பிரேம்

 

பிரேம்
பிரேம்

ஆதிக்க பக்தி கொண்ட, அடக்குமுறையை நியாயப்படுத்துகிற கட்சிகளின், அமைப்புகளின் அடிப்படை உளவியல் தகவமைப்பு, “நீயே உலகம், உன்னால்தான் அனைத்தும், நீயே அனைத்தையும் செய்தாக வேண்டும். நீ மற்றும் இறைமை கொண்ட கட்சி அல்லது அமைப்பு மட்டும்தான் இந்த உலகம். அதற்காக நீ கொலை செய்யலாம், கொலை செய்யப்படலாம், அனைத்தும் புனிதமானவை, நீ புனிதமானவன்.” என நீள்கிறது.

இந்த உள அமைப்பு பாசிச, அடிப்படைவாத வன்முறைகளைத் தன் புனிதக் கடமையாக எண்ணிக் கொள்ளும்.

ஆனால் இதே உளவியல் அமைப்புடன் விடுதலைக் கருத்தியல்கள் கொண்டவர்கள் இயங்க முடியுமா?

முடியும் என கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள் “தன்மைய்ய” இடதுசாரிகள்.

மார்க்சிய அறிமுகம், கட்சித் தொடர்பு அல்லது பொறுப்பு இவை ஒருவருக்கு ஏற்பட்டு விட்டால் உலக அறிவு அனைத்தும் தம் வசம் வந்து விட்டதாகவும் உலகத்தின் அனைத்துச் சிக்கல்களையும் தீர்த்து மானுடம் முழுமையையும் விடுதலை செய்யும் உரிமை தனக்கு மட்டுமே உள்ளதாகவும் நினைத்துக் கொள்கிற உளவியல் புராதன சமயம் சார்ந்த உளவியல், அல்லது கொன்று-கொலையுண்டு தன்னை மெய்ப்பிக்கும் போர்மைய உளவியல் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதே இல்லை.

கட்சி, இயக்கம் என எந்தவொன்றும் பல்வேறு போராட்டங்களுக்கு நடுவில் உள்ள இன்னும் ஒரு போராட்ட அமைப்புதான் என்பதை மறந்துவிட்ட தன்மையத் தன்மை கொண்ட புரட்சிகர அடையாளம் இயங்கியல் மறுக்கும் தனிமனிதச் சிக்கல்.

இந்தச் சிக்கல் கொண்டவர்கள் கட்சியை, கருத்துருவத்தை தன் தனிவுருவின் விரிந்த வடிவமாக, தன் மன அமைப்பின் பொதுக்குறியீடாகவே காண்கிறவர்கள். அதாவது நான் ஒரு புரட்சியாளன், (ஆண்பால் ஒருமைதான்) புரட்சிக்காவே வாழ்கிறவன், அத்துடன் தான் செய்யும் ஒவ்வொன்றும் புரட்சிகரமானது எனத் தன்னுறுதி கொண்ட உறைநிலைக்குச் சென்றுவிடுகிறார்கள்.

மார்க்சியம் ஒரு இயங்கியல் அணுகுமுறை, விடுதலைக்கான அறிவுருவாக்க முறை எனில் அது காலந்தோறுமான சிக்கல்களை புரிந்து கொள்ளவும், அவற்றை விளக்கவும், ஒடுக்குதல்களை நீக்குவதற்கான செயல்முறைகளைக் கண்டடையவும் முயன்று கொண்டே இருக்கும்.

மனிதப் பன்மைகளை, மனிதக் குழுக்களின் ஒற்றைக் குவியமற்ற விரிவை அது புரிந்து கொள்ள முயலும். அனைத்து விதமான குறியமைவுகளையும் அறிந்தும், புரிந்தும் முன் செல்லும். அது எந்த இடத்திலும் இந்த அறிவு போதும் எனச் சொல்ல விரும்பாது. மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் தம் காலத்தின் அறிவுமுறை அனைத்தையும் ஆய்ந்து அறிந்த பின்பே (தமக்கும் முன்னே இருந்தவற்றையும்) அவற்றை ஏற்றார்கள் அல்லது மறுத்தார்கள்.

அதன் தொடர்ச்சியாகத் தம் சிந்தனை முறையைக் கட்டியமைத்தார்கள். அதனால்தான் அவர்களின் வரலாற்று –இயங்கியல் விளக்கமுறை அறம்சார் தேடுதலாக அமைய முடிந்தது. அது எப்போதும் கால, இடம் கடந்த பேருண்மையாகாது என்பதை மார்க்சியம் நன்கு அறிந்தே இருக்கிறது.

ஆனால் அதனை பேருண்மையாக மாற்றி, பிற அறிவுகளை மறுப்பதற்கான கருவியாக மாற்றிக் கொள்ள முயலும் தொடர்முயற்சிகள் நடந்துகொண்டே உள்ளன.
இப்போது என்ன சிக்கல்? வேறு என்ன?
புனிதப் பழமை உபாசகர்கள், புனித தேசியவாதிகள், மரபு வழிபாட்டாளர்கள், மதவாத அடக்குமுறையாளர்கள் செய்ய வேண்டிய வேலையை மார்க்சியர்கள் என்ற பெயருடன் சிலர் செய்கிற போது மாற்றத்திற்கான அனைத்து வழிகளும் அடைபட்டுவிடும். அத்துடன் விடுதலைக் கருத்தியல்கள் இயங்குவதற்கான தளங்கள் அழிந்து போகும்.

பெண்ணியம், தலித் அரசியல் (ஒடுக்கப்பட்டோர் விடுதலை அரசியல்) நிலம்சார் – இன உரிமை அரசியல், சூழலியல் அரசியல் பற்றிய மார்க்சியப் பார்வைகள் ஒரு பக்கம் நன்கு விரிவடைந்துவரும் இன்றைய நிலையிலும் தமிழில் அவை பற்றிப் பேசும் முற்போக்கு அடையாளம் கொண்டவர்களிடமிருந்து அறியாமையைத் துதிக்கிற குரல்களே அதிகம் வெளிப்படுகின்றன.

உளவியல் வாசிப்புகள் பற்றி, குறியியல் இடையீடுகள் பற்றி, பின்நவீனத்துவ அணுமுறைகள் பற்றி, மாற்று அடையாளங்கள் பற்றி, பெண்ணிய வாசிப்புகள் பற்றி, விளிம்புநிலை அசைவியக்கம் பற்றி, சாதிகாக்கும் உளஅமைப்பு பற்றி, மையம் குலைந்த இயங்கியல் பற்றி, அடையாளச் சிதைவுகள் பற்றி- தமிழில் சிறிய அளவில் பேச்சு எழுந்துள்ள இன்றைய நிலையில் முன் நின்று எதிர்க்கிறவர்களாக மார்க்சிய மாணவர்களே உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். தங்களுடைய படிப்புக்கு வெளியே எதுவும் இருக்காது, இருக்கவும்கூடாது என்று கைவிரல்கள் மடக்கி எச்சரிக்கிறவர்களாக இவர்கள் மாறிவிடுகிறார்கள்.

இவர்கள் கருத்து முரண்களை எதிர்கொள்ளும் முறை ஆயுத அரசியலின் மொழியமைவு கொண்டுள்ளது. வேறுபடுகிறவர்களை முகமற்றவர்களாக மாற்ற முயலும் ஒதுக்குதல் மிகுந்த வன்முறை கொண்டதாக உள்ளது. மொழியை மிகுந்த வன்மத்துடனும், அச்சுறுத்தலாகவும் பயன்படுத்துகிறார்கள். இது எந்த வகையில் மார்க்சிய அறம், மாற்றுச் சிந்தனை என்பது புரியவே இல்லை. கேட்டால் நாங்கள் “உலகம் தழுவிய இயக்கம், ஒரு நூறு கோடி பேர்களின் முழக்கம்” என்று உலக வரலாற்றை தங்கள் உள்ளங்கைக்குள் இறுக்கிக் கொள்கிறார்கள்.

மார்க்சியம் கற்று, பின் அதற்கும் அப்பால் உள்ளவற்றை முன் வைத்து ஒரு கருத்துப் பகுதியினர் பேசும் போது, மார்க்சியர் என்று சொல்லிக்கொள்பவர்கள் அந்தப் புதியனவற்றைக் கற்று பின்புதான் உரையாடலை, வாதத்தை கட்ட வேண்டும். அதற்குப் பின் கருத்துத் தகர்ப்பை நிகழ்த்த வேண்டும். இது அடிப்படை பாடம்.
இது இல்லாத நம்பிக்கைவாத மார்க்சியம் என்று ஏதாவது உண்டா? பின்நவீனத்துவம், பெண்ணியம் என்ற மனநோய்கள் என்று போகிற போக்கில் ஒரு போடு போட்டுவிட்டால் ஒருவர் மார்க்சியரும் ஆகமுடியாது, மாற்றுச் சிந்தனையாளராகவும் ஆகமுடியாது.
இதனைக் கேட்டவுடன் சொற்களை உடைத்து வீசும் உத்தியைக் கையாளும் ஒருவர் நவீன தன்மை கொண்டவரும் ஆகமுடியாது.

மார்க்சியம் பௌத்தம் போல கருணா, பிரக்ஞா, சமதா என்ற அடிப்படைகளில் இயங்குவது. அது அறிவின் பன்மைகளை மறுப்பது இல்லை. அது தன் முன் வைக்கப்படும் கேள்விகளைக் கண்டு தப்பி ஓடுவதும் இல்லை.

ஆதிக்கத்தின் முதல் உத்தியான அறிவு மறுப்பும், பன்மை வெறுப்பும் சரிவிகிதத்தில் இணைந்து எப்படி விடுதலை அரசியலை உருவாக்க முடியும்? இந்தக் கேள்வியை மார்க்சிய களத்தில் இருந்தே முன்வைக்கிறேன்.

(1987-9 காலப்பகுதியில் “நிறப்பிரிகை“ களத்தில் நான் முன்வைத்த புரட்சியை நோக்கிச் சில உளவியல் பிரச்சினைகள் பற்றிய உரையாடலே நடக்காத சூழலில் இன்று அதன் ஒரு பகுதியை மீண்டும் முன் வைக்கிறேன்.)

பிரேம், தமிழில் படைப்பிலக்கியத்திலும் கோட்பாட்டுத் தளத்திலும் இயங்கும் மிகச் சிலரில் ஒருவர்; பின்நவீனத்துவ, பின்காலனிய, விளிம்புநிலை அரசியல் கோட்பாடுகளையும் விவாதங்களையும் முன்னெடுத்துச் செல்பவர்.  நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள், மொழிபெயர்ப்புகள் என 25 நூல்கள் வெளியாகியுள்ளன. தற்போது தில்லி பல்கலைக்கழக நவீன இந்திய மொழிகள் மற்றும் இலக்கிய ஆய்வுகள் துறையில் இந்திய இலக்கியம் மற்றும் ஒப்பிலக்கியத்துக்கான பேராசிரியராகப் பணியற்றி வருகிறார். இவரது ‘காந்தியைக் கடந்த ககாந்தியம்: ஒரு பின்நவீனத்துவ வாசிப்பு (2014), திரையில் வரையப்பட்ட தமிழ் நிலம் (2015)’ இரண்டும் சமீபத்திய நூல்கள்.