வில்லவன் இராமதாஸ்

சேலம் வினுப்பிரியா மற்றும் சுவாதி வழக்குகளுக்குப் பிறகு கலாச்சாரக் காவலர்கள் தங்கள் பெண்கள் மீதான அக்கறையை உயிர்த்தெழ வைத்திருக்கிறார்கள். சமூக வலைதலத்தின் பக்கம் வராதீர்கள், வந்தாலும் படங்களைப் பகிராதீர்கள் எனும் ஆலோசனைகள் போலீஸ் உயரதிகாரிகளிடமிருந்து வருகிறது. இதே ஆலோசனையை ஒரு உள்ளூர் போலீஸ்காரர் முரட்டுத்தனமாக சொன்னதால்தான் வினுப்பிரியா தற்கொலை செய்துகொண்டார். இதில் சொல்பவரின் உள்நோக்கத்தை விட்டுவிட்டு ஆலோசனையை மட்டும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியாது. காரணம் இவர்கள் தேர்ந்தெடுத்த சிக்கல்களில் மட்டுமே தலையிடுகிறார்கள். மேலும் இவர்களது யோசனையானது முழுப்பொறுப்பையும் பாதிக்கப்பட்டவர் தரப்பிற்கே கொடுக்கிறது. முன்னாள் டி.ஜி.பி நட்ராஜ் இப்போதுதான் ஒரு கொலைக்காக எதிர்வினை ஆற்றியிருக்கிறார். ஆனால் அவரிடம் சங்கர்களும் இளவரசன்களும் எப்படி சாவிலிருந்து தப்புவது எனும் யோசனை இருக்குமா என தெரியவில்லை.

இவர்கள் பெண்கள் மீதான அக்கறையில்தான் இவற்றையெல்லாம் பேசுகிறார்களா? அதற்கு வாய்ப்பே இல்லை. காரணம் பாதிப்புக்கு ஆளாகும் பெண்களில் மிகச்சில அளவிலான பெண்களே தங்களது வலையுலக செயல்பாட்டால் இந்த பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள். ஆனால் இந்த ”முள்ளு மேல சேலை விழுந்தாலும் சேலை மேல முள்ளு பட்டாலும்” ரக மனிதர்கள் மிக கவனமாக பெண்களுக்கு அறிவுரை சொல்லும் வாய்ப்புள்ள சிக்கல்களில் மட்டும் கருத்து சொல்கிறார்கள். இதில் இரண்டு நோக்கங்கள் மட்டுமே இருக்க முடியும், ஒன்று இப்படி கருத்து சொல்வதன் மூலம் அவர்கள் யாரையோ காப்பாற்ற முனைகிறார்கள் (அது அரசாங்கமோ அல்லது காலாச்சாரமாகவோ இருக்கலாம்) இல்லையென்றால் அவர்கள் பெண்களின் நடவடிக்கை சரியில்லை என தீர்மானமாக நம்புகிறார்கள், அதனை நாசூக்காக தெரிவிக்கும் வாய்ப்பை அவர்கள் எதிர்நோக்குகிறார்கள்.

நாம் ஏன் சமூக வலைதளங்களில் இயங்குகிறோம்? நம்மை வெளிப்படுத்திக்கொள்வதற்கான விருப்பம் நமக்கு எப்போதும் இருக்கிறது. மேலும் அதனை வெளிப்படுத்த ஒரு குழுவை நாம் தேடுகிறோம். தாராளமயமாக்கலுக்குப் பிறகு பெரும்பான்மை இந்திய நடுத்தரவர்கம் தங்களை சமூகத்தில் இருந்து துண்டித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் மனித மூளை தனித்திருந்தால் பதற்றமடையும், தனிமை என்பது பாதுகாப்பற்றது என்பதுதான் லட்சக்கணக்கான ஆண்டுகளாக மனித மரபணுவில் பதியப்பட்டிருக்கும் செய்தி. ஆகவே கடந்த 30 ஆண்டுகளாக சமூகத்தில் இருந்து விலகியிருக்கும் சமுகம் தமக்கென ஒரு குழுவை கண்டடையும் வாய்ப்பை சமூக ஊடகங்களில் இருந்து பெறுகிறது.

இந்த டிஜிட்டல் நட்பு பயனுடையதா என்பது விவாதத்துக்குரியது. உங்களுக்கு நிஜ வாழ்வில் நண்பர்களே இல்லாமல் இருந்து உங்கள் முகநூலில் 5000 நண்பர்கள் இருந்தால் அது உங்களது ஆளுமை சிக்கலை காட்டும் அறிகுறி (என்னால் நட்பை திறமையாக பேண முடியாத நிலையில், விரும்பினால் சேர்திருக்கவும் நினைத்தால் எளிதாக துண்டித்துக்கொள்ளவும் முடிகிற இணையவழி நட்பை நான் தெரிந்தெடுப்பேன்). இந்த அடிப்படையில் பார்த்தால் மெய்நிகர் உலகம் ஆபத்தானது, கட்டுப்பாடுகள் விதிக்கப்படவேண்டியது (ஆனால் ஆலோசனை வழங்குவோர் இந்த கண்ணோட்டத்தில் பேசுவதில்லை).

புகைப்படம் பதிவது என்பது இதன் நீட்சிதான். அழகாக தோற்றமளிக்க வேண்டும் என விரும்புவது மனித இனத்தில் பொது இயல்பு (பெருமளவில்). சமூக கற்றல் மூலம் ஆண்கள் கம்பீரத்தை அழகு எனவும் பெண்கள் நளினத்தை அழகு எனவும் புரிந்து வைத்திருக்கிறார்கள் (இது அனைவருக்குமானதல்ல, பெரும்பான்மையோருக்கு). அழகு என்பதை அடுத்தவர் பார்வையில் இருந்தே நாம் தீர்மானிக்கிறோம். இஸ்திரி செய்யாத சட்டை அணிய நேர்ந்தால் நம் முதல் கவலை பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதே. ஒப்பனை செய்பவர்கள் அதிகமாக இருக்கிறதா என்பதை மற்றவர்களிடம் கேட்டே திருப்தியடைகிறார்கள்.

நீங்கள் ஒத்துக்கொண்டாலும் ஒத்துக்கொள்ளாவிட்டாலும் மற்றவர்கள் உங்கள் வாழ்வில் அதீத முக்கியத்துவம் வாய்ந்தவர்களே. நடத்துனர் ஒருரூபாய் பாக்கி தரவில்லை என்றால் பெரும்பான்மை மக்கள் அதனை கேட்க தயங்குவார்கள். காரணம் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ எனும் எண்ணம். தங்கள் வாழ்நாளில் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பே இல்லாத சக பஸ் பயணிகளின் கருத்துகூட நமக்கு அவசியமாயிருக்கிறது. ஆகவே நம் தோற்றமும் பிறரால் இன்னும் குறிப்பாக நமக்கு தெரிந்தவர்களால் கவனிக்கப்பட வேண்டும் எனும் நினைப்பு மிக இயல்பானது. அதனால்தான் பலரும் கூடும் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு நாம் சிரத்தையோடு ஆடைகளை தெரிவு செய்கிறோம். இந்த சாதாரண மனித இயல்புதான் தங்கள் புகைப்படத்தை பதிவேற்றும் செயலை செய்யத் தூண்டுகிறது. இதில் பால் வேறுபாடே கிடையாது.

இன்றைய கல்விச்சூழல் பாடங்களைத்தவிர வேறெதையும் தெரிந்துகொள்ளாத இளைஞர்களை பெருமளவில் உற்பத்தி செய்கிறது. அவர்களது தனித்தன்மைக்கான எல்லா கதவுகளும் பள்ளி காலத்திலேயே அடைக்கப்பட்டுவிடுகின்றன. பொதுவான செய்திகளை தேடிப்படிக்கும் பழக்கம் அவர்களிடம் வழக்கொழிந்துவிட்டது. பொதுவான ஒரு செய்தியைப்பற்றி இரண்டு நிமிடம் பேசச்சொன்னால் திகைத்துப்போய் நிற்கும் ஆட்களாத்தான் இன்றைய பெரும்பான்மை கல்லூரி மாணவர்கள் இருக்கிறார்கள். இந்த இளைஞர் சமூகம் ஒரு பொது ஊடகத்தில் எதனை பகிர முடியும்? அவர்களுக்கு உள்ள வாய்ப்பு தாங்கள் என்ன செய்கிறோம் என சொல்வது, வந்த செய்தியை பகிர்வது மற்றும் தங்கள் புகைப்படத்தை பகிர்வது ஆகியவைதான். காரணம் அவர்களைப்பொருத்தவரை முகம்தான் அவர்கள் அடையாளம், சிந்தனை அல்ல. அதனைதான் பள்ளிக்கூடத்திலேயே சிதைத்துவிடுகிறோமே!

இன்னொரு பக்கம் புகைப்பட பதிவேற்றங்களை நிறுவனங்கள் ஊக்குவிக்கின்றன. வெறும் வார்த்தைகள் உங்கள் டேட்டா பயன்பாட்டை அதிகரிக்காது, ஆகவே எல்லா வழிகளிலும் அவர்கள் புகைப்பட பரிமாற்றங்களை அதிகரிக்க முனைகிறார்கள். உங்களை நீங்களே புகைப்படம் எடுக்கவென்றே சிறப்பான செல்ஃபி கேமரா ஃபோன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆகவே படங்களைப் பகிரும் செயலை புரிந்துகொள்ள வேண்டுமேயன்றி சரியா தவறா என ஆராய்வது நியாயமல்ல, அது தவறென்றால் அதற்கு நாம் எல்லோருமே பொறுப்பு.

இந்த நிலையில், புகைப்படத்தை பதிவேற்றாதீர்கள் என பொதுவாகக்கூட சொல்லாமல் பெண்களை நோக்கி மட்டுமே அந்த புத்திமதி சொல்லப்படுவதுதான் முட்டாள்தனமாகவும் கபடத்தனமாகவும் படுகிறது. தோற்றம் மட்டுமே அடையாளம் எனும் நிலைக்கு தள்ளிவிட்டு, அந்த அடையாளத்தையும் மறைத்துக்கொள் என்கிறார்கள் இந்த பெரிய மனிதர்கள்.

எவ்வளவு மென்மையாக பரிசீலித்தாலும் இது சாத்தியமற்ற ஆலோசனை மற்றும் ஆபத்தான ஆலோசனை. இந்த ஆலோசனை மூலம் நாம் பெண்கள் மீது ஏவப்படும் இணைய வன்முறைக்கு அவர்களை முதல் குற்றவாளியாக்குகிறோம். ”ராத்திரி ஆம்பளயோட ஒரு பொண்ணுக்கு வெளியில என்ன வேலை” என நிர்பயா வழக்கின்போது கேட்ட அடிப்படைவாதிகளின் குரலுக்கு கொஞ்சமும் குறைவற்ற வாதம் இது. இத்தகைய உளவியல் நெருக்கடிகள் மூலம் நாம் பெண்களுகளிடம் உருவாக்கும் தயக்கமும் அச்சமுமே மிரட்டும் ஆட்களுக்கான வாய்ப்பை உருவாக்குகிறது. மிரட்டுபவர்களின் உன் நற்பெயரை சிதைப்பேன் எனும் அச்சத்தை விதைப்பதன் மூலம் காரியம் சாதிக்க முனைகிறார்கள். இந்த கலாச்சார ஆலோசகர்களும் உன் நற்பெயரை காப்பாற்றிக்கொள்ள புகைப்படங்களை பகிராதே என்கிறார்கள். இரண்டும் ஒன்றுதான், நோக்கத்தில்தான் வேறுபாடு இருக்கிறது.

காதல் மிரட்டலால் கொல்லப்படும் சம்பவங்கள் ஒன்றிரண்டுதான் நிகழ்கின்றன. ஆனால் காதலித்த காரணத்துக்காக உறவினர்களால் நிகழ்த்தப்படும் மரணங்கள் கணக்கற்றவை. முன்னாள் காதலரால் மிரட்டப்படும் சம்பவங்கள் பல இருக்கின்றன. இவற்றுக்கான ஆலோசனை என்ன… காதலிக்காமல் இருப்பதா? காதலிக்க மறுத்ததால் கொல்லப்படும் பெண்களும் ஆசிட் வீச்சுக்கு ஆளாகும் பெண்களும் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்வது… கிழவியாகும்வரை பர்தா அணிந்துகொள்ள சொல்லலாமா? தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் வன்புணர்ச்சிக்கு ஆளாகும் பெண்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அவர்கள் என்ன செய்வது? உறவினர்களாலும் தெரிந்தவர்களாலும் பாலியல் துண்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கான ஆலோசனை என்ன? இந்த கலாச்சார காவலர்கள் பாணியில் யோசித்தால் பெண்கள் தம் பவித்ரத்தை காப்பாற்ற தற்கொலையைத்தவிர வேறு வாய்ப்புக்கள் இல்லை.

அவர்கள் சொன்னது தவறென்றால் வேறு எதுதான் சரியான தீர்வு?

சுவாதி வழக்கை எடுத்துக்கொள்ளுங்கள், அவருக்கும் கொலையாளி என கருதப்படும் ராம்குமாருக்கும் ஏற்கனவே அறிமுகம் இருந்தது எனும் அனுமானத்தையே அவருக்கு நெருக்கமானவர்கள் சுவாதிக்கு செய்யப்படும் அவமானமாக கருதுகிறார்கள். ஒருவேளை அவர் பொருத்தமற்ற ஒருவரை காதலித்திருந்தாலும் அது எப்படி அவரது நற்பெயரை சிதைக்கும் காரணியாகும்? அவருக்கு காதலரே இல்லை என சுவாதி குடும்பத்தார் பதற்றத்தோடு மறுக்கிறார்கள், சுவாதி குறித்த கேள்விகளே தவிர்க்க கொலையாளியை கண்டறிய உதவும் விசாரணையைக்கூட அவர்கள் சந்திக்க மறுக்கிறார்கள். மகளின் கொலைக்கான நியாயத்தைவிட மேலானதா அவரது நற்பெயர்? இதனை நியாயம் என ஏற்றுக்கொண்டால் நற்பெயரை இழந்த பெண்கள் தண்டிக்கப்படுவது (தமிழ் சினிமா பாணியில்) நியாயம் என்றல்லவா பொருளாகிறது?

பெண்கள் தங்கள் மீது நயவஞ்சகமாக போர்த்தப்பட்டிருக்கும் இத்தகைய சில மிகையான அடையாளங்களை தூக்கியெறிந்தாலே போதும். பெண் புனிதமானவள், குடும்பத்தின் விளக்கு, கௌரவத்தின் சின்னம் போன்ற புகழுரைகளை நிராகரிக்க வேண்டும். ஆண்களைப்போலவே இயல்பான முட்டள்தனங்களையும் விருப்பங்களையும் கொண்டிருக்கிற சாதாரண மனிதர்களாக நடத்தப்படுவதைத்தவிர வேறெந்த சலுகைகளும் பெண்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க செய்யப்படும் தந்திரங்களே. தமக்கான நகைகளை வாங்கிக்கொள்ளும் சுதந்திரம் அனேகமாக எல்லா பெண்களுக்கும் உண்டு, ஆனால் அதனை தமது தேவைகளுக்காக விற்கும் சுதந்திரம் அனேகமாக யாருக்கும் இல்லை. இப்படியான நுட்பமான வழிகளில் பெண்கள் தாம் சுதந்திரமாக இருப்பதாக நம்பவைக்கப்பட்டிருக்கிறார்கள்.

குறிப்பாக இணைய மிரட்டல்களை சமாளிக்க சிறந்த வழி அதனை ஒரு குழுவோடு எதிர்கொள்வதுதான். குடும்பத்தோடு காவல் நிலையம் போனால் அங்கே இன்னும் அவமானங்கள்தான் கிடைக்கும். அவர்கள் மென்மையாக ஆலோசனை சொல்லவே ஒரு தற்கொலை தேவைப்படுகிறது. கபடத்தனமான புகழுரைகளும் நயவஞ்சகமான கட்டுப்பாடுகளும் இந்திய பெண்களை நிழல்போல தொடர்கின்றன. கலாச்சார அழுத்தங்கள் ஆசிட் பாட்டிலோடு பின்தொடரும் ஒருதலைக் காதலனைப்போல நடந்துகொள்கின்றன. அதனை ஏற்றுக்கொண்டு துயரப்படுவதா அல்லது நிராகரித்து துயரப்படுவதா எனும் இரு வாய்ப்புக்கள்தான் இங்கே இருக்கிறது.

ஒரு அரசியல் ரீதியிலான இயக்கத்தில் பங்கேற்பதன் வாயிலாகத்தான் இந்த சூழலை புரிந்துகொள்ளவும் எதிர்கொள்ளவும் முடியும். வெறுமனே முகத்தை மறைத்துக்கொள்வதால் எந்த பிரச்சினையில் இருந்தும் தப்ப முடியாது.

வில்லவன் இராமதாஸ், சமூக-அரசியல் விமர்சகர். இவருடைய வலைப்பூ இங்கே