சினிமா பொழுதுபோக்கு

ஒழிவுதிவசத்தெ களி படத்தை ஏன் பார்க்கவேண்டும்? இதைப் படியுங்கள்!

விஜய் பாஸ்கர்

விஜய் பாஸ்கர்
விஜய் பாஸ்கர்
’ஒழிவுதிவசத்தெ களி’ என்ற மலையாளத் திரைப்படத்தைப் பார்த்தேன்.

1.தேர்தல் நாளன்று ஐந்து நண்பர்கள் தனிமையான ரிசார்ட் மாதிரி இடத்தில் குடிக்கப் போகிறார்கள். அந்த நாளின் முடிவில் அவர்களுக்குள் இருக்கும் ஜாதிவெறி எவ்வாறு மறைமுகமாக வெளிவருகிறது. அதன் உச்ச நிலையின் விளைவாக என்ன செய்கிறார்கள் என்பதுதான் கதை.

2.தர்மன்,தாசன்,திருமேனி,வினயன்,அசோகன் என்ற இந்த ஐந்து நண்பர்களும் திருமேனியின் மலை கெஸ்ட் ஹவுஸில் மதுஅருந்தச் செல்கிறார்கள். தேர்தல் நாளில் ஒட்டுப் போடாமல் இதைச் செய்ய விரும்புகிறார்கள்.

3. இதில்
– வினயன் ஜாதி இந்து ஒரு அரசு ஊழியன்
– தர்மன் ஒரு ஜாதி இந்து வெளிநாட்டில் வேலை பார்ப்பவன்
– தாசன் ( ’மனுவின் சதியைப் போற்றும் இந்துமதத்தால்’) தாழ்த்தபட்ட சமூகத்தைச் சேர்ந்தவன்
– திருமேனி ஒரு நம்பூதிரி வகுப்பைச் சார்ந்த ’மனுவின் சதியைப் போற்றும் இந்துமதத்தால்’ உயர்த்தபட்ட ஜாதியை சேர்ந்தவர்.
– அசோகன் ஒரு ஜாதி இந்து.
அனைவரும் மத்திமவயதுக்காரர்கள். தாசன் இளையவனாக தெரிகிறான்.

4.கெஸ்ட் ஹவுஸுக்குள் அவர்கள் நுழையும் போது கையில் உள்ள கோழி தப்பித்து ஒடுகிறது. நால்வரும் அதைப் பிடிக்க முயற்சி செய்யும் போது திருமேனி அதை வேடிக்கை மட்டும் பார்க்கிறான்.

5. திருமேனியின் கெஸ்ட் ஹவுஸுக்குச் சென்றவுடன் அங்கே இருக்கும் நீர்நிலையில் தாசனும்,தர்மனும் குளிக்கிறார்கள். குளிக்கப் போகும் போது தர்மன் தாசனைப் பார்த்து “உன் கறுப்புக்கு நல்ல கல்லாகப் பார்த்து தேய்த்துக் குளி. அப்போதாவது உன் கருப்பு போகிறதா?” என்று பார்ப்போம் என்கிறான்.

6.இன்னொருபக்கம் கெஸ்ட் ஹவுஸில் இருக்கும் வேலைக்காரப் பெண்ணிடம், வினயன் கேள்விகள் கேட்டு வழிகிறான். அப்பெண்ணோ மிக அழுத்தமாக இருக்கிறாள். வினயனின் இந்த நடவடிக்கையை நண்பர்கள் கிண்டல் செய்கிறார்கள். அதை வைத்து கீதா என்று அப்பெண்ணை ஒரு பண்டமாக்கி பேசி மகிழ்கிறார்கள்.

7.குளித்து முடித்துத் திரும்பும் போது ஒரு சக்கை(பலா) மரத்தில் நிறைய சக்கைப் பழங்களைப் பார்க்கிறார்கள். யார் அதில் ஏறி வெட்டுவது என்று முடிவெடுக்கிறார்கள். அனைவரும் தாசன்தான் அதற்கு சரியான ஆள் என்று தாசன் சக்கைப் பழத்தை வெட்டுவதற்கு உதவி செய்கிறார்கள். உடல் உழைப்பு சார்ந்த வேலையை தாழ்த்தபட்டவன்தான் செய்ய வேண்டும் என்ற ஆழ்மன எண்ணம் அங்கே வெளியாகிறது.

8.தாசன் சக்கை மரத்தில் தத்தி ஏறும் போது தர்மன் “டிப்பார்ட்மெண்ட் ஆஃப் மங்கீஸ் (குரங்கு)” என்று சொல்ல அனைவரும் சிரிக்கிறார்கள். அந்த குரங்கு என்றச் சொல் தர்மனின் ஜாதிவெறியைக் காட்டுக்கிறது.

9.சக்கையை வெட்டி கோழியை அறுத்து வேலைக்காரப் பெண் கீதாவிடம் கொடுக்கிறார்கள். “கோழியை தன்னால் கொல்ல முடியாது. கொன்று கொடுத்தால் சமைக்கிறேன்” என்கிறார் அப்பெண்.

10.யார் கோழியைக் கொல்வது என்ற பிரச்சனை வருகிறது. தாசன்தான் கோழியைக் கொல்லவேண்டும் என்கிறார்கள். தாசன் மறுக்கிறான். உன் மனதுதான் தாசா கோழியை கொல்லும் அளவுக்கு உறுதியானது என்று சொல்லி வற்புறுத்தி தாசனை கோழியைக் கொல்லச் சொல்கிறார்கள். தாசன் வேண்டா வெறுப்பாக கோழியை எடுத்து அதை தூக்கிலிடுவது போல மரத்தில் தொங்கவிட்டு கொல்கிறான்.

12.ரூமுக்கு வந்து மது அருந்தி பாட்டுப் பாடுகிறார்கள். தாசன் டிவி பார்க்க விரும்புகிறான். தாழ்த்தபட்டவனாக தான் யார் அதிகாரத்துக்குள் செல்வோம் என்று பார்க்க விரும்பியிருக்கலாம். யார் ஒட்டுப் போட்டாலும் என்ன நடந்தாலும் நமக்கொன்று வராது என்ற பாவனையில் நம்பூதிரியும் மிச்ச மூன்று பேரும் டிவி மேல் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார்கள்.

13.மதுதீர்ந்து விட்டதால் திருமேனி தன் அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் நாளன்றும் கூட மதுவாங்கி வருகிறேன் என்று சென்று விடுகிறான். திருமேனி தனியே சென்று போனில் சிக்னல் கிடைக்காமல் மதுதேடி பேசும் போது நான் நம்பூதிரி பேசுறேன். நான் நம்பூதிரி என்று தன் ஜாதி அடையாளத்தை ஒரு பெருமையாக, அதிகாரத்தைக் காட்டுவதாக சொல்கிறான்.

14.வினயனுக்கும் அசோகனுக்கும் பேச்சு வருகிறது.
”ஒரு பெண்ணை வற்புறுத்தக் கூடாது. செக்ஸுக்கு வருகிறாயா என்று கேட்கலாம். ஆனால் அவள் மறுத்தால் விட்டுவிட வேண்டும். அதில் ஒரு டெமக்கரசி வேண்டும்” என்கிறான்.
அசோகன் “இல்லை செக்ஸிலே வன்முறை இருக்கிறது. ஆண் மேலும் பெண் கீழும் இருப்பதே வன்முறைதான். செக்ஸுக்கு வன்முறை தேவை. மென்முறை வேலை செய்யாது” என்று சொல்ல பதிலுக்கு வினயன் “அப்படியானால் உன் மனைவியை இவ்வளவு நாளும் நீ ரேப்தான் செய்தாயா” என்று கேட்க வினயனுக்கும் அசோகனுக்கும் சண்டை வருகிறது. தாசன் அதை சமாதானப்படுத்துகிறான்.

15.இதற்கிடையில் தர்மன், வேலை செய்யும் பெண் கீதாவை நெருங்க முயற்சி செய்ய அவள் அவன் கன்னத்தில் அடிக்கிறாள். தர்மன் பதிலுக்கு அடிக்க வர, அவள் ஒரு வெட்டரிவாளை வைத்து வீசுகிறாள். தர்மன் பயந்து அவ்விடத்தை விட்டு விலகுகிறான். கீதாவின் உடல்மொழியில் இருக்கும் தெளிவான எதிர்ப்பு ஏற்கனவே அவளை பல ஆண்கள் நெருங்கி அதை சமாளித்தவள் அவள் என்பதைக் காட்டுகிறது.

16.கீதாவிடம் அவமானப்பட்ட தர்மன் ரூமுக்கு வருகிறான்.
வினயன் “எமர்ஜென்சியாக போனாயா” என்று கேட்க தர்மன் “ஆம் எமெர்ஜென்சி 1976 ஆம் ஆண்டு 26 மாதம் நடந்தது” என்கிறான். அதைத்தொடர்ந்து தர்மன் “எமர்ஜென்சி நல்ல காலம். போலீஸ் போலீஸ் வேலையை செய்தது. தோட்டி தோட்டி வேலையைச் செய்தான். எல்லாம் ஒழுங்காக நடந்தது” என்று தன்னிடம் உள்ள ஜாதிவெறியை அவனையறிந்தோ அறிமாலோ வெளிப்படுத்துகிறான்.

17.தர்மனின் ”தோட்டி, தோட்டி வேலையைச் செய்தான்” என்ற வாசகம் வினயனை ஒன்றும் செய்யவில்லை. ஆனால் ’எமெர்ஜென்சி நல்லது’ என்ற வாக்கியத்தை எதிர்க்கிறான் “என் அப்பாவின் ஒவ்வொரு மீசை முடியாக தாடி முடியாக புடுங்கி விட்டார்கள். எனக்கு எமெர்ஜென்சி கொடூரமானதுதான் என்கிறான். ஜாதிக் கொடுமை பற்றி சுரணையில்லாத ஜாதி இந்துக்களின் மனபாவனையை இது காட்டுகிறது.

18.இதைத் தொடர்ந்து தர்மனுக்கும் வினயனுக்கும் விவாதம் வருகிறது. “நீ வளைகுடா நாட்டில் என்ன வேலை செய்கிறாய்” என்று தெரியும் என்று வினயன் சொல்ல, அதற்கு தர்மன் “அந்தகாசில்தானே நீ இப்போது குடிக்கிறாய், சாப்பிடுகிறாய்” என்று சொல்ல வினயக்கு கோபம் வந்து கெஸ்ட் ஹவுஸை விட்டு போகப் போகிறான்.

19.கொட்டும் மழையில் வெளியே நடக்கும் வினயனை, அசோகனும், தாசனும் இழுத்து சமாதானப்படுத்துகின்றனர். அப்போது வெளியே சென்ற நம்பூதிரி மதுப்போத்தலோடு வருகிறான். வந்து இருவரையும் சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துச் செல்கிறான்.

20.மறுபடியும் ஐந்து பேரும் அவரவர் சட்டையைக் கழட்டிப் பிழிந்து உலர வைத்து புது மதுப்போத்தலை திறக்கிறார்கள். டிவி நியூஸ் ஓடிக்கொண்டிருக்கிறது. ஐந்து ஒட்டுக்கு ஒரு மதுப்போத்தல் தருவதாக திருமேனி சொன்னான்.

21.அரசியல் பற்றி பேச்சு வருகிறது. திருமேனி சொல்கிறான் “ ஜாதிக் கட்சிகள் எல்லாம் தோற்க வேண்டும். அப்போதுதான் நேஷனலிசம் இருக்கும்” என்கிறான். தாழ்த்தபட்டவர்கள் தங்கள் அடிப்படை உரிமைக்காக ஒன்று கூடி கட்சி நடத்துவதையும் ஒரு ஜாதிக் கட்சியாகப் பார்க்கும் உயர்ஜாதி, ஜாதி இந்து மனப்பான்மையை காட்டுவதாக இது இருக்கிறது.

22.தாசன், திருமேனியின் இச்சொல்லை எதிர்க்கிறான். தாசனை சமாதானப்படுத்தும் வினயன் “ தாசா இந்தியாவை 70 வருசமாக காங்கிரஸ்தானே ஆட்சி செய்தது” என்கிறான்.

23.”யார் ஆட்சி செய்தால் என்ன? எங்களை உயர்த்தபட்ட (மனுவின் சதியைப் போற்றும் இந்துமதத்தால் உயர்த்தபட்ட) ஜாதிகாரர்கள்தானே ஆட்சி செய்தார்கள்” என்று வெடிக்கிறான் தாசன்.

24.”ஆமா உன்னை போல் கறுத்த குள்ளமான ஆட்களுக்கு அதிகாரம்தான் ஆசை போல “ என்று தர்மன் ஜாதி வெறியை வெளிப்படுத்த,

25.அதற்கு தாசன் இன்னும் சூடாகி “ நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே என்னை கறுப்பு கறுப்பு என்று சமயம் கிடைக்கும் போதெல்லாம் சொல்லி வருகிறீர்கள். இது பிடிக்கவில்லை என்று வெடிக்கிறான்.

26.அசோகன் குறுக்கே புகுந்து” நாம் இங்கே ஜாலியாக இருக்க வந்திருக்கிறோம். ஏதாவது பாட்டுப் பாடலாம். தாசா நீதான் கோபத்தில் இருக்கிறாய். நீ பாடு என்கிறான் அசோகன்.

27.சேரில் இருந்து எழுந்த தாசன் டேபிளில் கையை ஊன்றி நின்றபடியே பொறுமையாக (இதை ஸ்கிப் செய்யாமல் படியுங்கள்)

When I born, I black.
When I grow up, I black.
When I go in sun, I black.
When I scared, I black.
When I sick, I black.
And when I die, I still black.

And you white people.
When you born, you pink.
When you grow up, you white.
When you go in sun, you red.
When you cold, you blue.
When you scared, you yellow.
When you sick, you green
And when you die, you grey…

என்ற கவிதையைச் சொல்கிறான்.

28.அதைச் சொல்லி முடிக்கும் போது தர்மன் எழுந்து வெளியே வேடிக்கை பார்க்கிறான். அசோகன், வினயன், திருமேனி என்று அனைவரும் ஒரு மாதிரி சிரித்தபடியே வெளியே வேடிக்கை பார்க்கிறார்கள். தாசன் அவ்வறையில் தனித்து விடப்படுகிறான். அவர்கள் சிரிப்பு வசதிக்குறைவை மறைக்கும் சிரிப்பாக இருக்கிறது.

29.நான்கு பேரும் முதல் மாடி வராண்டாவில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் போது தாசன் பின்னால் வந்து குற்ற உணர்வோடு வந்து “ஸாரி” என்கிறான்.

30.இந்த சாரி சொல்லும் காட்சிதான் படத்தின் சாறு என்று நினைக்கிறேன். காலம் காலமாக அடக்கபட்டவர்கள் மேல் இந்த குற்ற உணர்வு திணிக்கப்படுகிறது. சமூகம் மறைமுகமாக எல்லா அவமானத்தையும் தாழ்த்தபட்டவர்கள் மேல் வைத்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு பதிலுக்கு ரியாக்ட் செய்யும் போது “ நல்லா ஒத்துமையா இருந்த சிஸ்டத்த மகிழ்ச்சிய நீதான் ஜாதி பேசி கெடுக்கிற” என்பார்கள். இதன் மூலம் “ஒஹ் நாமதான் சரியில்லையோ” என்ற குற்ற உணர்வை ஏற்படுத்துகிறார்கள். அதைத்தான் தாசன் மூலம் வெளிப்படுத்துகிறார் இயக்குநர்.

31.தாசன் சாரி சொன்னதும் அசோகன், வினயன், தர்மன், திருமேனி போன்றவர்கள் “பிரச்சனையில்லை” என்று சொல்லி மூடை ஜாலியாக்குவதற்கு ஏதாவது ஒரு விளையாட்டை விளையாடலாம் என்று தீர்மானிக்கிறார்கள்.

32.அசோகன் சிறு வயது ராஜா ராணி விளையாட்டு விளையாடலாம் என்கிறான். விளையாட்டு இதுதான்.

33.நான்கு தாளில் ராஜா,மந்திரி, திருடன், போலீஸ் என்று எழுதி மடக்கி, குலுக்கிப் போட வேண்டும். நான்கு பேர் ஒவ்வொன்றையும் எடுக்க வேண்டும். மற்றவர்கள் அமைதி காக்க போலீஸ் சீட்டுக் கிடைத்தவன் மட்டும், தான் போலீஸ் என்று சொல்லி திருடனை அடையாளம் காணும் வேலையைச் செய்ய வேண்டும். ஒருவேளை போலீஸ் ராஜாவை திருடன் என்று அடையாளம் சொன்னால் போலீஸுக்கு பத்து அடி, ஒரு வேளை மந்திரியைச் சொன்னால் ஐந்து அடி, திருடனைக் கண்டுபிடித்த பிறகு திருடனுக்கு ராஜா தண்டனைக் கொடுப்பார்.

34.நாம் நான்கு பேர் இல்லையே ஐந்து பேர் இருக்கிறோமே என்று குடிபோதையில் தர்மன் சொல்ல, அசோகன் குடிபோதையில் இல்லை நான்குபேர் என்று அவனை விட்டு எண்ணுகிறான். அதன் பிறகு அசோகனுக்கு ஐந்து பேர் இருக்கிறார்கள் என்பதைப் புரிய வைக்கிறார்கள்.

35.அப்படியானால் ஐந்தாவது நபரை நீதிபதியாக வைத்துவிடுவோம் என்று அசோகன் சொல்லி முடிக்கும் முன்பாக திருமேனி என்ற நம்பூதிரி அப்பதவிக்கு ரெடியாக இருக்கிறான்.

36.திருமேனி நான்கு தாள்களில் ராஜா, மந்திரி, திருடன் போலீஸ் என்று குலுக்கிப் போட ஆளுக்கொரு சீட்டை எடுக்கிறார்கள். அசோகனுக்கு போலீஸ் சீட்டு கிடைக்கிறது.

37.அசோகன் முதலில் தர்மனை திருடன் என்கிறான். தர்மனோ ராஜா. அசோகனுக்கு கையில் பிரம்படி கொடுக்க தயாராகிறான் தர்மன். அனைவரும் சிரிக்கிறார்கள். அசோகன் 500 ரூபாய் லஞ்சம் கொடுப்பதாக ராஜாவிடம் சொல்ல, ராஜா நீதிபதியிடம் “உனக்கு 200 ரூபாய் தருகிறேன்” அவனுக்கு தண்டனை வேண்டாம் என்று சொல் என்று கேட்கிறான். நீதிபதி ஒத்துக் கொள்ள அசோகனுக்கு அடி இல்லை என்று முடிவு செய்கிறார்கள்.

38.அடுத்து மந்திரிச் சீட்டு வினயனை அசோகன் திருடன் என்று சொல்ல, இதே மாதிரி லஞ்சம் கொடுத்து அடியில் இருந்து தப்பிக்கிறான்.

39.அப்போ கள்ளன் தாசன்தான் என்று கண்டுபிடித்து சிரிக்கிறார்கள். யாரும் எதிர்பார்க்காத வகையில் தர்மன் “இந்த நாயிண்ட மோன்தான் கள்ளன்” என்று காலால் எட்டி தாசனின் நெஞ்சில் மிதிக்கிறான்.

40.இந்த விளையாட்டில் காலால் எட்டி மிதிக்கிறாய் என்று தாசன் பொருமுகிறான். ஆனால் பதிலுக்கு தர்மனை அடிக்கவோ எட்டி உதைக்கவோ தாசனுக்கு கால் வரவில்லை. கோபப்பட்டு புலம்பிக் கொண்டே இருக்கிறான்.

41.”இதெல்லாம் விளையாட்டுக்குதானே தாசா” என்று சொல்லி திருடனுக்கு என்ன தண்டனை என்று ராஜாவிடம் கேட்கிறார்கள்.

42.ராஜாவும் நீதிபதியும் சேர்ந்து “இவனுக்கு தேசதுரோக குற்றத்துக்கு மரணதண்டனை விதிக்கிறேன்” என்கிறார்கள். தாசன் கோபித்துக் கொள்கிறான்.

43.“விளையாட்டுக்குதானே தாசா” என்று தாசனின் கைகளை ஒரு துண்டால் கட்டுகிறார்கள்.

44.தாசனை தூக்கில் போட கயிறு தேடுகிறார்கள். வினயன் சிரிதபடியே மெல்லிய பிளாஸ்டிக் டேப்பை எடுத்து வருகிறான்.

45.தர்மன் “இதெல்லாம் ஒரு கயிறா. தாசனின் லுங்கிய உருவடா” என்று லுங்கியை உருவி தாசன் திமிர திமிர அவன் கழுத்தில் கட்டுகிறார்கள்.

46.இந்த விளையாட்டு வேண்டாம் வேண்டாம் என்று தாசன் கத்துகிறான். கழுத்தில் லுங்கி போட்டப்பின் ஊளை விடுகிறான். அவனை மேலே இருந்து கிழே தள்ளிவிடுவதன் மூலமாக குடிவெறியிலும் தங்களுக்குள் இருக்கும் ஜாதிவெறியின் வெளிப்பாட்டினாலும் தூக்கில் போடுகிறார்கள்.

47.தாசன் விழி பிதுங்கி எச்சில் வடிய செத்துத் தொங்குகிறான்.

48.அதிகாரத்தின் கையாளான போலீஸுக்கு தவறின் தண்டனையில் இருந்து தப்பிக்க நிறைய வாய்ப்பு கொடுக்கிறார்கள். ஆனால் திருடனை ஜாதி பார்த்து கேள்வியே கேட்காமல் தொங்கவிடுகிறார்கள்.

49. பின்னால் டிவியில் கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியினரின் தலைவிதி பற்றி ஒருவர் செய்தி வாசிக்கிறார்.

50.கம்யூனிஸ்டுகள் போன்ற சமூக சீர்திருத்த கட்சிகள் ஆட்சி செய்தாலும் ஜாதியை மட்டும் அழிக்க முயற்சி செய்யவில்லை என்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

51.அல்லது இப்போதைக்கும் நாட்டில் விஷமாய் பரவும் மதவாதக் கட்சிகளால் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அதிகாரத்துக்கு பிரச்சனை இருக்கிறது. அந்த இடத்தில் எச்சரிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

52.இந்தியர்களாகிய நம் மனக்கிணற்றின் உள்ளே ஜாதி பற்றிய கவனம் எந்த அளவுக்கு உறைந்திருக்கிறது. தேவைப்படும் போது அதை எவ்வளவு குரூரமாக வெளிப்படுத்துகிறோம் என்பதை மிக அருமையாக விளக்கும் இப்படத்துக்கான பட்ஜெட் இருபது லட்சம் மட்டுமே என்று விக்கிபீடியா சொல்கிறது.

விஜய் பாஸ்கர், விமர்சகர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: