கடந்த ஒரு வாரமாக குஜராத்தில் நடந்துவரும் போராட்டங்கள்தான் அம்மாநில முதல்வர் ஆனந்திபென் பட்டேலை ராஜினாமா செய்ய வைத்திருக்கிறது என ஊடகங்கள் பேச ஆரம்பித்துள்ளன. நரேந்திர மோடி மே 2014-ஆம் ஆண்டு பதவி விலகிய பின், குஜராத் மாநிலத்தின் முதல் பெண் முதலமைச்சராகப் பொறுப்பேற்றா ஆனந்திபென் பட்டேல். ஆர் எஸ் எஸ்ஸின் நம்பிக்கைக்குரியவராகவும் மோடி-அமித் ஷாவின் நெருங்கிய சகாவுமான ஆன்ந்திக்கு இந்த பதவி அளிக்கப்பட்டது பாஜகவைப் பொறுத்தவரை சரியான தேர்வாக இருந்தது.

அதற்கேற்றாற்போல் செயல்பட்ட ஆனந்திபென் மீது, சமீபத்தில் தன் மகள்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி முறைகேடு செய்வதாக  குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அது அணைக்கப்பட்ட நிலையில், தலித்துகள் மீதான பசுபாதுகாக்கும் கும்பலின் தாக்குதல் மிகப்பெரிய போராட்டத்தை எட்டியது. பட்டேல்களின் போராட்டத்தை சொந்த சாதியின் பற்றுடனும் அனுசரணையுடன் அணுகிய ஆன்ந்திபென்னுக்கு தலித்துகளின் போராட்டம் கையை மீறிய விஷயமாக இருந்தது.

இந்த நிலையில் தான் தன்னுடைய முகநூல் வழியாக ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கிறார் ஆனந்தி பென். காரணமாக, தனக்கு 75 வயது ஆகப்போவதால் தானாக முன்வந்து, அடுத்த தலைமுறைக்கு இப்பதவியை விட்டுக்கொடுப்பதாகச் சொல்கிறார். அடுத்த ஆண்டு குஜராத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அதற்குள் ஆனந்தி பென்னின் பதவி விலகல் ஏன் என்று கேள்வி எழுகிறது.

கணிசமான தலித் ஓட்டுகளைக்கொண்ட உத்திரப் பிரதேச தேர்தல் நெருங்கும் நேரத்தில் குஜராத் தலித்துகளின் போராட்டம் அங்கே எதிரொலிக்கலாம் என தலைமை நினைத்திருக்கலாம். அந்தப் போராட்டத்தை திசை திருப்பும் வகையில் இந்தப் பதவி விலகல் அரங்கேற்றப்பட்டிருக்கலாம். நேரம், காலத்தைப் பொறுத்துதான் ஒரு செயலுக்கான பொருளை கற்பிக்க வேண்டியுள்ளது.