இலக்கியம் புத்தக அறிமுகம்

மீன்கள் இறந்த பின்னும் ஏன் உம்மென்று இருக்கின்றன?: மனுஷ்யபுத்திரன்

மனுஷ்யபுத்திரன்

’மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது’ என்ற தலைப்பை நான் தான் குமரனின் புத்தகத்திற்கு வைத்தேன், அது ஒரு துரதிஷ்டம் பிடித்த தலைப்பு என்று அப்போது எங்கள் இருவருக்குமே தெரியவில்லை

குமரனின் சாவு ஒரு கருநாகம் போல நெஞ்சில் படுத்திருக்கிறது. அவனது உடலை ஊருக்கு அனுப்பிவிட்டு இன்று மதியம் அவனது வீடு இருந்த தெருவில் நின்றுகொண்டிருந்தபோது வெய்யில் அமிலச் சொட்டாக இறங்கியது. கே.என் சிவராமன் என் தோளை தொட்டு அழுத்தியபோது தெருவில் நின்று கதறிவிடுவேன் போலிருந்தது. இன்று காலை கார்ல் மார்க்ஸ் தொலைபேசியில் தூக்கத்தில் எழுப்பி சொன்ன குமரனின் சாவுச் செய்தியைச் சொன்னபோது துவங்கிய பதட்டம் இன்னும் அடங்க மறுக்கிறது. மருத்துவமனையில் அவனது உடலை வைக்க கொண்டு வந்த கண்ணாடி சவப்பெட்டிகள் போதவே இல்லை. மூன்று முறை மாற்றி மாற்றி எடுத்து வந்தார்கள். உண்மையில் சவப்பெட்டிக்குள் செல்ல மறுத்து அவன் பிடிவாதம் பிடித்தான். வற்புறுத்தி அனுப்பி வைத்தோம்

பேருந்து நிலையத்திலிருந்து வந்தவன் வீட்டுப் படிக்கட்டுகளில் ஏறும்போது மயங்கி விழுந்துவிட்டதாகவும் செய்தி அறிந்து ஒடி வந்த குமரகுருபரனின் ஆட்டோ டிரைவர் அயலில் இருந்த இரண்டு மருத்துவர்களை அணுகியதாகவும் ஆனால் இருவருமே வர மறுத்துவிட்டதாகவும் அந்த டிரைவர் கூறினார். பிறகு இரண்டு தெரு தள்ளியிருந்தத மருத்துவ மனைக்கு ஓடி ஆம்புலன்ஸ் கேட்டபோது அங்கே ஆம்புலன்ஸ் டிரைவர் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். தானே ஓட்ட முடியும் என்று சொன்னபோது அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்துவிட்டார்கள். பிறகு ஆட்டோ டிரைவர் தன்னுடைய ஆட்டோவிலேயே ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டுவந்தபோது குமரன் இறந்துவிட்டிருந்தான்.

குமரனை கடந்த டிசம்பர் பெருவெள்ள தினங்களில்தான் முதன்முதலாக சந்த்தித்தேன். நான் மின்சாரம் இல்லாமல், உணவு கிடைக்காமல் கையில் காசு இல்லாமல் தவித்த அந்த நாட்களில் கொட்டும் மழையில் ஒரு ஆட்டோவில் ஒரு உயரமான மனிதன் வந்து செல்வியை சந்தித்து. ஒரு பெட்ரோல் கேன், பழங்கள், பிஸ்கட்டுகள், ஐயாயிரம் ரூபாய் பணம் இவ்வளவையும் கொடுத்துவிட்டு ’’ ஆத்மார்த்தி, கவிஞர் சிரமத்தில் இருப்பதாகச் சொன்னான்..அதான் வந்தேன்’’ என்றுகூறிச் சென்றான். பிறகு அது குமரகுருபரன் என்று அறிந்தேன் இரண்டு நாளைக்கு பிறகு ஒரு அந்தியில் என் குழந்தைகளுக்கு பெருக்கெடுத்து ஓடிய அடையாறு நதியை காட்டிவிட்டு நான் வீடு திரும்பியபோது என் யாருமற்ற வீட்டின் வாசலில் குமரகுருபரன் இருட்டில் எனக்காக காத்துக்கொண்டிருந்த்தான்.

ஆறு மாதத்தில் ஒரு மனிதன் இவ்வளவு நெருக்கத்தை உருவாக்க முடியுமா? இவ்வளவு நினைவுகளை உருவாக்க முடியுமா? எத்தனை சந்திப்புகள். எத்தனை மாலைப்பொழுதுகள். இந்த ஆறுமாதங்களில் எங்களது எல்லா விஷேச தினங்களிலும் குமரன் எங்களோடு இருந்தான். என் குழந்தைகளை நேசித்தான். என் நண்பர்களையெல்லாம் தன் நண்பர்களாக்கிகொண்டான். ஒரு வெளிச்சம்போல என் தனிமைக்குள் ஊடுருவி வந்தான். பாவி..இவ்வளவு பெரிய துக்கத்தைக் கொடுப்பதற்குத்தான் என்னை அவ்வளவு மழையில் தேடி வந்தாயா?

பத்து நாளைக்கு முன்பு குமரனை சந்தித்தேன். வரும்போதேல்லாம் அவன் எனக்கு ஏதாவது உண்பதற்கு வாங்கிவராமல் இருந்ததில்லை. என்னை ஒரு குழந்தையைப்போல நடத்தினான். அன்று ஒன்றுமே வாங்கிவரவில்லை. ‘’ சாப்பிட ஏதாவது வாங்க நினைத்தேன்..கையில் காசே இல்லை கவிஞரே …உங்களுக்கு இன்றைக்கு ஒரு பரிசு கொண்டு வந்திருக்கிறேன்..இது ரொம்ப நல்ல ஹெட் செட்..பாட்டு கேட்க பிரமாதமாக இருக்கும்’’ என்று சொல்லி அந்த ஹெட் செட்டை என் காதில் மாட்டி மொபைலில் ஒரு பாட்டை கேட்கச் செய்தான். ஆறாத் துயரத்தின் பாடலை கேட்பதற்கான ஹெட் செட் அது என்று எனக்குத் தெரியாது. இலக்கியம். சினிமா, மது , பெண்கள் . அரசியல் , அதிகாரம் என எங்களுக்குள் பேச எத்தனையோ பொதுப்புள்ளிகள் இருந்தன. ஆழமான அன்பும் நுட்பமான ரசனையும் அர்த்தமற்ற சினமும் குமரனை ஆட்கொண்டிருந்தது.

மூன்று நாளைக்கு முன் குமரன் தொலைபேசியில் அழைத்தபோது நான் அவனுக்கு இயல்விருது கிடைத்தற்கான வாழ்த்து செய்தியை எழுதிக்கொண்டிருந்தேன். ‘’ உனக்கு சாவே இல்லை..இப்போதுதான் உன்னைப் பற்றி எழுதிக்கொண்டிருந்தேன்…போனை வை..முடித்துவிட்டு பேசுகிறேன்’’ என்றேன்.

அப்புறம் பேசவே இல்லை

குமரனின் சாவுக்கு காரணங்கள் தேடவேண்டாம். சாவுக்கு எந்தக் காரணமும் இல்லை. நியாயமும் இல்லை. இன்று காலை குமரனின் உடலைப் பார்க்க போய்க்கொண்டிருந்தபோது சாலையில் விபத்தில் அடிபட்டு தலையில் ரத்தம் சொட்டிகொண்டிருந்த ஒரு முதியவரைப் பார்த்தேன். அவருக்கு என்ன நடந்தது என்று தெரியாது.

யாருக்கு எப்போது என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?

’மீன்கள் இறந்த பின்னும் ஏன் உம்மென்று இருக்கின்றன?’ என்று தன் கவிதையில் கேட்டான் குமரன்.

உன் எல்லா துக்கங்களும் தீர்ந்துவிட்டன. கொஞ்சம் நிம்மதியாக சிரி குமரா…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.