இயக்குநர் அஷுதோஷ் கோவரிகரின் நல்ல சினிமாவுக்கான தேடல், பிரம்மாண்ட அரங்க வடிவமைப்பு, மிகப் பெரிய நட்சத்திரங்கள் என்பதாக முடிந்திருக்கிறது. ஹிந்தி பட இயக்குநர்கள், திடீரென, வரவேற்புக்குரிய வகையில் வரலாற்று நிகழ்வுகள் மீது ஆர்வம் வந்திருக்கிறது. இவர்களுடைய வரலாற்றுப் பார்வையில் உள்ள கோளாறுகள், மேம்பட்ட பார்வையாளர்களுக்கு இது கசப்பை சுவைத்தது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. சஞ்சய் லீலா பன்சாலியின் பாஜிராவ் மஸ்தானி சளைக்காத ஹிந்து போர்வீரனாக வடிவமைக்கப்பட்டார். காவிக் கொடி ஏந்தி, இந்தியாவின் எதிரிகளான முகலாயர்களை வீழ்த்துவதுதான் அவரின் ஒரே குறிக்கோள் என்பதாகக் காட்டப்பட்டது. நவீன இந்தியா உருவாகாத நிலையில் முகலாய பேரரசு கலிபா ஆட்சியாக இல்லாத நிலையில், சஞ்சய் லீலா பன்சாலியால் இந்த உண்மை திரிக்கப்பட்டது.

தற்போது, ஒரு வரலாற்று திரைப்படம் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது, ஆனால் தவறான காரணங்களுக்காக!

லகான் (2001), ஜோதா அக்பர் (2008) புகழ் கோவரிகர், சமீபத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மொகஹஞ்சதாரோ படத்தில் ட்ரெயிலரை வெளியிட்டார். இது கோவரிகரின் தலைச்சிறந்த படைப்பாக மட்டுமல்லாமல், வெளியான இந்தியப் படங்களிலேயே மிகப்பெரியதாகவும் சொல்லப்பட்டது. எதிர்பாராத விதமாக, இந்த ட்ரெயிலர், இந்த நாகரிகம் குறித்து உண்மைக்கு மாறான திரிக்கப்பட்ட முயற்சியாகவே தெரிகிறது.

மொஹஞ்சதாரோ..சிந்து வெளி அல்லது ஹரப்பா நாகரிகத்தின் மிகப் பெரும் நகரங்களில் ஒன்று; உலகின் முதன்மை நகரங்களில் ஒன்றின் கதை இது.கோவரிகர் இதன் காலத்தை கிமு 2016 என ட்ரெயிலர் மூலம் தெரிவிக்கிறார். இவை எல்லாவற்றையும்விட, இந்த பழம்பெரும் நாகரித்தின் அனைத்து அம்சங்களுமே தவறானவை.

ட்ரெயிலரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் சமஸ்கிருத மயமாக்கப்பட்ட ஹிந்தியின் அதீத பயன்பாடு, இதே போன்ற மொழிதான் அங்கே பேசப்பட்டிருக்கும் என ஒருவரை நம்ப வைத்துவிடும். இது குறித்து எவ்வித அறிவிப்பையும் ட்ரெயிலரில் காண்பிக்கவில்லை. தொழில்முறை வரலாற்றஞர்கள், தொல்லியலாளர்கள், இந்தியவியல் ஆய்வாளர்கள் வெண்கல யுகத்தின் பல மொழி பயன்பாடு இருந்திருக்கலாம் அல்லது மொழியே இல்லாமல் இருந்திருக்கலாம் என்கிறார்கள். அங்கே சம்ஸ்கிருதத்தைப் போன்ற மொழி பேசப்பட்டதாகவோ எழுதப்பட்டதாகவோ எவ்வித ஆதாரமும் இல்லை.

ஹிந்தி வசனங்கள், சினிமாவுக்கான சுதந்திரம் என்பதாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், கல்வெட்டுகளில் எழுதப்பட்டதாகக் காட்டப்படும் சமஸ்கிருதமயமாக்கப்பட்ட ஹிந்தி எழுத்துக்கள், ரிக் வேத காலத்துக்கும் ஹரப்பா நாகரிகத்தின் காலத்துக்கும் முடிச்சு போடும் ஹிந்துத்துவ பிரச்சாரர்களின்  கருத்துக்கு வலுசேர்க்கவே பயன்படும். நாயகனாக நடிக்கும் ஹிருத்திக் ரோஷன், நாயகியாகத் தோன்றும் பூஜா ஹெக்டேவிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் வசனங்களைப் படியுங்கள்: “து மெரி சங்ஹானி ஹை”(நீ என்னுடைய இணை). இந்த வசனம் நடைமுறை மொழிக்கும் எழுத்து மொழிக்கும் மாறி மாறி பயணிக்கிறது.

குதிரை முத்திரை தொடர்பான விவாதம்:

மொழி அரசியல் இந்த விவகாரத்தில் முக்கியமானது. 1999-ஆம் ஆண்டு அமெரிக்க வாழ் ஹிந்துத்துவ கோட்பாட்டாளர் என். எஸ். ராஜாராம் மற்றும் தொல்லியல் வரைபட நிபுணர் நட்வர் ஜா ஆகியோர் தாங்கள் இணைந்து எழுதிய The Deciphered Indus Script: Methodology, Readings, Interpretations என்ற நூலில் ஹரப்பா எழுத்து சமஸ்கிருத குடும்பத்திலிருந்து வந்தது என்கிறார்கள். அவர்கள் ஹரப்பாவின் தொல்லியலை வேத இலக்கியங்களுடன் தொடர்பு படுத்தினர். சிந்து சமவெளி நாகரிகத்துக்கு 2000 ஆண்டுகளுக்குப் பிறகே, ரிக் வேத காலம் வந்திருக்க வேண்டும் என்று தொழில்முறை வரலாற்று அறிஞர்களின் ஆய்வு இதுவரை சொன்னது; இந்த இரண்டுக்கும் இயற்கையான உறவு எதுவும் இல்லை என்பதும் அவர்களின் தீர்க்கமான கருத்தாக இருந்தது.

ராஜாராமின் கருதுகோள், ஹிந்துத்துவ கோட்பாளர்கள் முன்வைத்த அத்தனை புள்ளிகளையும் எவ்வித ஆதாரமும் இன்றி இணைப்பதாக இருந்தது. இவருடைய கருதுகோள், ஹிந்து வலதுசாரிகளை கொண்டாடச் செய்தது. தொழிற்முறை வரலாற்றாசிரியர் முன்வைத்த ஆரியர்கள் இந்திய பூர்வ குடிகள் அல்ல; அவர்கள் குடியேறிகள் என்கிற கோட்பாட்டை தள்ளிவைத்து, இந்தியாவின் ஒளிமயமான இறந்த காலத்தை சிதைத்தது அந்நியரின் (முஸ்லிம்) படையெடுப்பே என்பதை நிருவ முயன்றார்கள் . ஆரியர்கள் இந்தியாவில் வசித்தவர்களே, அவர்களே ‘அறிவியல்பூர்வமான’ வேத காலத்தை நிருவியவர்கள் என்பதை நம்பினர்.

ராஜாராமும் ஜாவும் ஹரப்பா நாகரிகத்தில் குதிரை இருந்தது என்றார்கள். ‘Mackay 453’என்ற முறையைப் பயன்படுத்தி ஒற்றைக் கொம்பு காளையை கொம்பு முளைத்த குதிரை என்றார்கள். ஆனால் ஆய்வின் படி ஆரியர்களின் புலம்பெயர்வுக்குப் பிறகே குதிரைகள் இங்கே கொண்டுவரப்பட்டன. தொழிற்முறை கோட்பாட்டின் படி, குதிரைகள் கிமு 1500ல் ஆரியர்களால் கொண்டுவரப்பட்டவை. மாடுகளின் மூலம் நகர்ந்த இந்திய மக்களை அடிபணிய வைக்க வேகமான குதிரைகளை ஆரியர்கள் பயன்படுத்தினர். ஆனால் வலதுசாரி வரலாற்றாசிரியார் இவற்றை நிராகரித்து இந்திய கலாச்சாரத்தில் குதிரைகளும் அங்கமானவே என்றார்கள்.

வேத இலக்கியம் குதிரைகள் குறித்து நிறையவே பேசுகிறது. ஆனால் வேத காலத்துக்கு முன்பு இந்த விலங்கு குறித்து எவ்வித ஆதாரங்களும் கிடைக்கப்பெறவில்லை.  எனவே, ராஜாராம், ஜா ஆகியோர் ஹரப்பா நாகரிகத்தில் குதிரை இருந்தது என வலியுறுத்திய மிகப் பெரும் கண்டுபிடிப்பு என கொண்டாடப்பட்டது.

A Harappan unicorn seal, displayed at the Indian Museum. Credit: Wikipedia

ஹரப்பாவில் கண்டெடுக்கப்பட்ட ஒற்றைக் கொம்பு விலங்கின் முத்திரை..

இந்த மிகப்பெரிய கருதுகோள், வெகுவிரைவிலேயே உடைக்கப்பட்டது. ஹார்வர்டு பல்கலைகழக இந்தியவியல் ஆய்வாளர் மிக்கேல் விட்ஸெல் மற்றும் ஒப்பீட்டு வரலாற்றாசிரியர் ஸ்டீவ் ஃபார்மர்  இந்த கருதுகோளை வரிக்கு வரி ஆதாரங்களை முன்வைத்து நிராகரித்தார்கள்.  ராஜாராம் இந்த முத்திரையை கணினி மூலம் மெருகேற்றி ஜோடித்ததையும் நிரூபித்தது மட்டுமல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறைகளில் இந்த கருதுகோளை சொல்லவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.

“இந்த குதிரை முத்திரை ராஜாராம் நூலில் ஒரே ஒரு ஏமாற்று. வேத சமஸ்கிருத அறிவு குறித்து இன்னும் மேம்பட்ட ஆய்வு தேவைப்படுகிறது. இறுதி வேத காலத்தின் சமஸ்கிருதமே ஹரப்பாவின் மொழி என்கிறார் ராஜாராம். இது மொழியியல், தொல்லியல் உள்ளிட்ட துறைகளின் ஆய்வுகளிலிலிருந்து மாறுபடுகிறது.  முதிர்ச்சியடைந்த ஹரப்பா கலாச்சாரத்திற்கு 2 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகுகூட  வேத இறுதி காலம் இல்லை என்பதே உண்மை” என்றனர்.

ராஜாராம் போன்ற ஹிந்துத்துவ திருத்தல்வாதிகள், ரிக் வேத காலம் என்பது 4 அல்லது 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மூத்தது என்று தள்ளுகிறார்கள், இந்த பிரச்சினை மோசமானது. இத்தகையவர்களுக்கு பழக்கப்பட்ட குதிரைகள், குதிரை வண்டிகளை தெற்காசியாவில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு எங்கேனும் இருந்ததா என்று தேடுவது கட்டாயமாகிறது.  ஆனால், ஆதாரங்கள்  கிமு 2000க்கு முன்பும் கிமு 1700ன் முடிவிலும்கூட இந்தியாவில் குதிரைகள் இல்லை என்பதையே காட்டுகின்றன.  போலன் வழித்தடத்தில் இந்திய பகுதிகளுக்கு இந்த காலத்தில் வந்ததாக தொல்லியல் கணக்கின்படி தெரியவருகிறது.

சுருக்கமாக சொல்லப்போனால், சிந்து வெளி நாகரிக காலமே இந்தியாவின் பழமையான வேத கால என நிருவுவதற்கே ஹிந்து வலதுசாரிகள் எப்போது முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

வரலாற்றாசிரியர் ரோமிலா தாப்பார், ராஜாராமின் கருதுகோளை விமர்சிக்கும்போது..

“ராஜாராம், அந்தக் குறிப்பிட்ட முத்திரை குதிரையினுடையதாக இருக்கும் என்று திணிப்பதன் மூலம், சிந்து வெளி நாகரிகம், அதாவது ஆரிய நாகரிகத்தில் குதிரை முக்கியமானது என  சொல்லவருகிறார் என கொள்வோம். விட்ஸெல், ஃபார்மல் தங்களுடைய கட்டுரையில் குறிப்பிட்டதுபோல, அந்த முத்திரை கணினி மூலம் மெருகேற்றப்பட்டது,  அந்தப் படத்தில் இருக்கும் விலங்கு குதிரை அல்ல என்பது தெளிவாகிறது என்பது ஒரு புறம் இருக்க, வேத காலத்தின், சிந்து வெளி நாகரிக்கத்தின் மையமாக குதிரை இருந்திருக்குமானால், அங்கே ஏராளமான குதிரை முத்திரைகள் கிடைத்திருக்கும். ஆனால் எண்ணற்ற முத்திரைகள் ஒற்றைக் கொம்பு காளையினுடையதாகவே உள்ளன”.

கோவரிகரின் டீஸர் தெளிவாக இதைத் தவறாகக் காட்டுகிறது.  ராஜாராமின் ‘Mackay 453’ அல்லது புகழ்பெற்ற குதிரை முத்திரையை இதில் பார்வைக்கு வைத்து, மொஹஞ்சதாரோவில் அரேபியக் குதிரைகள் இருந்ததாக நிருவ முயல்கிறது.

சிந்துவெளி நாகரிகத்தில் சமஸ்கிருதத்தின் ஒரு வடிவமான மொழி பேசப்பட்டதென்று நிரூபிப்பது ஆரிய நாகரிகத்தின் தேவையாக இருக்கிறது. இதன் மூலம் ஆரிய இருப்பை கண்டறிய முயல்கிறார்கள். அது தற்போது குதிரை அல்லது குதிரை பூட்டப்பட்ட தேரை கண்டுபிடிப்பதாக வந்து நிற்கிறது என்கிறார் ரோமிலா தாப்பர். இந்த மொழி சமஸ்கிருதமாக இருக்கலாம் என நிரூபிக்க முனைந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்திருக்கின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். பிரித்தறிய முடியாத எழுத்துக்களை படிக்க சில மொழியியல் விதிகள் உள்ளன. இதன் மூலம் முன்வைக்கும் கருதுகோள்களை ஆராய முடியும். இப்படிப்பட்ட முறைகளில் எழுத்துக்களைப் படிப்பதென்பது நிலைத்தன்மையுடையதாக இருக்க வேண்டும். இவை அனைத்தையும் ராஜாராம், ஜாவின் ஆய்வில் இல்லை என்பதையும் தாப்பர் சொல்கிறார்.

ஹிந்துத்துவ பிரச்சாரத்துக்கு மொஹஞ்சதாரோவின் டீஸர் பொருத்தாக உள்ளது. ஆரம்பக்கட்ட விளம்பரங்கள், அரங்க வடிவமைப்பு ரோமப் பேரரசின் காவியத்தன்மை வாய்ந்த கிளாடியேட்டரை நினைவுபடுத்துகின்றன. கோரிவரிகர் சொல்லும் வரலாற்று விவரங்கள், உண்மையிலிருந்து கணிசமான அளவு விலகியிருக்கின்றன.

நிருபிக்கப்படாத தவறான கருதுகோளான சிந்துவெளி நாகரிகம்தான் உலகின் மூத்த நாகரிகம் என்பதை வலதுசாரி கோட்பாட்டாளர்கள் நீண்ட காலத்துக்கு முன்பே நிறுவப் பார்த்தனர். தொழிற்முறை வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி மெசபடோமிய, எகிப்திய நாகரிகங்களே பழமையானவை. ஹரப்பா நாகரிகத்தை நன்கு ஆராய்ந்த பிறகே, இந்த ஆய்வுக்கு அங்கு கண்டெடுக்கப்பட்ட மண்பாண்ட முத்திரைகள், செம்பின் பயன்பாடு, எடை அளவுகளின் பயன்பாடு, நகர வடிவமைப்பு மற்றும் பலவற்றை உட்படுத்தினர்.

ஹிந்துத்துவ உணர்வுக்கு தீணிபோடுவதற்காகவே கோவரிகர், சமஸ்கிருதமயமாக்கப்பட்ட ஹிந்திக்கும் குதிரைக்கும் இந்தப் படத்தில் கூடுதல் கவனம் தந்திருக்கிறார். மக்களின் ஊடகங்களான பாலிவுட் போன்றவையும் கூட அரசியல் நீக்கம் செய்யப்பட்டவையாக இல்லை என்பதையே இது காட்டுகிறது. சந்தேகமில்லாமல், இறந்துபோன குதிரை மீது சாட்டையை வீச ஹிந்து வலதுசாரிகளுக்கு இந்தப்படம் மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கிறது.