முகிலன்

ஈரோடு மாவட்டம் -பவானி வட்டம், பெருந்தலையூர் ஊராட்ச்சிக்கு உட்பட்ட செரையாம்பாளையம் என்ற கிராமத்தில் “சாரல் பசுமை தன்னார்வ அமைப்பு” என்ற அமைப்பினர் கடந்த சில ஆண்டுகளாக தங்கள் முன்முயற்சியில் ஊரில் உள்ள பல்வேறு அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த நசசு மரமான வேலிக்கருவை என்ற சீமை கருவேல மரத்தை அழித்து மண்ணை பண்படுத்தி, சுமார் 700 மரங்கள் (ஆல்-அரசு- வேம்பு-பழம் தரும் மரம்கள்) நட்டு வளர்த்து, முன்மாதிரியாக இருந்து வருகின்றனர்.

அங்கு 100 ஆண்டுகள் ஆன பாரம்பரிய ஆலமரமும் உள்ளது. அங்கு நேற்று(13-07-2016, புதன்) திடீர் என சிலர் வந்து இந்த வழியாக மின்சார டவர் லைன் ஒன்று வர உள்ளது என மார்க் செய்துள்ளனர். மின்சார டவர் லைன் கொண்டு வர உள்ள வழித்தடத்தில் 50 க்கு மேற்பட்ட மரங்களுடன் 100 ஆண்டுகள் பழமை ஆன ஆலமரமும் வெட்டப்பட நேற்று மின்வாரிய பொறியாளரால் மார்க் செய்யப்பட்டது. மரத்தை வெட்டக் கூடாது என ஊர் மக்கள் சொன்னதற்கு, உங்களுக்கு தகவல், அதற்கு மேல் உங்களிடம் பேசிக் கொண்டுருக்க முடியாது என திமிராக பேசி சென்றுள்ளார் மின்வாரிய பொறியாளர்.

மின்சார டவர் லைன், ஆலமரமும் பாதிக்கப்படாமல் கொண்டு செல்ல மாற்று வழி இருந்தும் அந்த ஆலமரத்தை இன்று (14-07-2016, வியாழன்) வெட்டியே கொண்டு செல்வது என்ற முடிவை எடுத்து இன்று காலை 08.20 க்கு ஜே.சி பி .எந்திரத்தை ஒப்பந்தக்காரர்கள் கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக நேற்று இரவு அப்பகுதி (செரையாம்பாளையம்) மக்கள் கவுந்தப்பாடி வழக்கறிஞர் .நதியா அவர்கள் மூலம் என்னை தொடர்பு கொண்டனர்.அப்போது அவர்களுக்கு பல்வேறு வழிமுறைகளை எப்படி செயல்படுத்தலாம் எனக் கூறினேன்.

நான் செரையாம்பாளையம் ஊர்மக்களின் வற்புறுத்தலின் பேரில் இன்று காலை 08.30 க்கு செரையாம்பாளையம் சென்றடைந்தேன்.

ஆலமரத்தை வெட்ட ஒப்பந்தக்காரர்கள், அவர்களது ஆட்களைக் கூட்டிக் கொண்டும் ஜே.சி .பி எந்திரத்தையும் கொண்டு வந்தவுடன் செரையாம்பாளையத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் -பெண்களும் ஆலமரத்தை சுற்றி வளைத்து கோபாவேசத்துடன் நின்று கொண்டிரூந்தனர்..

நான் அங்கு சென்றவுடன் ஒப்பந்தக்காரர்களிடம் இம்மரத்தை வெட்ட கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை காட்டுங்கள் என்றேன். உடனே ஒப்பந்தக்காரர் திருதிரு என விழித்தார். அது மின்வாரிய பொறியாளரிடம் இருக்கும். அவர் வரும் போது கொண்டு வருவார் என்றார்.

தங்கள் கடவுள் போல் மதிக்கும் ஆலமரத்தை சுற்றி வளைத்து நின்று கொண்டிருந்த மக்கள், தனது கைகளை சங்கிலிகளாக கோர்த்துக் கொண்டு மரம் முழுக்க சுற்றி வளைத்து நின்று, அரசு மரத்தை வெட்ட அனுமதி கொடுத்ததை கண்டித்தும், மரத்தை வெட்ட விட மாட்டோம் என்றும், அரசின் மரம் வளர்ப்பு சந்தர்ப்பவாத செயல்பாட்டை கண்டித்தும் முழக்கம் இட்டனர். அங்கு போர்க்களம் போல் மக்களின் கண்டன முழக்கம் எதிரொலித்தது.

மக்கள் ஆலமரத்தை விட்டு அதை அழிக்க வந்த ராட்சசனான ஜே.சி .பி எந்திரத்தை நகர விடாமல் மறித்து நின்று கோபமாக தனது கண்டனக் குரலை எழுப்பினார்கள். ஒன்றுபட்டு அவர்கள் எழுப்பிய ஆவேச முழக்கம் பவானி ஆற்றின் இரு கரைகளிலும் எதிரொலித்தது.

நான் ஒப்பந்தக்காரரிடம் மரத்தை வெட்டும் போது துறை சார்ந்த அதிகாரிகள் ( இது புறம்போக்கு என்பதால் வருவாய்த்துறை அதிகாரி, மின்சாரத்திற்கு என்பதால் மின்வாரிய அதிகாரி) இல்லாமல் வெட்டக் கூடாது என்பதை தெரிவித்து, அதிகாரிகள் இல்லாமல் எப்படி இங்கு வந்தீர்கள் எனக் கேட்டேன். அவர் பதில் சொல்ல திணறினார். உடனே மின்வாரிய பொறியாளரின் அலைபேசி எண்ணை வாங்கி அவரை இங்கு எப்போது வருவீர்கள் என்றேன். அவர் எனது மேலதிகாரியை பார்க்க பெருந்துறையில் உள்ளேன். அவரைப் பார்த்து விட்டு வந்து விடுகிறேன் என்றார். நாங்கள் நீங்கள் வரும் வரை காத்திருக்கிறோம் என்றேன்.

உடனே மரத்தை வெட்ட வந்த ஜே.சி .பி ஓட்டுநர், தனது ஜே.சி .பி வண்டியை எடுத்துக் கொண்டு ஊரை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தார்.

மக்களிடம் நான், மக்கள் போராட்டம்தான் பல்வேறு நிலைமைகளை மாற்றி உள்ளது.இன்று பல ஆண்டுகளாக நீங்கள் நேரடியாக தண்ணீர் ஊற்றி வளர்த்த மரத்தை வெட்ட வரும்போது, செரையாம்பாளையம் மக்கள் திரண்டு ஒன்றுபட்டு உறுதியாக நின்றதால் நிலைமையை மாற்றி உள்ளீர்கள்.

இப்போதும் மக்கள் போராட்டமே , திருவண்ணாமலையில், ஏற்கனவே மதுரை-சொக்கனுராணியிலும், சேலத்திலும் மரம் வெட்டும் நிலைமையை மாற்றியுள்ளது. மரங்களை பாதுகாத்து உள்ளது.
எனவே அதிகாரிகள் வரும் வரை காத்திருப்போம் எனக் கூறினேன்.

மதியம் வரை காத்திருந்தும் மின்வாரிய பொறியாளர் வரவில்லை. பின்பு அவரிடம் மக்கள் முன் அலைபேசி மூலம் பேசினேன். அவர் வராதத்திற்கு பல காரணங்களை சொல்லி மழுப்பினார். அவரிடம் நான்

“டெல்லி உச்சநீதிமன்றம் ஒரு மரத்தை வெட்டும் போது புதிதாக 10 மரங்கள் நட சொல்லியுள்ளது. அப்படி செய்து விட்டுத்தான் மரத்தை வெட்ட வந்துள்ளீர்களா என்றவுடன், அவர் இல்லை நாங்கள் மரத்தை வெட்டி விட்டு நடுவோம் என்றார். தமிழகத்தில் அப்படி நடந்த ஒரு இடத்தைக் காட்டுங்கள் என்றவுடன் பேச மறுத்து விட்டார். மேலும் நான் 2012-இல் திருச்சி மாவட்ட ஆட்சியராக ஜெயசிறீ அவர்கள் இருந்த போது விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் ஒரு கோரிக்கை வைத்தேன். இப்போது போடப்பட்டு கொண்டிருக்கும் திருச்சி-கரூர் பைப்பாஸ் சாலையில் வெட்டப்பட்ட மரங்களுக்கு டெல்லி உச்சநீதிமன்றம் உத்திரவுப்படி ஒரு மரத்திற்கு பத்து மரம் நட்டால் மட்டுமே டோல்கேட்(சுங்கச்சாவடி) வைக்க அனுமதி தர வேண்டும் என்றேன். அதற்கு இரண்டு கூட்டத்தில் பதில் சொல்லாத திருச்சி ஆட்சியர் ஜெயசிறீ அவர்கள், நான் பதில் சொல்ல அழுத்திக் கேட்டவுடன் “நான் ஆட்சியரக இருக்க வேண்டுமா? வேண்டாமா??” என என்னை திரும்பிக் கேட்டார் . இதுதான் நமது நாட்டின் எதார்த்த நிலை, நீங்கள் சொல்வது அப்பட்டமான பொய் என்றேன்.

மரத்தை வெட்டக் கூடாது, அந்த வழித்தடத்தில்தான் மின்சார டவர் லைன்கொண்டு செல்வது கட்டாயம் என அரசும் -அதிகாரிகளும் முடிவு எடுத்தால் ஆலமரத்தையும், மற்ற மரத்தையும் நகட்டி(அகற்றி) வேறு இடத்தில் நட்டுவிட்டு மின்சார டவர் கொண்டு செல்லுங்கள் என்றேன். உடனே மின்வாரிய பொறியாளர் எங்கள் திட்டம் அதுதான் என்றார். எப்படி உங்களால் இப்படி பச்சை பொய் பேச முடிகிறது , ஒரு முன்மாதிரி உங்களிடம் உண்டா என்றவுடன் எதிர்முனையில் பதிலே இல்லை.

மேலும், அவரிடம் ” இல்லாத ராமர் பாலத்தை காரணம் காட்டி பல்லாயிரம் கோடி செலவு செய்யப்பட்ட சேது சமுத்திரத் திட்டம் அரசாலேயே காலாவதி ஆக்கப்பட்டது. விவசாயிகளின் நிலம் பாதிக்கப்படுவதால் விளைநிலம் வழியாக கெயில் திட்டம் நடைமுறைப்படுத்துவதற்கு மக்களின் எதிர்ப்பால் முதல்வர் பிரதமரை சந்தித்து கெயில் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். எனவே மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஆலமரத்தையும், மற்ற மரத்தையும் வெட்டக் கூடாது” என மக்களின் உணர்வை உயர் அதிகாரிகளிடம் கூறுங்கள் என்றேன்.

மின்வாரிய பொறியாளர் ” நான் மக்களிடம் சொன்னேன். ஊராடசி தலைவர் மரத்தை வெட்டிக் கொள்ளுங்கள் என்று கூறினார்” என்றார். நான் அவரிடம் “நாடு முழுக்க மின்சார டவர் லைன் ஒப்பந்தக்காரர்கள் 300 சதவிகிதம் லாபம் வைத்து டெண்டர் எடுக்குறார்கள் என்பதை அறிவேன். மேலும் அந்த தொகை கொடுப்பதே மக்கள் எதிர்ப்பு வராமல் அவர்களுக்கு பல்வேறு வகையில் லஞ்சம் பெற வைத்து, அவர்கள் வாயை அடைப்பதற்குத்தான். மின்சார டவர் லைனுக்காக பல ஊராட்சி தலைவர்களுக்கு இதற்காக லட்சம் ரூபாய் வரை லஞ்சம் கொடுக்கப் பட்டதை நான் அறிவேன். இந்த தலைவர் எந்த அடிப்படையில் ஒத்துக் கொண்டார் என தெரியவில்லை” என்றவுடன் மீண்டும் அமைதி ஆகி விட்டார்.

அவரிடம் இறுதியாக ” உங்கள் அதிகாரிகளுக்கு சொல்லுங்கள். மாற்று வழி உள்ளது, அதில் மின்சார டவர் லைன் கொண்டு செல்லுங்கள். அதை விட்டு விட்டு காவல்துறையை விட்டு மிரட்டுவது-வழக்கு போடுவது போன்ற வழிமுறையை கையாள நினைத்தீர்கள் என்றால் அதையும் எதிர் கொள்ள தயாராக மக்கள் உள்ளனர் அவர்களுக்கு துணையாக நாங்கள் உள்ளோம். மக்களின் உணர்வுக்கும் -போராட்டத்திற்கும் மதிப்பு கொடுங்கள். இன்று நீதிமன்றம் தானாகவே முன்வந்து மக்களின் போராட்டத்தால் திருவண்ணாமலையில் மரம் வெட்டும் பிரச்சனையை எடுத்துள்ளது. எனவே மக்களை மதியுங்கள்” எனக் கூறி முடித்தேன்.

செரையாம்பாளையம் கிராம மக்களுக்கு வாழ்த்துக்களையும், அவர்களின் உறுதியையும் பாராட்டி, தொடர்ந்து உறுதியுடன் போராட்ட விடை பெற்று வந்தேன்.

முகிலன், சூழலியல் செயற்பாட்டாளர்.