அன்புசெல்வம்
அன்பு செல்வம்
அன்பு செல்வம்
 “தீண்டப்படாத மக்களின் அவல நிலை, இந்தியாவின் மிக முக்கியப் பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கிறது. ஆனாலும், தீண்டப்படாத மக்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து, தங்களைத் தாங்களே மேம்படுத்திக் கொள்ள முயலுவது அவர்கள் கண்ட இயக்கத்தின் ஒரு புதிய அணுகுமுறையாகும். சுயமரியாதை மற்றும் தற்சார்புக் கொள்கைகளைத் திறம்பட ஒருங்கிணைத்தால் மட்டுமே மாபெரும் ஆற்றலுடன் இந்த இயக்கத்தில் அடியெடுத்து வைக்க முடியும். இத்தகையதொரு முக்கியச்சூழலில் உருவாகியுள்ள சமூக இயக்கத்தின் சார்பாக இக்கோரிக்கையை உங்கள் முன் வைக்கிறேன்” என 80 ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து இளவரசிக்கும், இந்திய மக்களுக்கும் மனம் திறந்த ஓர் விண்ணப்பத்தை அம்பேத்கர் முன் வைத்தார்.

பம்பாயில் உள்ள தீண்டப்படாத மக்களின் வளர்ச்சிக்காக ஒரு சமூக மய்யத்தை உருவாக்க எண்ணுகிறேன். அதை தொடங்க மூன்று லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி தேவைப்படுகிறது. உங்களால் உதவி செய்ய இயலுமா? என்பதே அந்த விண்ணப்பத்தில் இருந்த கோரிக்கை.

கவர்னர் ஜெனரலின் நிர்வாகக்குழு உறுப்பினரான அம்பேத்கர் தன் மக்களின் வளர்ச்சிக்காக எழுப்பிய அந்த கோரிக்கை ஆகஸ்ட் 23, 1937 –ல் பம்பாய் சட்டப் பேரவையில், காங்கிரஸ்காரரும், பம்பாயின் முன்னாள் பிரதமருமான பிஜி. கேர் என்பவரின் உரையை மேற்கோள் காட்டி விவாதமானது (பம்பாய் சட்டப்பேரவை விவாதங்கள், 1937, தொகுதி : 1, பக்கம் 272). அவர் எதிர் பார்த்த தொகை அன்றைக்குக் கிடைக்கவில்லை என்றாலும் 1938 -லிருந்து 1944 வரை தான் சேகரித்த 45095 ரூபாய் நிதியிலிருந்து 36, 535 ரூபாய் ஒதுக்கி, 1944 ஜூலை 29 -ல் தாதரில் உள்ள கோகுல்தாஸ் பஸ்தா சாலையில், 1940 சதுர மீட்டர் பரப்பளவு நிலத்தை (2332 சதுர முற்றம்), அம்பாலால் புனாம் சந்த் என்பவரிடமிருந்து வாங்கினார். அதே போல தன் பணிக்காக‌ பம்பாயில் வேறு சில இடங்களையும் தேர்வு செய்தார்.

1944 -ல் “பம்பாய் ஷெட்யூல்டு இன மேம்பாட்டுக்கழகம்” என்கிற பெயரில் பல்வேறு கனவுகளுடனும், எதிர்பார்ப்புடனும் தொடங்கப்பட்ட அந்த மய்யத்தின் ஒரு பகுதி தான், மும்பையில் கடந்த‌ ஜூன் 25 ஆம் தேதி நள்ளிரவு இடிக்கப்பட்டது.

அம்பேத்கர் பவன் இடிக்கப்பட்டதில் உள்ளபடியே பலருக்கும் வருத்தம் தான். ஆனால் அங்கு என்ன நடக்கிறது என்பதே பெரும்பாலனவர்களுக்கு தெரியாமல் இருந்தது.

அம்பேத்கர் பவன் – பாரத் பூஷண் அச்சகம் – புத்த பூஷன் அச்சகம்

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அறிவு அபிவிருத்திக்கான கட்டமைப்புகள் கிடைப்பது சுலபமானதல்ல. அதுவும் வாய்ப்புகளற்ற சூழலில் அதை பல்வேறு சிரமங்களின் மத்தியில் தான் பெறுகிறார்கள். அம்பேத்கரின் கருத்துப் பரப்புக்கு இந்த இடமும் அப்படித்தான் இருந்தது.  அம்பேத்கர்  தன் அயராத உழைப்பின் மூலம் இந்த இடத்தில் அன்றைக்கு ஒடுக்கப்பட்டோர் வகுப்பினர் இயக்கத்துக்காக (Depressed Class Movement) மூன்று மாடி கொண்ட தலைமைச் செயலகத்தை உருவாக்க எண்ணினார். இதன் ஒரு பகுதியில் ‘பாரத் பூஷன்’ என்கிற அச்சகத்தையும், ஒரு சமூகக் கூடத்தையும் எழுப்பினார். ஷெட்யூல்டு இன பேரவைக்கான அரசியல் பிரசுரங்கள், பவுத்த இயக்கத்துக்கான ஆதாரங்கள், சாதி ஒழிப்புக்கான வெளியீடுகள் என அனைத்தும் இங்கிருந்து அச்சிடப்பட்டன. 1929 –ல் அவர் தொடங்கிய வார இதழான ஜனதா இதழும் இங்கிருந்து தான் வெளியானது. அதாவது, “என்னிடமிருந்து ஒரு நூல் வெளியாகுமேயானால் எனக்கு நான்கு பிள்ளைகள் பிறந்ததற்கு சமம்என்கிற அம்பேத்கரின் சிந்தனைகள் எழுத்தாகப் பிறப்பெடுத்த பிரசவக்கூடம் இது. ஷெட்யூல்டு இனப்பேரவையும் (SCF), இந்திய பவுத்தச் சங்கமும் (Buddhist Society of India) இங்கிருந்து தான் செயல்பட்டு வந்தன.

நேரு அமைச்சரவையில் சட்ட அமைச்சராகவும், அரசியல் சாசன வரைவுக்குழு தலைவராகவும் பொறுப்பேற்ற பின் இந்த இடத்தைப் பராமரிப்பதில் அவரால் போதிய கவனத்தை செலுத்த முடியாமல் போனது. 1946 -ல் அம்பேத்கரின் தொண்டர்களுக்கும், சாதி இந்துக்களுக்கும் ஏற்பட்ட ஒரு மோதலில் இதே பாரத் பூஷன் அச்சகம் முற்றிலுமாக எரிக்கப்பட்டது. பிறகு அந்த அச்சகத்தை  மீண்டும் புணரமைத்து நய்கான் பகுதிக்கு மாற்றினார். 1956 ஜனவரி 14 -ல் பாரத் பூஷன் அச்சகம் புத்த பூஷன் அச்சகமாக பெயர் மாற்றப்பட்ட செய்தி ஜனதா இதழில் வெளியிடப்பட்டது. (பிரபுதா பாரத் பத்திரிக்கை வெளியான பிறகு 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த அச்சகம் செயல்படாமல் கிடந்தது)

தொடர் வழக்குகளால் சீரழிந்த அம்பேத்கர் பவன்

1952 -ல் அம்பேத்கர் தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்து பம்பாய் திரும்பியதும் இந்த மய்யத்தில் சமூகக்கூடம் கட்டுவதற்கான கட்டட வேலைகளைத் தொடங்க திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்த இடத்தின் ஒரு பகுதியில் வாடகைக்கு குடியிருந்த மூன்று பாகிஸ்தானிய அகதிகளை வெளியேற்றுவதில் அவருக்கு சிக்கல் நீடித்தது. அதன் பொருட்டு வழக்கறிஞர் போமன் பெஹராம் தலைமையில் 3 வழக்குகளைப் பதிவு செய்தார். மேலும் பல வழக்குகளையும் இந்த இடம் சார்ந்து எதிர் கொண்டார். குப்தா பஞ்சாபி உணவகம் நடத்திய ஹர்பன்சிங் குப்தா மற்றும் அவரது இணை வாடகைதாரரான கண்ணாடி சீசா சுத்தம் செய்யும் அக்கிராம் தோலுமால் ஆகியோரை வெளியேற்றி, முழு இடத்தையும் கைப்பற்றுவதில் தொடர்ந்து பிரச்சனைகள் நீடித்தன.

21 வழக்குகள் அடுக்கடுக்காகப் போடப்பட்டிருந்தன. இறுதியாக, 1955 அக்டோபரில் ஓர் முடிவு எட்டப்பட்டது. அம்பேத்கர் உயிரோடு இருந்தபோது தொடங்கிய வழக்குகள் கிட்டத்தட்ட 47 ஆண்டுகளாக நடந்தன. குப்தா பஞ்சாபி உணவகத்தின் மேலாளரான குர்பல்சிங் காந்தி இடைவிடாமல் வழக்குகளை உயர் நீதிமன்றம் வரை கொண்டு சென்று, கால நீட்டிப்பின் இழுத்தடிப்புகளை ஏற்படுத்தி தொல்லை கொடுத்து வந்தார். இந்த வழக்கு நீதியரசர் ஆர்.எம். லோதா தீர்ப்பில் தள்ளுபடியானது. பிறகு அனைத்து வழக்குகளும் நீதியரசர் தாகா தலைமையில் வெளியான தீர்ப்பில் தள்ளுபடி செய்யப்பட்டு, 2001 செப்டம்பர் 30 -ல் அம்பேத்கர் பவன் முழுமையாக மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளையின் கைவசம் வந்தது. இதற்கிடையில் அம்பேத்கரின் மறைவு, அதன் பின்னர் இந்த இடத்தைக் கைப்பற்றுவதற்கு ஏற்பட்ட மோதல், சமரசம், உடன்பாடு என தலித் குழுக்களின் அரசியலும் தீவிரம் காட்டின. அம்பேத்கரின் மறைவுக்குப் பின்னும் அவர் காணவிரும்பிய வேலைகள் தொடங்க முடியாமல் போனதுக்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் இது மட்டுமே காரணமும் அல்ல.

பல வழக்குகளும், சிக்கல்களும் இருந்தபோது கூட அச்சகம், புத்தக நிலையம், தனியார் மற்றும் சமூக நிகழ்ச்சிகளுக்கான பொது அரங்கம் என தன்னளவில் சுருங்கி செயல்பட்டது. அதுவும் நடக்கவில்லை என்றால் அந்த இடத்தை இதுநாள் வரை பாதுகாத்திருக்க முடியாது. அதேசமயம் இந்திய குடியரசுக் கட்சிக்கு சொந்தமான சாம்ராட் இதழும் இங்கிருந்து வெளியானது.

அம்பேத்கர் குடும்பம் (எதிர்) மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை

பொதுவாக அம்பேத்கர் தான் தொடங்கிய அனைத்து அறக்கட்டளைகளிலும் இரத்த சம்மந்தமுடைய‌ தனது குடும்பத்தினர் எவரும் உறுப்பினராக இடம் பெற முடியாத வகையில் அந்த அறக்கட்டளையின் விதிகளை வடிவமைத்திருந்தார். அது தான் அவருக்கு ஜனநாயகக் கண்ணோட்டமாகப் பட்டது. ஆனால் அம்பேத்கர் குடும்பத்தினர் தன்னிய‌ல்பாகவே அதில் உரிமை ரீதியாக செல்வாக்கு செலுத்த விரும்பினர். “பம்பாய் ஷெட்யூல்டு இன மேம்பாட்டுக் கழகம்(Bombay Scheduled Castes Improvement Trust) என்கிற பெயரில் அம்பேத்கரால் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு “மக்கள் மேம்பாட்டுக் கழகம்” என மாற்றப்பட்டு இன்று வரையிலும் செயல்பட்டு வருவதில் இருக்கிற உள் அரசியல் இது.

அம்பேத்கரின் குடும்பத்தினருக்கு நிர்வாக ரீதியாக தலையிட உரிமை இல்லை. என்றாலும் பாரதிய குடியரசு கட்சித் தலைவர் வழக்கறிஞர் பிரகாஷ் யஷ்வந்த் அம்பேத்கர், இந்திய பவுத்த சங்கத்தைச் சார்ந்த பீம்ராவ் யஷ்வந்த் அம்பேத்கர், குடியரசு சேனா கட்சித் தலைவர் ஆனந்த ராஜ் அம்பேத்கர், மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை ஆலோசகரும் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ் அதிகாரியான இரத்னாகர் கெயிக்வாட் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை ஆதரிக்கும் உள்ளூர் இந்திய குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராம்தாஸ் அத்வாலே, பகுஜன் சமாஜ் கட்சி, பாம்செஃப் என பலரின் தலித்திய குழுக்களும் இந்த இடத்தையும் அதன் குழு அரசியலையும் ஆக்கிரமித்திருக்கின்றன‌. இப்போது சூடாகப் போடப்பட்டுள்ள வழக்குகளும் இதே உள் அரசியலின் வினைகளோடு தொடர்புடையது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

  பாஜகா –வின்  சந்தர்ப்பவாத அரசியல்

40 கோடி ரூபாய்க்கு லண்டனில் அம்பேத்கர் தங்கியிருந்த வீட்டை வாங்கியதாகப் பெருமை பேசும் தேவேந்திர பட்னாவிஸ் அரசு, அம்பேத்கர் பவனை இடித்து விட்டு நவீன கட்டுமானத்துக்கு 10 கோடியை ஒதுக்கியுள்ளது. இதற்கு எதிராக இப்போது தலித் அமைப்புகளும், இடது சாரி இயக்கங்களும் மும்பையில் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சி நின்ற வண்னம் தனது அனுதாபத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இது  வெறுமனே அம்பேத்கர் பவன் கட்டடத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட நடவடிக்கை மட்டுமல்ல, அம்பேத்கர் எனும் அறிவார்ந்த ஆளுமைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட தாக்குதல் என பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே விமர்சித்தார். பிறகு இதன் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு கருத்துக் கூறுவதிலிருந்து விலகினார். அம்பேத்கர் பவன் இடிப்பைக் கண்டித்து அம்பேத்கரின் குடும்பத்தினர் சார்பில் ஆனந்த்ராஜ் அம்பேத்கர் வழக்குத் தொடுத்துள்ளார். பிரகாஷ் அம்பேத்கருக்கு எதிராகவும், ராம்தாஸ் அத்வாலேவுக்கு எதிராகவும் பாம்செஃப் சார்பில் வாமன் மெஷ்ராம் வழக்குத் தொடுத்துள்ளார். எப்படியோ ! ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அவர்களின் எழுச்சிக்காக, அம்பேத்கர் காண விரும்பிய மய்யத்துக்கு எதிராக கந்தறு கோலமான நடவடிக்கைகளில் மஹாராஷ்டிர கோஷ்டி தலித்துகள் ஈடுபட்டுள்ள‌னர் என்பது மறைப்பதற்கில்லை.

கட்டடத்தின் தன்மை வலுவாக இல்லை என மும்பை மாநகராட்சி வழங்கிய நோட்டீசும் (பி.எம்.சி),  மழைக்காலத்தில் ஒரு பகுதி சுவர் விழுந்ததும் தான் கட்டட இடிப்புக் காரணம் என அறங்காவல் குழு சொல்கிறது. ஒரு வகையில் இதில் உண்மை இருப்பது போல் தெரிந்தாலும், மேல்நிலைப் பள்ளி கட்ட ஒதுக்கப்பட்ட இந்த இடத்தில் கார் பார்க்கிங், அரசியல் கட்சி அலுவலகங்கள் வந்தது தவறென்கிறது இதே பி.எம்.சி. எனினும் மக்கள் மேம்பாட்டு அறக்கடைளைக்கு பி.எம்சி. அனுப்பிய நோட்டீசுக்கு அறக்கட்டளை பதிலளிக்கத் தவறியதும், அதற்கான பாதுகாப்பு நடவடிகைகளில் ஈடுபட மறுததும் தான் காரணம் என்கிறது பி.எம்.சி.

அது மட்டுமல்ல இதை இடித்து விட்டு 17 அடுக்குமாடி எழுப்பத் திட்டமிட்டிருக்கிறோம். இதில் நவீன வசதிகளுடன் கூடிய நூலகம், விபாசனா தியானக் கூடம், மாநாட்டுஅரங்கு, குளுகுளு அறைகள் என அனைத்தும் ஓராண்டுக்குள் கட்டிமுடிக்கப்படும் என்கிறது அறக்கடளை. குழு.மாநிலஅரசும் 10 கோடியை இதற்கு ஒதுக்கியுள்ளது.

என்ன தான் காரணங்கள் சொன்னாலும் மக்கள் மேம்பாட்டு அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் அம்பேத்கரின் குடும்பத்தினரின் பொறுப்பற்றத் தன்மையாலும், அரசியல் அதிகாரப் போட்டியாலும், சொத்துப் பாதுகாப்பினாலும் ஒரு மாபெரும் அறிஞனின் வரலாற்று ஆவணம் அழிக்கப்பட்டுள்ளது.

புதிய அம்பேத்கர் பவன் என்பது ஒரு வகையில் பெருமைக்குரிய, பிரமிப்பூட்டும் முயற்சியாக இருந்தாலும் பாரம்பரியச் சின்னத்தை அழித்து தான் புதிய முயற்சிகள் உருவாக்க வேண்டும் என்பதில்லை. தனியாகவே ஒரு மய்யத்தை தொடங்கலாம். இந்தியாவில் வாழ்ந்த எத்தனையோ தலைவர்களின் இல்லங்கள், நூலகங்கள், நினைவிடங்கள் அதன் பாரம்பரியமும், தொன்மையும் சிதையாமல் ‘ஹெரிடேஜ்’ என பாதுகாக்கப்பட்டு வரும் வரலாற்றுச் சூழலில் அம்பேத்கரின் நினைவிடத்திலும் மஹாராஷ்டிர‌ மாநில அரசு பாகுபாட்டு அரசியல் செய்வது தேசிய நலனுக்கு எதிரானது.

பல்வேறு கட்டமைப்பு வசதிகளும், நிதி ஆதாரங்களும் மலிந்து கிடக்கும் இன்றைய சூழலில் இப்படியொரு மய்யத்தை வேரிலிருந்து உருவாக்குவது எளிதான ஒன்றல்ல. அதுவும் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட காலச்சூழலில், பல அரசியல் விமர்சனங்களை எதிர்கொண்டு, பலரிடம் யாசித்து, தனித்த கொள்கை நோக்கத்துடன் அம்பேத்கரால் இது தொடங்கப்பட்டது. இந்த பேருண்மையின் எழுச்சியைப் பாதுகாக்கத் தவறும் தலித் அமைப்புகளும், மாநில பாஜக அரசும் புதிதாக எழும் கட்டடத்தின் பயன்பாட்டு நம்பகத் தன்மையை எப்படி பாதுகாக்கும் என்பது கேள்விக்குறி தான்.

ஒரு பக்கம் தங்களை தலித்துகளின் பாதுகாவலனாகவும், அம்பேத்கரின் பற்றாளர்களாகவும் காட்டிக் கொள்ளும் பாஜக அரசு தலித் அமைப்புகளின் அரசியல் சூழலை தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு சாதிய அரசியல் செய்வது உகந்த‌தல்ல. மாட்டுத் தோலை உரித்தார்களென‌ மதவாத சக்திகளால் குஜராத்தில் நான்கு இளைஞர் தாக்கப்பட்டதும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியை அவதூறாக விமர்சிப்பதும், சாதியைக் காரணம் காட்டி திருவள்ளுவர் சிலையை பரிவார் அமைப்புகள் அவமதிப்பதும் பாஜக அரசின் தலித் விரோதப் போக்கை அம்பலப்படுத்துகிறது.

இப்போது மஹாராஷ்டிராவிலும், குஜராத்திலும், பஞ்சாப்பிலும், உத்திரப்பிரதேசத்திலும் தலித்துகள் தொடங்கியிருக்கிற போராட்டங்கள் அவர்கள் திட்டமிட்டதல்ல. தலித் மற்றும் அம்பேத்கரின் பாதுகாவலர்கள் என சொல்லிக் கொண்டவர்களின் சாதிய வன்மத்தால் உருவானது. எனினும் அம்பேத்கரின் அரசியல் அவரது கருத்தியல் தளத்தில் தீவிரம் கொண்டிருந்தாலும் செயல்பாட்டு வடிவத்தில் அது அம்பேத்கர் பவன் போன்ற பழைய கட்டடத்திலும் படிந்திருக்கிறது. குறைந்த பட்சம் அதை பாதுகாக்க வேண்டியது வாக்கு வங்கிக்காக ஏங்கும் பொறுப்புள்ள அரசின் தார்மீகக் கடமை.

கட்டுரையாளர் அன்புசெல்வம், எழுத்தாளர்; ஆய்வாளர்.
தொடர்புக்கு : anbuselvam6@gmail.com