மதிவாணன்

பியூஷ் மனுஷ் ஏதோ ஒரு வகைப்பட்ட வணிகம் செய்கிறார். அந்த வணிகத்தின் அங்கமாக/ ஏதோ ஒரு பகுதியாக அவரின் சமூகச் செயல்பாடும் இருக்கிறது என்று மதிப்பிடுபவன் நான். சந்திரமோகனுக்கு அவர் அளித்த பதில் அதனை உறுதி செய்கிறது. வணிக நடவடிக்கையின் அக்கம்பக்கமாக சமூக சேவை செய்வது அவருடைய உரிமை. வணிக நடவடிக்கை மூலம் பயன் பெற்று அந்தப் பணத்தில் சமூக சேவை செய்வது கூட அவரின் உரிமை. அது போன்ற நடவடிக்கைகளில் அவர் காவல்துறையால் தாக்கப்பட்டால், அந்த ஜனநாயக விரோத செயலைக் கண்டிப்பது நமது அனைவரின் கடமை.

தோழர் சந்திரமோகனுக்குப் பதிலளிக்கத் துவங்கிய பியூஸ் காவல்துறைக்குத் தகவல் அளிப்பவராக அவரைச் சித்தரிக்க முயல்கிறார். நாயக்கன் கொட்டாய் பிரச்சனையில் தலையிட்டு காவல்துறையை அம்பலப்படுத்தியவர் தோழர் சந்திரமோகன். ஆந்திராவில் பலியான மரம் வெட்டும் பழங்குடிகள் பிரச்சனையில் தலையிட்டு அப்பிரச்சனையை தமிழக அரசியலின் கவனத்துக்குக் கொண்டுவந்து அகில இந்திய மக்கள் மேடையின் அமைப்பாளர்களில் ஒருவர். அந்த வழக்கை எடுத்து நடத்திய வழக்கறிஞர் சைதன்யாவிற்குப் பாராட்டுக் கூட்டம் நடத்த தோழர் சந்திரமோகன் முயற்சியெடுத்தபோது போலீஸ் அதற்கு அனுமதி மறுத்தது. போலீஸ் தடையை உடைத்து கூட்டத்தை நடத்தியது எமது கட்சி. தோழர் சந்திரமோகன் குடும்பத் திருமணத்திற்குக் கூட காவல்துறை குவிக்கப்பட்டது என்றால், தோழரின் செயல்பாடுகளை காவல்துறை எப்படி கணிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். இப்படி செயல்படும் கட்சியை/ அதன் தலைவர்களில் ஒருவரை காவல்துறைக்குத் தகவல் அளிப்பவர் என்று பியூஸ் குறிப்பிடுவது அவர் யார் என்பதைக் காட்டுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒருமுறை நான் மதுரையில் இருந்து பியூசை அழைத்தேன். எந்தப் பிரச்சனைக்கு என்று நினைவில்லை. அவர் மிக ஏகத்தாளமாக எனக்கு பதிலளித்தார். “என்ன புரட்சி செய்றிங்க .. கம்யூனிஸ்ட் கட்சியெல்லாம் தேறாது… வாங்க எங்களைப் பாத்து கத்துகுங்க“, என்ற பொருள்பட என்னிடம் அவர் பேசினார்.

முன்பின் அறிமுகமில்லாத ஒருவரிடம், அதுவும் தொலைபேசியில் பேசும் ஒருவரிடம் அறிவுரை வழங்குகிறார் என்றால், அவரின் அறிவாற்றலை எப்படி புரிந்துகொள்வது? ஆர்வக்கோளாறு கொண்ட இளைஞராக, எப்படியிருந்தாலும் விவரமில்லாத மனிதராக இருப்பார் என்று நினைத்து அழைப்பைத் துண்டித்தேன். அதன்பின்தான், அவர் விவரமான வணிகர் மட்டுமல்ல, முற்போக்கு நடவடிக்கைகள் நோக்கி ஈர்க்கப்படும் இளைஞர்களை திசை திருப்புபவர் என்றும் தெரிந்துகொண்டேன்.

தொழில் நிறுவன சமூக சேவை என்ற ஒன்று உண்டு. அப்படிச் சேவை செய்வதால், தொழில்நிறுவனத்தின் கொள்ளை/ தொழிலாளர் சுரண்டல்/ சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாது போகாது. மனுஷ் இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப, வணிக நிறுவன சமூக சேவை செய்கிறார் என்று நினைக்கிறேன். அப்படியானால், அதனை அவர் வெளிப்படையாகச் செய்ய வேண்டும். தனது நடவடிக்கைகளில் ஒளிவு மறைவு இருக்கக் கூடாது. தன்னை ஓர் தியாகம் செய்யும் சமூக சேவகராகப் படம் காட்டிக்கொள்ளக் கூடாது. மற்றவர்களை, குறிப்பாக கம்யூனிஸ்டுகளைத் தாக்குவதன் மூலம் தன்னை ஒரு புரட்சிகர டான் குயிக்சாட்டாகக் காட்டிக்கொள்ளக் கூடாது.

மதிவாணன், சிபிஐ எம் எல் (லி) கட்சியின் மதுரை செயலாளர்.