ஜி. விஜயபத்மா 

ஜி. விஜயபத்மா
ஜி. விஜயபத்மா

ஒரு பெண் தலையில் முடிவைத்துக் கொள்வதும், மொட்டை அடித்துக்கொள்வதும் அவள் இஷ்டம். அவள் ஒரு ஆணுடன் தன் வாழ்வை பகிர்ந்து கொள்வதோ தேவையில்லை என முடிவு செய்வதோ அவள் சுய விருப்பம். அவள் வாழ்வை முடிவு செய்ய சமுகம் என்றழைக்கப்படும் உங்களுக்கோ, இல்லை அவள் பெற்றோருக்கோ கூட உரிமையில்லை. அவர்கள் ஈஷாவால் மூளை சலவை செய்யப்பட்டவர்கள் என்றால், அதை விமர்சிக்கும் நீங்களும் இந்த உலக நாற்றங்களினால் மூளை சலவை செய்யப்பட்டு இருக்கிறீர்கள் என்றே அர்த்தம். மனதிற்கு துளியும் பிடிக்காத ஒரு ஆணை பெற்றோர் விருப்பத்திற்காக திருமணம் செய்து கொண்டு அருவெருப்புடன் அந்த புணர்ச்சியை காமத்தை உள்வாங்கி வாழ்வது கூட ஒரு பெண்ணுக்கு கட்டாய வன்புணர்வதான் என்பது ஏன் உங்களில் ஒருவருக்கும் புரியமாட்டேன் என்கிறது. ஈஷா யோக மையம் சரியா தவறா என்ற விவாதத்திற்குள் நான் வரவில்லை.

எத்தனையோ சந்தர்ப்பங்கள் நான் விகடன் நிருபராக பணி புரிந்த காலங்களில் இருந்தே ஜக்கிவாசுதேவை சந்திக்க வாய்ப்பிருந்தும் நான் சந்தித்ததில்லை. ஆனால் அவருடைய சொற்பொழிவுகளைக் கேட்ட வகையில்,அவரை ஆழ்ந்து படித்து புரிந்து கொண்ட வகையில் அவர் ஜென் தத்துவங்களையே அடித்தளமாக கையாள்கிறார். உங்கள் வாழ்க்கையில் “குடும்பம்”நடத்தி தினம் தினம் செக்ஸ் வைத்துக் கொள்வதால் நீங்கள் அனைவரும் சுவர்க்கத்தில் வாழ்கிறீர்களா? அந்த வாழ்வு எனக்கு பிடிக்கவில்லை என்று துறவறம் போன பெண்களை மீட்டு வந்து “எவனுடைய காமத்துக்கோ”பலியாக்கிவிட்டால் உங்கள் சமூக வன்மம் தீர்ந்து விடுமா? அவரவர் விருப்பத்திற்கு அவரவரை வாழ விடாமல் சமூக வலைத்தளங்களில் வந்து”பதிவு”என்ற பெயரில்”நாட்டாமை”ஏன் செய்கிறீர்கள். ஏசு, புத்தன், விவேகானந்தர் என எல்லா ஆன்மீகவாதிகளும் அவரவர் வாழ்ந்த காலங்களில் பெரும்பாலான சமுகம் என்றழைக்கப்படும் “வக்கிரமனிதர்களால்” பழிக்கப்பட்டும், அவமானப்படுத்தப்பட்டுமே வாழ்ந்தனர் என்றே வரலாறு சொல்கிறது.

இன்றும் அந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை. ஈஷா உங்களுக்கு பிடிக்கவில்லையா நீங்கள் போகாதீர்கள்.விருப்பபட்டு போகிறவர்களை ஏன் ஆளுமை செய்ய முயல்கிறீர்கள்? சரி அல்லது தவறு என்பதை எந்த அளவீடுகளில் அளக்கிறீர்கள்? ஈஷா ஒரு வியாபாரம் என்று சொல்கிறீர்கள்..சரி அப்படியானால் பெப்ஸியும் கோக்கும் உங்களை கொள்ளையடிக்கலாம் அது பரவாயில்லையா? சமகால மக்களின் சீக்குபிடித்த மனநிலை அருவெறுப்பாக உள்ளது. 30 பேர் சேர்ந்து சிறுமிகலைச்செல்வியை பாலியல் வன்புணர்வு செய்வதையும், இரண்டு தலித் பெண்களை உயர்சாதிப்பெண்கள் நடுரோட்டில் நிர்வாணமாக்கி அடிப்பதும், அதைக்கேவலமான ஆண்நாய்கள் வீடியோ எடுத்து சமூகவலைத்தளங்களில் விடுவதும் பார்க்க கொதிக்கிறது மனம். இதை எதிர்க்கவோ பதிவு செய்யவோ ஒரு கூட்டமும் புயலென புறப்படவில்லை. காசு படைத்த ஈஷாவும் ,பணக்கார கபாலி ரஜினியும், ரஞ்சித்துமே பாடு பொருள் இங்கே. இந்த கும்பலுக்குள் புழுவாய் ஊர்வதுவிட மொட்டை அடித்துக் கொண்டு துறவறம் போகலாம் தப்பில்லை.

ஜி. விஜயபத்மா, எழுத்தாளர்; இயக்குநர்.