இலக்கியம் புத்தக அறிமுகம்

இந்த மரணம், நனவாகியிருக்கக்கூடாத கனவு: பொன். வாசுதேவன்

பொன். வாசுதேவன்

 எதையெதையோ எழுத நினைக்கிறது மனம். குறிப்பாக எனக்குள் அதிகம் உணர்வுக்குலையலை ஏற்படுத்திய மரணங்கள் குறித்து. மிக அதிகமில்லை வெகு சிலரது மரணம்தான். என்னுடைய பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வந்த தினம். மாலை செய்தித்தாளில்தான் தேர்வு முடிவுகள் வெளியாகும். செய்தித்தாள் மதுராந்தகம் வந்து சேர நான்கு மணி ஆகும் என்பதால் செங்கல்பட்டுக்குச் சென்று 2 மணிக்கே செய்தித்தாள் வாங்கி என்னுடைய தேர்வு எண்ணைப் பார்த்த மகிழ்ச்சியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். எங்கள் வீட்டின் அருகே பெரும்கூட்டம். எதிர்வீட்டில் இருந்த பழனி என்ற அண்ணன் அரளி விதை அரைத்துக் குடித்து இறந்துவிட்டார். பக்கத்து வீட்டில் குடியிருந்த புவனா என்ற அக்காவும் அவரும் காதலித்தனர். முதல் நாள் மாலை இருட்டும்வேளையில் வீட்டின் பின்புறம் இருக்கும் தோட்டப்பகுதியில் பேசிய போது பார்த்துவிட்டு யாரோ சொல்லியிருக்கிறார்கள். அந்த அக்கா தான் காதலிக்கவெல்லாம் இல்லை, சும்மா பேசினேன் என்று சொல்ல, அதற்காகதான் அரளி விதை அரைத்துக் குடித்திருக்கிறார். என்னை பாதித்த முதல் மரணம் இது.

அடுத்ததாக, அம்மாவின் தம்பி வாகன விபத்தில் இறந்த மரணம். என் அம்மாவின் மரணம் என்னை பாதித்தது என்றாலும் அது எதிர்பார்த்த மரணம்தான். உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களில் இறந்தார். என் அப்பாவின் மரணம் திடீரென நிகழ்ந்தது. அம்மா இறந்து மூன்றாம் வருடத்தின் நினைவு நாளின் காலைப் பொழுதில் அவர் இறந்தார். மயக்கமாக இருக்கிறது என்று சொல்லி தண்ணீர் கேட்டார். தண்ணீர் கொண்டுவந்து என் கையால் புகட்டியபோதே உள்ளிறங்காமல் வெளியே வழிந்தபடியே அவருடைய உயிரும் வெளியேறியது. என் கைகளில் தலை சாய்த்தபடி நிகழ்ந்த ஒரு மரணம். என்னுடைய மரணம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைத்துக் கொள்வேன். அப்படியொரு அமைதியான மரணம். எந்த வலியுமற்ற நிலையில் நடந்தது அது.

அம்மா, அப்பா மரணத்தின்போது பெரிதாக அழக்கூட இல்லை. முழுக்கவும் உணர்வு ரீதியான வலியையும், வேதனையையும் மட்டுமே உணர்ந்தேன். வலி, வேதனை எல்லாம் தாண்டி அதிகப்படியாக நான் கதறி தாங்க முடியாமல் அழுத ஒரே மரணம் நண்பர் மணிஜியின் மனைவி இறந்தபோது. அதுவும் பல நாட்கள் சிகிச்சையளித்துப் பலனில்லாமல் போய் இறந்தார். விபத்து நடந்த நாளில் இருந்து தொடர்ந்து பார்த்து நிச்சயம் உயிர் பிழைத்துவிடுவார்கள் என்ற நம்பிக்கையோடு இருந்த நிலையில் ஏற்பட்டுவிட்ட மரணம் அது. அதன்பின்னர் கவிஞர் குவளைக்கண்ணன் (ரவிக்குமார்) மரணம். அந்த மரணச்செய்தி கேட்டு ஓரிரவு முழுக்க மனம் அமைதியின்றிச் சுழன்றது. போன வருடத்தில் நிகழ்ந்த தோழி ராஜீயின் கணவர் விபத்தில் இறந்த அன்று அழுததுதான் கடைசி.

மரணத்தைப் பற்றி நிறைய எழுதியிருக்கிறேன். மரணத்தைத் தொட்டுவிட பலமுறை பல முயற்சிகளைச் செய்திருக்கிறேன். எல்லாவற்றையும் மீறி இன்று இருந்து கொண்டிருக்கிறேன். உறவுகளைப் பிரிவதும் மரணத்திற்கொப்பானதுதான். ஆனால், பிரிவுக்குப் பின் எங்கோ, எப்படியோ இருக்கிறோம் என்பதே ஒரு ஆசுவாசம். உங்க கவிதைத் தொகுப்பு எப்போதாங்க வரும் என்று கேட்ட குமாரிடம் திங்கள் (19.6.16) அன்று வந்துவிடும் என்று சொல்லியிருந்தேன். இன்று காலை 8.30க்கு எனக்கு இன்பாக்சில் இந்தச் செய்தி உண்மைதானா என்று குமார் பற்றியத் தகவல் வந்தது. உடனே கவிதாவுக்குப் போன் செய்தேன். எடுக்கவில்லை. அடுத்து வேடியப்பனிடம் பேசினேன். நேற்றிரவு கூட பேசினேனே என்றார். இது வதந்தியாக இருக்கும் என்றே நம்பினேன். பிறகு நேராக குமாருக்கே போன் செய்துவிடலாம் என்று அவருடைய எண்ணை அழைத்தேன். அழுகையும் வேதனையுமாக அந்தச் செய்தியை கவிதா உறுதிப்படுத்தினார்.

உண்மையைக்கூட பல சமயங்களில் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. நேற்றிரவு நன்றாக பேசியவர் இன்றில்லை. நிச்சயமின்மை என்பது வாழ்வின் சாசுவதம். இதற்குத்தானா இத்தனை போட்டிகளும், பொறாமைகளும் என்று தோன்றுகிறது. மருத்துவமனையில் குமாரைப் பார்த்தபோது உறங்குவதுபோலவே இருந்தது. இரண்டு மூன்று முறை போய்ப் பார்த்தேன். பிறகு ஆம்புலன்சில் ஏற்றும்போது உடலைப்பிடித்துத் தூக்க உடனிருந்தேன். சொல்லவொணா வேதனையில் மனம் உழன்றுகொண்டே இருக்கிறது. வீட்டில் வேறொரு முக்கிய நிகழ்வு. அதில் மனம் துளியும் ஒட்டவில்லை. எதற்கு, ஏன் என்ற கேள்விகள் அலைக்கழித்தபடி இருக்கிறது. உறங்க முடியாத இந்த இரவில் குமாரின் தொகுப்பை கையில் எடுத்து வைத்திருக்கிறேன். பெரிய நெருக்கங்கள் இல்லை. மானசீகக் காதல்தான். எப்படி என்று தெரியாது. போனில்தான் அடிக்கடி பேசியிருக்கிறோம். ஆனாலும் இந்த மரணம் என்னை அலைக்கழிக்கிறது. ஒரு கனவு போல இருக்கிறது இந்த மரணம். நனவாகியிருக்கக்கூடாத கனவு. இந்தக் கனவை மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது என்பதே சோகம் குமார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.