நிலா லோகநாதன்

அப்பா திரைப்படம் நல்ல திரைப்படமெனவும் அது கபாலி போன்ற வணிக சினிமாவினால் காணாமல் போய்விட்டதெனவும் நிறைய நண்பர்கள் வருத்தமுடன் எழுதியிருந்தார்கள்.
எனக்கென்னவோ சமுத்திரக்கனிக்கு இருக்கக் கூடாத பிற்போக்குத்தனத்தின் கடைக்கூறொன்று இருப்பதைப் போலப்படுகிறது. நாடோடிகள் மாதிரியான “மெச்சத்தக்க”படத்தை எடுத்தவரல்லவா?

அப்பா திரைப்படம் தொடங்கும் போது, கூரையில் கயிற்றைக் கட்டி இழுத்துக்கொண்டு வலியைத் தாங்கி வீட்டில் பிரசவிக்கிறார் அந்தப் பெண். சமுத்திரக்கனி அதைத்தான் வலியுறுத்துகிறார். ஆஸ்பத்திரிக்குச் சென்றால் வெட்டிப்போட்டு விடுவார்கள் என்கிறார்.

அதற்கு முதற்காட்சியில், பக்கத்து வீட்டுப் பிள்ளத்தாச்சிப் பெண் வோக்கிங் போகையில், இவர் மனைவியை விளக்குமாற்றை வைத்து கூட்டச் செய்து கொண்டிருப்பார்.
சுகப்பிரசவத்துக்கான வழியும், மனைவியை வைத்து வீட்டு வேலை வாங்கும் வழியும் ஒன்றெனக் காட்ட வருகிறாரா தெரியவில்லை. பார்க்கும் போது எரிச்சலாகவிருந்தது.

இது இயற்கை உணவைச் சாப்பிடாதவர்கள் விரைவில் செத்து விடுவார்களென இயற்கை வணிகர்கள் திட்டமிட்டுச் செய்வதைப் போலான ஒரு திணிப்பு.

பிள்ளைகளை புரிந்து வாழவைக்கும் அப்பாவான சமுத்திரக்கனி, இயற்கை முறையில் குழந்தை “பெக்கும்” மனைவியின் பக்கத்தில் கூட நிற்கவில்லை. ஓட்டு முகட்டை பார்த்துக் கொண்டு வெளியில் போய் நிற்கிறார்.
இந்தக்காட்சியின் பின்னர் படத்துடன் ஒன்ற முடியவில்லை. பிள்ளைப்பேற்று வாதை எப்படியானதென எனக்கு இன்னும் தெரியாது. ஆனால் அது எப்படியானதாக இருக்குமென என்னால் உணர முடியும். உங்களாலும் தான்.
படம் முழுதும் மனைவி அவருக்கு எதிரானவராகவே இருக்கிறார். அப்பா எனும் தலைப்பிற்கமைய அப்பா மட்டுந்தான் தனித்துத் தெரியவேண்டுமென நினைத்தார் போல. மனைவி விளக்கமில்லாத ஆசைகளைக் கொண்டவராயின் அதையெல்லாம் முன்கூட்டியே கதைத்துப் பேசி ஒருவருக்கொருவர் அழகியலை தாபித்துக் கொள்ள மாட்டார்களா? பிள்ளை பிறந்தவுடன் தான் பள்ளிக்கூடத்தைப் பற்றியே வாய் திறக்கிறார், இந்த அப்பா.
மனைவியைப் புரிந்து கொள்ளாது, பிள்ளையைப் பெற்ற இணையரின் விருப்புக்களை விளங்கிக் கொள்ளாது பிள்ளையை இயற்கையோடு…அறிவோடு… வளர்க்கிறார். அதெப்படி?
ஒரு முரணான குடும்பச்சூழ்நிலையில் வாழும் பிள்ளைக்கு சூழற்கல்வியை இவர் எப்படி வழங்குவார்? படத்தில் அப்பாவும் அம்மாவும் சேர்ந்து சிரித்திருந்த காட்சிகள் எதுவுமே இல்லை. அந்தப் பையன் அவனுடைய பாலியல் துணையை எப்படி நடர்த்துவான்? வெறுமனே அறிவுறுத்தல்கள் மட்டும் ஒரு பிள்ளைக்குப் போதியளவான அனுபவத்தை பெற்றுத்தருமா?

ஊருக்கெல்லாம் புத்தி சொல்லித்தரும் அவருடைய அந்தப் பையன் அம்மாவைக் கூப்பிட அம்மா பிறந்த வீட்டிற்குச் செல்லுவான். அங்கு அவனுடைய முறைப் பெண்ணை “என்னாடி எப்படியிருக்கிறாய்” என விழிப்பான். அந்தப் பிள்ளை மிரண்டு போயிருக்கும்.

சமுத்திரக்கனி, தனது மகனுக்கு பாலீர்ப்பு ஏற்பட்டிருக்கும் சிறுமியை வீட்டிற்கு அழைத்து தேனீர் கொடுத்து விட்டு, மகனிடம் பாலீர்ப்பைக் கையாளும் முறை பற்றி விளக்கிக் கூறுவார்.
அந்தப் பெண் பிள்ளையைக் கூப்பிட்டு தன் மகனோடு அளவளாவ விடும் இவர், அந்தப் பிள்ளைக்கு பாலீர்ப்பைப் பற்றி சொல்லிக் கொடுத்தாரா? அவருடைய மகனின் பொருட்டு இந்தப் பிள்ளையை பயன்படுத்தியிருக்கிறாரல்லவா?

அந்தப் பிள்ளையிடம், இங்கு வரவேண்டுமென்றால், இங்கு தான் போகிறேன் என உண்மையைச் சொல்லி விட்டு வந்து போ, என்பதோடு முடிப்பார். ஒரு பெண் பிள்ளை தன்னுடைய பெற்றோருக்கு நேர்மையாக இருந்தாலே போதும், அதற்கு இதர விளக்கங்கள் தேவயில்லை என்று நினைத்தாரா?

அதே போல மகனும் தன்னுடைய நண்பனுக்கு எதிர்ப்பாற் கவர்ச்சியொன்று தோன்றியுள்ளதை அவதானித்து, அந்தப் பெடியனையும், பிள்ளையையும் உரையாடக் களமமைத்துத் தருவான்.
மகன், தன் நண்பனிடம் மட்டும் பாற்கவர்ச்சி, இயல்பானதெனச் சொல்லித்தருவான். அந்தப் பெண் பிள்ளைக்கு எதையும் சொல்லிவிடவில்லை.

இந்தமாதிரியான அப்பாக்கள் இப்படியானவற்றை மட்டுந்தான் கடத்துவார்கள்.

வணிகக் கல்விச் சூழலில் தனியார் கல்வியும், கல்வித்திணிப்பும் மிக மோசமானவை. இந்தப் படம் அதைப்பற்றிப் பேசியிருக்கிறது.

தனியார் கல்வியையும், அங்கீகாரத்திற்கான கல்வியையும் ஆதரிப்பவர் மகனை கின்னஸ் சாதனைக்காக ஊக்குவித்திருக்க வேண்டாம். அதையே தான் தம்பி ராமையா கொஞ்சம் கண்டிப்புடன் கல்வி விடயத்தில் தம் மகனிடம் செய்தார்.

கடலில் நீந்தும் மகன் லாவகமாக ஒரு பன்னாட்டு விற்பனைப் பாணத்தைக் குடித்து விட்டு சக்தி பெற்று நீந்துவார் பாருங்கள், அவரின் இயற்கைக் கல்வியின் ஆதரவு தெறித்துப் போகும்.

முறைமைக் கல்விக்கு எதிரான அப்பாவான சமுத்திரக்கனி கின்னஸ் சாதனைக்கு மகனைத் தயார்ப்படுத்துவதும், மகன் தன்னுடைய தாய் மாமனிடம் என்னை இந்த உலகம் பூராகவும் தெரியும் உங்களை யாருக்குத் தெரியுமெனக் கேட்பதையும் தான் இப்படியான அப்பாக்களால் உருவாக்கிவிட முடியும். //இந்த கின்னஸ் உலகளாவிய அங்கீகார-நிரூபணம் ஒரு நவதாரளாவாத வெறியாட்டம்//(நன்றி கணரூபன்)

அதைவிட வேடிக்கை, மாணவனின் கவிதைக்கு பா.விஜய் போன்றவர்கள் அங்கீகாரம் கொடுப்பது. யார் யாருக்கு அங்கீகாரம் கொடுப்பதென்றெல்லாம் ஒன்றுமே இல்லையா? இதற்கு அந்த மாணவன் கவிதை எழுதாமலேயே இருந்திருக்கலாம்.

அந்த வகையில் அம்மா கணக்கு திரைப்படம் பரவாயில்லையென்றால், பெண்களுக்குக் கணக்குப் பாடம் சரியே வராது என்று ரேவதி கூசாமல் சொல்லுகிறார். எனக்கெல்லாம் கணக்கு மட்டுந்தான் தெரியும்.

கபாலி படத்திலோ, “கபாலிக்கே “அடிமைத்தனத்தை ஒழிக்கச் சொல்லிக் கொடுத்தவர், தளையத் தளைய புடவை கட்டி, பூவும் வைத்த குமுதவல்லி பிரெஞ்சுக்காரியின் வீட்டில் வேலை செய்து புருசனின் வரவுக்காக உயிரைப் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறார்.
என்னமோ!

நிலா லோகநாதன்,  Software and Robotics Research Engineer.