“நான் உணவு உண்டதைக் காட்டிலும் அதிக புத்தகங்களைப் படித்திருக்கிறேன். நான் எழுதுவதற்கான விடயங்கள் அங்கிருந்தே வருகின்றன. எழுத்து எனக்கு செயல்பாடு”

– மகாஸ்வேதா தேவி.

இந்த நேர்காணல் 2011-ஆம் ஆண்டு டாக்டர் நந்தினி சவுத்ரியால் எடுக்கப்பட்டு பென்கிராஃப்ட் இண்டர்நேஷனல் இணையத்தில் வெளியானது. அதன் தமிழாக்கம் இங்கே:

மகாஸ்வேதா தேவியுடனான சந்திப்பை விவரிக்க முடியாது. அவர் பொறுமை இல்லாதவர் என எனக்கு சொல்லப்பட்டிருந்ததால் நான் மிகுந்த பயத்துடனே அவரை அணுகினேன். எப்படியோ, என்னுடைய எண்ணத்தை ஒத்திவைக்கும்படியாக, ஒரு மணி நேரம்தான் என்று தொடங்கிய எங்களுடைய உரையாடல் இரண்டு மணி நேரம் நீட்டிக்கப்பட்டது, குறிப்பாக, சிங்கூர்-நந்திகிராம் தொடர்பான தன்னுடைய செயல்பாடுகளை சொல்லும்பொருட்டு.

பொட்டில் அடித்தாற்போல் பேசக்கூடியவர், அதே சமயம் குழந்தையைப் போல எளிமையானவர். அவருடைய இரக்கம் வறியர்களுக்கானதாகவும் தேவையுள்ளவர்களுக்கானதாகவும் இருக்கும். பழங்குடியினருக்கும் பட்டியலினத்தோருக்கு அவர் ‘மா’, அவர்களுக்காகவே அவர் உழைத்தார். அவருடைய உடல்நிலை காரணமாக, அவர் மணிக்கணக்கில் அமர்ந்திருக்க வேண்டியிருந்தது. கசகசக்கும் கொல்கத்தாவின் கோடையில், மின்விசிறிகள் அணைந்துவிட்டபோதும் அதன் சுவடு எதையும் காட்டிக்கொள்ளாமல், “என்னை எதுவும் பாதிப்பதில்லை” என்பார். தொலைபேசி இடைவிடாது ஒலித்துக்கொண்டே இருந்தது, நந்திகிராமில் உள்ள மருத்துவமனைக்கு உதவும் மருத்துவர்களுக்கும் நன்னொடையாளர்களுக்கும் அவர் குறிப்புகள் தந்தபடியே இருந்தார்.

மகாஸ்வேதாவின் நகைச்சுவை உணர்வு தொற்றக்கூடியது, அவரே சொல்வதுபோல மேற்கு வங்க அரசின் பார்வையில் “ஒரு உறுதியான குற்றவாளி’யாக தெரியக்கூடியது. அவர் தனக்குள்ளே சிரித்துக்கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருந்தார், அது அவருடைய எழுத்துக்கு கத்தி போன்ற கூர்மையைத் தருகிறது. தவறில்லாமல் தேதிகளையும் சம்பவங்களையும் நினைவுகூரும் அவருடைய ஞாபக திறனைக் கண்டு நான் ஆச்சரியத்துக்கு உள்ளானேன்.

வரலாற்றின் மேலான தனது காதலை நிகழ்வாக விவரிக்கிறார். பாடப்புத்தகங்கள் அல்ல அவை, வரிகளுக்கிடையே மறைந்திருக்கும் மையால் எழுதப்பட்ட வரிகள் அவை. வெகுஜென வரலாறு மையப்படுத்தப்படுவதை கூர்மையுடன் அவர் எதிர்கொண்டார். அவர் ஒருபோதும் தன்னை ஒடுக்கப்பட்டவர்களின் சார்பாக பேசுவதாக காட்டிக்கொண்டதில்லை. அவரை பொறுத்தவரை, வறியவர்களும் அடித்தட்டு மக்களுமே எப்போதும் பேசிவருகின்றனர். அவர்களின் குரல்கள் முடக்கப்பட்டதால் அவற்றை வெளிக்கொண்டுவந்து முன்னிலைப்படுத்துகிறார்.

அவற்றைக் கேட்க கூர்மையான காதுகளும் மகாஸ்வேதாவினுடையதைப் போன்ற பேனாவும் தேவைப்படுகின்றன. மக்களின் வரலாற்றை பதிவு செய்யும் மகாஸ்வேதா தேவி, பத்மஸ்ரீ, பத்மவிபூஷன், ஞானபீடம், மகசசே போன்ற விருதுகளைப் பெற்றவர். வாழும் மாமனிதர். எழுத்தையும் செயல்பாட்டையும் சம அளவில் சம அளவிலான நேர்மையுடன் கைக்கொண்டவர். அடித்தட்டு மக்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் நீதி கேட்கும் உதாரணத்துக்குரிய வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறார் மகாஸ்வேதா.

எழுத்தையும் செயல்பாட்டையும் ஒருங்கே செய்ய நேர்ந்தது குறித்து எங்களுக்குச் சொல்ல முடியுமா?

“ராணி ஜான்சியின் வாழ்க்கை சரிதையை எழுதுவதிலிருந்து என்னுடைய எழுத்துப் பயணம் தொடங்கியது. எனக்கு வரலாற்றின் மீது ஆர்வமாக இருந்தது. என்னைப் பொறுத்தவரை உண்மையான வரலாறு என்பது இரண்டு வரிகளுக்கிடையேயுள்ள வெற்றிடத்தில் இருக்கிறது. அங்கே தான் ஒருவர் மக்களின் வரலாறை தேட முடியும். 1956-ஆம் ஆண்டு என்னுடைய முதல் புத்தகத்தை எழுதும்போது என்னுடைய வயது 28. அப்போது தன்னந்தனியா ஜான்சி, குவாலியர் மற்றும் சில ஊர்களுக்குச் சென்று மக்களிடமிருந்து வாய்மொழிக்கதைகளை, பாடல்களை சேகரித்தேன். எனக்கு இன்னமும் நினைவிருக்கிறது. அது டிசம்பர், குளிர் அதிகமாக இருந்த நேரத்தில் கிராமத்து மக்கள் எரியும் கொள்ளிகளைச் சுற்றி அமர்ந்தபடி பாடினார்கள். அவர்களுடைய பாடல் இதுதான்.

“Patthar mitti se fauj banaye,
kat se katwar,
Pahaar utha kar ghora banayii,
Chali Gwalior…..”

என்னுடைய வாழ்க்கை முழுவதும் நான் தொழில் ரீதியான எழுத்தாளராகவே இருந்தேன் என்பது உண்மை. எழுதுவது ஒன்றே எனக்கும் என்னுடைய குடும்பத்துக்கும் உதவியாக இருந்தது. 1970களுக்குப் பிறகு, நான் மக்களின் வரலாற்றில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். அது எனக்குள் இயற்கையாகவே நிகழ்ந்தது. நான் சூடாக விற்பனையாகும் எழுத்துக்களையும் ஏராளமாக எழுதினேன் என்பதையும் இங்கே தெளிவுபடுத்தவிரும்புகிறேன். ஏனெனில் தொழில்ரீதியான எழுத்தாளர்களுக்கு அழுத்தங்கள் ஏராளம். ஆனந்தபஜார் பத்திரிகை குழுமத்துக்கு மட்டும் நான் எழுதவில்லை. உண்மையில் ஜான்சிராணி முதலில் ‘தேஷ்’ வார இதழில் தொடராக வந்தது. மேலும் மூன்று, நான்கு கட்டுரைகளும் வந்தன. பிறகு, நான் நிறைய பத்திரிகைகளுக்கு எழுதினேன். அதோடு, 60களின் இறுதியில் இருந்து பெங்காலி பத்திரிகைகளில் பத்திகள் எழுதிக்கொண்டிருக்கிறேன், இப்போதும்கூட. எகனாமிக் அண்ட் பொலிடிகல் வீக்லி, ஃபிராண்டீர், பிஸினெஸ் ஸ்டாண்டர்ட்ஸ் போன்ற இதழ்களில் எழுதிய காலம் ஒன்றும் இருந்தது. ஆங்கிலத்தில் எழுதுவது செயல்பாட்டுக்கான முக்கிய தளத்துடன் இணைந்ததாக இருந்தது. பலாமா(Palamau)வில் உள்ள கொத்தடிமை பணியாளர்கள் குறித்து எழுதினேன். அதுபோல மேற்குவங்கத்தின் சீர்மரபின பழங்குடிகள் குறித்து அவர்களுடைய மனித உரிமைகள் குறித்தும் தொடர்ச்சியாக எழுதினேன். பிரிட்ஷார் 1871-ஆம் ஆண்டு 200லிருந்து 250 வரையான இனங்களை பழங்குடிகளாக கூறினர். மேற்கு வங்கத்தில் லோதா, கெடியா ஷோபோர், திகோரா ஆகிய மூன்று இன மக்கள் உள்ளனர்”.

இந்திய அளவிலான இயக்கமாக இது எப்போது மாறியது?

“புருலியாவைச் சேர்ந்த புதான் ஷோபோர், காவல் துறையால் கொடூரமாகக் கொல்லப்பட்டார். பிரிடீஷார் அவர்களை குற்றப் பழங்குடிகளாக அறிவித்தனர். சுதந்திரத்துக்குப் பிறகு, 1952-ஆம் ஆண்டு அவர்களை இந்திய அரசு சீர் மரபினர் (de-notified) ஆக அறிவித்தது. அதாவது அவர்கள் இனி குற்றப் பழங்குடிகளாக இருப்பார்கள்.  புதானின் இறப்புக்குப் பிறகு எனக்கொரு சந்தேகம் வந்தது. கொல்கத்தா நீதிமன்றத்தில் மாநில அரசுக்கு எதிராக பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தேன். அதிர்ஷ்டவசமாக அந்த வழக்கை நாங்கள் வென்றோம். புதானின் மனைவி ரூ. 1 லட்ச உதவியைப் பெற்றார்.

1999-ஆம் ஆண்டு பத்ரா சோபோர் கல்லால் அடித்து கொள்ளப்பட்டார். ஏன்? சீர் மரபின பழங்குடியாக இருந்ததாலேயே போலீஸ் அவர்களைக் கொன்றது. அக்கம்பக்கத்தில் வசிப்பவரோ எவர் வேண்டுமானாலும் அவர்களை கொல்லலாம். 1997க்கும் 1999ஆண்டுக்கும் இடையே 37 லோதா பழங்குடிகள், மதினிபூரில் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். அரசு ஒன்றுமே செய்யவில்லை. 1992-ஆம் ஆண்டும் சுனி கோதல் என்ற பெண், லோதா இனத்திலேயே முதல் பெண் பட்டதாறியானார். மதினிபூ பழங்குடி பெண்கள் விடுதியின் மேற்பார்வையாளராக அவர் பணியில் சேர்ந்தார். மதினிபூர் வித்யாசாகர் பல்கலையில் மானுடவியல் படித்தார். தன் இனத்தின் மீது அரசு சுமத்திய களங்கத்தை துடைக்க அவர் விரும்பினார். பல்கலைக்கழகமும் அவருக்கு உதவியாக இருந்தது. அவர் அருமையான லோதா இளைஞரை மணந்தார், மகிழ்ச்சியாக இருந்தார். ஆனால் அவர் தற்கொலை செய்துகொண்டார். காரணம் பொதுத்தளத்தில் அவரால் போராட முடியவில்லை.

1998-ஆம் ஆண்டு புதானின் வழக்கு நீதிமன்றத்தில் இருந்தபோது டாக்டர் ஜி. என். தேவி, பரோடாவில் எல்வின் கருத்தரங்குக்கு அழைத்திருந்தார். அங்கே நான் சொன்னேன்: “தனியாக பழங்குடிகளுகாகப் போராடுவது போதாது. சீர் மரபின பழங்குடிகள் குறித்து என்ன சொல்வது?” அன்றைய நாள், நானும் டாக்டர். தேவி, லஷ்மண் கேவாட் மூவரும் இணைந்து ‘சீர்மரபினர் அல்லது நாடோடி பழங்குடி உரிமை நடவடிக்கைக் குழு’வை உருவாக்கினோம். மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த ஒவ்வொரு அத்துமீறலையும் பதிவு செய்தோம். தொடர்புடைய சம்பவ இடத்துக்குச் சென்று சேகரித்த தகவல்களை தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் முதலாவதாக தருவோம். மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர், நீதிபதி வர்மா, சிறப்பான நடவடிக்கைகளை எடுத்தார், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு விரைவாக வழங்கப்பட்டது. அவர் அனைத்து மாநில தலைமை செயலாளர்களையும் அழைத்து, நாங்கள் வலியுறுத்திய சீர்மரபின பழங்குடிகளின் அடிப்படை மனித உரிமைகள் குறித்து பேசினார்.

14/1/2006 அன்று பிரதமரைச் சந்தித்து நானும் கணேஷ் தேவியும் எங்களுடைய கோரிக்கைகளை கையளித்தோம் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதன் பின் பாலகிருஷ்ண ரெங்கே தலைமையில் ஆணையம் ஒன்றை அரசு அமைத்து, எங்களுடைய கோரிக்கைகளை பரிசீலிக்கச்சொன்னது.  நிலத்துக்காகவும் மறுவாழ்வுக்காகவும் கல்வி மற்றும் அடைப்படை மனித உரிமைகளுக்காகவும் அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு செய்வது குறித்தும் அவரை உதவச் சொன்னது. இதைச் சொல்வதற்காக என்னை மன்னிக்க வேண்டும், ரெங்கி, இதுநாள் வரை பொருத்தமான நிதியை ஒதுக்கீடு செய்ய கோரவில்லை. சீர்மரபின பழங்குடிகள் குறித்த பணிகள் அனைத்தும் டாக்டர். தேவியால் ஆவணப்படுத்தப்பட்டதோடு நிற்கின்றன.

 

சீர்மரபின பழங்குடிகளுக்காக இயங்குவதை ஒரு பகுதி வேலையாக 70 களிலிருந்து 2006 வரை தொடர்ச்சியாக செய்துவருகிறேன். டாக்டர் தேவியும் நானும் சேர்ந்து பரோடாவுக்கு அருகே உள்ள தேஜ்கரில் இந்தியாவின் முதல் பழங்குடியின அகாதமியை உருவாக்கினோம். அதுபோல, என்னுடைய எழுத்துக்களில் பெரும்பான்மையான புத்தகங்கள் மக்களைப் பற்றியவை.  “Basai Tudu”, “Pterodactyl” மற்றும் சிலவை ஆங்கிலத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டன, அனைத்தும் அல்ல.  “Aranyer Adhikar”, “Andharmani” (Kobi Mrityu) போன்றவை இன்னும் மொழியாக்கம் பெறவில்லை”.

உங்களுடைய படைப்புகள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படுவது மகிழ்வைத் தருகிறதா?

““Draupadi”, “Breast Giver”, “Pterodactyl” போன்ற கதைகளை மற்ற மொழியினரும் வாசிக்கும் வகையில் காயத்ரி மொழியாக்கம் செய்தார். நான் என்னுடையதை மொழியாக்கம் செய்யவதில்லை எனும்போது,  அவருடையதையோ, மற்ற மொழிபெயர்ப்பாளர்களையோ குறைசொல்வது புத்திசாலித்தனமானதல்ல. பெருமையோடு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், என்னுடைய படைப்புகள் பெங்காலியில் எழுதியவதை அனைத்தும் தொகுதிகளாக வரவிருக்கின்றன. 19 தொகுதிகள் இதுவரை வந்துள்ளன. ஆசிரியர் அஜோய் குப்தாவின் கூற்றுப்படி, அது என்னுடைய வாழ்நாளில், அல்லது அவருடைய வாழ்நாளில் முழுமையடையாது.

 

மேலும், எனக்கு எழுத்துவது இயக்கத்தைப் போல. 1982-ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை Purulia Khedia Shobor Kalyan Samityன் நெருங்கிய தொடர்புடையவளாக இருக்கிறேன். ஒரு நாளில் 15-18 மைல் தூரம் நடப்பேன். இப்போது முடியவில்லை. நான் செய்ய விரும்பியதை எழுத்தில் எழுதலாம். நவம்பர் 2006-ஆம் ஆண்டிலிருந்து சிங்கூர், நந்திகிராம் குறித்து விரிவாக எழுதிக்கொண்டிருக்கிறேன். மருத்துவர்களும் மற்றவர்களும் தொடர்ச்சியாக அங்கே சென்று சோனார்சா, கோகுல்நகரில் உள்ள மருத்துவ மையங்களை ஏற்படுத்தி வருகிறார்கள் என்பதை மகிழ்வுடன் சொல்கிறேன். இதற்காக நாங்கள் நிதியைக் கேட்பதில்லை, என்னுடைய பத்திகள் மூலமாக ஜெனரேட்டர்கள், பயன்படுத்திய சைக்கிள், மின்விசிறிகள் ஆகியவற்றைத்தான், அங்கிருக்கும் மருத்துவமனைக்காக கேட்கிறோம். மருத்துவர்கள் இங்கிருக்கும் பள்ளி மாணவர்கள், ஆண்-பெண் இருபாலருக்கும் மருத்துவ உதவியாளர் பயிற்சிகளை அளிக்கிறார்கள். படிப்பு குறைவான பெண்களுக்கு சுகாதார உதவியாளர் பயிற்சியையும் அளிக்கிறார்கள்.

நந்திகிராம் மக்கள் ஆர்வம் மிக்கவர்கள். அவர்கள் ஒத்துழைக்கிறார்கள்; உலகத்துக்காக வரலாற்றின் புதிய அத்தியாயத்தை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நான் பத்திரிகை பத்திகள் மூலம் அவர்களுக்கு உதவுகிறேன். அவர்களுடைய போராட்டத்தையும் எழுத விரும்புகிறேன். அதற்கான நேரம் இருக்குமா இருக்காதா என்பதை நானறியேன். இப்போது அது எனக்குள் வேறூன்றி இருக்கும் கனவு. எழுதுவது எனக்கு இறுதியான இயக்கமாக மிஞ்சுகிறது, அதை ஒவ்வொரு நாளும் நிரூபிக்கிறேன்”.

mahaswetha young

உங்களுடைய இலக்கிய தாக்கங்கள் குறித்து சொல்லுங்களேன்…

“நான் பிரிட்டீஷாரின் ஆட்சியையும் பார்த்தேன், சுதந்திரத்துக்குப் பிறகான காலத்தையும் பார்த்தேன். நான் இன்னும் வாழ்கிறேன். நான் இன்னும் 18 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன். (18 ஆண்டுகளில் 100 வயதை அவர் எட்டுவார்).

முகுந்த ராம் சங்கரவர்த்தி, 16-ஆம் நூற்றாண்டு கவிஞர். அவருடைய ‘கோபி கொன்கன் சாண்டி’ நிரந்தரமான இலக்கிய வழிகாட்டி எனக்கு.  1936 முதல் 1938 வரை சாந்தி நிகேதனில் வாழ்ந்தபோது ரவீந்திரநாத் தாகூர் எனக்கு மூலாதாரமான தூண்டுகோளாக இருந்தார். சாந்திநிகேதனில் நான் சுயஒழுக்கத்தை கற்றுக்கொண்டேன். ஒருவருவரின் வாழ்க்கையில், இயற்கையை படிப்பது முதன்மையானதாக பின்பற்றப்பட வேண்டும். சிறு உயிரை, பறவையை, விலங்கை நேசிக்க வேண்டும். இந்தப் பாடங்கள் எனக்குள் இன்னமும் மீதமிருக்கின்றன. விபூதி பூஷன் பண்டோத்பாயி, தாரா சங்கர் பண்டோத்பாயி, சதிநாத் பதாரி, மாணிக் பண்டோத்பாயி, ஜோதிர்மாயோ தேவி, லீல் மசூம்தார் போன்றோர் எனக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள்”.

நீங்கள் புராணங்களுடன் விளையாடியிருக்கிறீர்கள். திரௌபதி, குருஷேத்ரா?

“மீண்டும் அதே தான். ராமாயணம், மகாபாரத்தில் வரிகளுக்கு இடையேயான இடைவெளிதான். குந்தியும் அவருடைய மகன்களும் அரண்மனையில் வைத்து உயிரோடு எரிக்கப்பட்டார்கள். என்னுடைய வாழ்க்கையில் நான் உண்டதைக்காட்டிலும் அதிகமாகப் படித்திருக்கிறேன். நான் பெரும் வேட்கையுள்ள வாசிப்பாளர். வரலாற்றின் ஆற்றல்மிக்க ஓட்டைகள் என்னை வசீகரிக்கின்றன, அவற்றைப் பற்றி எழுதுகிறேன். சந்தாயினியின் யசோதா பாரம்பரியமான பெயர். அது துணைப் பிரதி அல்ல”.

“விநோதபாலா’வில் நீங்கள் பாலியல் தொழிலாளர்கள் பற்றி பேசுகிறீர்கள்?

“நம்மைப் போல அவர்களும் வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள். பாலியல் தொழிலாளர்கள் சுதந்திரப் போராட்ட காலத்தில் ஏராளமான உதவிகளைச் செய்திருக்கிறார்கள். அவர்கள் நிதி உதவி அளித்திருக்கிறார்கள். என்னுடைய வாழ்க்கை முழுவதும் நான் திறந்த கண்களுடன் வாழ்ந்திருக்கிறேன். அதனாலேயே நான் பொதுதளத்தில் பேச எழுத மறுக்கப்படும் சம்பவங்களை, நிகழ்வுகளை எழுதுகிறேன்.

நீங்கள் பார்த்ததிலேயே மிகவும் மோசமான காவல்துறை அத்துமீறல் எது?

“புதானின் வழக்கு. அவருடைய மனைவி புகார் அளித்தார். அவர்களை இதை தற்கொலை என்றார்கள். பழங்குடிகள் இறந்தவர்களை எரிப்பதற்கு பதிலாக புதைப்பார்கள். புதானின் அப்பா, இந்த வழக்கை உயிர்ப்போடு வைத்திருந்தார், அவர் 1942-ஆம் ஆண்டைச் சேர்ந்த சுதந்திர போராட்ட வீரர்.

நீங்கள் உங்களை பெண்ணியவாதி என அழைப்பீர்களா?

“நான் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் எழுதுகிறேன். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் சமூகத்தின் நலிவடைந்தவர்கள் என்பதற்காக அத்துமீறலுக்கு ஆளாகிறார்கள். என்னுடைய கதைகள் பெண்களுக்கானவை மட்டுமல்ல. நான் அடக்கி வைக்கப்பட்டுள்ள அனைவருக்காகவும் எழுதுகிறேன்”.

 

உங்களை பெண்ணியவாதி என சொல்லலாமா?

“அப்படி சொல்ல முடியாது. நான் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் எழுதுகிறேன். என்னுடைய தாய் மிகவும் தைரியமான பெண். கிழக்கு வங்கத்திலிருந்து வரும் அகதி பெண்களுக்கு அவர் உதவுவார், அப்போது பெராம்பூரில் இருந்தோம். அவருக்கு சாதி அமைப்பின் மீது நம்பிக்கை இல்லை. அவர் எல்லோரையும் சமமாக மதித்தார், பாவித்தார். வறியவர்களுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் அதிகாரம் தேவையில்லை. அவர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள். அப்படியில்லையெனில், தபோஸி மாலிக் போன்ற பெண்கள் எங்கிருந்து வரமுடியும்? நான் அவர்களிடமிருந்து பலத்தைப் பெறுகிறேன். எங்களை சுற்றியிருக்கும் மண்ணின் மைந்தர்களிடமிருந்து பலத்தைப் பெறுகிறேன். சிங்கூர், நந்திகிராம் எனக்கு வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தை கொடுத்திருக்கின்றன. மேதா பட்கரும் நானும் சிங்கூருக்கு எந்த அரசியல் கட்சியின் சார்பாகவும் செல்லவில்லை. மக்களின் வலிமையில் நான் கொண்டிருந்த நம்பிக்கையை மெய்பித்த அவர்களுக்கு நான் நன்றி சொல்வேன். அது பிர்சா முண்டாவானாலும் அல்லது சிங்கூர், நந்திகிராம் மக்களானாலும் நான் உங்கள் பின்னால் நடப்பேன் எப்போதும்.”

எழுத்தாளர் மகாஸ்வேதா தேவி தன்னுடைய 91 வயதில் கடந்த வியாழன் (28-07-2016) அன்று காலாமானர். அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவருடைய வாழ்க்கையை சுருக்கமாகத் தரும் இந்த நேர்காணல் வெளியிடப்படுகிறது.