செம்பறை

வார்த்தைகளே இல்லை என்பார்களே, அதைவிட மிகுதியான அதிர்ச்சியில் உறையவைக்கின்றன, பெண்கள் மீதான அண்மைய வன்கொடுமைகள்!
தஞ்சை சாலியமங்கலம் எனும் ஊரில் கலைச்செல்வி எனும் இளம்பெண் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரம், அவரின் படுகொலை! அந்தக் கொடுமை ஏற்படுத்திய துயரத்தின் வாட்டம் நீங்கிவிடாத நிலையில், விழுப்புரம் நவீனாவின் மரணச்செய்தி!

இரண்டு நிகழ்வுகளுமே அப்பட்டமான பாலினரீதியிலான கொடிய வன்முறை; பாதிக்கப்பட்டவர்கள், அநியாயத்தைத் தட்டிக்கேட்க முடியாத அடித்தட்டுப் பிரிவினர்..!

கடந்த இரண்டு நாட்களாக இச்சம்பவங்களை கவனிப்பவர்கள் கலங்கிப்போய் இருக்க.. வழக்கம்போல இதிலும் பயன்பாட்டு அரசியல் பிழைப்பும் தூக்கலாகத் தெரிகிறது, அசிங்கமாக!

விழுப்புரம் நவீனா பிரச்னையில் குற்றவாளி செந்திலை வலிய ஆதரித்தவர்கள் என ஒரு பட்டியலை வெளியிடும் பாமக, அவர்களை எல்லாம் தூண்டிவிட்டதாகத் தண்டிக்கவேண்டும்; அவர்களிடம் விசாரணை நடத்தவேண்டும் என அறிக்கை மேல் அறிக்கை விடுகிறது. அதில், செந்திலின் கை,கால் துண்டானது பற்றிய உண்மை அறியும் குழுவின் முடிவை ஒப்பேற்பாக சுட்டிக் காட்டுகிறது, பாமக.

இன்னொரு புறம், சாலியமங்கலம் இளம்பெண் கலையரசி கொடூரப் படுகொலை செய்யப்பட்டதில் சமூக ஊடகங்களில் அதீத வருத்தத்தையும் உணர்ச்சிமயச் சித்தரிப்பையும் முன்வைக்கும் இன்னொரு தரப்பினர், சுவாதியின் படுகொலையை ஒப்பிட்டு அணுகுமுறையில் உள்ள சாதியப்பாகுபாட்டை எடுத்துவைக்கின்றனர்.

முன்னதில் தலித் தரப்பு என்றாலே கண்ணைமூடிக்கொண்டு எதையும் ஆதரிப்பதா என்று சாடுகிறது, பாமக. அவர்களிடம், பேரா. அ.மார்க்ஸ், ‘எங்களின் முன்னைய எல்லா உண்மை அறியும் குழுக்களின் முடிவுகளையும் ஏற்கிறீர்களா’ என்று கேட்கிறார்; பாமக தரப்பிலிருந்து இன்னும் பதில் வந்ததாகத் தகவல் இல்லை.

பின்னதில் தலித் அல்லாத பெண்களுக்கான குற்றம் பற்றிய எந்த அக்கறையும் இல்லை; விழுப்புரம் நவீனா பற்றிய சிறு பதிவும் இல்லை! குறிப்பாக, மனித உரிமைச் செயற்பாட்டு நிறுவனம் நடத்தும் எவிடென்சு கதிர் போன்றவர்கள், அ.மா., புதுவை சுகுமாரன் போன்ற மனித உரிமை அரசியல் செயற்பாட்டாளர்கள் குழுவின் செந்தில் பற்றிய கள ஆய்வு முன்வைப்புகளை என்ன காரணத்தாலோ கண்டுகொள்ளாமல் போவது வியப்பளிக்கிறது; மட்டுமல்ல, பெண்கள் மீதான கொடிய வன்முறையை இரண்டாமிடத்துக்குத் தள்ளிவிடுகிறது; மேலும் அண்மைய ஆண்டுகளில் வடக்கு, மேற்கு மாவட்டங்களில் தீவிரமாகத் தூண்டப்படும் ’ஒடுக்கப்பட்டோர் அல்லாத சாதி’யுணர்வை-வெறியை, வலுப்படுத்தும் வாதத்துக்கும் பயன்படும் ஆபத்து இருக்கிறது.

இதுதான், புதிய தலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியின் அணுகுமுறையாலும் நேர்ந்திருக்கிறது. அதன் அன்றையபொழுது தொகுப்பாளர் குணசேகரன், இன்று வேறொரு நிறுவனத்தின் பணியாளராக ஆனபிறகும், சிக்கலுக்குத் தொடர்பே இல்லாத அவரின் குடும்பத்தினரைக் குறிப்பிட்டு சமூக ஊடகத்தில் பிறாண்டுகிறார்கள்.

பொறுப்பாகச் செயல்படவேண்டியவர்கள் நடப்பை நடப்பாகப் பார்க்காதது, சமூகப்பிரிவினை/வெறுப்புவாத சக்திகளுக்கு உதவியாகிவிடுகிறது!

இப்போது இவர்கள் மட்டுமல்ல, கடந்த ஆண்டில் நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை 30 வயதுப் பெண் தொழிலாளி ஒருவர், தன் கணவருடன் வீடு திரும்பிக்கொண்டு இருந்தபோது, வழியில் அவ்வூரைச் சேர்ந்த இளைஞர் கும்பலால் வல்லுறவுக்கொடுமை செய்யப்பட்டார். முக்கியம், நடத்தப்பட்டது கும்பல் வன்கொடுமை, குற்றவாளிகள் பாதிக்கப்பட்ட பெண்ணைவிடச் சிறிய இளைஞன்கள்! வழக்கமாக ஊடகங்களில், சமூக ஊடகங்களில் அக்கறையை வெளிப்படுத்தும் பிரபல பெண்ணுரிமைவாதிகளில்(இரு பாலரும்) பக்கச்சார்பாக உரிமை பேசும் இரு வேறு தரப்பினரும் இதில் பொங்கவில்லை. ஒருவேளை, குற்றவாளிகள், பாதிக்கப்பட்டவர்களின் சாதிப் பின்புலம் இவர்களின் விருப்பத்துக்கேற்ப ஏற்ப இல்லை என்பதாலா?

ஏன்?

தலித் பெண்கள் மீதான  ஒடுக்குமுறையைக் கண்டிப்பவர்கள் இதைக் கண்டிக்கக்கூடாதா?

தலித் அல்லாத பெண்களின் பாதிப்புக்கு மட்டும் கவனமாகக் குரல் கொடுக்கும் பாமக போன்ற குறிப்பிட்ட கட்சிகள், அமைப்புகளின் மவுனத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.

’பொதுவானவர்’களின் அமைதிக்கு என்ன காரணம்?

விடை சொல்ல கடும் பிரயத்தனப்பட வேண்டியதில்லை. சற்றே பொறுப்பாக சிந்திப்பது பயனளிக்கும்!

முதலில் பெண்களின் மீதான கொடுமையை, பெண்பிரச்னையாக கவனப்படுத்துவோம்! அதற்குக் காரணமாக அன்றாடவாழ்க்கையில் இன்றுவரை நீடித்திருக்கும் பெண்களுக்கு எதிரான – பெண்ணைப் பண்டமாக்கும் பழக்கவழக்கங்கள், கருத்துகள், பிம்பங்கள் மீது உள்ளாக்குவோம்!

சுரண்டப்படும் வர்க்கப் பெண்ணாயின் சுரண்டலைப் பற்றியும் ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்ணாயின் ஒடுக்கப்படுதலையும் அத்தோடு கட்டாயம் சேர்ந்து பேசுவோம்!

கூடவே பெண்களுக்கு சமத்துவம் தருவதாகப் பீற்றும் நுகர்வுக் கலாச்சாரம், உண்மையில் பெண்களை துய்க்கக்கூடிய உயிர்ப்பொம்மைகளாகவே பார்க்கும் நுகர்வுவெறியே… இது போன்ற சம்பவங்களுக்குத் தூண்டுதல் என்பதை ஒவ்வொரு சம்பவத்திலும் தவறாது சொல்லுவோம்!

மனித சிந்தனையை மழுங்கடித்து குறிப்பாக இளைஞர்களின் பண்பாட்டைச் சீரழிக்கும் மதுக்கொடுமையின் சித்திரத்தைப் பதியவைத்துக்கொண்டே இருப்போம்!

செம்பறை, செய்தி மற்றும் நடப்பாய்வாளர்.