Vasu Devan

வாசுதேவன்
வாசுதேவன்

ஆடிப்பெருக்கைப் பற்றி சங்க இலக்கியத்தில் குறிப்பிட்டுள்ளதாகத் தெரியவில்லை. ஆனால் காவேரி ஆறை ஒரு காதலியாக உருவகித்து, ஆற்றில் குளிக்க சென்றவனை தன்னோடு அழைத்துக்கொண்டாள் என பரணர் ஒரு பாடலில் ஆதிமந்தி, ஆட்டனத்தி காதல் கதையோடு எழுதியுள்ளார். ஆதிமந்தி சோழ மன்னன் கரிகாலனின் மகள் எனவும், ஆட்டனத்தி என்பவன் சேர அரசன் எனவும் மரபாக நம்பப்படுகிறது.
…………” முழவுமுகம் புலராக் கலிகொள் ஆங்கண்
கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும்
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின்
ஆட்டன் அத்தி நலன் நயந்து உரைஇத்
தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின்
மரதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த
ஆதி மந்தி காதலர் காட்டிப்
படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின்
மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர்”…………….
[அகநானூறு 222, பரணர்.]
கழார்ப் பெருந்துறை என்ற ஊரில் காவேரி ஆற்றங்கரையில் புதுப்புனல் விழா! அந்த விழாவில் குன்றைப்போல் தோள்படைத்த ஆட்டனத்தி நடனமாடுகிறான். (ஆட்டனத்தி ஆடல் கலையில் பெயற்பெற்றவன்). அவன் அழகில் மயங்கிய காவேரி மங்கை அவன் அழகில் தன் உள்ளத்தைப் பறிகொடுத்து அவனை உடனழைத்துச் சென்றது.( ஆட்டனத்தி காவேரி வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டான்).

ஆட்டனத்தி கரை ஒதுங்கிக் கிடந்தான்.

அங்கே நீராடிய மீனவன் தலைவனின் மகள் மருதி என்பவள் அவனைக் காப்பாற்றி அவனுக்கு தேவையான வைத்தியம் செய்தாள்.அவனும் மெல்ல மெல்ல தேறினான்.மருதிக்கு அவன் மேல் ஒரு மோகம் ஒரு காதல் அரும்ப தொடங்கிற்று.அவனே தன தலைவன் என முடிவும் எடுத்து விட்டாள்.அப்படி இருக்கும் தருவாயில்,

ஆதிமந்தி ஆட்டனத்தியை தேடி புலம்பிக் கரையோரமாக ஓடினாள். தன் காதலனைக் கண்டீரோ என்று கேட்டுக்கொண்டு ஊர் ஊராக அலைந்தாள். நீரோட்டத்தின் வழியே கரையிலே பின்சென்று, “மலையொத்த தோள்கள் கொண்டவனே” என்று கதறினாள். ஆதிமந்தி கூறிய அடையாளங்கள்,தான் காப்பற்றிய,தன் மனதை கவர்ந்த,தன் தலைவனாக முடிவெடுத்த இவனின் அடையாளங்களுடன் ஒத்து போவதை கண்டு மருதி திடுக்கிட்டாள். ஆட்டனத்தியை அவளது காதலி ஆதிமந்தியிடம் ஒப்படைத்துவிட்ட மருதி கடலுள் பாய்ந்து தன்னை மாய்த்துக்கொண்டாள். இந்தக்கதைக்கு நீட்சியாக அதே பரணர் அகநானுறு 376 பாடலில் தொடர்ந்துள்ளார்.

ஆதிமந்தி, ஆட்டனத்தி காதல்கதை குறுந்தொகை 31வது பாடலில் பயிலப்பட்டுள்ளது.
“மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டும் காணேன் மாண்தக் கோனை
யானும் ஓர் ஆடுகள மகளே என் கைக்
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த
பீடு கெழு குரிசலும் ஓர் ஆடுகள மகனே.”
அதாவது என் காதலனை,அந்த நீச்சல்-நடன விளையாட்டு வீரன் ஆட்டனத்தி என்பவனை, பலம் உடைய போர்வீரர்கள் விழாக் கொண்டாடும் இடங்களிலும்,மள்ளர் மகளிர் தம்முள் பொழுது போக்காக தழுவி வட்டமாக நின்று கை கோத்துக்கொண்டு ஆடுகின்ற துணங்கை நடனம் ஆடும் இடங்களிலும் காணமுடியவில்லை.நானும் ஓர் ஆடுகள மகள்[ஆட்டக்காரி].அந்த ஆட்டக்காரனை நினைத்து என் சங்கு கைவளையல் நழுவுகிறது தோழி என நாணம் கடந்து வருந்தி முறையிட்டாள்.
ஆனால் ஆடிப்பெருக்கு ஒருவருக்கு கதிகலக்கமாக இருந்துள்ளது. உ.வெ.சா பழம்பெரும் ஓலைச்சுவடிகளை தேடி அலைந்தது தெரியும். இதைபற்றி விலாவாரியாக ‘ என் சரித்திரம்’ என்ற நூலில் எழுதியுள்ளார். ஒருமுறை ஈரோடு அருகில் கொடுமுடியில் ஒரு பெரியவரிடம் பழைய ஓலைச்சுவடிகளை இருப்பது அறிந்து அந்தப் பெரியவரிடம் தன்னிடம் ஒப்படைக்குமாறு மன்றாடுகிறார். ஆனால் பெரியவரோ விடியற்காலையில் ஆடிப்பெருக்கத்தில் பழைய ஓலைச்சுவடிகளை ஆற்றில் மிதக்கவிடுவேன் என்ற அபத்தமான சடங்கை சொன்னபோது உ.வெ.சா திடுக்கிட்டுள்ளார். உடனடியாக பக்கத்து வீட்டு திண்ணையில் அன்றிறவு உறங்கி, விடியற்காலையில் பெரியவரை பின்தொடர்ந்து ஆற்றில் விட்ட ஓலைச்சுவடிகளை பத்திரமாக மீட்டெடுத்துள்ளார்.
அப்படியானால் ஆட்டனத்தியை உடனழைத்துச் சென்ற அதே காவேரி ஆறுதான் பழந்தமிழ் இலக்கியங்களையும் அழைத்துச் சென்றிருக்கும்….காவேரியிடம்தான் தமிழ் இலக்கியங்களும் மாண்டுள்ளதா?

வாசுதேவன், எழுத்தாளர்.