திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அகற்றப்படும் மரங்களைக் காக்கக் கோரி பல்வேறு அமைப்பினர் இணைந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் இந்து முன்னணி அமைப்பு, இந்து மதத்துக்கு எதிராக கிறித்துவ, இடதுசாரி அமைப்புகள் இணைந்து மரங்கள் வெட்டி சாலை அகலப்படுத்தப்படுவதை தடுப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளது.
Hindu munnai T malai
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க துணைப்பொதுச்செயலாளர் எஸ்.கருணா அளித்த பேட்டியில், “மலை சுற்றும் பாதையில் உள்ள நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த மரங்கள், காடுகள், அரியவகை மூலிகைகள் கொண்ட காட்டுப்பகுதியை அழித்து அங்கு சாலை போட அரசு திட்டமிட்டிருப்பதற்கு இயற்கை ஆர்வலர்கள் ,எழுத்தாளர்கள் ,அப்பகுதி மக்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதற்கு எதிரான போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர்.இதில் இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மீது அக்கறை கொண்ட பல மதங்கள்,சமூகங்களை சேர்ந்தவர்களும், ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டோர், நாட்டம் இல்லாதோர் என அனைவரும் ஒன்றிணைந்து,மலைச்சுற்றும் சாலையின் இயற்கை மற்றும் பல்லுயிர் சூழல் பாதுகாக்கப்படவேண்டும் என்ற உயரிய நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.

ஆனால் இந்த நோக்கத்தை கொச்சைப்படுத்தும்விதமாக இந்த புகாரை இந்துமுன்னணி அளித்துள்ளது.ஒன்றுபட்டு போராடும் மக்களிடையே மதத்துவேஷத்தை விதைக்கும் நோக்கிலும் மதமோதலை உருவாக்கும் குறுகிய நோக்கத்துடனும் இச்செயலை செய்கிறார்கள்.இதை அனுமதிக்கக்கூடாது என்பதுடன் வன்மையாகவும் கண்டிக்கிறோம்.அண்ணாமலையார் கோவிலை தொல்லியல் துறை எடுத்துக்கொள்ள முயன்றபோது, கிருஸ்தவர் உள்ளிட்ட அனைத்து மதங்களை சேர்ந்தவர்களும் இடதுசாரிகளும் இணைந்து நின்று போராடியதை மக்கள் மறந்துவிடவில்லை.இப்போது அதே ஒற்றுமையை வெளிப்படுத்தி போராட்டத்தில் வெல்வோம்.இந்து முன்னணியின் பிளவுபடுத்தும் முயற்சியை முறியடிப்போம்” என்றார்.

முகப்புப் படம்: கிரிவலப்பாதையில் மரம் வெட்டுதலை எதிர்த்துப் போராட்டம்.