சமூகம் தமிழகம் மனித உரிமை மீறல்

காவல் நிலைய என்கவுண்டர்களுக்கு அரசு வழங்கிய இழப்பீடு என்ன?

Marx Anthonisamy

அ.மார்க்ஸ்
அ.மார்க்ஸ்
ஓசூரில் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட தலைமைக் காவலர் முனுசாமி குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடும், அவரது பிள்ளைகளின் கல்விச் செலவை ஏற்கவும் முதலமைச்சர் ஜெயா உத்தரவிட்டுள்ளார்.

நன்றிகளையும் பாராட்டுக்களையும் சொல்லிக் கொள்வோம். இது தொடர்பாக சம்பவத்தன்று என்னிடம் எக்ஸ்பிரஸ். ஹிண்டு ஆகிய பத்திரிகைகளில் கருத்துக் கேட்டபோது உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு வேலை தரவேண்டும் என்றுதான் சொன்னேன். கொல்லப்பட்ட காவலரின் மனைவி ஒரு அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை. பிள்ளைகள் படித்துக் கொண்டுள்ளனர் என்கிற வகையில் கல்விச் செலவை ஏற்றுக் கொள்ளுதல் என்பது வரவேற்கத்தக்கது.

இனி இப்படி உயிரிழப்புகள் ஏற்படாவண்ணம் இத்தகைய பணிகளில் ஈடுபடும் காவலர்களுக்கு உரிய பாதுகாப்புகள் கொடுப்பது தொடர்பாகவும் துறைவாரியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். தலைமை ஆசிரியை வெகு தொலைவில் பணியில் உள்ளார் என அறிகிறோம். அவருக்கு அருகில் உள்ள பள்ளி ஒன்றுக்கு இடமாற்றமும் தருவீர்கள் என நம்புகிறோம்.

# # #

ஒரு நல்ல தொகை இழப்பீடாகத் தந்துள்ளமைக்கு மீண்டும் நன்றி. எனினும் இந்த அடிப்படையில் முதலமைச்சருக்கு ஒரு வேண்டுகோளையும் முன்வைக்கிறோம். இனி இப்படியான பணி நேர உயிரிழப்புகள், விபத்து உயிரிழப்புகள் எல்லாவற்றிலும் இதே அளவில் இழப்பீடு மற்றும் உதவிகள் ஆகியவை தரப்படும் எனவும் முதலமைச்சர் அறிவிக்க வேண்டும். போலிஸ்காரர்களுக்கு மட்டும்தான் இந்த நீதி என்பதாக இது அமைந்துவிடக் கூடாது.

போலீஸ்காரர்கள் சுட்டு ஆறு தேவேந்திரகுல வேளாளர்கள் பரமக்குடியில் கொல்லப்பட்டபோது இதே ஜெ அரசு எவ்வளவு இழப்பீடு தந்தது என்பதை நம்மால் ஒரு கணம் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. போலீஸ் ஸ்டேஷன்களில் எத்தனை படுகொலைகள் நடக்கின்றன. சென்ற ஆண்டுகளில் நாகூரில், திருத்துறைபூண்டியில், சிதம்பரத்தில், நெல்லிக்குப்பத்தில்…. உடனடியாக நினைவுக்கு வருபவை இவை, காவல் நிலையக் கொலைகள் நடந்ததே, அம்மணி அப்போது எங்கே போயிற்று உங்களின் இந்த இரக்க மனம்.

பரமக்குடி கொலைகள் நடந்தவுடன் அது குறித்த சட்டமன்றத்திலேயே அடாவடித்தனமாக அறிக்கை விட்டது மட்டுமின்றி அடுத்த சில நாட்களில் காவலர்களுக்குப் பல சலுகைகளையும் நீங்கள் அறிவித்ததை மறக்க முடியவில்லை.

அதிமுக ஆட்சி என்றால் அது ஒரு போலீஸ் ஆட்சியாகத்தான் இருக்கும் என்றொரு கருத்து உண்டு. மீண்டும் மீண்டும் அதைத்தான் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளீர்கள் மேடம். திருக்கோவிலூரில் ஐந்து இருளர் சிறுமிகளை பெற்றோர் முன் கடத்திச் சென்று அவர்கள் கண்முன் சாலையோர யூகலிப்டஸ் காட்டில் வைத்து வன்புணர்ச்சி செய்தார்களே உங்கள் போலீஸ்காரர்கள ஐவர், அவர்களுக்கு உங்கள் ஆட்சியில் உரிய தண்டனை வழங்கப்பட்டதா மேடம்?

இன்னும் நான் நூறு எடுத்துக்காட்டுக்களைச் சொல்ல முடியும். ஆனால் உங்களால் ஒரு பதிலையும் சொல்ல முடியாது.

# # #

காவலர் முனுசாமியைக் கொன்ற கும்பலில் நான்கு பேர் இருந்துள்ளனர். அவர்களுள் மூர்த்தி எனும் ஒரு பதின் வயதுப் பையந்தான் அன்று அகப்பட்டுள்ளான், அவனை அங்கேயே கைகாலை ஒடித்துச் சென்று அடித்தே கொன்றுள்ளதாகத் தெரிகிறது. கொல்லப்பட்டு பலமணி நேரம் வரை பத்திரிகையாளர்களைக் கூட உடலைப் பார்க்க விடவில்லை. அது அப்பட்டமான ஒரு போலி என்கவுன்டர்.

இன்னும் மூவர் இன்னும் பிடிபடவில்லை எனவும் சிறப்புக் காவல் படை அமைத்துத் தேடப்படுகிறார்கள் எனவும் கால்துறை தரப்பில் சொல்லப்படுவதாகப் பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். யாரோ இரண்டு பேர் பிடிபட்டுள்ளதாக ஒரு கருத்தும் சொல்லப்படுகிறது. உண்மை என்னவென்று தெரியவில்லை. ஆனால் ஒன்று உறுதி. மற்ற மூவரையும் பிடித்துக் கொன்று விட்டுப் பின் என்கவுன்டர் கதையை விரிக்கப் போகிறார்கள் என்பதுதான் அது,

ஒரு பெண் காவலரின் நகையைத் திருடியவர்கள், பிடிக்கப்போன இடத்தில் ஒரு காவலரையே கொன்றவர்கள், இவர்களையெல்லாம் இப்படிப் பிடித்துக் கொல்வதுதான் சரி என்பதாக உருவாக்கப்பட்டுள்ள பொது மனநிலையை காவல்துறையும் ஜெயலலிதா அரசும் வெற்றிகரமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளன.

ஏற்கனவே சில ஆண்டுகள் முன் திருப்பாச்சி அருகில் குடிவெறியிலும் சாதி வெறியிலும் திளைத்திருந்த சுமார் 20 பேர் கொண்ட கும்பல் ஆல்வின் சுதன் எனும் ஒரு இளம் காவல்துறை அதிகாரியை வெட்டிக் கொன்றது. அவர்கள் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அவர்களில் யார் சுதனைக் கொன்றது என அவர்களுக்கே தெரியாது. அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய அதிகபடச தணடனை வழங்கப் பட்டிருக்க வேண்டும் என்பதில் நமக்குக் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் நடந்தது என்ன? என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளதுரை அந்தப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அப்போதே தெரிந்தது என்ன நடக்கப் போகிறது என. அந்த ஸ்பெஷலிஸ்ட் ஒரு நாள் சிறைக்குச் சென்று சும்மா இரண்டு பேரைத் தேர்வு செய்தார். அவர்களைக் கஸ்டடியில் எடுத்துக் கொண்டு வந்து கதறக் கதறச் சுட்டுக் கொன்றனர். இல்லையா? அவர்களில் ஒருவனின் இளம் மனைவிக்கும் பச்சைக் குழந்தைக்கும் என்ன இழப்பீடு அளிக்கப்பட்டது மேடம்? அந்தக் குழந்தையின் கல்விச் செலவு பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா?

அந்த இருவருக்கும் சுதனின் கொலைக்கும் நேரடித் தொடர்பு இல்லாமல் கூட இருந்திருக்கலாம். ஆனால் காவல்துறையைப் பொருத்த மட்டில் ஒரு போலீஸ்காரர் தாக்கப்பட்டால் குறைந்தது மக்களில் இருவராவது கொல்லப்பட வேண்டும். இது எழுதப்படாத விதி. இதற்கு அரசு ஆதரவு மட்டுமல்ல எதிர்க்கட்சிகளின் ஆதரவும் உண்டு. ஏனெனில் அவர்களும் இப்படிச் செய்தவர்கள்தான்.

ஓசூர் கொலையில் ஏற்கனவே ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். கஸ்டடியில் அவன் இறந்துள்ளான். இப்படியான சாவுகளில் அரசும் காவல்துறையும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நீதிமன்றங்கள் நெறிமுறைகளை வழங்கியுள்ளன. அந்த நெறிமுறைகளைப் பின்பற்றுவீர்களா மேடம்?

இன்னும் மூவரையும் பிடியுங்கள். அவர்கள் திருடியதற்கும் காவலரைக் கொன்றதற்கும் வலுவான ஆதாரங்கள் உள்ளன. அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி உரிய அதிகபட்சத் தண்டனையைப் பெற்றுக் கொடுங்கள்.

ஆனால் நீங்கள் அப்படிச் செய்யப் போவதில்லை. எங்களுக்குத் தெரியும் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என.

அ. மார்க்ஸ், ஓய்வு பெற்ற பேராசிரியர்; மனித உரிமை செயல்பாட்டாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: