நியூஸ் 7 தொலைக்காட்சியில் வெளியான ‘செய்திக்கு அப்பால்’ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் கரு. பழனியப்பன், அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மிருனாள் சரணை மூக்குடைத்து விட்டதாகக் கூறி, அந்த வீடியோவைப் பகிர்ந்து வைரலாக்கிக் கொண்டிருக்கிறார்கள் சமூக ஊடக மக்கள். உண்மையில் என்ன நடந்தது என்பதை நிகழ்ச்சி தொகுப்பாளரே எழுதியிருக்கிறார் படியுங்கள்!

Mrinal Saran

செய்திக்கு அப்பால் நிகழ்ச்சியில் நான் கபாலி படம் பற்றி திரு கரு.பழனியப்பன் அவர்களுடன் உரையாடும் வீடியோ நேற்றில் இருந்து வைரலாகிக் கொண்டிருக்கிறது. கரு.பழனியப்பனைப் புகழ்ந்தும் ஆங்கர் மொக்க வாங்கிட்டா என்று என்னை கேலி செய்தும் தொடர்ந்து பல நண்பர்கள் ஷேர் செய்து வருகிறீர்கள். அந்த வீடியோவை அதிகம் ஷேர் செய்து புதிதாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சியை மேலும் சிலரிடம் கொண்டு சேர்த்ததற்கு உங்கள் அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். அதே வேளையில் நிகழ்ச்சி குறித்தும் நிகழ்ச்சியில் நடந்தவை குறித்தும் எனது பார்வையை சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

கபாலி பற்றிய தலைப்பை எடுக்கும் போதே சினிமாவில் இருக்கும் சாதி அரசியலைப் பற்றியும் பேச வேண்டும் என்று நிகழ்ச்சி தயாரிப்பாளரான புதிய பரிதியும் நானும் முடிவு செய்திருந்தோம். (அதற்கு முந்தைய வார செய்திக்கு அப்பால் நிகழ்ச்சியில் முன்னாள் நீதியரசர் சந்துருவுடன் இதே கபாலி படத்தை முன்வைத்து பெரிய படங்களின் அரசியல் குறித்து பேசினோம்)

கரு.பழனியப்பனிடம் திரைப்படங்களில் உள்ள சாதி அரசியலைப் பற்றி கேள்வி எழுப்பிய எனக்கு மிஞ்சியது படங்களை வெளியிடுவதில் இருக்கும் வர்க்க அரசியல் பற்றியான பதில்களே. வர்க்க அரசியல் பேசுவதில் எனக்கு எந்த சிக்கலும் இல்லாதபோதும் நிறைய இடங்களில் சினிமாவின் வர்க்க அரசியலைப் பேசிவிட்டதால் சினிமாவில் இருக்கும் சாதி அரசியல் பற்றி கரு.பழனியப்பன் அவர்களின் கருத்தை அறிய விரும்பினேன்.

தேவர் மகன் திரைப்படத்தை தேவர் படம் என்றொ, சின்ன கவுண்டர் படத்தை கவுண்டர் படம் என்றொ அழைக்கிறோமா? பிறகு ஏன் கபாலியை தலித் படம் என்று அழைக்கிறோம். என பா. ரஞ்சித் கேட்டதை கரு பழனியப்பன் முன் வாதமாக வைத்தேன்…….. கேட்டது தான் தாமதம்…. இது மொக்கையான வாதம் என்று தட்டிக்கழித்துவிட்டு மீண்டும் சின்ன படம் பெரிய படம் என்று பேச ஆரம்பித்தார்.

வேண்டுமென்றே கரு.பழனியப்பன் சாதி பற்றிய கேள்வியை தவிர்கிறாரா என்று நான் கேட்டதும் குரலை உயர்த்தி உங்களுக்கு அதெல்லாம் புரியாது என்கிற ரீதியில் எரிச்சலுடன் பேச ஆரம்பித்தார். (இது போல் விருந்தினர் சட்டென கோபப்படுவது எனக்கு முதல் முறை அனுபவம் என்பதால் கொஞ்சம் திக் என்று இருந்தது உண்மைதான். அது என் முகத்திலேயே தெரியும்). இருந்தாலும் பரவாயில்லை சொல்லுங்கள் என்றேன் சொன்னா யாருக்குமே புரியாது என்றார். மக்களுக்குப் புரியாதுன்னு சொல்றீங்களா மக்களை முட்டாள்னு சொல்றீங்களா என்று கேட்டதற்கு மக்களுக்கு தெளிவா புரியும் நான் ஊடகங்களைத்தான் சொன்னேன் என்று பல்டி அடித்தார்.

ரஜினி இல்லைன்னா ஊடகம் கபாலியைக் கைவிட்டிருக்கும் என்கிற கருத்தையும் இடையில் முன்வைத்தார். மிகவும் ஏற்புடையதாகவே இந்த விவாதம் இருந்தது. அதை நான் ஏற்றுக்கொண்டேன். அத்துடன் அட்டைக்கத்திதான் உண்மையான தலித் படம் என்றார். அட்டைக்கத்தியைக் கொண்டாடாமல் கபாலியை மட்டும் ஊடகங்கள் கொண்டாடியது ஏன் என்று கேட்டார்.

ரஜினியை வைத்து எப்படி தலித் படம் எடுக்கலாம் என்று குமுறும் ஊடகங்கள் பற்றியும் சமூக வலைதள ஆட்களைப் பற்றியும் குறிப்பிட்டேன். எந்த மக்கள் அப்படி சொன்னார்கள் என்று ஒரே அடியாக அதை மறுத்துவிட்டார். தினமணியின் கட்டுரையை அவர் வாசித்திருக்க மாட்டார் போல என்றெண்ணி நேரடியாக நான் கேட்க வந்த கேள்வியை முன்வைத்தேன்.

திரைப்படத்தில் சாதி அரசியல் இருக்கிறதா என்று கேட்டதற்கு இல்லை என்றார் எப்படி மறுக்கிறீர்கள் என்று கேட்டேன் மறுபடியும் ஊடகங்கள் அட்டைக்கத்தியைப் பற்றி பேசவேயில்லையே என்று ஆரம்பித்தார். நான் CASTE IN TAMIL CINEMA என்கிற டாக்குமெண்ட்ரியில் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் , நடிகர் நாசர் போன்றோர் தமிழ் சினிமாவில் இருக்கும் சாதியைப் பற்றி பேசியிருந்ததைக் குறிப்பிட்டு கரு.பழனியப்பனிட எப்படி சினிமாவில் ஜாதி இல்லை என்று சொல்கிறார் என கேட்க எத்தனித்தேன்.

டாக்குமெண்ட்ரியின் பெயரைச் சொன்னதுமே எனக்கு பேச இடம் கொடுக்காமல் மீண்டும் பழைய அட்டக்கத்தி கேள்விக்கே வந்துவிட்டார்.

அட்டக்கத்தியை ஊடகங்கள் பேசவில்லை என்பதற்காக கபாலியை முன்வைத்து சாதி அரசியலைப் பேசுவது தவறா? இந்தக் கேள்வியை முன்வைக்க முயலும் போது நான் மக்கள் என்று சொன்னதை குறிப்பிட்டு பேசினார் நான் சரி ஊடகம் என்றே வைத்துக்கொள்ளுங்கள் என்கிற தொனியில் ஊடகம் இப்படி ஒரு ஸ்டேண்ட் எடுப்பது தவறுன்னு சொல்றீங்களா என்று கேட்டால் இப்போது ஸ்டேண்ட் என்கிற வார்த்தையைப் பிடித்துக் கொண்டார்.

கடைசியாக விவாதத்தை முடிக்கும் போது வேறு ஒரு முகம் கொடுக்காதீர்கள் என்றார். அது என்ன முகம் என்று எனக்கு தெரியவில்லை என்பதால் இதை வாசிப்பவர்களின் யூகத்திற்கு விட்டுவிடுகிறேன்.

ஒருவரை மறுத்து பேசுவதற்கு இரண்டு வழிகள் உண்டு. ஒன்று நேரடியாக அதை எதிர்ப்பது. இன்னொன்று மறைமுகமாக அதற்கு இணையான ஒன்றை முன்வைத்து எதிர்ப்பது. கரு.பழனியப்பன் இரண்டாவதைத் தான் தொடர்ந்து செய்தாரோ என்கிற சந்தேகம் எழுகிறது. கபாலியின் அரசியலை நேரடியாக எதிர்க்க முடியாமல் அட்டக்கத்தி மட்டுமே தலித் அரசியல் பேசும் படம் என்று நிறுவி கபாலியை காலி செய்ய முயன்றாரோ என்று தோன்றுகிறது.

ஆனால் கரு பழனியப்பன் அவர்கள் சமூக அக்கறையுடையவர் , முற்போக்கு சிந்தனையாளர், இது போன்ற சாதி விசயங்களை வேண்டுமென்றே புறக்கணிப்பு செய்திருக்கமாட்டார் என்று நம்புகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு முன்பு அவரை என் மனதில் என்ன பிம்பத்தில் இருந்தாரோ அதே பிம்பத்தில் தான் தற்போதும் இருக்கிறார்.