திண்டுக்கல் மாவட்டம் பாலசமுத்திரத்தைச் சேர்ந்த என்.கணேசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “கொடைக்கானலில் தொடங்கும் ராஜவாய்க்கால் பாலசமுத்திரம், அய்யம்புலி கிராமங்கள் வழியாக பாலாறு அணையில் முடிவடைகிறது. இது இப்பகுதியின் முக்கிய நீராதாரம். பாலசமுத்திரத்தில் ராஜம்மாள் என்பவருக்கு சொந்தமான 4.88 ஏக்கர் நிலத்தை நடிகர் ஆர்.மாதவன் வாங்கினார். அந்த நிலம் வழியாக செல்லும் ராஜவாய்க்காலில் ஒரு பகுதியை நடிகர் மாதவன் ஆக்கிரமித்துள்ளார். இவருக்காக வாய்க்காலில் மின் கம்பங்களை மின்வாரிய அதிகாரிகள் பொருத்தியுள்ளனர். இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தோம். இதையடுத்து மின்வாரிய செயற்பொறியாளர் ஆய்வு நடத்த ஆட்சியர் உத்தரவிட்டார். ஆனால், ராஜவாய்க்கால் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லை என்று செயற்பொறியாளர் தவறான அறிக்கையைத் தாக்கல் செய்தார். இதுகுறித்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.கோகுல்தாஸ் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் நடிகர் மாதவன் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.