுருபரன் எனும் கவிஞன் சாதித்தது இதைத்தான். அவனுக்கு என் அஞ்சலிகள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: