மனுஷ்யபுத்திரன்

மனுஷ்யபுத்திரன்
மனுஷ்யபுத்திரன்

விழுப்புரம் செந்தில் என்பவர் நவீனா என்ற பெண்ணை ஒருதலையாய் காதலித்து அந்தப்பெண் மறுத்தன் விளைவாக நாட்களுக்கு முன்பு தன்னைத்தானே கொளுத்திக்கொண்டு நவீனாவிற்கும் தீக்காயங்களை நான்கு நான்கு நாட்களுக்கு முன்பு ஏற்படுத்தினார் . செந்தில் அன்றே இறந்துவிட்டார். இது குறித்து கடந்த ஞாயிறு அன்றே நானும் பத்ரியும் புதிய தலைமுறையில் விவாதித்தோம். 70 சதத் தீக்காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நவீனாவும் இன்று மரணமடைந்தார்.

சென்ற ஆண்டே இந்த விவகாரம் வேறொரு கோணத்தில் பிரச்சினையாக மாறியது. அப்போது நவீனாவை காதலித்தற்காக ஒரு கையும் ஒரு காலும் வெட்டபட்டதாக செந்தில் புகார் செய்தார். ஊடகங்களிலு அது ஆணவக் கொலை முயற்சியா என்ற கோணத்தில் விவாதங்கள் நடந்தன. ஆனால் பின்னர் அ.மார்க்ஸ் அவர்கள் மேற்கொண்ட உண்மை அறியும் குழுவின் அறிக்கையில் செந்தில் ரயிலில் விழுந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட போதே கைகால்களை இழந்தார் என்ற உண்மை வெளிப்படுத்தபட்டது. ஆணவக் கொலைகளுக்கு எதிராக போராடகூடியவர்கள் கண்ணை மூடிக்கொண்டு எல்லாவற்றையும் சாதியக் கோணத்தில் மட்டும் அணுகுபவர்கள் அல்ல என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

ஆனால் இப்போது நவீனாவிற்கு ஏற்பட்டிருக்கும் இந்த துயர மரணத்தை முன்வைத்து ஆணவக் கொலைகளுக்கு எதிராக குரல்கொடுப்பவர்களுக்கு எதிராக சாதி வெறியர்கள் கூக்குரலிட ஆரம்பித்திருக்கிறார்கள். ஆணவக்கொலை என்பது தமிழகம் முழுக்க பரவலாக நடந்துவரும் ஒரு சூழலில் ஒடுக்கபட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தான் தாக்கபட்டதாக புகார் அளிக்கும்போது அது உடனடியக விவாதங்களை ஏற்படுத்தவெ செய்யும் ஆனால் காவல்துறை விசாரணையிலும் உண்மை அறியும் குழு விசாரணையிலும் அது செந்தில் என்கிற மனநோய்கொண்ட நபரின் பொய்க்குற்றசாட்டு என்பது உடனே வெளிவந்துவிட்டது.

இப்போது நவீனாவின் இறப்பு ஏற்படுத்திய உணர்வலைகளை வைத்துக்கொண்டு ஆணவக் கொலைகள் தொடர்பாகக் குற்றச் சாட்டுகள் எல்லாமே பொய் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். இளவரசன், கோகுல்ராஜ், உடுமலை சங்கர் என்ற பெயர்கள் எல்லாம் பொய் என்று ஆகிவிடுமா? தஞ்சாவூர், சாலியமங்கலத்தில் உயர்சாதியினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிற கலைச்செல்வி என்ற பெயர் பொய் என்று ஆகிவிடுமா?

நண்பர் குணசேகரன் சென்ற ஆண்டு புதிய தலைமுறையில் விழுப்புரம் செந்திலுக்கு ஆதரவாக விவாதித்தற்கு குற்ற உணர்வுடன் மன்னிப்பு கோருகிறார். ஊடக விவாதங்கள் செய்திகளின் அடிப்படையிலும் யூகங்களின் அடிப்படையிலும் பல்வேறு கோணங்களை ஆராய்கின்றன. அவை தீர்ப்புகளும் அல்ல, இறுதி உண்மைகளும் அல்ல. காவல்துறையும் நீதிமன்றங்களும் கூட மிக முக்கியமான வழக்குகளில்கூட பிழையான முடிவுகளுக்கு வந்துவிடுகிறபோது ஒரு செய்தியின் அடிப்படையிலான விவாதத்திற்காக குணசேகரன் ஏன் மன்னிப்புக்கோர வேண்டும்? “ஒரு கையும் காலும் இல்லாத நபர் இவ்வளவு பெரிய குற்றத்தை எப்படிச் செய்ய முடியும்?’’ என்ற சந்தேகத்தை பத்ரி முன்வைத்தபோது நானும் அவரும் அதை மூன்று நாட்களுக்கு முன்பு விவாதிக்கவே செய்தோம். அது ஒரு கோணம், அவ்வளவே. அது அந்த விவகாரம் பற்றிய தீர்ப்பு அல்ல. தமிழ்நாட்டில் எந்த ஆணும் பெண்ணும் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்தாலும் அது ஆணவக்கொலையா என்ற கோணத்தில் சிந்திப்பது தவிர்க்க முடியாதது. இனியும் விவாதஙக்ளை அப்படித்தான் நடத்துவோம்.

மனநோயாளிகள் சிலரின் செய்கையால் சாதி வெறி என்ற கொடூரமான மனநோயை மூடி மறைக்க முடியாது.

மனுஷ்யபுத்திரன், எழுத்தாளர்; பதிப்பாளர். இவரின் சமீபத்திய நூல் ‘புலரியின் முத்தங்கள்’.