திருவண்ணாமலை கிரிவலப்பாதையை அகலப்படுத்தும் விதமாக சாலையோரம் உள்ள மரங்களை வெட்டும் பணியை அரசு செய்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பசுமைத் தீர்ப்பாயம் தாமே முன்வந்து மரங்களை வெட்டக்கூடாது என அறிவுறுத்தியது. மரம் வெட்டும்  பணி நிறுத்தப்பட்ட நிலையில், இரவு நேரங்களில் மரம் வெட்டும் பணி தொடர்வதாக சூழலியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மரங்களை பாதுகாக்க போராட்டத்தில் இறங்குவோம் என அறிவித்துள்ளது மலைவலப் பாதை சூழல் பாதுகாப்புக்குழு. இக்குழு சார்பில் கருப்பு கருணா தனது முகநூல் பதிவில் விடுத்துள்ள அழைப்பு…

“திருவண்ணாமலை மலை சுற்றும் சாலையை விரிவுபடுத்துவது என்ற பெயரில் அங்கிருக்கும் பல நூறாண்டு முதிர்ந்த மருத்துவகுணம் கொண்ட அபூர்வ மரங்களை வெட்டித்தள்ள மாவட்ட நிர்வாகம் முடிவு செய்து அந்த ” திருப்பணி” யும் செவ்வனே துவங்கியுள்ளது. இதற்கு மக்கள் எதிர்ப்பு காட்டியதை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் , இனி மரங்கள் வெட்டப்படாது என மாவட்ட ஆட்சியர் வாய்மொழி உறுதியளித்தார். விஷயத்தை கேள்விப்பட்ட பசுமைத்தீர்ப்பாயம் தாமே முன்வந்து இதை ஒரு வழக்காக எடுத்துக்கொண்டு மரங்களை வெட்ட த்ற்காலிக தடை விதித்துள்ளது. ஆனாலும்கூட மரம் வெட்டும் வேலை இரவு நேரங்களில் நடப்பதாக செய்திகள் வருவது அதிர்ச்சியும் கவலையும் அளிக்கிறது.

இவ்விஷயத்தில் திருவண்ணாமலையிலுள்ள அனைத்து கட்சிகள், அமைப்புகள், சமூக ஆர்வலர்களிடையே ஒருமித்த கருத்தை உருவாக்கவும், மக்கள் பங்கேற்கும் களப்போராட்டங்களை நடத்தவும் வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது. இதற்காக வரும் 17 ஆம் தேதி, ஞாயிறன்று காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிகள், அமைப்புகளின் ஆலோசனைக்கூட்டம் திருவண்ணாமலையில் கூடுகிறது.

அன்று காலை 7 மணிக்கு செங்கம் சாலையில் கிரிவலப்பாதை துவங்குமிடத்திலிருந்து ” சோண நதி காட்டுக்கு ஒரு பயணம் ” நிகழ்வும் நடக்கிறது. காட்டுக்கு நேரில் சென்று பார்த்தால்தான் அதன் அருமையும் தேவையையும் அதை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தையும் உணரமுடியுமென்பதாலேயே இந்த நிகழ்வுக்கு திட்டமிட்டுள்ளோம்.

இவ்விரு நிகழ்வுக்கும் திருவண்ணாமலையிலுள்ள அமைப்புகள், கட்சிகள், தன்னார்வ நண்பர்கள், இயற்கை நேயர்கள் அனைவரையும் தோழமையுடன் அழைக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.