R.r. Srinivasan

யார் இந்த பியூஸ் மனுஷ்?

– ஒரு காலத்தில் குப்பைகளாலும், கழிவுகளாலும் அழிந்து போன 53 ஏக்கர் பரப்பளவு கொண்ட சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள மூக்கனேரியினை அரசாங்கத்தின் எந்த ஒரு நிதி உதவியுமின்றி பொது மக்களை ஒன்றிணைத்து 50 லட்சம் செலவில் மீட்டெடுத்து இன்று அந்த பகுதி மக்களுக்கான நீராதாமாய் மாற்றியுள்ளார்
குறிப்பு: சென்னையில் 10 ஏக்கர் பரப்பளவுள்ள சேத்துப்பட்டு ஏரியினை புனரமைக்க அரசாங்கம் செலவழித்த தொகை 43 கோடி.

– தர்மபுரியில் வற்றிப்போன எட்டிமரத்துப்பட்டியில் உள்ள ஓடையை, அதன் அருகில் நூற்றைம்பது ஏக்கர் பரப்பளவில் காட்டை வளர்த்து, அதிக அளவில் மழை சேகரிப்பு குட்டைகளும், குழிகளும் தோண்டி மழை நீரை சேமித்து இன்று வருடம் முழுவதும், எந்த ஒரு வறட்சியிலும் நீர் ஓடும் வற்றாத ஓடையாக மாற்றியுள்ளார். இதன் மூலம் பாசனத்திற்காக நீர் பெரும் கிராமங்களின் எண்ணிக்கை 17.

குறிப்பு: கோடிக்கணக்கான செலவில் நதிநீர் இணைப்பை பற்றி பேசும் அரசாங்கத்தின் முன்பு இவர் செலவழித்த தொகை சில இலட்சங்களில்.

– சேலத்தில் நீர் பிடிப்பு மழைகளான கவுத்திமலை, கல்வராயன் மலையின் கீழ் இரும்பு இருப்பதை கண்டு, அந்த மலைகளை தகர்த்து எரிந்து விட்டு அடியில் இருக்கும் இரும்பை எடுக்க முயன்ற ஜிண்டால் நிறுவனத்தை எதிர்த்து போராடி வெற்றி கண்டவர்.
குறிப்பு: இந்த திட்டத்துக்கு அனுமதி கொடுத்தது அரசு, தடுத்து நிறுத்தியது. இவரும் சேலம் மக்கள் குழு நண்பர்களும்.

– கடந்த வாரம் நிகழ்ந்த சகோதிரி வினுப்ரியாவின் தற்கொலைக்கு நடிவடிக்கை எடுக்க மெத்தனம் காட்டிய சேலம் காவல்துறையை கண்டித்து தொடர்ந்து போராடி வருகிறார்.
குறிப்பு: காவல்துறை குற்றவாளியை பிடிப்பதற்கும் கூட நாம் போராடித்தான் அவர்கள் பணியினை செய்யவைக்க வேண்டியுள்ளது.

கைதுசெய்யப்பட்ட பியூஸ் மனுஷ் அமைப்பினருடன்
கைதுசெய்யப்பட்ட பியூஸ் மனுஷ் அமைப்பினருடன்

– சேலத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமான மேட்டூர் அணையில் கேம்பிளாஸ்ட் நிறுவனம் கொட்டும் கழிவுகளில் சயனைடு இருப்பதை அறிந்து அதனை தங்களது தொடர் போராட்டத்தில் தடுத்து நிறுத்தியவர் பியூஸ் மற்றும் தோழர்கள்.
குறிப்பு: கழிவுகள் கொட்டப்படவேண்டியதினை தடுத்து நிறுத்தவேண்டியது அரசு, தடுக்க போராடியது பியூஸ்.

– கடந்த ஆண்டு நிகழ்ந்த சென்னை, கடலூர் வெள்ள சேதத்திற்கு சேலம் மக்களை ஒன்று திரட்டி 35 கண்டைனர் முழுக்க தேவையான பொருட்களை சேலம் மக்களிடம் பெற்று சென்னைக்கும் கடலூருக்கும் இரவு, பகல் பாராமல் அனுப்பிவைத்து கொண்டிருந்தது பியூஸ் மற்றும் சேலம் மக்கள் குழுவினர்.
குறிப்பு: மக்கள் பேரிடர்களில் தவிக்கும் வேளைகளில் உடனடியாக அவர்களை மீட்டு உதவி புரியவேண்டியது அரசு.

– சேலத்தில் இதுவரையில் நான்கு ஏரிகள்(மூக்கனேரி, அம்மாபேட்டை, குண்டுகள் ஏரி, இஸ்மாயில்கான் ஏரி), இரண்டு தெப்பக்குளங்களை(அரிசிப்பாளையம், பள்ளப்பட்டி) அழிவில் இருந்து மீட்டெடுத்து இன்று அந்த பகுதியின் முக்கியமான நீர் ஆதாரமாக மாற்றியது பியூஸ் மற்றும் சேலம் மக்கள் குழு தோழர்கள்.

இப்படி பல சமூக பணிகளுக்காக தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கும் பியூஸ் மற்றும் தோழர்களை தான் நேற்று சேலம் காவல்துறை கைது செய்து பிணையில் வர இயலாத பிரிவுகளில் வழக்கு தொடுத்து சிறையில் அடைத்துள்ளது.

சேலத்தில் வசிக்கும் அனைத்து நண்பர்களும் இன்று சந்தித்து வரும் பெரும் பிரச்சனை போக்குவரத்து. சரியாக திட்டமிடாமல் ஒரே நேரத்தில் பல்வேறு மேம்பால கட்டுமான பணிகளை ஆரம்பித்து செய்து வருவதே இதற்கான காரணமும். இப்பொழுது இருக்கும் போக்குவரத்து மேலும் மோசமாகாமல் இருக்க முள்ளுவாடி மேம்பால பணிகளை தொடங்குவதற்கு முன்பு மாற்று தற்காலிக வழி பாதையை கட்டமைத்துவிட்டு பணியை தொடங்கவும், மேலும் அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முறையாக அறிவிப்பு கொடுத்து சட்டப்படி நிலத்தை கையகப்படுத்திவிட்டு பணியை தொடங்கவும் வலியுறுத்திய காரணத்திற்காக தான் பியூஸ் மற்றும் தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு தொடர்ந்து அரசு செய்ய வேண்டிய பணிகளை அவர்களை செய்ய விடாமல் இவர் எடுத்து செய்து கொண்டிருப்பதற்காகவும், முறைப்படி செய்ய வலியுறுத்தியதற்கும் அவர் மீது “கொலை மிரட்டல்” வழக்கு போட்டு சிறையில் அடைத்திருக்கும் சேலம் காவல்துறைக்கு நன்றிகளும், பாராட்டுகளும்.

ஆர்.ஆர். சீனிவாசன், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்.