இலக்கியம் சமூகம் தலித் ஆவணம் புத்தக அறிமுகம்

சாதி மறுப்பு இலக்கியத்திற்கான சாத்தியங்கள் : ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா

ஆதவன் தீட்சண்யா
ஆதவன் தீட்சண்யா

சாகித்ய அகாடமி 2015 பிப்ரவரி 21,22 தேதிகளில் சென்னையில் நடத்திய “இலக்கிய முழுமையை நோக்கி- தலித் இலக்கியம்” என்கிற கருத்தரங்கிற்காக எழுதப்பட்ட கட்டுரை.

 1. தனிமனிதர்களின் அகநிலையையும் உலகு பற்றிய கண்ணோட்டத்தையும் வடிவமைப்பதில் இங்கு சாதியம் தீர்மானகரமான பங்கு வகிக்கிறது. மாற்றியமைக்கப்பட முடியாதபடி நெகிழ்ச்சியற்று இறுகக் கட்டப்பட்டுள்ள மேல்கீழ் படிவரிசையில் ஒவ்வொரு சாதிக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இடத்தைப் பொறுத்து அந்தச் சாதியினரின் அகநிலையும் கண்ணோட்டமும் உருவாகுகின்றன. அனிச்சை நிலையிலும் இயல்பிலும் சாதிசார்ந்தே யோசிப்பவராகவும் உள்வாங்குகிறவராகவும் அது சார்ந்தே வெளிப்படுகிறவராகவும் ஒருவர் இருப்பதற்கும் இதுவே காரணமாக அமைகிறது.
 1. சாதியானது, அதன் உச்சத்தில் இருக்கும் பார்ப்பன ஆண்களைத் தவிர பார்ப்பனப் பெண்கள் உள்ளிட்ட அனைவருக்குமே எதிரானதுதான். அவர்களது சுயேச்சையான இருப்பைக் கட்டுப்படுத்தி பார்ப்பன ஆண்களுக்குக் கீழ்ப்படுத்துவதற்கு சாதியம் வழிவகுக்கிறது. எனவே அதை எதிர்ப்பதற்கான நியாயம் பார்ப்பன ஆண்களைத் தவிர்த்த அனைவருக்குமே இருக்கிறது. ஆனால் அப்படியொரு எதிர்ப்பு உருவாகாமலும், ஒருவேளை எதிர்ப்பு உருவானாலும் அது ஒன்று திரளாமலும் தடுப்பதற்கான உள்ளக ஏற்பாடாக சாதியடுக்கின் பன்மப் படிநிலை விளங்குகிறது.
 1. தலித்துகள் சாதியடுக்கின் அடிநிலையில் இருத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்குக் கீழே யாரும் இல்லாதபடிக்கு அடிநிலையில் இருத்தப்பட்டிருப்பதால் சாதியமைப்பின் மொத்த பாரத்தையும் அழுத்தங்களையும் தாங்கிச் சுமப்பதன் வலியையும் வேதனையையும் கொண்டவர்கள். சாதியடுக்கிலிருந்து தம்மைத்தாமே உருவியெடுத்து விடுவித்துக் கொள்வதற்கு மதமாற்றம் உள்ளிட்ட எதுவும் எதிர்பார்த்த விளைவை உருவாக்காத நிலையில், தமது விடுதலைக்காக சாதியமைப்பை முற்றாக ஒழிப்பதற்கும் குறைவான எந்தவொரு நிலைப்பாட்டினை மேற்கொள்வதற்கும் வாழ்வியல் அவர்களை அனுமதிப்பதில்லை.
 1. சாதியை ஒழிக்கவேண்டுமானால் சாதி இருக்கிறது என்பதை முதலில் ஒத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அது எப்படி இயங்குகிறது, எவ்வாறாக சமூகத்தையும் தனிமனிதர்களையும் கட்டுப்படுத்தி இயக்குகிறது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. தனிமனித ஆளுமைக்கும் ஒட்டுமொத்த சமூக மேம்பாட்டிற்கும் சாதி எவ்வாறான கேடுகளை விளைவிக்கிறது என்பதை அம்பலப்படுத்தவும் அது ஏன் ஒழிக்கப்பட வேண்டும் என்கிற நியாயத்தை பரந்த மக்கள் திரளுக்கு கொண்டு சேர்ப்பதும் அவசியமாயிருக்கிறது. ஆனால் இந்த ரீதியிலான வியாக்கியானங்களும் விளக்கங்களும் தேவைக்கும் அதிகமான அளவில் நம்முன்னே குவிந்திருக்கின்றன. ஆகவே இப்போதைய தேவை, சாதி பற்றிய மேலும் ஒரு வியாக்கியானமல்ல, சாதியொழிப்பை நடைமுறைச் சாத்தியமுள்ள ஒரு நிகழ்ச்சிநிரலாக மாற்றுவதுதான்.
 1. சாதியத்தைக் காப்பாற்றி நிலைநிறுத்துவது தலித்தல்லாத அனைவரின் இயல்புணர்வாகவும் நிகழ்ச்சிநிரலாகவும் இருக்கிறது. எனவே சாதியொழிப்பு என்பது இவர்கள் தாமாகவோ அல்லது வேறுவகையான நெருக்கடியினாலோ சாதியைக் கைவிடுவது என்பதையே குறிக்கிறது. ஆனால், சாதியின் பெயரால்  பல்வேறு ஆதாயங்களையும் பெருமித உணர்வையும் கொண்டிருக்கிற இவர்கள் தாமாக முன்வந்து சாதியைக் கைவிடப் போவதில்லை. ஒருவேளை, சாதியத்திற்கு எதிரான தலித்துகளின் போராட்டம் களத்திலும் கருத்தியல் தளத்திலும் தீவிரப்படுகையில் சாதியத்தைக் கைவிடும் நெருக்கடிக்கு இவர்கள் ஆட்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதிலும் பொருளில்லை. ஏனென்றால் அந்த நிலையிலும் கூட, தலித்துகளின் போராட்டத்தை ஒடுக்கி சாதியை நிலைநிறுத்திக் கொள்வதற்கான முன்னேற்பாடுகளுடனேயே அவர்கள் இயங்குகின்றனர். எனவே, சாதியொழிப்பு என்கிற தமது முதன்மை நிகழ்ச்சிநிரலை தாங்களாகவே நிறைவேற்றிக் கொள்ள முடியாது என்கிற புரிதல் கொண்ட தலித்துகள், சாதியொழிப்பை தலித்தல்லாதவர்களின் நிகழ்ச்சிநிரலாக மாற்றுவதற்குரிய உத்தியுடன் செயல் பட வேண்டியுள்ளது. இத்தகைய புரிதலினால்தான் அண்ணல் அம்பேத்கர் சாதியொழிப்பு என்கிற தமது புகழ்மிக்க உரைக்குறிப்பை தலித்தல்லாதவர்களிடையே பேசுவதற்கென தயாரித்தார்.
 1. சாதியொழிப்பு என்று பொத்தாம்பொதுவாக பேசுவதற்கும் அப்பால் அதற்கென உண்மையில் நம்மிடம் உள்ள திட்டம்தான் என்ன என்பதை தெளிவுபட அறிவித்தாக வேண்டியுள்ளது. சாதியம் உருவாக்கிய அகமண முறையைக் கைவிட்டு ரத்தக்கலப்பு ஏற்படும்போது சாதி தானாகவே ஒழிந்துவிடும் என்று அம்பேத்கர் ஏற்கனவே ஆய்ந்தறிந்து முன்வைத்த தீர்வை ஏற்று அமல்படுத்தினாலே போதும், நாம் புதிதாக எந்தவொரு திட்டத்தையும் வகுக்க வேண்டியதில்லை என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. சாதியொழிப்பு பற்றி 78 ஆண்டுகளுக்கு முன்பு அம்பேத்கரால் எழுதப்பட்ட அந்த ஆய்வுரையின் உயிர்ப்பான அம்சங்கள் இன்றளவும் அவரது சொந்த மக்களான தலித்துகளிடம்கூட முழுமையாக கொண்டு சேர்க்கப்படவில்லை. எனில், அம்பேத்கர் என்கிற பெயரைக்கூட சகிக்துக்கொள்ள முடியாத தலித்தல்லாதவர்களிடத்தில் அகமண முறையைக் கைவிடச் சொல்லும் அவரது யோசனையை கொண்டு சேர்ப்பதற்கு நம்மிடம் ஏதேனும் ஏற்பாடுள்ளதா?
 1. ஒரு மனக்கணக்கு: மக்கள்தொகையில் கால்பங்காக உள்ள தலித்துகளோடு மணவுறவு கொள்வதற்கு சாதியச் சமூகத்தவர் முன்வருவார்களேயானால் இரண்டு பிரிவுகளும் சேர்ந்து மக்கள்தொகையில் 50 சதவீதத்தவர் சாதி கடந்தவர்களாக மாறிவிட முடியும். இப்படி சாதி கடந்த ஒரு தலைமுறையினருக்கும் எஞ்சியிருக்கும் சாதியச் சமூகத்தவருக்கும் இடையில் அடுத்து ஒரு கலப்பு ஏற்படுமானால் ஒட்டுமொத்தச் சமூகமுமே சாதிகடந்த சமூகமாகிவிடும். ஆனால் இந்தக் கணக்கைப் போல எளிதாக முடிந்துவிடக் கூடியதல்ல எதார்த்தம். இயல்பான மனித சுபாவத்திலிருந்து பிறக்கும் காதல் உணர்வில் சாதிகளுக்குள் நடக்கும் கலப்பே இன்னமும் அங்கீகரிக்கப்படாத நிலையில், சாதியச் சமூகத்தவருக்கும் தலித்துகளுக்கும் இடையில் மணவுறவும் உணவுறவும் இயல்பாக நடந்தேறுவதற்கான சூழல் உருவாகும் என்று உண்மையிலேயே நாம் நம்புகிறோமா?
 1. அகமண முறையை சட்டவிரோதமாக்கும் கடுமையான சட்டங்களின் மூலம் ரத்தக்கலப்புத் திருமணங்கள் நடப்பதற்கான சூழலை உருவாக்க முடியும் என்கிற ஆலோசனையும்கூட இங்கு அர்த்தமற்றதுதான். ஏனெனில் அப்படியான சட்டங்களை இயற்றும் அரசியல் விருப்புறுதி கொண்ட ஓர் அரசாங்கம் உருவாவதற்கான சாத்தியம் வெகுதூரத்திலும்கூட தெரியவில்லை. அல்லது அப்படியானதோர் அரசாங்கத்தை உருவாக்குவதற்கான செயல் தந்திரத்துடனும் வலுவுடனும் தலித்துகள் இன்னும் திரட்டப்படவில்லை. ஆனால், அகமண முறையை மேலும் கெட்டிப்படுத்துவதற்கான திட்டங்களைக் கொண்டவர்கள் அதிகாரத்தை நெருங்கிச் செல்வதற்கும் கைப்பற்றுவதற்கும் தீவிரமாகவும் தொடர்ந்தும் களத்திலிருக்கிறார்கள்.
 1. ‘சாதி என்பது இந்துக்கள் கலந்துறவாடுவதற்குத் தடையாக உள்ள கற்சுவரோ கம்பி வேலியோ அல்ல. சாதி என்பது ஒரு எண்ணம், ஒரு மனநிலை. எனவே சாதியை ஒழிப்பது ஒரு பௌதீகத் தடையை அழிக்கும் செயல் அல்ல. மக்களின் எண்ணத்தில் மாற்றம் ஏற்படுத்தும் செயல்…’ என்பார் அம்பேத்கர். பிற சாதியினருடனும் தலித்துகளுடனும் கலந்துறவாடாமலே அவர்கள் மீது வெறுப்புமிழும் எதிர்மனநிலையும் இழிவெண்ணமும் கொண்டதாக சுருங்கிப் போயுள்ள சாதியவாதிகளின் எண்ணத்தில் மாற்றம் ஏற்படுத்த மேற்கொள்ள வேண்டிய பன்முகச் செயல்பாட்டுடன் பொருந்தும் இயல்பினைக் கொண்டவை கலையும் இலக்கியமும். ஆனால் ஒரு சாதியச்சமூகத்திற்கே உரிய கெடுபேறாக, இங்கு கலை இலக்கிய வெளிப்பாடுகளுக்கு ஆதாரமான கருப்பொருளும் உரிப்பொருளும் முதற்பொருளும் சாதியத்தில் தோய்க்கப்பட்டதாகவே இருக்கின்றன. தங்களது சாதி எவ்விதம் உருவானது என்று மூதாதைகள் புனைந்திறக்கிய கற்பிதங்களைத்தான் தொன்மக் கதைகளின் நீட்சியெனவும் பாரம்பரியம் மற்றும் மரபுச்சுருள் மடிப்பின் இழையெனவும் வெளிப்படுத்துகிறார்கள் பலரும்.
 1. தலித்துகளின் கலை இலக்கிய ஆக்கங்கள், அடிப்படையில் தனித்துவமான தமது சுயத்தைக் கொண்டாடுவதாகவும், சாதியமானது தமக்கு வரலாற்றுரீதியாக இழைத்துவரும் பாரபட்சங்கள், அவமதிப்புகள், சுரண்டல்கள், ஆக்கிரமிப்புகள், ஒடுக்குமுறைகள் ஆகியவற்றின் மீதாக புகார் அல்லது கண்டனத்தை தெரிவிப்பதாகவும், தமது மாண்புகளை மீட்டுக்கொள்ளும் போராட்டத்திற்கான அறைகூவலாகவும் வெளிப்படும் தேவையினைக் கொண்டவை. மக்களின் மனங்களை பாழ்படுத்தி மனிதத்தன்மையற்றவர்களாக மாற்றியுள்ள இந்துமத சாஸ்திரங்கள் உருவாக்கியுள்ள மதிப்பீடுகள் அனைத்தையும் தலைகுப்புற கவிழ்த்துக் கொட்டும் தலித் இலக்கியம், சாதியடுக்கில் மேலேறிப் போவதற்கான தந்திரங்களையோ ஏதாவதொரு சாதியை கீழிழுத்துப் போட்டுக்கொள்கிற ஆதிக்கத் தன்மையையோ உள்ளடக்கமாகக் கொண்டு வெளிப்படுவதற்கான சாத்தியங்களைத் துறந்தவை. இந்தியாவை ஒரு நாகரீகச் சமூகமாக கட்டமைக்கும் பேராவலில் அம்பேத்கர் எழுப்பிய ‘சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம்’ என்கிற முழக்கமே தலித் இலக்கியத்தின் உள்ளுறையாகவும் கனவாகவும் இருக்க முடியும். இந்த முழக்கம் நடைமுறையில் சாத்தியப்படுவதற்குரியதாக மக்களின் மனங்களை தகவமைக்கும் ஓர் அரசியல் நோக்கத்தை உட்செரித்ததாகவும் அது இயல்பேற்றம் கொள்ளவேண்டியிருக்கிறது.
 1. தலித் மற்றும் தலித்தல்லாத மக்களின் மனங்களுக்குள் ஊடுருவி சாதியொழிப்புக்கு ஆதரவாக மாற்றியமைக்கும் நோக்கத்தில் தலித் இலக்கியம் ஈட்டிய சாதனைப்புள்ளிகளை கணக்கிடுவதற்கான காலம் ஒருவேளை இன்னும் கனியாமலிருக்கலாம். ஆனால் வெளிப்படையாக அறிவித்துக்கொள்ளாவிடினும் நமக்குள் ஒரு மனக்கணக்கு ஓடிக் கொண்டிருக்கிறது. உத்திரவாதப்படுத்தப்பட்ட ‘வாசக வங்கி’யாக இருக்கும் தலித்துகளாகிய ஒத்தக் கருத்துள்ளவர்களுடன் மட்டுமே ஒதுங்கி உரையாடுவது பாதுகாப்பானதாக இருக்கலாமேயன்றி பலனளிக்கக்கூடியதாக இருக்காது என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். அதனாலேயே, எலி வளையானாலும் தனிவளை என்கிற மனோபாவம் உண்மையில் தலித்துகளை ஒதுக்கிவைக்க வேண்டும் என்கிற சாதியவாதிகளின் இழிநோக்கத்தை நிறைவேற்றிக் கொடுப்பதாக மாறிவிடக்கூடாது என்பதில் கவனமாய் இருக்கிறோம்.
 1. தேவைக்கும் நமது எதிர்பார்ப்புக்கும் ஏற்ற வகையில் இல்லையென்றாலும்கூட சாதியத்திற்கு எதிரான உள்ளடக்கத்துடனான கலை இலக்கிய ஆக்கங்கள் தலித்தல்லாதவர்களிடமிருந்தும் அவ்வப்போது வெளிப்படத்தான் செய்கின்றன. பொத்தாம்பொதுவாக சாதியத்தை எதிர்க்கும் பாசாங்குகளையும், சொந்த சாதியை அம்பலப்படுத்தும் துணிவின்றி தலித்துகளின் வாழ்க்கையை எழுதியே தீருவேன் என்று அடம் பிடிக்கிற தந்திரங்களையும் இவ்விடத்தில் நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால் சுயசாதியின் கசடுகளையும் போலி பெருமிதங்களையும் இட்டுக் கட்டப்பட்ட பாரம்பரியத்திற்கு மாறான வரலாற்று உண்மைகளையும் நிகழ்கால நடப்பியலை மறைக்கப் பார்க்கும் மோசடிகளையும் சாதியின் பெயரால் நடக்கும் துரோகங்களையும் வன்முறைகளையும் பழமைவாத நம்பிக்கைகளையும் சகித்துக்கொள்ள முடியாமல் அதற்குள்ளிருந்தே வெளிப்படும் விமர்சனங்களையும் கண்டனங்களையும் கலகக் குரல்களையும் பொருட்படுத்தியாக வேண்டும். இதேவகைப்பட்ட விமர்சனங்களை அந்தச் சாதிகளுக்கு வெளியே இருக்கிற தலித்துகள் வைப்பதனால் ஏற்படும் தாக்கத்தை விடவும் அந்தந்தச் சாதிக்குள்ளிருந்தே எழும்பும் விமர்சனங்களால் உண்டாகும் தாக்கம் கூடுதலானது. சுயசாதியோடு முரண்படும் அவை நேரடியாக தலித்துகளுக்கு ஆதரவானவையல்ல, ஆனால் சாதியத்திற்கு எதிராக தலித்துகள் நடத்திக் கொண்டிருக்கும் கருத்தியல் போராட்டத்திற்கு வலு சேர்ப்பவை. எதிர் முகாமில் வெடிக்கும் பூசல் எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அதை தமக்கு ஆதரவாக பயன்படுத்திக்கொள்வதும் முடிந்தால் பெருகச் செய்வதுமாகிய தந்திரம் நமக்கு தேவைப்படுகிறது.
 1. சுயசாதியுடனான முரண், தனிமனிதச் சுதந்திரத்திற்கும் படைப்பூக்கத்திற்கும் ஆளுமை வளர்ச்சிக்கும் கலந்துறவாடி வாழும் மனித சுபாவத்திற்கும் எதிரான சாதியை மறுத்து வெளியேறும் வளர்நிலையை எட்டும் சாத்தியம் கொண்டது. சாதி மறுப்பானது, சாதியொழிப்பு போராட்டத்தின் பாதையில் குறிப்பிடத்தகுந்ததொரு கட்டம். ஒட்டுமொத்தச் சமூகமும் சாதியை கைவிடும்போது தானும் சாதியைத் துறந்துவிடப் போவதாக குதர்க்கம் பேசிக்கொண்டிருக்காமல், தன்னளவில் சாதியை மறுத்து கடந்து வாழ்வது எந்தவொரு தனிமனிதருக்கும் சாத்தியமே. அப்படி கடப்பதற்கான விருப்பக்கூறுகளை வெளிப்படுத்தக் கூடிய, சுயசாதிப் பெருமிதங்களை துறக்க முன்வருகிற தனிமனிதர்களின் பெருக்கம் சமூகத்தின் கூட்டுமனநிலையில் ஓர் உடைவையும் நாம் விரும்பத்தக்க மாற்றத்தையும் ஏற்படுத்தவல்லது.
 1. சாதியத்திற்கு எதிரான உள்ளடக்கங்களைக் கொண்ட படைப்புகளை சாதி மறுப்பு கலை இலக்கியம் என்கிற பொது அடையாளத்தின் கீழ் வகைப்படுத்தும் பட்சத்தில் தலித்துகளும் தலித்தல்லாதவர்களும் குறிப்பிட்ட நோக்கத்தின் கீழ் அணிதிரண்டு செயலாற்றுவதற்கு வாய்ப்பு உருவாகும். சாதியொழிப்புக் கருத்தியலை ஏந்திச் சென்று பரந்த இச்சமூகத்தின் மீது வீசி வெடிக்கச் செய்கிற ஆற்றலும் நுட்பமும் தந்திரமும் இழைந்த ஆக்கங்களை உருவாக்குவதற்கு இப்படியானதோர் ஒருங்கிணைவு அவசியமாயிருக்கிறது.
 1. உள்ளது உள்ளபடி அவ்வாறே எழுதிக்கொண்டிருப்பது ஒருவேளை தலித்தல்லாதவர்களுக்கு உவப்பாக இருக்கலாம். ஏனென்றால், இப்போதுள்ள நிலைமை அவர்களது நலன்களுக்கு உகந்ததாகவும், அவர்களது ஆதிக்கத்தை நியாயப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது. நிலத்தில் காலூன்றி நிற்பதாக சொல்லிக்கொண்டு தலையையும் அதற்குள் புதைத்துக்கொள்கிற இவர்கள், இன்றைய நிலைமையே எப்போதும் இருந்து வருவதாகவும் அதுவே எதிர்காலத்தில் என்றென்றைக்குமாக நீடித்திருக்கப் போவதாகவும் நிறுவப் பார்க்கிறார்கள். ஆனால் நிலவுகின்ற எதார்த்தம் எவ்வாறாக மாறி இன்றைய நிலையை எட்டியிருக்கிறது என்றும், அந்த மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய கலகக்கூறுகளும் போர்க்குணமும் இன்றைய எதார்த்தத்தை மேலும் முற்போக்கானதாக மாற்றிச் செல்லும் சாத்தியத்துடன் இருப்பதைக் கண்டுணர்ந்தும் எழுதுவதற்கு தலித்துகள் உள்ளிட்ட சாதி மறுப்பாளர்களாலேயே முடியும்.
 1. சாதியற்ற ஒரு சமூகம் என்பது இன்றைய எதார்த்தம் அல்ல. ஆனால் இன்னமும் கனவாகக் கூட காணப்படாத அந்தச் சமூகத்தை கலை இலக்கியவாதிகள் தங்களது ஆக்கங்களின் மூலம் படைத்துக் காட்ட முடியும். சகமனிதரை, மனிதர் என்ற ஒரு காரணத்திற்காகவே மதிக்கவும் அன்பு காட்டவும் கலந்துறவாடவும் பகிர்ந்துண்டு வாழவும் விரும்புகிற ஓர் உன்னத சமுதாயத்தை படைத்துக் காட்ட வேண்டுமானால் அதற்கான முதற்கனவை உலகெங்கும் கலைஇலக்கியவாதிகளே கண்டிருக்கிறார்கள். நிலவுகின்ற சூழலை மாற்றியமைக்கும் அரசியல் தெளிவும் கற்பனை வளமும் புதுமை நாட்டமும் கொண்ட கலை இலக்கியவாதிகளுக்காக இங்கும் அந்தக் கனவு காத்திருக்கிறது.

ஆதவன் தீட்சண்யா, எழுத்தாளர். சமீபத்தில்  வெளியான இவருடைய நூல்கள்…நீங்கள் சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருக்கிறீர்கள் – சிறுகதைத் தொகுப்பு, கடவுளுக்கு முன்பிருந்தே உலகம் இருக்கிறது- கட்டுரைத் தொகுப்பு, மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள்
–  கவிதைத் தொகுப்பு.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.